Thursday, August 25, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-08-2022)

முதல் வாசகம்

கிறிஸ்துவின் சிலுவை பிற இனத்தாருக்கு மடமையாகவும் அழைக்கப்பட்டவர்களுக்கு கடவுளின் வல்லமையும் ஞானமுமாக உள்ளது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-25

சகோதரர் சகோதரிகளே,

திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும். சிலுவை பற்றிய செய்தி அழிந்துபோகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.

ஏனெனில், “ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டார் அல்லவா? கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்துகொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்சய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார். யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 33: 1-2. 4-5. 10-11 (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.


1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். - பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

10 வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்.

11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! 

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள கன்னித் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------------

மனித ஞானமும் கடவுளின் ஞானமும்


பொதுக் காலத்தின் இருபத்து ஒன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை

I 1 கொரிந்தியர் 1: 17-25

II மத்தேயு 25: 1-13

மனித ஞானமும் கடவுளின் ஞானமும்


இப்படியும் ஒரு ஞானி:

எல்லாராலும் ஞானி என்று கருதப்பட்ட ஒருவர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக பலரும் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து போனார்கள்.

ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காகப் பெருந்திரளான மக்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அவரை சூழ்ந்துகொண்டு, தங்களுக்கு ஏதாவது போதிக்குமாறு அவரிடம் கேட்டார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர், தனக்கு இடப்பக்கம் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். பின்னர் அவர் வலப்பக்கம் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். சிறிது நேரம் இடைவெளிக்குப் பின்பு அவர் தனக்குப் பின்னால் அமர்ந்திருந்தவர்களையும், தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்தார். மீண்டுமாக சிறிதுநேரம் அமைதி நிலவியது பின்னர் அவர் மேலயும் கீழேயும் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார்.

திரண்டிருந்த மக்கள் அனைவரும் அவரது ஒவ்வொரு செயலையும் பார்த்துவிட்டு, ‘என்னவொரு ஞான நிறைந்த போதனை’ என்று வியந்து, கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

நீதிமொழிகள் நூல் சொல்வது போல், பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் (நீமொ 17: 28) எனக் கருதப்படலாம். ஆனால், அவன் உண்மையில் ஞானமுள்ளவன் கிடையாது. இன்றைய இறைவார்த்தை யார் ஞானமுள்ளவர் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இன்றைக்குப் பலரும் தங்களை ‘ஞானி’ என நினைத்துக் கொள்கின்றார்கள், அல்லது காட்டிக் கொள்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஞானியா? என்பது மிகப்பெரிய கேள்வி. “தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” (இச 21: 23) என்ற இறைவார்த்தையின் அடிப்படையில், சிலுவை உலகினரின் பார்வையில் மடமையாகக் கருதப்பட்டது. ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் பவுல், “மனித ஞானத்தைவிடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது” என்கிறார். எனில், சிலுவையில் அறையைப்பட்ட கிறிஸ்துவே கடவுளின் ஞானமாக வல்லமையாக இருக்கின்றார். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்த இறைஞானத்தை ஒருவர் பெறவேண்டும் என்றால், அவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்மீது நம்பிக்கை வைக்காமல், இறைஞானத்தைப் பெறுவது சாத்தியமில்லாது.

இன்றைய நற்செய்தி வாசகம் இறைஞானத்தோடு செயல்பட்டால் விண்ணரசில் நுழையலாம், விண்ணக விருந்தில் கலந்து கொள்ளலாம் என்ற சிந்தனையைத் தருகின்றது. பொதுவாக யூதர்களின் திருமண நிகழ்வு மணமகள் வீட்டிலிருந்து தொடங்கும். மணமகன் மணமகளின் வீட்டிற்கு வந்தபிறகு (அது எந்த நேரமாகவும் இருக்கலாம்) பவனி தொடங்கி மணமகன் வீட்டை அடையும். அதன்பிறகு திருமண விருந்து தொடங்கும். இதற்காக மணமகளின் தோழிகள் ஆயத்தமாய் இருக்க வேண்டும். நற்செய்தியில் இயேசு சொல்லும் உவமையில் வரும் ஐந்து தோழிகள் அறிவிலிகளாக இருக்கின்றார்கள். இவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு, அவரது வருகைக்கு ஆயத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அடையாளம். முன்மதியுடைய தோழிகளோ ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவருடைய வருகைக்காக ஆயத்தமாக இருந்தவர்களுக்கு அடையாளம்.

