Tuesday, August 23, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (24-08-2022)

புனித பர்த்தலமேயு - திருத்தூதர் விழா



முதல் வாசகம்


திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 9டி-14

சகோதரர் சகோதரிகளே, ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, ஹஹவா, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்'' என்று என்னிடம் கூறினார்.

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 145: 10-11. 12-13. 17-18

பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.


10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.

13யடி உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. -பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.

18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர். அல்லேலூயா.


யோவான் 1:45-51


ஆகஸ்டு

 24 தூய பார்த்தலோமேயு திருநாள்



யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51


அக்காலத்தில் பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, ஹஹஇறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்'' என்றார். அதற்கு நத்தனியேல், ஹஹநாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?'' என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், ஹஹவந்து பாரும்'' என்று கூறினார். நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ஹஹஇவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ஹஹஎன்னை உமக்கு எப்படித் தெரியும்?'' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ஹஹபிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்'' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, ஹஹரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார். அதற்கு இயேசு, ஹஹஉம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்'' என்றார். மேலும், ஹஹவானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று அவரிடம் கூறினார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


------------------------


புனித பர்த்தலொமேயு திருவிழா

இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்…

யோவான் 1:45-51


இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, "இதைவிட பெரியவற்றைக் காண்பீர்" இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை.

இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது.

முயற்சி 1: அவரோடு அமர்ந்தார்

ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்கும் போது முழுவதும் குருவுக்கு பிடித்தவனாக மாறுகிறான். குரு தன்னுடைய பிடித்தமான சீடனுக்கு தன் ஆசீர் முழுவதையும் அள்ளி அருளுவார். அதே போன்று நாம் இயேசுவுக்கு பிடிக்கும் போது அவர் ஆசீர்வாதமான வார்த்தைகள் தருவார். தூய பர்த்திலொமேயு ஆண்டவரோடு அமா்ந்தார். அதிலே அளப்பரிய ஆனந்தமும் அடைந்தார்.

முயற்சி 2: அவர் புகழை பரப்பினார்

தன்னுடைய சிந்தனையிலும், செயலிலும் ஒரு சீடன் தன்னுடைய ஆசானின் அறிவுரைகள நிறுத்தி அதன்படி வாழ்ந்து அவர் புகழ் பரப்பும் போது ஆசான் அதிக ஆனந்தமடைகிறார். அதேபோன்று ஆண்டவர் இயேசுவும் தன் புகழை, பெயரை பரப்பும் சீடர்களை அதிகமாகவே ஆசிர்வதிக்கிறார். அந்த வகையில் இன்றைய புனிதர் அதற்கு குறையே வைக்கவில்லை. எங்கு சென்றாலும் இயேசுவின் புகழை பரப்பினார். இயேசுவின் செல்வாக்கை உயர்த்தினார்.


மனதில் கேட்க…

1. ஆண்டவர் மனதார ஆசீர்வதிக்கும்படி இதுவரை நான் நடந்திருக்கிறேனா?

2. ஆண்டவரோடு அமரவும், அவர் புகழைப் பரப்பவும் எனக்கு ஆசை இருக்கிறதா?


மனதில் பதிக்க…

எனது செல்வாக்கு குறைய வேண்டும். அவரது செல்வாக்கு பெருக வேண்டும் (யோவா 3:30)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

