Wednesday, November 16, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (17-11-2022)

                                     பொதுக்காலம் 33ஆம் வாரம் - வியாழன்

முதல் வாசகம்


மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 1-10

சகோதரர் சகோதரிகளே,

அரியணையில் வீற்றிருந்தவரது வலக் கையில் ஒரு சுருளேட்டைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது; அது ஏழு முத்திரை பொறிக்கப்பெற்று மூடப்பட்டிருந்தது.

“முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?” என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன். நூலைத் திறந்து படிக்க விண்ணுலகிலோ மண்ணுலகிலோ கீழுலகிலோ இருந்த எவராலும் இயலவில்லை. சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று நான் தேம்பி அழுதேன்.

அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், “அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்றுவிட்டார்; அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்துவிடுவார்” என்று கூறினார்.

அந்த நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ, அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அக்கண்கள் மண்ணுலகெங்கும் அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே. ஆட்டுக்குட்டி முன்சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக் கையிலிருந்து அந்த ஏட்டை எடுத்தது. அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற்கிண்ணங்களும் வைத்திருந்தார்கள். இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள். அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்: “ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே. நீர் கொல்லப்பட்டீர்; உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர். ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர். அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: திவெ 5: 10)

பல்லவி: ஆட்சியுரிமை பெற்ற குருக்களாய் கடவுளுக்காக ஏற்படுத்தினீர்.

அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! - பல்லவி
நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். - பல்லவி
அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
6a
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்.
9b
இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44

அக்காலத்தில்

இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.

ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



இயேசு தரும் அமைதி வேண்டுமா! 

நான் திருச்சி புனித குருத்துவக் கல்லூரியில் இறையியல் படித்துக்கொண்டிருந்த பொழுது 3 ஆண்டுகள் திருச்சி மறைமாவட்டத்தோடு இணைந்து  சிறைப்பணி செய்தேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மத்திய சிறைச்சாலை சென்று அங்குள்ள இல்லவாசிகளைச் (சிறைவாசிகளை) சந்திப்பது வழக்கம். ஒரு வாரம் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட இல்லவாசிகள் உள்ள வளாகத்திற்கு சந்திப்பிற்காக சென்றிருந்தேன். அங்கு ஒரு இல்லவாசியைச் சந்தித்தேன்.


அவர் மிகவும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். நான் அவரோடு பேச முயற்சி செய்தேன். முதல் வாரம் என்னோடு ஒன்றும் பேசவில்லை. எனவே அடுத்த வாரமும் நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். அவரோடு பேச முயற்சித்தபோது அவர் தனது பெயரை மட்டும் சொன்னார். மூன்றாவது வாரமும் அவரை சந்தித்தேன். அவரோடு பேச முயற்சித்தபோது கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார். அவரோடு உடனிருந்து அவரின் உணர்வைப் புரிந்து கொண்டேன். பிறகு தனது உள்ளத்திலுள்ள மனக்கவலைகளையெல்லாம் பகிர ஆரம்பித்தார்.


"தனது வாழ்வே அமைதியற்ற நிலையில் தான் இருந்து வருகின்றது. நான் இவ்வளவு துன்பப்படுவதற்கு காரணம். என்னோடு இருந்தவர்களே . என்னைப் பெற்ற பெற்றோர்களிடம் இருந்து நான் அன்பை பெறவில்லை. என்னோடு உடன் பிறந்தவர்களிடம்  நான் அன்பை பெறவில்லை.  என் நண்பர்கள் என்னை சுயநலத்தோடு பயன்படுத்தினார்கள். அவர்கள் செய்த தவறுக்காக நான் தண்டனை  அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்" என கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார். அவர் ஏன் அமைதியற்ற நிலையில் உளவியல்  ரீதியாக துன்பப்படுகிறார்? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதன்பிறகு நான் அவரோடு பேச ஆரம்பித்தேன்.