யாரெல்லாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அவர் இறைஞானத்தைத் தருகின்றார். அதைக் கொண்டு அவர்கள் முன்மதியோடு செயல்பட்டு, ஆண்டவரின் அரசில் நுழைகின்றார்கள். எனவே, இறைஞானம் நமக்குக் கிடைக்க இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.


சிந்தனைக்கு:

 ஆண்டவரைப் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்

 உலக அறிவு கடவுளுக்கு முன்பு ஒன்றுமே இல்லை.

 கடவுளுக்கு முன்பாகத் தாழ்த்தி கொள்வோரைக் கடவுள் தனது அருளால் உயர்த்துவார்.

இறைவாக்கு:

‘என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம்’ (பிலி 3: 8) என்பார் புனித பவுல். எனவே, இயேசுவைப் பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம் என உணர்ந்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

*******

1கொரிந்தியர் 1: 17 – 25

சிலுவை – மீட்பின் சின்னம்

பவுலடியார் அறிவித்த நற்செய்தியில், மையமாக இருந்தது சிலுவை, ”சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே” (18) மற்றும் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, ”நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகின்றோம்”(23). சிலுவை என்பது குற்றவாளிகளுக்கு உரோமைப் பேரரசால் வழங்கப்பட்ட கொடூரமான தண்டனை. திருடர்களுக்கும், அரசை எதிர்த்து புரட்சி செய்கிறவர்களுக்கும் வழங்கப்படுகிற தீர்ப்பு. பொதுமக்களின் பார்வையில், பல தரப்பட்ட கொடுமைகளோடு நிகழ்கிற, அவமானச்சின்னம் தான், இந்த சிலுவைச்சாவு. யூதப் பாரம்பரியத்திலும் கூட, இது சபிக்கப்பட்ட இறப்பாகவே பார்க்கப்பட்டது, ”இணைச்சட்டம் 21: 23 ”தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்”. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபோது, சிலுவை தான் மீட்பின் சின்னம் என்று கூறுவது முட்டாள்தனம் மட்டுமல்ல, அது கயமைத்தனம் என்றே ஒருவர் சொல்ல முடியும். 1: 22 ல் நாம் பார்ப்பது போல, யூதர்கள் கடவுளை நம்புவதற்கு, அறிந்து கொள்வதற்கு அடையாளங்களையும், அருங்குறிகளையும் கேட்கிறார்கள். கிரேக்கா்களோ ஞானத்தைத் தேடுகிறார்கள்.

ஆனால், கடவுள் தன்னை வெளிப்படுத்த, அடையாளத்தையோ, ஞானத்தையோ தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, அவமானச்சின்னம் என்று இந்த உலகம் கருதிய சிலுவையையே தேர்ந்து கொண்டார். நாம் கடவுளைத் தேடுகிற வழிகளில் அவர் தன்னை வெளிப்படுத்தவில்லை. மாறாக, மனிதர்கள் தேடுகிற வழியை அழித்தொழித்து, அவர்கள் நினைத்திராத வடிவத்தில் தன்னை வெளிப்படுத்துகிறார். யூதரானாலும் சரி, கிரேக்கரானாலும் (புறவினத்தார்) சரி, அனைவரையும் இணைக்கக்கூடிய பாலமாக சிலுவை உருப்பெறுகிறது. தூய பவுலடியார் இந்த பகுதியின் வழியாக, நமக்குச் சொல்ல வருகிற செய்தி, கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளாக வேற்றுமை பாராட்டாது, ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே ஆகும்.

இன்றைக்கும் கிறிஸ்தவர்களிடையே சாதி, பொருளாதார வேறுபாடுகள் இருப்பது, கிறிஸ்துவை முழுமையாக அறிந்து கொள்ளாததையும், ஆன்மீகத்தை வெறும் வழிபாட்டாகவே நாம் பார்க்கிற மனநிலையில் இருக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இதனைக் கடந்து சிந்திப்பதற்கு, தூய பவுலடியார் நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


 சிந்தனை.