-------------------------------------------------------------


திருவெளிப்பாடு 21: 9 – 14

இறைவனில் நம்பிக்கை கொள்வோம்


யோவான் நற்செய்தியாளர், காட்சி காண்கிறார். அந்த காட்சியில், ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன் என்று கூறுகிறார். பதினேழாவது அதிகாரத்தின், முதல் இறைவார்த்தையில் வருகிற வானதூதர்கள் தான், இங்கும் குறிப்பிடப்படுவதாக நம்பலாம். அந்த அதிகாரத்தில் பாபிலோன் நகர் மற்றும் அதனுடைய அழிவைப் பற்றிய செய்தி, காட்சியாக விளக்கப்படுகிறது. இங்கு, எருசலேம் நகரின் மாட்சி அதற்கு முரணாக, குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. பழைய எருசலேம் மறைந்து, புதிய எருசலேம் தோன்றுகிறது. இறைவாக்கினர் எசேக்கியேலும் தன்னுடைய காட்சியில் எருசலேமை விவரிப்பதை (எசேக்கியேல் 40: 2) நாம் வாசிக்கலாம். ஆனால், அவரின் விளக்கத்திற்கும், யோவானின் விளக்கத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை நாம் கண்டுணரலாம். காரணம், எசேக்கியேல், எருசலேம் ஆலயத்தில் நடந்ததைக் கண்கூடாகப் பார்த்தவர். அந்த பிண்ணனியில் தன்னுடைய காட்சியை விவரிக்கிறார். ஆனால், யோவான் பழைய எருசலேம் ஆலயத்தைப் பார்த்திருக்கவில்லை. அவருக்கு அங்கு நடந்ததைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, காட்சியில் காண்பவை அனைத்துமே அவருக்கு வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கிறது.

இந்த காட்சி, கடவுள் தரும் நம்பிக்கைச் செய்தியாக இருக்கிறது. இறைவன் தன்னுடைய மக்களை கைவிட்டு விடவில்லை. காலம் காலமாக மக்கள், இறைவனை மறந்தாலும், தாங்கள் செய்த தவறுகளுக்கு தண்டனையைப் பெற்றுக்கொண்டாலும், இறைவன் தன்னுடைய வாக்குறுதிக்கு பிரமாணிகக்கமுள்ளவராகவே இருக்கிறார். நம்முடைய வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை இழக்காதவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய நம்பிக்கையை கடவுள் மீது நாம் வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனும், எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்திருந்தாலும், அவன் நம்பிக்கை இழக்க தேவையில்லை. திருந்தி வாழ வேண்டும் என்கிற எண்ணத்தை மட்டுமே கடவுள் எதிர்பார்க்கிறார்.

நம்முடைய அன்றாட வாழ்வில், நிச்சயமாக நம்முடைய மனித பலவீனத்தில், பல தவறுகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த உலகத்தின் கட்டுகள் நம்மை இறுக்கிப் பிணைத்து, அதிலிருந்து விடுபட முடியாதவாறு, நம்மை நெருக்கிவிடுகிறது. நாம் கடவுளைப் பற்றிக் கொள்வோம். நம்முடைய பலமல்ல, இறைவனின் பலமே நம்மை, அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவிக்கும்.


- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


-----------------------------------------------------


திருப்பாடல் 145: 10 – 11, 12 – 13, 17 – 18

”உமது மாட்சியை அறிவிப்பார்கள்”


திருப்பாடல் 138 முமதல் 145 வரை உள்ள அதிகாரங்கள் தொடர்ச்சியானது, ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இந்த பாடல்கள் தான், தாவீது அரசரால் கடைசியில் எழுதப்பட்ட பாடல்கள் என்று சொல்லலாம். இந்த கடைசி தொகுப்பின் கடைசி பாடலாக வருவதுதான் இன்றைய பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. கடைசி தொகுப்பில் அமைந்துள்ள இந்த எட்டு திருப்பாடல்களும் இஸ்ரயேல் மக்களின் தனிப்பட்ட செபமாக சொல்லப்படுகிறது. இந்த எட்டு திருப்பாடல்களிலும் “நான்“ “எனது“ என்று தனக்கும்,கடவுளுக்குமான தனிப்பட்ட உறவை மையப்படுத்தி எல்லா இறைவசனங்களும் அமைந்துள்ளன.

