Tuesday, August 30, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-08-2022)

 

முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9

சகோதரர் சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேச முடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன். நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்? ஏனெனில், ஒருவர் ஹநான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றும் வேறொருவர் ஹநான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப் போக்கில்தானே நடக்கிறீர்கள்? அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே! ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டு ஆற்றுகிறார்கள். நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 33: 12-13. 14-15. 20-21

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.


12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். -பல்லவி

14 தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார்.

15 அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! -பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார். கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், ஹஹநீர் இறைமகன்'' என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார். பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், ஹஹநான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

கடவுள் செய்யும் நல்லது எதற்கு?

லூக்கா 4:38-44


இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

நாம் பிறந்த நாளிலிருந்து நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தும் ஆண்டவர் நமக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. சிங்கக்குட்டிகள் பட்டினி இருந்தாலும் ஆண்டவரைத் தேடுவோருக்கு எந்தக் குறையும் இராது என்பது நமக்குத் தெரியும். நாம் இன்பமாக இருக்கும்போது நம்மோடு இணைந்து மகிழ்கிறார். துன்பமாக இருக்கும்போது நமக்கு துணையாக இருக்கிறார். இப்படி உதவி செய்யும் கடவுள், இப்படி நமக்கு நல்லது செய்யும் கடவுள் அவர் நம் நல்வாழ்விற்கு காரணமாக இருப்பது போல நாமும் அடுத்தவர் நல்வாழ்விற்கு காரணமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார். அதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு மாமியார் வழியாக விளக்கப்படுகிறது.

பேதுருவின் மாமியார் இறைவனிடமிருந்து ஆசீர்வாதம் பெற்று சுகம் பெறுகிறார். அவருக்கு இறைவனிடமிருந்து நல்வாழ்வு கிடைக்கிறது. நல்வாழ்வை பெற்ற அவர் அடுத்தவருக்கு பணிவிடை செய்கிறார். பணிவிடை என்பது அடுத்தவர் நல்வாழ்விற்கு அவர் காரணமாக, கருவியாக மாறுகிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

நான் மட்டும் உயர்ந்தால் போதும் என நினைப்பவர்கள் கடவுளின் பிள்ளைகள் அல்ல. அவர்கள் சுயநலம் .பெற்றெடுத்த பிள்ளைகள். கடவுளின் பிள்ளைகள் அடுத்தவருக்கு கரம் கொடுப்பவர்கள். கலங்கரை விளக்காக இருப்பவர்கள். மற்றவரின் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருப்பவர்கள்.

அடுத்தவர் நல்வாழ்விற்கு உதவி செய்வர்களே தங்களுடைய வெற்றியை மனதார கொண்டாட முடியும். அவர்களுடைய புகழ்பாக்களை ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்.


மனதில் கேட்க…

1. கடவுள் என் நல்வாழ்விற்கு காரணமாக இருக்கிறார் - தினமும் நன்றி கூறுகிறேனா?

2. அடுத்தவர் நல்வாழ்விற்கு நான் எப்படி காணமாக இருக்கிறேன்?


மனதில் பதிக்க…

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன். ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்(திபா 30:1)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

----------------------------------------------------------------

1கொரிந்தியர் 3: 1 – 9

உண்மையான ஆன்மீகம்

”ஆவிக்குரியவர்களிடம் பேசுவது போல நான் உங்களிடம் பேச முடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும், எண்ணிப் பேசுகிறேன்” என்று பவுலடியார் பேசுகிறார். கொரிந்தியர்களை சாதாரண குழந்தைகள் என, பவுலடியார் சொல்வதற்கான காரணம் என்ன? முதிர்ச்சியற்ற தன்மையில் இருக்கிறார்கள் என்பதை சொல்வதற்கான காரணம் என்ன? அடிப்படையில் கொரிந்தியர்கள் அறிவுள்ளவர்கள் என்பது உண்மை. அப்படியென்றால், பவுலடியாரின் முரண்பாடான செய்திக்கு என்ன காரணம்?

