Wednesday, August 24, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (25-08-2022)

 முதல் வாசகம்

எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள்.


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக் கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருட்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்கு பெற உங்களை அவர் அழைத்துள்ளார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 145: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 1)

பல்லவி: என் கடவுளே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.

3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி

4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.

5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். - பல்லவி

6 அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்.

7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 24: 42a, 44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

 நற்செய்தி வாசகம்

ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51

அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம் கூறியது: “விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”


ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------------------

நம்பிக்கைக்குரிய பணியாளராய்!


பொதுக் காலத்தின் இருபத்து ஒன்றாம் வாரம் வியாழக்கிழமை


I 1 கொரிந்தியர் 1: 1-9

II மத்தேயு 24: 42-51


நம்பிக்கைக்குரிய பணியாளராய்!

அரசியால் பாராட்டப்பட்ட படைவீரர்:

தாய் நாட்டிற்காக எதிரிகளோடு போராடி, நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சி இது.

போரில் தலையிலும் கையிலும் காலிலும் அடிபட்டிருந்த ஒவ்வொரு வீரருக்கும் பதக்கம் அணிவித்து, அவர்களுக்கு வாழ்த்துக் கூறிக்கொண்டே வந்தார் அந்நாட்டு அரசி. கடைசியாக, ஒரு படைவீரர் போரில் தன் இரு கைகளையும் கால்களையும் இழந்த நிலையில் படுக்கையில் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்ட அரசிக்கு அழுகையே வந்துவிட்டது.

அவர் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த படைவீரர் அருகில் சென்று, அவரது நெற்றியில் முத்தமிட்டு, “நீயன்றோ நல்ல, நம்பிக்கைக்குரிய பணியாளர்! இந்த நாட்டிற்காக நீ ஆற்ற சேவைக்கு இந்த நாடு தலைவணங்குகின்றது” என்று அந்தப் படைவீரருக்கு தலைவணங்கினார்.

இப்படியொரு செயலைச் செய்தவர் வேறு யாருமல்ல, பேரரசி விக்டோரியாவே.

ஆம், போரில் தன்னுடைய கைகளையும் கால்களையும் இழக்கும் அளவுக்கு இந்த நிகழ்வில் வரும் படைவீரர் பணிபுரிந்ததாலேயே பேரரசி விக்டோரியா அவரை, ‘நம்பிக்கைக்குரிய பணியாளர்’ என்று வியந்து பாராட்டினார். இன்றைய இறைவார்த்தை நாம் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாய் விளங்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

‘யாருடைய வாயிலும் விழக்கூடாது’ என்று சொல்வர். யாருடைய வாயில் விழக்கூடாது என்றால் யாருடைய குறைசொல்லும் ஆளாகக்கூடாது என்பதே பொருள். இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிக் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பேசும் பவுல், குறை சொல்லுக்கு ஆளாகதிருக்கவேண்டும் என்கின்றார்.

குறை சொல்லுக்கு ஆளாகதிருக்க வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நமக்குத் தெளிவுபடுத்துகின்றார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை விழியாய் இருந்து செய்யும் வீட்டுப் பொறுப்பாளர் நம்பிக்கைக்குரிய பணியாளர் இருப்பார்; அவர் தன்னுடைய பதவியில் மேலும் உயர்த்தப்படுவார் என்று சொல்லும் இயேசு, விழிப்பாய் இல்லாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளைச் சரிவரச் செய்யாத வீட்டுப் பொறுப்பாளர் அதற்குரிய தண்டனையைப் பெறுவார் என்கிறார்.

இன்றைக்குப் பலர் தங்களுடைய பொறுப்புகளில் உண்மையில்லாமலும் நேர்மையில்லாமலும் இருப்பதைக் காண முடிகின்றது. ஒருவர் குறை சொல்லுக்கு ஆளாமல் இருக்க வேண்டும் என்றால், அவர் கடவுள் தன்னிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்புகளுக்கு நம்பிக்கைகுரியவாய் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். இதை உணர்ந்து செயல்பட்டால், உயர்வு நிச்சயம்.


சிந்தனைக்கு:

 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்கின்ற ஒருவர், வேறு எதற்கும் யாருக்கும் அஞ்சிடத் தேவையில்லை.

 தன்னுடைய கடமையைச் செய்யத் தவறிய ஒருவர் உரிமைகளைக் கோருவதற்குத் தகுதியற்றவர்

 உண்மை ஒருவரை உயர்த்தும்.


இறைவாக்கு;

‘பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்படவேண்டும்’ (1 கொரி 4:2) என்பார் புனித பவுல். எனவே, நாம் ஆண்டவர் எப்படி நம்பிக்குரியவராய் இருக்கின்றாரோ, அப்படி நாமும் நம்பிக்கையவராய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


பொதுக்காலத்தின் 21 ஆம் வியாழன் 

மு.வா: 1 கொரி: 1: 1-9

ப.பா: திபா: 145: 2-3. 4-5. 6-7

ந.வா:மத்: 24: 42-51


 விழிப்பு உள்ளவர்களா நாம்!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் விழிப்புணர்வோடு வாழும் பொழுது நம் வாழ்வில் வெற்றி அடைய முடியும். விழித்திருந்து இரவு முழுவதும் தலைகுனிந்து படிப்பவன் சாதனைகள் பல செய்ய முடியும். நம்முடைய வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம் நாம் விழித்திருந்து செயல்படாதேயாகும்.

எவனொருவன் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் தனக்குள் என்ன நடக்கிறது என்பதையும் முழுமையாக உணர்ந்து வாழ்கிறானோ அவனே விழிப்பு உடையவன். அவனே வெற்றி பெறுபவன்.