இந்த திருப்பாடல் கடவுளின் மாட்சிமையை அறிவிக்கக்கூடிய பாடலாக அமைந்திருக்கிறது. கடவுளின் மாட்சிமை என்ன? கடவுள் எல்லாக்காலங்களிலும் ஆளக்கூடியவராக இருக்கிறார். எத்தனை பேர் ஆண்டாலும், கடவுளின் ஆளுகைக்கு ஈடு இணை கிடையாது. ஏனென்றால், கடவுள் நீதியோடு ஆட்சி செய்கிறார். அதே வேளையில் இரக்கத்தோடும் ஆட்சி நடத்துகிறார். அதுமட்டுமல்ல, தன்னிடம் உதவி என்று வந்தவர்களுடைய தேவைகளை அறிந்து, அதனை நிறைவேற்றக்கூடிய தாராள மனம் படைத்தவராகவும் இறைவன் இருக்கிறார். ஆக, மக்களை வெறும் தன்னுடைய ஆளுகைக்கு கீழ் உள்ளவர்களாகப் பார்க்காமல், அதனையும் கடந்து, அவர்களை தன்னுடைய பிள்ளைகளாகப் பாவிக்கிறார். இது இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இறைவனின் மாட்சிமையை அறிந்திருக்கிற நாம், இறைவனின் பிள்ளைகளாக இருப்பதில் மகிழ்ச்சி அடைய வேண்டும். இறைவன் நமக்காகச் செய்துவரும் எல்லாவிதமான அற்புதச்செயல்களையும் நாம் நன்றியுணர்வோடு பெற்று, நம்முடைய வாழ்வு மூலமாக அவருக்கு நன்றி செலுத்துவோம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


கள்ளங்கபடற்ற வாழ்வு


இன்றைக்கு தாய்த்திருச்சபை திருத்தூதர்களுள் ஒருவரான பர்த்திலேமேயுவின் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறது. இவருடைய இயற்பெயர் நத்தனியேலாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவர் பர்த்திலேமேயு என்று அழைக்கப்படுவதற்கு, இவர் தால்மேயுவின் மகன் என்பதான அர்த்தம் காரணமாகும். தால்மேயு என்பவன் கி.மு.10ம் நூற்றாண்டின் ஜெஸ்ஸே என்கிற பகுதிக்கு அரசனாவான். அவரது மகளை பேரரசர் மணந்திருந்தார். எனவே, பர்த்திலேமேயு அரசர் வழிவந்த குடும்பம் என்பதற்கு, நற்செய்தியாளர்கள் இந்த பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது, விவிலிய அறிஞர்களின் கருத்து. இவர் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்பதும், நமக்கு கொடுக்கப்படுகிற ஊகச்செய்தி.

இவரை இயேசு கள்ளம், கபடற்றவர் என்று சொல்வதிலிருந்து, இவரை இயேசு எந்த அளவுக்கு அறிந்து வைத்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. இது பர்த்திமேலேயு-க்கு மிகப்பெரிய ஆச்சரியம். அதேவேளையில் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும். காரணம், தான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை, இந்த உலகம் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்றாலும், இயேசு அவரை அங்கீகரித்திருக்கிறார் என்பது, நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்திருக்கும். இன்னும் அதே போலான வாழ்வை வாழ்வதற்கு, அவருக்கு ஊக்கமாக இருந்திருக்கும். கள்ளம்,  கபடற்ற வாழ்வை வாழ்வது எளிதானதல்ல. இந்த உலகம் நம்மை பயன்படுத்தி, வெகு எளிதாக பழிகூறக்கூடிய வாழ்வு. ஆனாலும், எதையும் கண்டுகொள்ளாமல் கடவுளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்கிற திருத்தூதரின் வாழ்க்கை, உண்மையிலே நமக்கெல்லாம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

வாழ்வை நாம் கடவுளுக்கு ஏற்ற முறையில் வாழ வேண்டும். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நினைக்காமல், கடவுளுக்கு உண்மையாக, நமது மனச்சான்றிற்கு முரண்பாடில்லாமல், ஒழுக்கத்தோடு வாழ வேண்டிய வரத்தை, ஆண்டவரிடத்தில் கேட்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------