"கடந்ததை நினைத்து கவலைப்படாதீர்கள். அதிகமாக கவலைப்பட்டால் நீங்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகலாம். இந்த சிறையை தாண்டியும் உங்களுக்கு ஒரு வாழ்வு உண்டு என்பதை மறவாதீர்கள். உங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிக்க முயற்சி செய்யுங்கள். உங்களைப் படைத்த கடவுள்  அன்பு செய்கிறார். என்னாலும் நீங்கள் அன்பு செய்யப்படுகிறீர்கள்" எனக்கூறி அவரைத் திடப்படுத்தினேன். அதன்பிறகு "நன்றி சகோதரரே! இப்பொழுதுதான் எனக்கு மன அமைதி கிடைத்தது போல் இருக்கின்றது. நிச்சயமாக விடுதலைப் பெற்று புது மனிதனாக அனைவரையும் மன்னித்து வாழுவேன்" என்று தன்னம்பிக்கையோடு என்னிடம் பகிர்ந்து கொண்டார். அன்று முதல் அவர் மனரீதியாக நலம் அடைந்தார். அனைவருடனும் சிரித்த முகத்துடன் பேசி பழக ஆரம்பித்தார். இவருடைய மாற்றத்தை கண்ட காவலர்கள் இவரை மற்ற இல்லவாசிகள் இருக்கும் இடத்திற்கு மாற்றினார்கள். சிறிது நாட்களுக்குப் பிறகு விடுதலை அடைந்து வெளியே சென்று மகிழ்ச்சியான புது வாழ்வை தொடங்க ஆரம்பித்தார்.


இந்த உண்மை நிகழ்வு எதை சுட்டிக்காட்டுகிறது என்றால் மன அமைதி தான் உண்மையான மகிழ்ச்சியை தரும். அன்று நான் அந்த சகோதரரை சந்திக்காமல் இருந்தேன் என்றால் சிறையிலேயே மனரீதியாக பாதிக்கப்பட்டு தனது வாழ்வை முடித்துக்கொள்ள கூட துணிந்து இருப்பார். ஆனால் அவர் அமைதி பெறவேண்டும் என்று நான் உணர்ந்து அவரோடு நேரம் செலவிட்டு பேச ஆரம்பித்ததால் இன்று ஒரு புது மனிதனாக மாறியுள்ளார். இந்த நிகழ்வு எனக்கு ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தைக் கொடுத்தது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு மனுவுரு எடுத்து பிறந்தது நாம் அனைவரும் அமைதியை பெற்று மீட்படைய வேண்டும் என்பதற்காகவே. உண்மையான மீட்பு இயேசுவில் தான் உள்ளது என்பதை பல நேரங்களில் நாம் மறந்து இருக்கிறோம். எனவேதான் நாம் அமைதியற்ற நிலையில் பல நேரங்களில் வாழ்ந்து வருகிறோம். நான் அந்த இல்லவாசியை தேடிச்சென்று ஒவ்வொரு வாரமும் பேசியதால் அவர் மன ரீதியில் விடுதலை பெற்று ஒரு நல்ல ஒரு மனிதராக மாறினார். அதேபோல்தான் நம் ஆண்டவர் இயேசு நாம் நம்முடைய பாவ வாழ்விலிருந்து விடுதலை பெற்று மீட்பின் கனியை சுவைக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதராக நம்மைத் தேடி வந்தார்.


நான் தேடி அந்த இல்லவாசியை சந்தித்தேன். முதல் முறையும் இரண்டாம் முறையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்றாம் முறை சென்ற போது அவர் என்னுடைய அன்பை ஏற்றுக் கொண்டார். அதேபோலத்தான் நம் ஆண்டவர் இயேசு நாம் அவரை விட்டு விலகிச் சென்றாலும் நம்மைத் தேடி வந்து கொண்டே இருக்கிறார். அவரின் வருகையை உணர்ந்து அவரின் குரலுக்கு செவி கொடுக்கும் பொழுது நாம் புது வாழ்வைப் பெறுகிறோம். அவரின் குரலுக்கு செவிசாய்க்காதபோது மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம்.


மனிதனைப் படைத்த கடவுள் மனிதர்கள் மீட்பைச் சுவைத்து  அமைதியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இறைவாக்கினர்கள், நீதித்தலைவர்கள், அரசர்கள் போன்றோர்கள் வழியாக மக்களை வழிநடத்த திருவுளம் கொண்டார். ஆனால் மனிதர்கள் தன்னுடைய பலவீனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாவம் மோக வாழ்விலே வாழ்ந்து வந்தனர். கடவுள் தான் பெரும் பலம் என்பதை மறந்து பல்வேறு அடிமைத் தனங்களை அனுபவித்தனர்.  இனிமேல் தான் கடவுள் மனிதர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது ஒரே மகனையே இவ்வுலகிற்கு பாவக்கழுவாயாக அனுப்பி மனிதர்கள் மீட்பைச் சுவைத்து நிலையான அமைதியைப் பெற வழிகாட்டினார். ஆனால் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் மனிதர்கள்மீட்பின் கனிகளைச் சுவைக்க அவர்களின் வாழ்வு தகுதி உள்ளதாக இல்லை. அவர்களின் உள்ளம் கடவுளை விட்டு வெகு தொலைவில் இருந்தது. கடவுளோடு இருப்பவர்கள் மட்டுமே அவர் தரும் உண்மையான அமைதியை அனுபவிக்க முடியும். நம்மைத் தேடி வந்த இறைவனை நம் உள்ளத்திலே வரவேற்று அவரின் வழிகாட்டுதலின்படி நடக்கும் பொழுது நாம்  மீட்பினைப் பெற்று நிறைவான அமைதியை அனுபவிக்க முடியும். இதற்கு பின்வரும் நிகழ்வு நமக்கு பாடமாக இருக்கின்றது.