கொரிந்தியர்களைப் பொறுத்தவரையில், ஆன்மீகத்தில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லை என்கிற அளவுக்கு, கர்வம் கொண்டிருந்தனர். தாங்கள் அளவற்ற கொடைகளைப் பெற்று விளங்குவதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். உண்மை தான். அவர்கள் அதிகமான கொடைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அவர்களிடத்தில் ஆவிக்குரிய செயல்பாட்டைக்காட்டிலும், உலகம் சார்ந்த செயல்பாடுகள் அதிகமாக இருந்தன. வஞ்சகம், பொறாமை, வேற்றுமை உணர்வு முதலானவை இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ”நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில் தானே வாழ்கிறீர்கள்?” என்று பவுலடியார் இதற்கான எடுத்துக்காட்டாகச் சொல்கிறார். உண்மையிலேயே அவர்கள் ஆன்மீகத்தில் உறுதியாக இருந்தால், இந்த வேற்றுமை பாராட்டும் பொறாமை உணர்வு அவர்களிடம் வந்திருக்காது என்பதுதான் பவுலடியாரின் வாதம். எனவே, தங்களுடைய கர்வத்தை விட்டுவிட்டு, கிறிஸ்துவில் வாழ்ந்து, உண்மையான ஆன்மீகத்தை வளர்த்துக்கொள்ள அவர் அறைகூவல் விடுக்கிறார்.

எவ்வளவு தான் வரங்களை பெற்றிருந்தாலும், நம்மிடையே உலகம் சார்ந்த எண்ணங்கள் குடிகொண்டிருந்தால், நம்முடைய ஆன்மீக வாழ்வில் இன்னும் முதிர்ச்சியற்றவர்களாகவே இருக்கிறோம் என்பது தான் இதனுடைய பொருளாக இருக்கிறது. நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும், கர்வத்தையும், வேற்றுமை உணர்வையும் விட்டுவிட்டு, கிறிஸ்துவில் வாழ்வதற்கு முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசுவின் அர்ப்பண வாழ்வு

செய்யக்கூடிய பணியில் முழுமையான அர்ப்பண உணர்வு வேண்டும். அதுதான் நம்மை மற்றவர்களிடமிருந்து தனித்துவமிக்க மனிதராகக் காட்டும் என்பதை, இயேசு தனது வாழ்வின் மூலமாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார். இன்றைய நற்செய்தியின் நிகழ்வுகள் அழகாக, வரிசையாக, நேர்த்தியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். நிச்சயம் போதிப்பது எளிதான காரியமல்ல. கூடியிருக்கிற மக்கள் அனைவருக்கும், கேட்கும் விதத்தில், புரியும் விதத்தில் போதிப்பது, நமது பொறுமையை, வலிமையை சோதிக்கக்கூடிய தருணம். அவ்வளவு கடினமான பணியைச் செய்துவிட்டு, இயேசு பேதுருவின் மாமியார் வீட்டிற்கு சற்று இளைப்பாற வருகிறார். வந்த இடத்தில் பேதுருவின் மாமியார் இருக்கிற நிலையைப் பார்த்து, தனது களைப்பைப் பார்க்காமல் அவருக்கு உதவுகிறார். அவரிடமிருந்து காய்ச்சலை அகற்றுகிறார்.

