Monday, August 22, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-08-2022)

 முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-3ய, 14-17

சகோதரர் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்.

ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 96: 10. 11-12ய. 12டி-13

பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.


10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;

பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது;

அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி


11 விண்ணுலகம் மகிழ்வதாக் மண்ணுலகம் களிகூர்வதாக்

கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.

12ய வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும். -பல்லவி


12டி அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;

நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.


மத்தேயு 23:23-26

பொதுக்காலம் 21 வாரம் செவ்வாய்


நற்செய்தி வாசகம்



மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26


அக்காலத்தில் இயேசு கூறியது: ஹஹவெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


-------------------------


ஏ அப்பா என்னா திட்டு…

மத்தேயு 23:23-26


இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.


அன்புமிக்கவர்களே! இன்றைய நற்செய்தியைப் படிக்கும் போது நமக்கு இரண்டு விதமான உணா்வுகள் வெளிப்படுகின்றன. (1) இயேசு ரொம்ப திட்டுவதைப் பார்க்கும் போது ரொம்ப "ஷாக்கா" இருக்கிறது (2)மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் அடிக்கடி இயேசுவை குற்றம் சாட்டினர். பல தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தனர். இயேசு சரியாக நேரத்தைப் பயன்படுத்துகிறார். இது அவர்களுக்கு தேவைதான் என்ற உணர்வும் ஏற்படுகிறது.


இயேசு ஏன் திட்டுகிறார்?. அன்பு, இரக்கம் மிகுந்த கடவுள் ஏன் இப்படி திட்டுகிறார் என்பதை நாம் பார்க்கும்போது அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. நாம் இரண்டு காரணங்களை மிகவும் அழுத்தமாக சொல்ல முடியும்.


1. கடைப்பிடிக்கவில்லை…. திட்டு வாங்கினார்கள்

கடவுளின் முக்கியமான போதனை நீதி, இரக்கம், பரிவு இவற்றைக் கடைப்பிடித்து கடவுளை நேசிப்பது போல அடுத்தவரையும் அன்பு செய்ய வேண்டும் என்பது. ஆனால் இவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிக்காமல் கடவுளுக்கு புதினா, சோம்பு, சீரகம் இவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைப்பதிலே கவனமாய் இருந்தார்கள். கவனாய் கடைப்பிடிக்க வேண்டிய கடவுளின் போதனைகளை காற்றிலே விட்டுவிட்டார்கள். ஆகவே இயேசு வெளிடேக்காரர்களே உங்களுக்கு கேடு என திட்டுகிறார்.


2. தூய்மையாக்கவில்லை… திட்டு வாங்கினார்கள்

கடவுளின் போதனை உட்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்பது. ஆனால் இவர்கள் அதற்கு எதிராக வெளிப்புறத்தை தூய்மையாக்கினார்கள். உட்புறத்தை கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்பினார்கள். ஆகவே இயேசுவுக்கு கோபம் கொப்பளிக்கிறது. நன்றாக திட்டு வாங்குகிறார்கள்.


அன்புமிக்கவர்களே! நம்மை பரிசோதித்து பார்க்கும் நல்ல நாள் இது. நம்முடைய செயல்பாடுகளை பார்க்கும் போது இயேசு திட்டுவாரா? அகமகிழ்வாரா? நாமும் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போல் செயல்பட்டால் மாற்றம் பெறும் நாள் இது. மாறுவோம். மகிழ்ச்சியை மனதில் என்றும் அழியாமல் விதைப்போம்.


மனதில் கேட்க…

1. கடவுளை ஆர்வமாக வழிபடுகிற நான், அவர் சொல்வதை மிகவும் ஆசையாக கடைப்பிடிக்கிறேனா?

2. வெளிப்புறத்தை சுத்தாமாக வைக்கும் நான் அதை விட மிகவும் சுத்தமாக உட்புறத்தை வைக்கலாமே?


மனதில் பதிக்க…

உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் (மத் 5:48)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

--------------------------------------------------------------



நிதானமும், பொறுமையும்

 2தெசலோனிக்கர் 2: 1 – 3, 14 – 17


திருத்தூதர் பவுல் இதற்கு முன்பு, தெசலோனிக்கருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த “இயேசுவின் இரண்டாம் வருகை“ பற்றி ஒரு சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதனைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த பகுதி அமைந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து மக்களை தீர்ப்பிடுவதற்கு தயாராக இருக்கிறார், உடனடியாக அவர்களுக்கு தோன்றி, மக்களை தீர்ப்பிடுவார் என்கிற எண்ணத்தில் ஒரு சிலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், அல்லது கடவுள் தங்களுக்கு வெளிப்படுத்தியது போல, அதையே மற்றவர்களுக்கும் அறிவிக்கிறார்கள். இதற்கான பதிலை, பவுலடியார் இங்கு தெளிவுபடுத்துகிறார்.