இறைவனைக் கண்டுகொள்வோம்


நத்தனியேல் என்கிற மனிதர் தனியாளாக இருந்தாலும், அவரை இஸ்ரயேல் மக்களுக்கு ஒப்பிட்டுப்பார்த்தால், அது நமக்கு நிறைவான பொருளைத்தரும். எதற்காக நத்தனியேலை இஸ்ரயேல் மக்களோடு ஒப்பிட வேண்டும்? அது எப்படி சரியாக இருக்க முடியும்? என்ற கேள்வி நமக்குள்ளாக நிச்சயம் எழும். ஆனால், நத்தனியேலைப்பற்றி தரப்பட்டுள்ள செய்தியை நாம் பார்க்கிறபோது, அதில் இருக்கக்கூடிய உண்மையை நாம் அறிந்துகொள்ள முடியும்.

நத்தனியேல் கடவுள் அனுப்புகிற மெசியாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறவராகச் சித்தரிக்கப்படுகிறார். இஸ்ரயேல் மக்கள் பல ஆண்டுகளாக, மெசியாவிற்காகக் காத்திருக்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற எண்ணமும், தாங்கள் சிறப்பு இனம் என்கிற சிந்தனையும் இஸ்ரயேல் மக்களுக்கு இருந்தது. அது நத்தனியேலில் வெளிப்படுவதை நாம் பார்க்கலாம். இயேசுவின் அற்புத ஆற்றலையும், நத்தனியேலை அவர் அறிந்தவிதத்தையும், நத்தனியேல் பார்த்தபோது, உண்மையிலே அவர்தான் கடவுள் வாக்களித்திருந்த மெசியா என்று நத்தனியேல் நினைத்தார். இயேசுவின் அதிகாரம் மிகுந்த போதனையும், அவருடைய புதுமை செய்யும் ஆற்றலும், இஸ்ரயேல் மக்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்திருந்தன. இவ்வாறு, நத்தனியேல், இஸ்ரயேலுக்கு ஒப்பிடப்படுவதை நாம் நியாயப்படுத்தலாம்.

நத்தனியேல் கடவுளைக் கண்டுகொண்டார். அது போல, நடக்கும் நிகழ்ச்சிகள், நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் தருணங்கள், கடவுளின் பிரசன்னத்தை நமக்கு உணர்த்தும்போது, நத்தனியேலைப்போல நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை நத்தனியேலைப்போல ஏற்றுக்கொள்ள வேண்டும்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


புதிய எருசலேமின் அடிக்கற்கள் !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,


இன்று நத்தனயேல் என்று அழைக்கப்பட்ட திருத்தூதர் பர்த்தலோமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். திருச்சபையை ஒரு கட்டடத்திற்கு ஒப்பிட்டால், இயேசு அதன் மூலைக்கல்லாகவும், திருத்தூதர்கள் அதன் அடிக்கற்களாகவும் இருப்பர். இன்றைய முதல் வாசகம் திருச்சபையைப் புதிய எருசலேம் என்று அழைக்கிறது. அதனை “ஆட்டுக்குட்டி மணந்துகொண்ட மணமகள்” என்றும் குறிப்பிடுகிறது. கடவுளின் மாட்சி விளங்கும் அந்தத் திருநகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று ஆண்டவர் இயேசுவால் பாராட்டப்பட்ட புனித பர்த்தலோமேயுவுக்காக இன்று இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். திருத்தூதர்களை அடிக்கல்லாகக் கொண்டு கட்டப்பட்ட திருச்சபை பாறைமீது கட்டிய வீPட்டைப்போல என்றும் அசைவுறாமல் நிலைத்திருக்க மன்றாடுவோம். நாமும் கபடற்றவர்களாக வாழ அருள்வேண்டுவோம்.