இவ்வளவு நேரம் இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள், அவர் அங்கிருப்பதைக் கண்டு, நோயாளிகளை அவரிடத்தில், குணப்படுத்துவதற்காகக் கொண்டு வருகின்றனர். நிச்சயம் ஏராளமான எண்ணிக்கையில் வந்திருப்பார்கள். பொறுமையாக, ஒவ்வொருவரின் மீதும் கைகளை வைத்து செபிக்கிறார். குணம் பெற்றுத்தருகிறார். அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு, தந்தையிடம் செபிப்பதற்காக, தனிமையான இடத்திற்குச் செல்கிறார். மீண்டும் அடுத்தநாள் மக்கள் கூட்டமாக வருகிறார்கள். அவர்களை பொறுமையோடு அனுப்புகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஊர்களுக்கு, தன்னுடைய சீடர்களை அழைத்துச் செல்கிறார். இவ்வாறு எந்த கோபத்திற்கும் இடங்கொடுக்காமல், நிதானத்தை இழக்காமல், மக்களுக்காக தனது வாழ்வையே முழுமையாக இயேசு அர்ப்பணித்திருப்பதற்கு இதனைவிட வேறு சான்றுகள் எதனையும் கொடுக்க முடியாது.

இயேசுவிடத்தில் இருந்த அந்த அர்ப்பண உணர்வு நமக்கும் வேண்டும். நாம் செய்யக்கூடிய பணிகளில் முழு ஈடுபாடு நமக்கு வேண்டும். அந்த முழுமையான ஈடுபாட்டோடு, நமது பணிவாழ்வில் முழுமையாக ஈடுபடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசுவின் நற்செய்திப்பணி

இயேசு பேதுருவின் மாமியாரின் உடல் நலக்குறைபாட்டைப் போக்குவதை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். தொழுகைக்கூட வழிபாட்டை முடித்துவிட்டு, இயேசு பேதுருவின் இல்லத்திற்கு வருகிறார். வழிபாடு என்பது சாதாரணமான பணி அல்ல. பார்ப்பதற்கு எளிமையானது போல தோன்றினாலும், அனைத்து மக்களுக்காகச் செபிப்பது, அவர்களுக்குக் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தருவது, நிச்சயமாக கடுமையான பணி. அப்படிப்பட்ட கடுமையான பணியைச் செய்துவிட்டு, பேதுருவின் இல்லத்திற்கு ஓய்வெடுக்க இயேசு வருகிறார். அங்கேயும் பணிவாழ்வு அவரை அழைக்கிறது.

பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்த இயேசு மிகப்பெரிய மக்கள் கூட்டம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும்? என்பதை மக்கள் அறிய வேண்டும், தன்னைப்புகழ வேண்டும் என்று இயேசு ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால், அவர் மக்கள் கூட்டத்தையும் அங்கே வரவழைத்திருப்பார். இயேசு எப்போதும், மக்கள் பயனடைய வேண்டும் என்றுதான் நினைத்தாரே தவிர, தான் பாராட்டப்பட வேண்டும், புகழப்பட வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

இன்றைக்கு நற்செய்தி போதிக்கப்பட வேண்டுமெனில், மிகப்பெரிய மக்கள்கூட்டம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். சில கிராமங்களுக்குச் செல்கிறபோது, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மக்கள் இருந்தால், நற்செய்தி போதிப்பதற்கு நமக்கு மனமில்லை. ஆனால், இயேசுவைப்போல, எங்கும், எல்லாவிடத்திலும் நற்செய்தியை மகிழ்ச்சியோடு போதிக்கக்கூடிய அருள்வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மற்றவர்களுக்காக வாழுவோம்

இயேசு தொழுகைக்கூடத்தில் போதனையை முடித்துவிட்டு, பேதுருவின் இல்லம் வருகிறார். வழிபாடு முடித்துவிட்டு வருகிற போதகருக்குத்தான் தெரியும், எவ்வளவுக்கு தனது ஆற்றலை, சக்தியை அந்த வழிபாட்டுக்குத்தான் கொடுத்தோம் என்று. வழிபாடு முடிந்து வருகிற எந்த ஒரு போதகரும், ஓய்வாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்களே ஒழிய, ஓயாது தங்களது உடலை வருத்திக்கொள்ள விரும்ப மாட்டார்கள். நிச்சயம் அந்த ஓய்வுக்கு அவர்கள் தகுதியானவர்கள்தான். ஆனால், இயேசு தனக்கு ஓய்வு வேண்டும் என்பது தெரிந்தும், அங்கே மனிதத்தேவை இருக்கிறபோது, தனது ஓய்வை முன்னிறுத்தாமல், தேவையை நிறைவேற்ற வருகிறார்.