தன்னுடைய திருமுகம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, அதனை தெளிவுபடுத்துவது, சரிப்படுத்துவது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்து, பவுலடியார் இதனை எழுதுகிறார். நம்பப்படுகிற தவறான செய்தியை, சரி செய்ய வேண்டும் என்கிற உணர்வு அவருக்கு அதிகமாக இருக்கிறது. பவுலடியார் நினைத்திருந்தால், அந்த தவறுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றோ, அல்லது தான் அப்படி சொல்லவில்லை என்றோ, அல்லது தான் சொன்னதை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டும் என்றோ நினைக்கவில்லை. மாறாக, நடந்தது நடந்து விட்டது, அதனை எப்படி சரிப்படுத்துவது? என்பதில், மிகக்கவனமாக பிரச்சனையை கையாள்கிறார். தான் செய்த தவறை நியாயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவருடைய எழுத்துக்களில் துளியும் இல்லை. மாறாக, மக்களுடைய நம்பிக்கை வாழ்விற்கு தன்னுடைய வார்த்தைகள் எந்தவிதத்திலும் பாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதில் தான், அவர் உறுதியாக இருக்கிறார்.

நம்முடைய வாழ்வில் நாம் தவறு செய்வது தவிர்க்க முடியாத ஒன்று. தவறு செய்த பிறகும் அந்த தவறை நியாயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் தான், இன்று நம்மில் பல பேருக்கு இருக்கிறது. செய்கிற தவறை நியாயப்படுத்துவதை விட்டுவிட்டு, அதனை எப்படி சரி செய்யலாம்? என்று ஆக்கபூர்வமாக சிந்திப்பதற்கு இந்த பகுதி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இந்த அழைப்பினை ஏற்று, நம்முடைய வாழ்விலும் ஆக்கபூர்வமாக சிந்திப்பதற்கு முயல்வோம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


--------------------------------------------------


வீண் ஆடம்பரங்களைத் தவிர்ப்போம்


யூதர்கள் தூய்மைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள். உண்ணும் உணவிலும், உடலிலும், பயணத்திலும் தூய்மையை கருத்தூன்றி கடைப்பிடிக்கக்கூடியவர்கள். இது சுகாதாரம் சார்ந்ததற்கான அல்ல, சமயம் தொடர்பானது. தாங்கள் தூய்மையான இனம் என்ற எண்ணம், யூதர்களுக்கு அதிகமாக இருந்தது. எனவே, பல தூய்மைச்சடங்குகள் அவர்கள் பின்பற்றுவதற்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த தூய்மைச்சடங்குகளில் இருக்கும் போலித்தனத்தை இயேசு விரிவாக விளக்குகிறார்.

திராட்சை இரசம் யூதர்களின் உணவில் கலந்துவிட்ட ஒன்று. அந்த திராட்சை இரசத்தை தயாரித்து, மற்றவர்கள் பருக கொடுக்கிறபோது கூட, தூய்மைச்சடங்கு சம்பிரதாயத்தை, இம்மியளவு பிசகாமல் அவர்கள் கடைப்பிடித்தார்கள். கண்ணுக்குத் தெரியதாக பூச்சிகள் அதில் இருக்கக்கூடாது என்பதற்காக, அதனை வடிகட்டி மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள். வெளிப்படையாகச் சொன்னால், இந்தளவுக்கு அவர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் அவர்களை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவர்கள் சம்பிரதாயதச் சட்டங்களை அவ்வளவு நேர்த்தியாகச் செய்தார்கள். அதேவேளையில், அந்த சட்டங்கள் காட்டும் மனித மதிப்பீடுகளை ஒரு பொருட்டாக எண்ணாது வாழ்ந்தனர். இதனைத்தான் இயேசு ஒட்டகம் என்கிற உருவகத்தோடு பொருத்திப் பேசுகிறார். ”கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால், ஒட்டகத்தையோ விழுங்குகிறீர்கள்” என்று சொல்வது இதன் அடிப்படையில் தான்.