இயந்திரங்களின் நடுவிலே பணி செய்யும் கூலித்தொழிலாளி ஒருவர் அவ்விரைச்சல் ஒலியைக் கேட்டுக் கேட்டு வெறுப்புக்குள்ளானார். எவ்வித ஒலியும் கேட்காத அமைதியான இடத்திற்குச் சென்று இளைப்பாற வேண்டும் என்பது அவருடைய ஆசை. வேலைமுடிந்து வீட்டிற்குச் சென்று அமைதியாக இளைப்பாற வேண்டும் என்று நினைப்பார். ஆனால் வீட்டிலே பிள்ளைகள் விளையாடும் சத்தமும்,

தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தங்களும் அவரை மீண்டும் வெறுப்புக்குள்ளாக்கியது. சரி எங்காவது பூங்காவிற்கு சென்று அமரலாம் என்றால் வாகனங்கள் எழுப்பும் ஒலி அவர் அமைதியை இன்னும் அதிகமாகவே குலைத்தது. அமைதியான சூழலைத் தேடி அலைந்த அவருக்கு எஞ்சியது ஏமாற்றங்கள். இவ்வாறு வெளிப்புற அமைதியைத் தேடித் தேடி மன அமைதியைத் தொலைத்தார் அவர். ஒரு நாள் தன் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றார். சென்ற போதுதான் அவர் விரும்பிய அந்த அமைதியான இடம் கோவில் என உணர்ந்தார்.கடவுள் இருக்கும் இடத்தில் புற அமைதி மட்டுமல்ல மன அமைதியையும் சேர்த்துப் பெறலாம் என உணர்ந்தார். "அமைதியான இடத்தைத் தேடி இத்தனைகாலமாய் அலைந்த நான் கோவிலை மறந்துவிட்டேனே" என எண்ணி வருந்தினார். இதயத்தின் ஆழத்தில் இறைவன் தரும் அமைதியை உணர்ந்தார். அதன் பிறகு எத்தகைய இரைச்சலிலும் ஏன் வாழ்வின் அமைதியற்ற சூழலிலும் புற அமைதியையும் அக அமைதியையும் இழக்காதவராய் வாழ்ந்தார். 


பரபரப்பான இவ்வுலகத்தில் நாம் அனைவரும் வேண்டுவது அமைதி. எங்கு பார்த்தாலும் அமைதியற்ற நிலையைக் காண்கிறோம். குடும்பங்களிலும் அமைதியற்ற தன்மை. நாடுகளுக்கு இடையே அமைதியற்ற நிலை. ஏன் ஒரு தனிமனித வாழ்விலும் கூட அமைதியிழந்த நிலை இருப்பதை நாம் காண்கிறோம். உணர்கிறோம். அமைதி என்பது வெளிப்புறத்தில் ஒலிகள் எதுவும் இல்லாத நிலையைக் குறிப்பதல்ல. மாறாக நம் ஆழ்மனத்தில் சலனமில்லாத ஒரு நிலையைக் குறிப்பதாகும். இது ஆழகடலில் நிலவும் அமைதியைப் போன்றது. நம்மைச் சுற்றியும் நமக்குள்ளும் எவ்வளவுதான் போராட்டங்களும் பிரச்சினைகளும் எழுந்தாலும் நம் மனது சலனப்படாமல், நம் இயல்பு வாழ்வு பாதிக்கப்படாமல் நடுநிலையுடன் வாழவழிவகுப்பதே உண்மையான அமைதி. இத்தகைய அமைதி கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது.


இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எருசலேமின் அமைதியற்ற நிலையைக் கண்டு வருந்துகிறார். இஸ்ரயேல் மக்களின் தலைநகரமாக, ஆண்டவரின் இல்லத்தைக் கட்டி எழுப்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமாக விளங்கிய எருசலேம் தன் அமைதியை இழந்ததை எண்ணி தன் வருத்தத்தைத் தெரியப்படுத்துகிறார் இயேசு. பாவ வாழ்வால் கடவுளின் உடனிருப்பை இழந்த இஸ்ரயேல் மக்கள், தங்களை அடிமைப்படுத்திய அந்நிய அரசிகளிடமிருந்து மீட்பைத் தரவல்ல மெசியாவை எதிர்பார்த்தார்கள். 