பேதுருவின் மாமியார் உடல் நலமடைந்த உடனே, அவர்களுக்கு பணிவிடை செய்ய எழுந்து வந்ததாக நற்செய்தியாளர் எழுதுகிறார். இப்போதுதான் குணமடைந்திருக்கிறது, எனவே இன்னும் நன்றாக ஓய்வு எடுப்போம் என்றில்லாமல், வந்திருக்கிறவர்களை நல்ல முறையில் பேணிக்காக்க மும்முரமாய் இருக்கிறார் அவர். கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற உடல் ஆரோக்கியத்தை, ஆற்றலை தேவையில் உள்ளவர்களுக்கு பயன்படுத்த எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை, இயேசுவும், பேதுருவின் மாமியாரும் உணர்த்துகிறார்.கள்.

உடல் ஆரோக்யம் என்பது கடவுள் கொடுத்திருக்கிற உன்னதமான கொடை. எவ்வளவு பொன், பொருள் கொடுத்தாலும் வாங்கமுடியாத கொடை. அத்தகைய கொடை இறைவனால் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதை பயனுள்ள முறையில் தேவையில் இருக்கிறவர்களுக்கு பயன்படுத்த முன்வருவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளின் உடன் உழைப்பாளர்கள் !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறை ஊழியம் செய்யும் எவரும் பெருமை பாராட்டாதபடி இன்றைய வாசகத்தில் பவுலடியார் தெளிவாகப் போதிக்கிறார். நாம் ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளைச் செய்கிறோம். ஆனால், இறுதிப் பணியும், வெற்றியும் இறைவன் ஒருவருக்கே. அதை நல்லதொரு உவமானம் வழியாகப் பவுல் எடுத்துரைக்கிறார்: “நான் நட்டேன். அப்பொல்லோ நீர் பாய்ச்சினார். கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை. நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை. விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை”. ஆம், நாம் என்ன பணிகள் ஆற்றினாலும், அதன் இறுதி பலனைத் தருபவர் இறைவனே. “ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்” (திபா 127:1) என்னும் வரிகள் எவ்வளவு உண்மை. குழந்தை வளர்ப்பது, குடும்பத்தை உருவாக்குவதுரூhநடடip; என குடும்பப் பணிகள் செய்பவர்கள்கூட இதை மனதில் கொள்ளவேண்டும். நாம் அனைவரும் இறைவனின் உடன் உழைப்பாளர்கள். கடவுளின் பணியில் பங்காளர்கள். நமது கடமைகளை நாம் நன்கு ஆற்றுவோம். பலனை இறைவன் தருவார். நமக்குள் வீண் போட்டி, பொறாமைகள், சச்சரவுகள் தேவையில்லை. அனைவரும் இறைவன் தந்த பணியையே செய்கிறோம்.

மன்றாடுவோம்: உழைப்பின் நாயகனான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களையும் உமது உடன் உழைப்பாளர்களாக நீர் அழைத்திருப்பதற்காக நன்றி கூறுகிறோம். நீர் எங்களிடம் ஒப்படைத்திருக்கும் பணிகளை, கடமைகளை நன்கு முடிக்க எங்களுக்கு ஆற்றல் தாரும்.  தந்தருள வேண்டுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

----------------------------------------

 பணிவிடை செய்தார் !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

ஒரு மாற்றத்துக்காக இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதிக கவனம் பெறாத ஒரு வசனத்தைத் தியானிப்போமா? தொழுகைக் கூடத்திலிருந்து சீமோனின் வீட்டிற்கு சென்ற இயேசு கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்த சீமோனின் மாமியாரைக் குணமாக்கினார். காய்ச்சல்; அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார் என்று வாசிக்கிறோம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் சுவையான ஒரு செய்தியாக இது இருப்பதை உணர்கிறோம்.