மன்றாடுவோம்: திருச்சபையின் மூலைக்கல்லான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். பாறைமீது நீர் கட்டிய திருச்சபைக்காகவும், அந்தத் திருச்சபையின் அடிக்கற்களாக நீர் அமைத்த திருத்தூதர்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். அந்தத் திருசு;சபையை நீர் பாதுகாத்து, வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். நாங்களும் கபடற்றவர்களாக, தூய உள்ளத்தினராக வாழும் வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


அருள்தந்தை குமார்ராஜா


“அன்றே பலர் அவரைவிட்டு விலகினர்”


நிலைவாழ்வு அளிக்கும் உணவாகத் தம் உடலைத் தருவதாக இயேசு கற்பித்தபோது, யூதர்கள் மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களில் பலரும்கூட முணுமுணுத்தனர் என்பதைத் தயங்காமல் பதிவு செய்திருக்கிறார் நற்செய்தியாளர் யோவான்.

அதுமட்டுமல்ல, தமது போதனையை இயேசு இன்னும் அழுத்தத்துடன் எடுத்துரைத்தபோது, அந்தப் போதனையை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் பிரிந்து சென்றனர் என்பதை “அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்” என்று சோகத்துடன் பதிவுசெய்திருக்கிறார் நற்செய்தியாளர்.

நற்கருணை என்னும் அருள்சாதனத்தை நம்பாமல், ஏற்றுக்கொள்ளாமல் அதன் காரணமாகத் திருச்சபையை விட்டுப் பிரிந்து செல்லும் ஏராளமான கத்தோலிக்கர்களின் முதல் முன்னோடிகள் இவர்களே. ஆனால், இவர்களின் பிரிவு குறித்து, இயேசு கவலைப்படவில்லை, தமது போதனையை மாற்றிக்கொள்ளவுமில்லை.

திருச்சபையும் அவ்வாறே. விலகிச் செல்பவர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக அடிப்படைப் போதனைகளில் மாற்றம் எதையும் செய்யவில்லை கடந்த 21 நூற்றாண்டுகளில். இயேசுவின் போதனைகள், திருச்சபையின் போதனைகளை முழு மனத்தோடு நாம் ஏற்று, வாழ்கிறோமா?

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது போதனை ஏற்க மறுத்து உம்மைவிட்டு விலகிச் சென்ற சீடர்கள் போல, திருச்சபையைவிட்டுப் பிரிந்து செல்வோருக்காகவும் மன்றாடுகிறோம். நாங்களும் எங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் வரம் தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


அருள்பணி. குமார்ராஜா


 நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா” !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,


இயேசு தன் சீடர்களை நோக்கி உருக்கத்துடன் கேட்ட இந்தக் கேள்வியை இன்று இயேசு நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக்கொள்வோம். இன்றைய நாள்களில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைகிறது. இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். அவர்களை நோக்கி இயேசு கேட்கிறார்: சூ8220;நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” நாமோ ஆண்டவரையே என்றும் பற்றிக்கொள்வோமாக! சூ8220;நானும் என் வீட்டாருமோ, ஆண்டரையே என்றும் வழிபடுவோம்” என்று யோசுவா துணிவுடன் அறிக்கையிட்டதுபோல, நாமும் ஆண்டவரையே பற்றிக்கொண்டு வாழ உறுதி பூணுவோம்.

மன்றாடுவோம்: நிறைவின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உலக இன்பங்கள், செல்வம், பல்வேறு விதமான சோதனைகள் இவற்றின் மத்தியிலும், நான் உம்மை விட்டுப் பிரிந்துவிடாத அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருட்தந்தை குமார்ராஜா


சோதிக்கும் நோக்கத்துடன் !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் திருச்சட்ட அறிஞர் ஒருவர் திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது என்று கேட்கிறார். கேள்வி நல்ல கேள்விதான். ஆனால், கேட்கிற மனிதரும், அவரது உள்நோக்கமும்தான் சரியில்லை. இருப்பினும், அவரது வாயை அடைக்கவும், இதயத்தைத் திறக்கவும் இயேசு அருமையான பதிலை வழங்குகிறார். இறைவனையும், மனிதரையும் அன்பு செய்ய வேண்டும் என்பதே தலை சிறந்த கட்டளை.