எது தேவையோ அதனை கண்ணும் கருத்துமாகச் செய்வதற்கு நாம் முயற்சி எடுப்பது கிடையாது. ஆனால், எது தேவையில்லையோ, அதனைச் செய்வதற்கு நாம் அதிகமான முயற்சி, தேவையில்லாத முயற்சியை எடுக்கிறோம். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்கள் இதற்கு சிறந்த சான்றாக இருக்கிறது. வீண் ஆடம்பரங்களுக்கும், பகட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இரக்கச்செயல்களைக் காட்டுவதற்கு ஒதுங்குகிறோம். இப்படிப்பட்ட முரண்பாடாக வாழ்வைத்தவிர்த்து, இயேசு காட்டும் வழியில் நடப்போம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------


வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வோம்


யூதர்களின் தூய்மைச்சடங்கு சட்டத்தில் எவையெல்லாம் தூய்மையானவை, எவையெல்லாம் தூய்மையற்றவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொசுவும், ஒட்டகமும் தூய்மையற்ற விலங்குகள் வகைகளைச் சார்ந்தது. தூய்மையற்றது எதுவும் உடலுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, யூதர்கள் திராட்சை இரசத்தைக் குடிப்பதற்கு முன்பாக, அதை வடிகட்டினர். இதன் மூலமாக தூய்மையற்றது என்று கருதப்படும் அனைத்துமே அதில் தங்கிவிடும் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை.

கண்ணுக்குத் தெரியாத கொசுவை வடிகட்டுவதில் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்ட யூதர்கள் மிகப்பெரிய விலங்காகிய ஒட்டகத்தை அப்படியே விழுங்கிவிடுகிறார்கள் என்று சொல்வது, அவர்களின் வெளிவேடத்தையும், அர்த்தமில்லாத செயல்பாட்டையும் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகிறது. தாங்கள் செய்வதையெல்லாம் ஏதோ மிகப்பெரிய செயல்பாடாகக் காட்டிக்கொள்ள விரும்பும் பரிசேயர்கள், உண்மையில் தங்களின் வெளிவேடத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். வெளிவேடத்தை கடவுள் விரும்புகிறவர் அல்ல. வெறும் அடையாளங்களையும் கடவுள் விரும்புகிறவர் அல்ல. உண்மையான உள்ளத்தைத்தான் கடவுள் விரும்புகிறார்.

நமது வழிபாடுகள், பக்திமுயற்சிகள், வழிபாட்டு முறைகள் வெறும் வெற்று அடையாளங்களாகத்தான் இருக்கிறது. அடையாளங்கள் காட்டும் அர்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது, அடையாளத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது, பரிசேயர்களின் வெளிவேடத்திற்கு ஒப்பாகும். அப்படி இருந்தால், நமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள முன்வருவோம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


ஏழைகளுக்கு உதவுவது இறைவனுக்குக் கொடுப்பது


இணைச்சட்டம் 14: 22 சொல்கிறது: “ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப்பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்தெடு”. இந்த பாகம் கடவுளுக்கு நன்றியின் அடையாளமாகக் கொடுக்கப்படும் காணிக்கையாகும். அதாவது பெரும் விளைச்சலின் ஒரு பகுதி கடவுளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த சட்டத்தின் பொருள்.

புதினா, சோம்பு, சீரகம் போன்றவை விளைச்சல் என்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதவை. அதன் தேவையும் மிகுதியானது அல்ல. இவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கிடையாது தான். இருந்தபோதிலும், அப்படி தேவையே இல்லாத சாதாரண விளைச்சலிலிருந்து கூட, இந்த பரிசேயர்கள் பத்தில் ஒரு பங்கை கடவுளுக்கு கொடுத்தார்கள். எந்த அளவுக்கு நுண்ணியமாக இம்மியளவு பிசகாமல் பரிசேயர்கள் சட்டங்களை உடும்புப்பிடியாக பிடித்து வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த சாட்சி. அதே வேளையில் எவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமோ, எவற்றை வாழ்க்கையில் மதிப்பீடுகளாகக் கொள்ள வேண்டுமோ, அவைகளை, அதாவது அன்பு, நீதி, இரக்கம், நம்பிக்கையை, காற்றிலே பறக்க விட்டுவிட்டனர். இப்படிப்பட்ட போலித்தனமான வாழ்வை , இயேசு கடுமையாகச்சாடுகிறார்.

நாமும் கூட ஆலயம் கட்ட, புனிதர்களின் சுரூபத்தை அலங்கரிக்க எத்தனை இலட்சங்கள் வேண்டுமானாலும் கொடுக்கத்தயாராக இருக்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் ஏழைகள், எளியவர்களுக்காக உதவத்தயாராக இருக்கிறோம்?. ஏழைகளைச்சேராத எதுவும் இயேசுவுக்கு சொந்தமாக முடியாது.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


உட்புறத் தூய்மை!