பொதுவாக நோயிலிருந்து நலம் பெற்ற ஒரு மனிதர் என்ன செய்ய வேண்டும்? ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால், சீமோனின் மாமியாரோ அத்தகைய சிந்தனையில் இறங்காமல், உடனே அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினார். பெண்களுக்கேயுரிய ஓர் இயல்பு, தங்களை மறந்து பிறரைக் கவனிக்கும் தாய்மைப் பண்பு.

நலம்; என்பது ஆண்டவர் தரும் கொடை. இந்தக் கொடையானது பிறருக்குப் பணிவிடை புரியவே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அழுத்தமாக சான்று பகர்கிறார் சீமோனின் மாமியார். நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் உடல் நலம் என்னும் கொடைக்காக நன்றி கூறி, நலமோடு வாழும் நாம் நலமற்றோருக்குப் பணிவிடை செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை இன்றைய வாசகம் மூலமாக நினைவூட்டிக்கொள்வோம்.

மன்றாடுவோம்: நலம் தரும் நாயகனே இறiவா, உம்மைப் போற்றுகிறோம். எத்தனையோ முறை நீர் எங்களை நோயினின்றும், பிணிகளினின்றும், ஆபத்துகளில் இருந்தும் காத்துக்கொண்டிருக்கிறீர். அந்த வேளைகளுக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம். இவ்வாறு நீர் எங்களுக்கு நீட்டிக்கொடுத்த வாழ்நாளை நாங்கள் உமக்கும், உம் மக்களுக்கும் பணிவிடை புரிவதில் கழிக்க எங்களுக்கு வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்துவந்தார்'' (லூக்கா 4:31)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


-- நாசரேத்திலிருந்து இயேசு கப்பர்நாகும் என்னும் ஊருக்குச் செல்கிறார். கலிலேயாக் கடலின் வட மேற்குப் பகுதியில் அமைந்த ஊர் கப்பர்நாகும். அங்கே மீன்பிடித்தல் மும்முரமாக நடந்துவந்தது. அவ்வூரில் இருந்த தொழுகைக் கூடத்திற்கு இயேசு செல்கிறார். மக்களுக்கு மீட்பளிக்க வந்த இயேசுவின் பணி நோயாளருக்கு நலம் வழங்கும் பணியாகத் தொடங்குகிறது. தொழுகைக் கூடத்தில் ஓய்வு நாளன்று இயேசு போதித்துக்கொண்டிருக்கையில் பேய்பிடித்த ஒரு மனிதர் உரத்த குரலில் கத்துகிறார். இயேசு அந்த மனிதரைப் பிடித்திருந்த பேயை அதட்டி வெளியேறச் செய்கிறார். அந்த மனிதரும் குணமடைகிறார். இயேசு புரிந்த முதல் புதுமையாக மாற்கு, லூக்கா ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளனர் (காண்க: லூக் 4:33-37; மாற் 1:21-28). இதன் பொருள் என்ன? பாலைநிலத்தில் இயேசுவைச் சோதித்த அலகை உலக அரசுகள் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் அந்த அதிகாரத்தை இயேசுவுக்குக் கொடுப்பதாகவும் கூறி, ''நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்'' என்றது (லூக் 4:5-7). ''நீர் இறைமகன் என்றால் இந்தக் கல்லை அப்பமாகும்படி கட்டளையிடும்'' என அலகை கேட்டது. ஆனால் இயேசு அலகையின் சோதனையை முறியடித்து, தமக்குக் கடவுள் அளித்த அதிகாரம் உண்டென நிலைநாட்டினார். கப்பர்நாகும் ஊரில் பேய் இயேசு ''கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' எனத் தனக்குத் தெரியும் என்று கூறுகிறது (லூக் 4:34). நற்செய்தி நூல்களில் ''அலகை'' (''சாத்தான்'') என்பது கடவுளை எதிர்த்து நிற்கின்ற தீய சக்தியாக விளக்கப்படுகிறது. ''பேய்கள்'' என்பவை அலகைக்குக் கீழ் பணிபுரிகின்ற, தாழ் நிலை ஊழியர்களாகக் காட்டப்படுகின்றன. இயேசு அலகையின் ஆட்சியை ஒழிக்க வந்தார் என்னும் உண்மையை நற்செய்தி நூல்கள் அறிவிக்கின்றன.