நாம் ஒருவரோடொருவர் உரையாடும்போது நமது கேள்விகளும், மனநிலையும் எப்படி இருக்கின்றன என்று கொஞ்சம் ஆய்வு செய்வோமா? சில வேளைகளில் நலம் விசாரிக்கும் தோற்றத்தில்; பிறரை இகழ, குத்திக்காட்ட நாம் முயல்வதில்லையா? ஆறுதல் சொல்லும் தோற்றத்தில் புண்படுத்துவதில்லையா? ஆலோசனை சொல்லும் சாக்கில் அவதூறு செய்வதில்லையா?

எனவே, நமது கேள்விகளுக்குப் பின் ஒளிந்திருக்கும் மனநிலையை, நோக்கத்தை ஆய்வு செய்வோம். நேர்மையாக சிந்தி;க்கவும், பேசவும் செய்வோம்.

மன்றாடுவோம்; உண்மையின் உறைவிடமே இயேசுவே, என் மனதிலும், நாவிலும் தூய்மையைத் தாரும். உமது தூய ஆவியினால் என்னை நிரப்பும். உள் நோக்கமின்றிப் பிறருடன் உரையாட, உறவாட எனக்கு ஆற்றல் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருட்தந்தை குமார்ராஜா


-------------------------

''இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்'' (மத்தேயு 22:34)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் எதிரிகளாகக் காட்டப்படுவோர் ''பரிசேயர்'', ''சதுசேயர்'' என்னும் இரு குழுக்களைச் சார்ந்தவர்கள். இவர்களுள் சதுசேயர் என்போர் பெரும்பாலும் எருசலேம் நகரில் வாழ்ந்தனர். அவர்கள் ஆளும் வர்க்கத்தினர். விவிலியத்தின் முதல் ஐந்து நூற்களை மட்டுமே அதிகாரப்பூர்வமான ஏடுகளாக இவர்கள் ஏற்றார்கள். அந்நூல்களில் கூறப்பட்டவற்றை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வாய்மொழி மரபாகவோ எழுத்து மரபாகவோ வழங்கப்பட்ட சட்ட விளக்கங்கள் விவிலியத்தின்; முதல் ஐந்து நூல் போதனையிலிருந்து மாறுபட்டால், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இவர்கள் கருதினார்கள்.எனவே, இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் கருத்து விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களில் காணப்படவில்லை என்பதால் அதை ஏற்க முடியாது என்பது இவர்களுடைய கருத்து. ஆனால் இயேசு விவிலியத்தின் முதல் நூலாகிய ''தொடக்கநூல்'' என்பதில் ''கடவுள் இறந்தோரின் கடவுளல்ல, மாறாக, ''உயிர்வாழ்வோரின் கடவுள்'' எனக் காணப்படும் உண்மையைச் சுட்டிக்காட்டி, ''சதுசேயரின் வாயை அடைத்துவிட்டார்'' (மத் 22:23). தங்களோடு கருத்து வேறுபட்ட சதுசேயரை இயேசு முறியடித்தார் என்பதைப் பரிசேயர்கள் கேள்விப்படுகின்றனர். அவர்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஆனால் பரிசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன் அவரை அணுகி வருகின்றனர். ''பரிசேயர் ஒன்றுகூடினர்'' (மத் 22:34) என மத்தேயு குறிப்பிடுவது கருதத்தக்கது. இயேசுவுக்கு எதிராகத் திட்டம் வகுத்து அவரை ஒழிக்கத் தேடிய பரிசேயரோ பிறரோ ''ஒன்றுகூடி'' சதித்திட்டம் போடுவதை மத்தேயு பல இடங்களில் குறிப்பிடுகிறார் (காண்க: மத் 22:41; 26:3; 27:17,27; 28:12).