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும் இயேசு மீண்டும் ஒருமுறை சாடுவதை இன்றைய வாசகம் மூலம் வாசிக்கின்றோம். இன்று அவர்களை வெளிவேடக்காரர்கள் என்று இயேசு அழைக்கிறார். நேற்றைய வாசகத்தில் புனித நத்தனியேலை இயேசு கபடற்றவர் என்று பாராட்டியதை வாசித்தோம். அந்தக் கபடற்ற தன்மைக்கு நேர் எதிரானதுதான் வெளிவேடம். உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசுவது, செயல்படுவது.

பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் வெளித் தோற்றத்திற்கு நேர்மையானவர்களாக, இறைப் பற்று மிகுந்தவர்களாகக் காட்சி தந்தனர். ஆனால், அவர்களின் உள்ளத்தில் கொள்ளைப் பொருள்களாலும், தன்னல விருப்புகளாலும் நிரப்பினர் என்று இயேசு கூறுகிறார். எனவே, உட்புறத்தை, உள்ளத்தை முதலில் தூய்மையாக்குங்கள் என்று அறிவுரை பகர்கின்றார்.

நாமும் நமது உள்ளத்தைக் கொஞ்சம் ஆய்வு செய்வோம். கொள்ளைப் பொருள்களும், தன்னல விருப்புகளும் அங்கே இருக்கின்றனவா என்று சோதிப்போம். பிறருடைய பொருள்களை, உடமைகளை அடைய விரும்புவது கொள்ளைப் பொருள். பிறர்மீது அக்கறை கொள்ளாமல், நமது இன்பம், ஆசைகள், இவை பற்றியே அதிக ஆர்வம் கொள்வது தன்னல விருப்பு. இவை இரண்டும் நம் மனதில் இருக்கும்வரை நமது உட்புறம் தூய்மையற்றதாகவே இருக்கும். நமது வெளி அடையாளங்கள்- வழிபாடுகள், செபங்கள், தோற்றங்கள் - அனைத்தும் வெளி வேடமாகவே இருக்கும்.

மன்றாடுவோம்; தூய்மையின் ஊற்றே இயேசுவே, எனது வாழ்வும் பரிசேயர்களைப் போல வெளிவேடம் நிறைந்ததாக இருப்பதற்காக மனம் வருந்துகிறேன். மன்னிப்புக் கோருகிறேன். எனது உள்ளத்திலும் கொள்ளைப் பொருள்களும், தன்னல விருப்புகளும் நிறைந்து உள்ளன. அவற்றை அகற்றி உமது அன்பால் நிரப்பி, என்னை தூய்மைப்படுத்தியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருட்தந்தை குமார்ராஜா


-------------------------

 

''இயேசு, 'வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்' என்றார்'' (மத்தேயு 23:25)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


-- நாடகத்தில் ஒருவர் அரசராகவோ, அமைச்சராகவோ, படைத்தலைவராகவோ, ஏவலாளாகவோ நடிக்கலாம். ஆனால் நாடகம் முடிந்ததும் அவர் தன்னுடைய அன்றாட வாழ்க்கை முறைக்குத் திரும்பி விடுவார். இயேசு குறிப்பிடுகின்ற ''வெளிவேடம்'' இதுபோன்றதுதான். பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மக்கள்முன் நல்லவர்கள்போல் நடிக்கிறார்களே தவிர உண்மையிலேயே நல்லவர்களாகச் செயல்படவில்லை என இயேசு குற்றம் சாட்டுகிறார். எல்லாப் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் வேண்டுமென்றே மக்களைத் திசைதிருப்பினார்கள் என்றோ, அவர்களை ஏய்த்துப் பிழைத்தார்கள் என்றோ நாம் கூற முடியாது. ஆனால் பொதுவாக அவர்கள் தாங்கள் நல்லதையே செய்வதாக நினைத்துக் கொண்டு, உண்மையில் தங்களையே ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் என இயேசு சுட்டிக்காட்டுகிறார். சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக் கடைப்பிடித்த அவர்கள் உண்மையிலேயே கனமான காரியங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். தூய்மை சார்பான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நிறைவேற்றினால் போதும், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகிவிடலாம் என நினைத்த அவர்கள் உண்மையிலேயே கருத்தில் கொள்ளவேண்டிய முதன்மைகளைப் புறக்கணித்துவிட்டுத் தங்களை நல்லவர்கள் என நினைத்துக்கொண்டார்கள். வெளித்தூய்மையில் கண்ணும் கருத்துமாக இருந்த அவர்கள் உண்மையான தூய்மை என்பது மனித இதயத்தை மாசின்றிக் காப்பதில் அடங்கும் என்பதை மறந்துவிட்டார்கள். ஆக, மனித உள்ளத்தில் அன்பும் இரக்கமும் பரிவும் பாசமும் நீதியும் நேர்மையும் இல்லாவிட்டால் அது மாசடைந்து பாழ்பட்ட வீடு போல ஆகிவிடும் என இயேசு உணர்த்துகிறார் (மத் 23:25).

