Sunday, August 21, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (22-08-2022)


பொதுக்காலத்தின் 21 ஆம் திங்கள் 

மு.வா: 2 தெச: 1: 1-5, 11b-12

ப.பா:  திபா 96: 1-2. 2b-3. 4-5

ந.வா:மத்: 23: 13-22


 கடவுள் நம் வாழ்வில் உயர்வானவரா?


அவ்வூரிலே திருவிழா. ஒருபுறம் திருப்பலி நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் அசனவிருந்து தயாராகிக் கொண்டிருந்தது. திருப்பலியில் பங்கேற்றுக்கொண்டிருந்த பலருக்கு கவனம் எல்லாம் தயாராகிக் கொண்டிருந்த உணவின்மேல்தான். இதை ஆரம்பத்திலிருந்தே கண்காணித்துக் கொண்டிருந்தார் அப்பங்கின் அருட்பணியாளர். அவர் மறையுரையின் போது மக்களிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை மக்கள் பொருட்படுத்த வில்லை. இறுதியில் நற்கருணை விருந்தில் கூட பங்கு பெறாமல் பலர் அசன விருந்துக்கு முந்திக்கொண்டு வரிசையாக பயபக்தியுடன் நின்றுகொண்டிருந்தனர் மக்கள். பலியான இறைவனைவிட  உணவு முக்கியமாகிவிட்டது. 


இன்றைய நற்செய்தியில் இத்தகைய மனநிலையைக் கொண்ட யூதர்களை இயேசு சாடுவதைக் காண்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை பலிபீடம் உயர்ந்ததல்ல. மாறாக அப்பலிப்பீடத்தின் மேல் வைக்கப்பட்ட காணிக்கைப் பொருட்கள் உயர்வாகத் தோன்றியது. அதைப்போலவே கோயில் உயர்ந்ததல்ல. அக்கோயிலுக்குள் உறையும் தெய்வம் பெரியவரல்ல. ஆனால் அக்கோவில் உள்ள தங்கம் தான் உயர்வானது. இன்று இவ்வாசகத்தைத் தியானிக்கும் வேளையில் நமது மனநிலை எவ்வாறு உள்ளது என்பதையும் நாம் வருங்கால சந்ததிக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதையும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஏனெனில் இயேசு பரிசேயர் மறைநூல் வல்லுநர்களைப் பார்த்து கூறும் "குருட்டு வழிகாட்டிகளே "வெளிவேடக்காரரே, குருட்டு மடையரே " என்ற அடைமொழிகள் நமக்கும் பொருந்திவிடக் கூடாது அல்லவா?


எனவே நமது அன்றாட வாழ்க்கையில் வெளிவேடம் இல்லாத வாழ்வை வாழ முயற்சி செய்வோம். இறைவனுக்கும் அவரின் வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சாட்சியமுள்ள வாழ்வை வாழ முயற்சி செய்வோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை குடும்ப உறுப்பினர்களை இறைவழியில் வழிநடத்துவோம்.  இந்த உலகம் சார்ந்த பேருக்கும் புகழுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், இறையாட்சியை மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கடவுளின் பார்வையில் பெயர் பெற்றவர்களாக வாழ முயற்சி செய்வோம். கடவுள் தான் வாழ்வின் உயர்வானவர் என்று மனநிலையில் பயணிப்போம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா!  வாழ்வில் உம்மையே உயர்வாக மதிக்கும் மனதைத் தந்து ஆசிர்வதியும்.  ஆமென்.


அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர் 

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு 

சிவகங்கை மறைமாவட்டம்

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...