-- இயேசுவைச் சோதிக்க வந்த பரிசேயருள் ஒருவர் திருச்சட்ட அறிஞர். அவர் இயேசுவிடம் ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்னும் கேள்வியைக் கேட்கிறார் (மத் 22:36). பல நூற்றுக்கணக்கான கட்டளைகளை உள்ளடக்கிய திருநூலில் காணப்படுகின்ற முதன்மையான கட்டளை எது என்னும் கேள்விக்கு யூத அறிஞர் அக்காலத்தில் பதில் தேடியது உண்டு. எடுத்தக்காட்டாக, ஹில்லல் என்னும் அறிஞரைக் குறிப்பிடலாம். அவரைத் தேடி ஒரு பிற இனத்தவர் வருகிறார். ''நான் ஒற்றைக் காலில் நிற்கும் நேரத்தில் எனக்குத் திருச்சட்டம் முழுவதையும் கற்றுத் தர முடியும் என்றால் நான் யூத சமயத்தைத் தழுவுகிறேன்'' என்கிறார் அவர். இதைக் கேட்ட ஹில்லல் அப்பிற இன மனிதரைப் பார்த்து, ''உனக்குத் தீங்கு இழைக்க நீ விரும்பாததுபோல பிறருக்கும் தீங்கு இழைக்க விரும்பாதே. இதில் திருச்சட்டம் முழுவதும் அடங்கும். எஞ்சியது விளக்கவுரையே'' எனப் பதிலளித்தார். இயேவிடம் சென்று ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது'' என்று கேட்டவருக்கு இயேசு அளித்த பதில் ''கடவுளை அன்புசெய்க் பிறரை அன்புசெய்க'' என்பதே. ''திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' (மத் 22:40) என்று இயேசு அளித்த பதிலுக்கு ஆதாரம் பழைய ஏற்பாட்டில் உள்ளது (காண்க: இச 6:5; லேவி 19:18). அன்புக் கட்டளையை இயேசு தம் வாழ்வில் முழுமையாகக் கடைப்பிடித்தார். கடவுளை முழுமையாக அன்புசெய்த அவர் நமக்காகச் சிலுவையில் உயிர் துறந்து நம்மை இறுதிவரை அன்புசெய்ததைச் செயல்முறையில் காட்டினார். அதே அன்பு நம்மில் துலங்கிட வேண்டும்.


மன்றாட்டு

இறைவா, எங்கள் சிந்தனை சொல் செயல் அனைத்தும் அன்பிலிருந்து பிறந்திட அருள்தாரும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்


-------------------------|


''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' (மத்தேயு 22:36)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


-- இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் திருச்சட்டத்தை நன்கு தெரிந்துவைத்திருந்தார்கள். சட்டத்தின் நுணுக்கங்களையும் அறிந்திருந்தார்கள். திருச்சட்டத்தில் அடங்கிய 613 கட்டளைகளையும், அவை பற்றி யூத சமய அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களையும் பரிசேயர் கற்றிருந்தார்கள். தங்களைப் போன்று இயேசுவும் சமய அறிவில் சிறந்தவர்தானா என்று சோதிக்கும் வகையில் அவர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி: ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்பதாகும். இயேசு அவர்களுக்கு அளித்த பதிலில் பெரிய விளக்கங்கள் இல்லை. மிகவும் எளிய முறையில், கடவுள் தந்த கட்டளைகளின் உள் ஆழம் எதில் அடங்கியிருக்கிறது என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். ''அன்பு செய்க!'' என்பதே திருச்சட்டத்தின் சுருக்கம் என இயேசு போதிக்கிறார். இந்த அன்புக் கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு: ஒன்று கடவுளை அன்பு செய்வது, மற்றது பிறரை அன்பு செய்வது. பழைய ஏற்பாட்டுத் திருச்சட்டத்தில் காணப்பட்ட அன்புக் கட்டளையின் இரு பக்கங்களையும் இணைக்கிறார் இயேசு. இணைச்சட்ட நூலில் ''உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக!'' (6:5) என்னும் சட்டமும், லேவியர் நூலில் ''உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'' (19:18) என்னும் சட்டமும் தனித்தனியாகக் காணப்பட்டாலும் இயேசுவின் போதனையில் அவை இரண்டும் பின்னிப் பிணைந்த விதத்தில் உள்ளன.