ஆனால் இயேசுதான் மெசியா எனத் தெரிந்து கொள்ளவில்லை. அவர் அருகிருக்கும் போது கூட உணர இயலாதவர்களாய் அமைதியற்று இருந்தனர். இதுவே இயேசு எருசலேம் நகரைப் பார்த்து வருந்தி அழ காரணமானது. உலகம் சார்ந்த வாழ்வும், அந்நிய அரசுகளின் ஆட்சிமுறையும் கடவுள் தேர்ந்தெடுத்த நகரையும் மக்களையும் அமைதியிழக்கச் செய்தது. 


எனவே நம் தனிப்பட்ட வாழ்வில் இறைவன் இயேசு தருகின்ற உண்மையான அமைதியை அடைய விடாமல் நம் வாழ்வைக் குலைப்பன எவை என நாம் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய உலக நாட்டங்கள், பலவீனங்கள், கடவுளின் உடனிருப்பைக் கண்டுணராத நிலை போன்ற பல காரணங்களால் நிறைவான அமைதியை இழந்து தவிக்கிறோம். அத்தைகைய நிலையை மாற்ற கடவுள் நம் அருகில் இருக்கிறார் என உணர வேண்டும். இறைவேண்டலில் நிலைத்திருந்து அவருடைய உடனிருப்பை உணரும் போது நம் மனது சலனப்படாமல் புற அமைதியோடு அக அமைதியும் முழுமையாக உணரப்படும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. அத்தைகைய இயேசு தரும் அமைதியைப் பெற நம் வாழ்வைப் பக்குவப்படுத்துவோம்.


 இறைவேண்டல் 


அமைதியின் தெய்வமே இறைவா! எங்களுக்கு மீட்பின் வழியாக அமைதியை வழங்க உம் திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினீர். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவர் இயேசு இந்த உலகிற்கு கொண்டு வந்த அமைதியை  எங்களுடைய உண்மையான வாழ்வால் உணர்ந்து நற்செய்தி மதிப்பீட்டுக்கு சான்று பகர்ந்து மீட்பின் கனியை சுவைத்து முழு விடுதலை பெற அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


† இன்றைய புனிதர் †

(நவம்பர் 17)
✠ ஹங்கேரியின் புனிதர் எலிசபெத் ✠
(St. Elizabeth of Hungary)

கைம்பெண்/ மறைபணியாளர்:
(Widow and religious)

பிறப்பு: ஜூலை 7, 1207
போஸ்ஸோனி, ஹங்கேரி அரசு
(Pozsony, Kingdom of Hungary)

இறப்பு: நவம்பர் 17, 1231 (வயது 24)
மார்பர்க், புனித ரோம பேரரசு, (தற்போதைய ஜெர்மனி)
(Marburg, Holy Roman Empire (Modern-day, Germany)

சார்ந்துள்ள சமயம்/ சபை:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

புனிதர் பட்டம்: மே 27, 1235
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
(Pope Gregory IX)

நினைவுத் திருவிழா: நவம்பர் 17

பாதுகாவல்:
மருத்துவமனைகள், செவிலியர், விதவையர், நாடு கடத்தும் தண்டனை, மணப்பெண், ரொட்டி தயாரிப்பாளர், வீடற்ற மக்கள், இறக்கும் குழந்தைகள், கைம்பெண்கள், சரிகை-தயாரிப்பாளர்கள், தூய ஃபிரான்சிஸின் மூன்றாம் நிலை சபை (Third Order of Saint Francis)

ஹங்கேரியின் புனிதர் எலிசபெத், "துரிங்கியாவின் புனிதர் எலிசபெத்" (Saint Elizabeth of Thuringia) என்றும் அறியப்படுபவர் ஆவார். “ஹங்கேரி அரசு” (Kingdom of Hungary), “துரிங்கியா” (Thuringia) மற்றும் “ஜெர்மனி” (Germany) ஆகிய நாடுகளின் இளவரசியான இவர், பெரிதும் போற்றப்படும் கத்தோலிக்க புனிதர் ஆவார். புனிதர் ஃபிரான்ஸிஸின் மூன்றாம் நிலை சபையின் (Third Order of St. Francis) ஆதிகால அங்கத்தினரான எலிசபெத், அச்சபையின் பாதுகாவலரும் ஆவார்.