தூக்க மயக்கம் உங்களைத் தின்றுவிடும்

மத்தேயு 25:1-13

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

அன்புமிக்கவர்களே! வாழ்க்கையை கொண்டாடுங்கள். சந்தோசமாக மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள். இந்த வசனங்களை நாம் கேட்டிருக்கிறோம். யார் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள்?. யார் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்?. நல்ல சுறுசுறுப்பாக அனுதின கடமைகளை செய்பவர்கள், கடமைகளை தள்ளிப் போடாமல் கருத்துடன் செய்வர்கள் தான் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

பலருடைய வாழ்க்கை கொண்டாட்டம் இல்லாமல் திண்டாட்டமாகவே ஓடுகிறதே காரணம் என்ன? அதற்கான இரண்டு காரணங்களை இன்றைய நற்செய்தி வாசகம் நம் கண்முன்னே வைக்கின்றது.

1. ஆர்வமற்றவர்கள்

அன்றன்றுள்ள கடமைகளை அன்றே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவர்கள் இன்பமாய் இருப்பதில்லை. அடுத்த நாளைக்கு தள்ளிப்போடுகிறார்கள். அடுத்த நாள் செய்ய முடிவதில்லை. குற்றயுணர்வு வருகிறது. வாழ்வு கசப்பாகிறது.

2. அடிமைகள்

ஆட்களுக்கு, பொருட்களுக்கு அடிமைகளாக இருக்கின்றவர்கள் எப்போதும் தூக்க மயக்கத்துடன் அழைவர். அசதி அவர்களை ஆட்கொள்ளும். சோர்வு ஒரு திமிங்கலம் போல அவர்களை விழுங்கும். வாழ்வே மாயமாக மாறிவிடும்.

மனதில் கேட்க…

1. என் வாழ்க்கை எனக்கு கொண்டாட்டாமா அல்லது திண்டாட்டமா?

2. இப்போது இருப்பதை விட இன்னும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் நான் செயல்படலாமே?

மனதில் பதிக்க…

விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையே உங்களுக்குத் தெரியாது(மத் 25:13)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

-------------------------

உங்களைத் தெரியாது

விண்ணரசு பற்றிய எடுத்துக்காட்டாக, பத்துக் கன்னியர் அல்லது பத்துத் தோழியர் எடுத்துக்காட்டை முன்மொழிகின்றார் இயேசு. இந்த எடுத்துக்காட்டே மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இறுதி உவமை ஆகும். திருமண நிகழ்வின் பின்புலத்தில் இந்த உவமை அமைகின்றது. யூதர்களின் திருமணம் இரு நிலைகளில் நடந்தேறும். முதலில், நிச்சயம். இரண்டாவது திருமணம். திருமண நிகழ்வில் மணமகள் அழைப்பு, மணமகனுடைய பெற்றோர்முன் திருமணம், ஏழுநாள் கொண்டாட்டம் என்று மூன்று பகுதிகள் உண்டு. மணமகளை அழைத்துச் செல்வதற்காக மணமகன் அவளுடைய இல்லத்திற்கு வரும்போது இந்த நிகழ்வு நடக்கிறதா, அல்லது மணமகளை மணமகன் தன் பெற்றோரின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்போது நடக்கிறதா என்பது பற்றிய கலாச்சாரத் தரவுகள் தெளிவாக இல்லை.

மேலும், இந்த உவமையை இயேசுவே மொழிந்தாரா? அல்லது தொடக்கத் திருஅவை வாய்மொழி வரலாற்றில் இது உருவானதா என்றும் தெரியவில்லை. ஏனெனில், 'முன்மதியோடு அல்லது தயாரிப்பு நிலையில் இருத்தல்' என்பது, இயேசுவின் மலைப்பொழிவு பகுதியில் வரும், 'அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்' என்னும் அறிவுரைப் பகுதியின் முரணாகவும் தெரிகின்றது. 

நற்செய்திப் பகுதியின் இறுதி வாக்கியத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். கடைகளில் போய் எண்ணெய் வாங்கிக் கொண்டு இல்லம் திரும்பிய கன்னித் தோழியர் மணமகனின் கதவுகளைத் தட்டுகின்றனர். அப்போது அவர், 'எனக்கு உங்களைத் தெரியாது' என்கிறார். இது மிகப் பெரிய நிராகரிப்பு. 