-- மனிதரை மாசுபடுத்துகின்றவை உள்ளத்திலிருந்து எழுகின்ற தீய சிந்தனைகளும் அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய செயல்களுமே என இயேசு வழங்குகின்ற போதனை நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 15:18-19). எனவே நாம் தூய சிந்தனையை நம்மில் வளர்த்திட வேண்டும். எண்ணத்தில் தூய்மையிருந்தால் நாம் சிந்திக்கின்ற பாணிகளும் நலமாக இருக்கும். நம் சிந்தனையிலிருந்து எழுகின்ற செயல்களும் நல்லவையாக இருக்கும். வெளிச் சடங்குகளைத் துல்லியமாக நிறைவேற்றிவிட்டால் கடவுளுக்கு ஏற்புடையவராகிவிடலாம் என நினைப்பவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிற பரிசேயருக்கு ஒப்பானவர்களே. மாறாக, உள்ளத்தில் தூய்மையை வளர்த்துக்கொண்டு, ''நீதி, இரக்கம், நம்பிக்கை'' ஆகிய ''முக்கிய போதனைகளை'' நாம் கடைப்பிடித்தால் (மத் 23:23) கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ்வோம்.


மன்றாட்டு

இறைவா, நேர்மையான உள்ளத்தை எங்களில் உருவாக்கியருளும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------'


''நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள்.

ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்'' (மத்தேயு 23:24)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


-- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல என்பது தமிழ்ப் பழமொழி. இயேசுவோ ஒட்டகத்தையும் கொசுவையும் இணைத்து வேடிக்கையாகப் பேசுகிறார். திருச்சட்டத்தின் நுணுக்கங்களை அலசி ஆய்ந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சின்னஞ்சிறு காரியங்களில் மகா கவனம் செலுத்திவிட்டு, உண்மையிலேயே பெரிய, கனமான காரியங்களை மிக எளிதாக ஒதுக்கிவைத்துவிட்டதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். யூத சட்டப்படி, ஒட்டகத்தின் இறைச்சி தீட்டான ஒன்று; எனவே அதை உண்ணலாகாது (காண்க: லேவியர் 11:4). திராட்சை இரசத்தைப் பருகும்போது அதில் பூச்சிகள் விழுந்திருந்தால் அவற்றின் தீட்டுக் காரணமாகச் சட்டத்தை மீற நேரிடும் என்பதால் பானத்தை வடிகட்டும் பழக்கம் இருந்தது. எனவே, தீட்டான சின்னஞ்சிறு கொசுவை (காண்க: லேவி 11:41) அறியாமல் விழுங்கிவிடாதிருக்க எவ்வளவோ கவனமாயிருக்கின்ற ''வெளிவேடக்காரர்கள்'' தீட்டான விலங்குகளிலேயே மிகப் பெரிய விலங்காகிய ஒட்டகத்தை விழுங்குவதில் மட்டும் கவனக்குறைவாய் இருப்பது வேடிக்கையல்லவா என இயேசு பகடையாகப் பேசுவது வாசித்து இன்புறத்தக்க பகுதி.


-- ''நீதி, இரக்கம், நம்பிக்கை'' ஆகியவையே உண்மையிலேயே முக்கியமான போதனை (மத் 23:23) என இயேசு குறிப்பிடுவது கருதத்தக்கது. இது மீக்கா இறைவாக்கினர் நூலில் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது (''ஓ மானிடா...நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?'' - மீக்கா 6:8). தெளிந்த பார்வையோடு இவ்வழியில் நடக்கும்போது நாம் உண்மையிலேயே அன்புக் கட்டளையை நிறைவேற்றுபவர் ஆவோம். மாறாக, நீதியும் இரக்கமும் நம்பிக்கையும் இல்லாத மனிதர் நல்லது செய்வதுபோல வெளியே காட்டிக்கொண்டாலும் அவர்கள் ''குருட்டு வழிகாட்டிகளுக்கு'' ஒப்பாகவே இருப்பர். ஆக, நம் வாழ்வில் முதன்மை பெற வேண்டிய விழுமியங்களை இயேசு அடையாளம் காட்டுகின்றார். அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக நாம் அழைக்கப்படுகிறோம்.


மன்றாட்டு

இறைவா, முதன்மையானவற்றை உள்ளத்தில் ஏற்று வாழ்ந்திட அருள்தாரும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...