ஹங்கேரி நாட்டின் அரசன் “இரண்டாம் ஆண்ட்ரூ” (King Andrew II of Hungary) இவரது தந்தை ஆவார். “மெரனியாவின் கேட்ரூ” (Gertrude of Merania) எலிசபெத்தின் தாயாராவர்.

தமது பதினான்கு வயதில் குறுநில மன்னரான “நான்காம் லூயிஸை” (Louis IV) திருமணம் செய்த எலிசபெத், இருபது வயதில் விதவையும் ஆனார். ஆறாவது சிலுவைப்போரில் (Sixth Crusade) பங்கேற்பதற்காக இத்தாலி பயணித்த லூயிஸ், வழியில் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1227ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 11ம் நாள், மரணமடைந்தார். தமது கணவரின் மரணத்தின் பின்னர், தமக்கான வரதட்சினை பணத்தை திரும்ப பெற்றுக்கொண்ட இவர், அந்த பணத்தில் ஓர் மருத்துவமனையை கட்டினார். தாமே சுயமாக நோயாளிகளுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார்.

ஓய்வு, ஆடம்பரம் மற்றும் சொகுசான வாழ்க்கை வாழ இயன்ற போதும், எலிசபெத் தவம் மற்றும் சந்நியாச வாழ்க்கையையே தேர்ந்தெடுத்தார். இவரது இந்த தேர்வு, ஐரோப்பா முழுவதுமுள்ள சாதாரண பொது மக்கள் இதயத்தில் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுத் தந்தது.

எலிசபெத், தமது குறுகிய கால வாழ்க்கையிலேயே, ஏழைகள் மற்றும் நோயுற்றோர் மீது அளவற்ற அன்பினை வெளிப்படுத்தினார்.

எலிசபெத்துக்கு வயது ஆக ஆக, பக்தியும் வளர்ந்து கொண்டிருந்தது. 1228ல், ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஃபிரான்சிஸ்கன் சபை துறவிகளின் வழிகாட்டுதலின் பேரில், செப வாழ்வில் ஈடுபட்டார். ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவ தொடங்கினார். தினமும் தன் வாசலுக்கு வந்த நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு உணவளித்தார். இதனால் அநேகர் இவருக்கு எதிரிகள் ஆயினர். இவருடைய கணவரது சகோதரி அக்னேஸ் இவரை முழு மூச்சுடன் வெறுத்தாள். அவளுடைய தாய் மிகுந்த உலகப் பற்றுக் கொண்டவள். அவளும் இவரை வெறுத்து அரண்மனையில் இருந்தவர்களுடன் சேர்ந்துகொண்டு எலிசபெத்தை நிந்தித்து வந்தார்கள். அவரை அரண்மனையிலிருந்தே துரத்தினார்கள்.

இவர் தமது உள்ளத்தை கடவுளிடமிருந்து அகற்றவில்லை. ஏழைகள் மீது இவர் எல்லையற்ற இரக்கம் கொண்டிருந்தார். "ஏழைகளின் அன்னை" என்றும் "நோயாளிகளின் ஊழியக்காரி" என்றும் இவரை அழைப்பார்கள். உலக மக்களின் அபிப்பிராயங்களை இவர் சட்டை செய்யவில்லை. தனக்கு இயல்பாய் உள்ள பொறுப்புகளை மேற்கொண்டு ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கிறிஸ்து இயேசுவையே கண்டு அவர்களுக்கு சேவை செய்து வந்தார்.

நாட்டில் பெருவெள்ளம் வந்து பயிரை அளித்தது. இதனால் பஞ்சமும் கொள்ளை நோயும் வந்தன. ஒரு மருத்துவமனையைக் கட்டி அங்குபோய் தொழு நோயாளிகளுக்கு இவரே சிகிச்சை செய்தார். அப்பமும் இரசமும் இவரது மன்றாட்டால் பலுகியது. ஏழைகளுக்கு உதவி செய்ய அரச ஆடைகளையும், ஆபரணங்களையும் விற்றார்.

இவருடைய கணவரின் சகோதர்கள் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்டு இவரை விரட்டி விட்டனர். இவர் பிரான்சிஸ்கன் துறவிகளின் ஆலயத்திற்குச் சென்று, இந்த துன்பத்திற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தி "தேதேயும்" என்னும் நன்றியறிதல் கீதத்தைப் பாடினார்.

தமது இருபத்துநான்கு வயதில் மரணமடைந்த எலிசபெத், கிறிஸ்தவ தொண்டிற்கு ஒரு அடையாளமாக ஆனார். தமது மரணத்தின் பின், விரைவில் புனிதராக அருட்பொழிவும் செய்யப்பட்டார்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...