இப்போது விளக்குகள் எரிந்துகொண்டிருந்தாலும் அவற்றின் வெளிச்சத்தால் பயனொன்றும் இல்லை. அந்த வெளிச்சம்கூட அவர்களை மணமகனுக்கு அடையாளப்படுத்தவில்லை. 

விண்ணரசு பற்றி இந்த உவமை சொல்வது என்ன?

விண்ணரசுக்குள் சிலர் அனுமதிக்கப்படுவர். சிலருக்கு அனுமதி மறுக்கப்படும். அனுமதி மறுக்கப்பட்டவர்கள் உள்ளே நுழைவது சாத்தியமே இல்லை. மேலும், முன்மதி அல்லது தயாரிப்பு நிலை மிகவே அவசியம்.

ஐந்து தோழியர் அறிவிலிகள் எனக் கருதப்பட மூன்று காரணங்கள் உள்ளன:

ஒன்று, அவர்கள் தங்களை மையமாக வைத்து யோசித்தார்களே அன்றி, மணமகனை மையமாக வைத்து யோசிக்கவில்லை. தங்கள் கைகளில் உள்ள விளக்கு எரிகிறது. அதற்குள் அவர் வந்துவிடுவார் என நினைக்கின்றனர். நேற்றைய நற்செய்தியில் நாம் கண்ட பொல்லாத பணியாளர், 'தலைவர் வரக் காலம் தாழ்த்துவார்' எனத் தனக்குள் சொல்லிக் கொள்கின்றார். இந்த இளவல்களோ, 'தலைவர் சீக்கிரம் வந்துவிடுவார்' எனத் தனக்குள் சொல்லிக் கொள்கின்றனர். இருவர் நினைப்பதும் தவறாகிவிடுகிறது.

இரண்டு, 'உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' எனத் தங்களின் சகத் தோழியரிடம் பங்கு கேட்கின்றனர். இப்படிச் செய்வதால் அவர்கள் தோழியரின் வளத்தைப் பகிர்ந்துகொள்ள நினைப்பதுடன், அவற்றை வற்றிப் போகச் செய்யவும் துணிகின்றனர். ஆனால், விண்ணரசைப் பொருத்தவரையில் அவர்களுடைய செயல்களின் பலன்கள் அவர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் அவற்றில் பங்குபோட இயலாது.

மூன்று, திசை மாறிச் செல்கின்றனர். மணமகன் வருகின்ற திசை நோக்கிச் செல்லாமல், வணிகரின் திசை நோக்கிச் செல்கின்றனர். இவர்களுடைய பார்வை மீண்டும் தங்கள் விளக்குகளின்பக்கம் இருக்கிறதே தவிர, மணமகன் பக்கம் இல்லை. ஆகையால்தான், மணமகன் இவர்களைக் காணவில்லை. ஒருவேளை மணமகன் திசை நோக்கி அவர்கள் சென்றிருந்தால் அவரும் அவர்கள்மேல் இரக்கம் கொண்டு, 'பரவாயில்லை! வாருங்கள்!' எனச் சொல்லி அவர்கள்மேல் இரக்கம் காட்டி அவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பார்.

இன்றைய நாளில் நம் ஆன்மிக வாழ்வில் மேற்காணும் மூன்று தவறுகளை நாமும் செய்கின்றோமா? எனக் கேட்டறிவோம்.

'உங்களை எனக்குத் தெரியாது' என்று இயேசு நம்மை நோக்கிச் சொன்னால் எப்படி இருக்கும்?

நாம் பல நேரங்களில் இயேசுவை நமக்குத் தெரியும் எனச் சொல்கிறோம். ஆனால், அவருக்கு நம்மைத் தெரியுமா? அவர் நம்மை குரலை அறிவாரா? நாம் ஏந்தியிருக்கும் ஒளி அவருக்கு நம்மை அடையாளப்படுத்துகிறதா? அல்லது ஒளி மங்கலாக இருக்கிறதா? இதையே பவுலும் கலாத்திய இறைமக்களிடம், 'நீங்கள் கடவுளை அறிந்துள்ளீர்கள். உண்மையில், கடவுளே உங்களை அறிந்துள்ளார்' (காண். கலா 4:9) என்று கூறுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஐவரின் முன்மதியை நாம் பாராட்டுகின்றோம். ஆனால், 'மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது' என்கிறார் பவுல் (முதல் வாசகம்).

அருள்திரு யேசு கருணாநிதி


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...