ஒருமுறை சில இளைஞர்கள் ஊர் சுற்றிப்பார்க்க ஒரு புதிய ஊருக்கு சென்றார்கள். அவர்கள் வழியிலே சென்று கொண்டிருந்த போது பெரியவர் ஒருவர் "தம்பிகளா இந்தப்பக்கம் வழி சரியில்லை. பார்த்து செல்லுங்கள்" என்றார். 

அதற்கு அந்த இளைஞர்கள் "பெருசு உங்களை விட எங்களுக்கு கண் நன்றாக தெரியும்" என்று ஏளனமாக சொல்லிவிட்டு சென்றார்கள். விளையாடிக்கொண்டும் அறட்டை அடித்துக்கொண்டும் சென்றவர்கள் பாதையை கவனிக்கத் தவறினார்கள். இறுதியில் தவறி வீழ்ந்தவர்களாய் காயத்துடன் வீடுதிரும்பினார்கள். ஆம் விழிப்பு இல்லையென்றால் பாதையிலும் சரி வாழ்கையிலும் சரி நாம் தவறி வீழ்வது நிச்சயம்.

எனவே தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம்மை விழிப்பாயிருக்க இயேசு அழைக்கிறார்.நாம் யார்? நாம் யாரைப் பிரதிபலிக்கிறோம்?நாம் என்ன செய்கிறோம்? நம் வாழ்க்கையின் நெறி என்ன ?என்பதை நம்மை படைத்த இறைவனும், நம்முடன் வாழும் மனிதர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதை பல சமயங்களில் நாம் உணர்வதில்லை.அதனாலேயே நாம் வாழ்க்கையில் பல தோல்விகளையும் துன்பங்களையும் சந்திக்கிறோம். மாறாக நம் வாழ்வு மறைவானது அல்ல என்பதை உணர்ந்தவர்களாய் நம் சிந்தனை சொல் செயல்களை தூய்மையாக்கி நமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்யும் போது சக மனிதர்கள் மட்டுமல்ல இறைவனே பாராட்டக்கூடிய சிறந்த பணியாளர்களாய் நாம் இருப்போம் என்பதில் ஐயமில்லை. அதுவே நமக்கு கிடைக்கும் உண்மையான பேறு என இயேசு கூறுகிறார்.

விழிப்பாயிருந்து தூயவாழ்வு வாழவே நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.இன்றைய முதல் வாசகம் தூயோராக வாழ்வதே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள உயரிய அழைப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறது. நம் கிறிஸ்தவ வாழ்வு இறைவன் கொடுத்த கொடை. எனவே நம் வாழ்வு தூய இறைவனை பிரதிபலிக்கும் வண்ணம் நம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை தூய்மையாக்கி கிறிஸ்துவோடு நாம் இணைய வேண்டும் என்று புனித புவுல் கூறுவதை நாம் காண்கிறோம்.  

நம் உடல் இறைவன் கொடுத்த கொடை. இவ்வுலக வாழ்வில் ஆன்மா குடிகொள்ளும் இருப்பிடம். இந்த உடல் தூய ஆவியாரின் ஆலயம். இவற்றை நாம் புனிதமாக பயன்படுத்த வேண்டும். நம் ஆன்மா தான் நிலையானது. இந்த உடல் நாம் இந்த உலகில் வாழும் வரைக்கும் தான் நம்மோடு வரும். அதன் பிறகு கடவுளால் மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனித உடல் இறந்த பிறகு மண்ணிற்கே கையளிக்கப்படும். எனவே இவ்வுலகம் சார்ந்த உடல் நிலையற்றது. ஆனால் இதை புனிதமாக பயன்படுத்தும் பொழுது நம் மனதும் ஆன்மாவும் தூய்மையாக்கப்படும். நம் மனதும் ஆன்மாவும் தூய்மையாக்கப்படும்பொழுது நிச்சயமாக மண்ணுலகிலும் விண்ணுலகிலும் கடவுளுடைய உடனிருப்பை உணர்ந்து நிலையான வாழ்வை பெற்றுக் கொள்ள முடியும்.

இறைவனின் மீட்பை பெற உள்ளமும் ஆன்மாவும் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்காக உலகம் சார்ந்த உடலுக்கு எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம் கத்தோலிக்கத் திருஅவையின் புனிதர்களை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் அனைவரும் தங்கள் உடலை தூய ஆவியின் கோயிலாகக் கருதி அனைத்தையும் ஒப்படைத்தார்கள். அதே போல நாமும் இறைவனின் மீட்பை சுவைக்க விழிப்புணர்வோடு உடலையும் ஆன்மாவையும் தூய்மைபடுத்த வேண்டும். அப்பொழுது நாம் இயேசு வருகை எப்போது இருந்தாலும் நாம் தயாராக இருக்க முடியும். விழிப்புணர்வின் வழியாக இயேசு இறையாட்சி மதிப்பீட்டை அறிந்து உணர்ந்து வாழ்வாக அருளைத் தரும்.

எனவே விழிப்போடு இருந்து தூயோராய் விளங்க இறைவன் நமக்கு விடுத்த அழைப்பை வாழ்வாக்க இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா! விழிப்போடு இருக்கவும் தூய வாழ்வு வாழவும் எங்களை அழைத்திருக்கிறீர். நாங்களோ பல வேளைகளில் விழி இருந்தும் விழிப்புணர்வின்றி வாழ்கிறோம். எங்கள் புறக்கண்களையும் அகக்கண்களையும் திறந்து விழிப்புணர்வுடன் வாழ அருள் தாரும். இதனால் நாங்கள் எங்கள் வாழ்வை சீரமைத்து தூயோராகவும் உம் மனம் விரும்பும் பணியாளர்களாகவும் வாழும் வரம் தாரும். ஆமென்.


அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர் 

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு 

சிவகங்கை மறைமாவட்டம்



No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...