-- கடவுளின் ஆட்சியை நிலைநாட்ட வந்த இயேசு அலகையின் ஆட்சியை முறியடிப்பார். எனவே, இயேசுவுக்கும் அலகைக்கும் இடையே நிகழ்கின்ற போர் இயேசுவின் பணித் தொடக்கத்திலிருந்தே நடந்தது. பேய்பிடித்திருந்த மனிதர் குணமடைந்ததும் மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவர்கள் ''திகைப்படைந்தனர்'' (லூக் 4:36). ''எப்படிப் பேசுகிறார், பாருங்கள்!'' என்று கூறி அவர்கள் தங்கள் வியப்பை வெளிப்படுத்துகின்றனர் (லூக் 4:36). ஆனால் அவர்கள் இயேசுவிடத்தில் ''நம்பிக்கை கொண்டதாக'' லூக்கா குறிப்பிடவில்லை. இயேசு புரிந்த இப்புதுமையில் இரு முக்கிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. முதலில், இயேசு ''அதிகாரத்தோடு'' போதிக்கவும், கடவுளிடமிருந்த பெற்ற அதிகாரத்தோடு பேய்களை முறியடிக்கவும் செய்கிறார். எனவே, இயேசுவின் போதனையும் அவர் புரியும் புதுமையும் கடவுளின் சக்தியை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றன. இரண்டாவது, கடவுளின் சக்தி இயேசு வழியாக வெளிப்பட்டதைக் கண்டபோதிலும் மக்கள் வியப்படைகிறார்களே தவிர இயேசுவை நம்பி ஏற்க முன்வரவில்லை. நாமும் இயேசுவிடத்தில் கடவுளின் சக்தி துலங்குவதைக் கண்டு வியப்படைவதோடு நின்றுவிடாமல் அவரே நமக்கு நலமளிக்கின்ற ''மருத்துவர்'' என்றும் நம்மைத் தீய சக்திகளிடமிருந்து ''மீட்பவர்'' என்றும் ஏற்று, அவரிடத்தில் ''நம்பிக்கை கொள்ள'' அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு

இறைவா, உம் வல்லமையை எங்கள் வாழ்வில் உணர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 ---------------------------------

''சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார்... இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்'' (லூக்கா 4:38-39)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு வாழ்ந்த காலத்தில் நோய் நொடிகள் ஏற்படுவது தீய சக்திகளின் காரணமாகவே என்றொரு கருத்து நிலவியது. எனவே, சீமோனின் மாமியார் காய்ச்சலால் அவதிப்பட்டபோது அவருக்குக் குணமளித்த இயேசு காய்ச்சல் என்னும் ''பேயை''த் துரத்தி, வெளியேற்றுகிறார் என லூக்கா குறிப்பிடுகிறார். இயேசு காய்ச்சலைக் ''கடிந்துகொண்டார்''; அதுவும் சீமோனின் மாமியாரை ''விட்டு நீங்கிற்று'' (லூக் 4:39). மத்தேயு, மாற்கு ஆகியோர் இயேசு சீமோனின் மாமியாரைத் ''தொட்டு'' குணமாக்கினார் என்பர். லூக்கா மட்டும் இயேசு தம் சொல் வன்மையால் குணமளித்தார் எனக் குறிப்பிடுகிறார். இயேசுவின் வல்லமை மிக்க சொல் தீய சக்தியிலிருந்து அப்பெண்ணுக்கு விடுதலை தருகிறது. அவரும் புதுத் தெம்பு பெறுகிறார். உடனே எழுந்து இயேசுவுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் ''பணிவிடை'' செய்கிறார் (லூக் 4:39). நலமடைந்த நல்ல செய்தியின் விளைவாக அங்கே ஒரு விருந்தே நடக்கிறது. இங்கே நாம் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வு பற்றிய குறிப்பைக் காண்கின்றோம். இயேசு கொணர்ந்த மீட்பு மனிதருக்குப் புதுவாழ்வை அளிக்கிறது. இவ்வாறு புது வாழ்வு பெற்ற கிறிஸ்தவர்கள் ஒருவர் ஒருவருக்குப் ''பணிவிடை புரிய'' அழைக்கப்படுகிறார்கள்; அவர்கள் உணவு பரிமாறி தம் நன்றியை வெளிப்படுத்துவது முறையே. ஏனென்றால் இயேசுவே நம்மிடையே பணிபுரிபவராக வந்தார் (''நான் உங்கள் நடுவே பணிபுரிபவனாக இருக்கிறேன்'' - லூக் 22:27).

-- நற்செய்தி நூல்களில் ''பணிவிடை'' புரிகின்ற முதல் ஆள் இந்தப் பெயர் குறிப்பிடப்படாத பெண்மணியே என்பது கருதத்தக்கது. லூக்கா நற்செய்தியில் வேறு பல பெண்கள் ''பணிவிடை'' செய்தார்கள் என்னும் குறிப்புகள் உண்டு. ஏடுத்துக்காட்டாக, மரியா, மார்த்தா ஆகியோரைக் குறிப்பிடலாம் (லூக் 10:38-42). மேலும் பெண்கள் இயேசுவின் சீடர்களாக மாறி அவருடைய போதனைக்குச் செவிமடுப்பர் (காண்க: லூக் 10:38-42). இயேசு பற்றிப் பிறருக்கு ''அறிவிப்பர்'' (காண்க: லூக் 8:47). இவ்வாறு இயேசுவின் பணியைத் தொடர்ந்து ஆற்றுவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பங்குண்டு என்னும் உண்மை லூக்கா நற்செய்தியில் தெளிவாக வெளிப்படுகிறது. இயேசுவின் அன்பை நேரடியாக அனுபவித்தவர்கள் அவருக்குப் பணிபுரிவதிலும் அவருடைய பணியைத் தொடர்வதிலும் தம்மையே ஈடுபடுத்துவார்கள். அவருடைய வல்லமையால் நலம் பெற்றவர்கள் புதுத் தெம்பு பெற்று, பணி செய்ய முன்வருவார்கள். இன்றைய உலகிலும் கிறிஸ்துவை நம்புவோரின் குழுவாகிய திருச்சபை இயேசுவின் வல்லமையால் திடம் பெற்று, மக்களுக்கு மீட்பின் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க வேண்டும்; அவர்களுக்குப் பணி செய்ய எப்போதும் தயாராய் இருக்க வேண்டும்.

மன்றாட்டு

இறைவா, உம் வல்லமையால் நலமடைந்த நாங்கள் உம் பணியை மகிழ்வுடன் தொடர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

அவரோடு இரு


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஆண்டவனோடு இருப்பதற்கும் அவருக்குப் பணி செய்வதற்கும் நேரம் ஒதுக்குங்கள். அது உங்கள்வாழ்வில் உள்ள நோய் நொடிகளை நீக்கும். வாழ்வில் நிறைவும் மகிழ்ச்சியும் வந்து சேறும். சீமோன் பேதுருவின் மாமியார் வீட்டில் இயேசு பகல் வேனையில் தங்கியுள்ளார். இயேசு அங்கே தங்கியதே அவரது மாமியார் குணமடைய வாய்ப்பாகியது. குணம்பெற்றதும் எழுந்து பணிவிடை செய்தது மேலும் அருட்கொடையை வழங்கியது.