-- எனவே, திருச்சட்டத்தில் மட்டுமன்று, இயேசுவின் போதனையிலும் அன்புக் கட்டளையே மைய இடம் பெறுவதில் வியப்பில்லை. கடவுளையும் மனிதரையும் அன்பு செய்வோர் உண்மையிலேயே தலைசிறந்த கட்டளையைக் கடைப்பிடிக்கின்றனர். கடவுள் முதன்முதலில் நம்மை அன்புசெய்தார். எனவே, நாமும் அவரை, அவரால் அன்புசெய்யப்படுகின்ற மனிதரை அன்புசெய்ய அழைக்கப்படுகிறோம். கடவுளின் அன்பில் நாம் ஆழ வேரூயஅp;ன்ற வேண்டும் என்றால் முதலில் நாம் அவரை நம்ப வேண்டும்; அவருடைய வாக்குறுதி நிறைவேறும் என ஏற்க வேண்டும். எனவே, நம்பிக்கையும் எதிர்நோக்கும் நம்மில் வளரும்போது அன்பும் வளரும். அன்பு நம்மில் சிறக்கும்போது கடவுள் மட்டில் நாம் கொள்கின்ற நம்பிக்கையும் உறுதிப்படும், அவர் வாக்களிக்கின்ற நன்மைகளை நாம் பெறுவோம் என்னும் எதிர்நோக்கும் திண்ணமாகும்.


மன்றாட்டு

இறைவா, உம்மையே நாங்கள் நம்பியிருக்கவும், உம் அன்பில் வளர்ந்து, எங்கள் வாழ்வு நிறைவுபெறும் என நாங்கள் எதிர்நோக்கவும் அருள்தாரும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்


-------------------------


இன்று இருக்கிறாரா?


திருத்தூதர் பர்த்தொலேமேயு ஒரு எதார்த்தவாதி, சிந்தனையாளர், திருச்சட்டமும் இறைவாக்கும் பயின்றவர். நாடும் ஊரும் தெறிந்தவர்."நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்ற அவரின் கேள்வி இதற்குச் சான்று.

திருத்தூதர் பர்த்தொலேமேயுபற்றி இயேசுவின் கணிப்பு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" அவரது கணிப்பும் சரியானதே. பிலிப்போடு அத்திமரத்தின்கீழ் நடந்த உரையாடலை இயேசு வெளியிட்டதும் அதிர்ந்துபோன திருத்தூதர், தன்னுடைய திருச்சட்ட, மறைநூல் அறிவால் தன்னோடு பேசுபவர் "இறை மகன்; இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்பதை அடையாளம் காணுகிறார்.

எதார்த்த வாழ்வும் சீரிய சிந்தனையும் மறைநூல் அறிவும் பொது அறிவும் அவர் இயேசுவின் சீடராவதற்கு பெரிதும் உதவியது.கிறிஸ்தவர்களும் திருப்பணியாளர்களும் இத்தகைய மனநிலைகொண்டால் விண்ணுக்கும் மண்ணுக்கும் இணைப்பாளர்களாக வான தூதர்களாக, மறு கிறிஸ்துவாக உலகை மாற்றி அமைக்க முடியும்.

இறைவா! கபடற்ற எதார்த்த உள்ளம்கொண்ட திருப்பணியாளர்கள், கிறிஸ்தவர்களை எம்மிடையே அதிகமாக்கும்.


:-- ஜோலி --:


Join with us 

 Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A



 

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...