பற்பல நலம் குன்றியோரை அவரிடம் கூட்டி வந்ததால் பலரும் குணம்பெற்றார்கள். நலம் வேண்டுமாயின், நல்ல வாழ்வு வேண்டுமாயின் அவரிடம் (இயேசுவிடம்) வரவேண்டும். அவரிடம் கூட்டி வரவேண்டும். நாம் அவரோடு தங்கி இருக்கவேண்டும் அல்லது அவர் நம்மோடு தங்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

அதிகாலை வேளையில் தனிமையில் தந்தை இறைவனோடு இருந்த இயேசுவைப்போல காலை வேளையில் கடவுளைத் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் கடவுள் நம் சார்பில் இருப்பார். அப்போது நமக்கு நோயில்லை, துன்பமில்லை, கவலையில்லை. எல்லாம் நிறைவே.

இறைவனை உன்னோடு கொண்டிருக்க இன்று நீ செய்த முயற்சிகளை வரிசைப்படுத்து.

--அருட்திரு ஜோசப் லீயோன்

--------------------------------

 கிறிஸ்துவோடு உள்ள உறவில் நான் குழந்தையா?

மிகுந்த ஞானமும் வல்லமையும் கொண்ட ஒரு முனிவர் தூரமான பயணம் மேற்கொண்டார்.  ஒரு சிறிய கிராமத்தின் வழியாக அவர் கடந்த போது களைப்பு ஏற்படவே சற்று ஓய்வெடுக்க எண்ணினார். இதைக்கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாய் சென்று அவரிடம் உபதேசங்கள் கேட்கத் தொடங்கினர். சிலர் அதிசயங்களையும் கண்டனர். அவ்வூரிலே பணபலம் படைத்த மனிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஜெபம் தவம் அறிவுரை கேட்பது போன்றவற்றையெல்லாம் அடியோடு வெறுத்தார். மக்கள் முனிவரைத்தேடி கூட்டம்  கூட்டமாக செல்வதைக்கண்டு எரிச்சலடைந்த அந்த மனிதர் அந்த முனிவரை ஏளனம் செய்யும் நோக்குடன் அந்த முனிவர் இருந்த இடத்திற்கு சென்றார்.

அந்த முனிவரைப்பார்த்து "உங்கள் வயது என்ன?" என கேட்டார். அதற்கு முனிவரோ "பத்து அல்லது பதினொன்று இருக்கும்" என பதிலளித்தார். அதைக்கேட்ட அந்த மனிதர் சத்தமாக சிரித்து விட்டு, "ஞானமுள்ள முனிவர் என்று சொன்னார்கள். பார்க்க பழுத்த பழமாக இருக்கிறீர். உமது வயது கூடவா தெரியவில்லை" என ஏளனப்படுத்தினான். முனிவரோ மிகுந்த பொறுமையுடன், என்னைப் பொறுத்த வரையில் கடவுளோடு நான் செலவிடுகின்ற நேரமே என் வாழ்நாள். அதன் படி நான் கூறியது சரியே. அப்படிப் பார்த்தால் நீர் இன்னும் பிறந்திருக்கக்கூட மாட்டீர்" என்று பதில் கூறினார். இதைக்கேட்ட அந்த மனிதன் தலைகுனிவுடன் திரும்பிச்சென்றார்.

இன்று என்னுடைய வயது என்ன? நான் பிறந்தாவது இருக்கிறேனா? என்று நம்மை நாமே கேட்டுப்பார்த்தால் நமக்கும் கிறிஸ்துவுக்கும் இடையேயான உறவு முதிர்வை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல் கொரிந்து நகர மக்களைப் பார்த்து கிறிஸ்துவோடு உள்ள உறவில் நீங்கள் இன்னும் குழந்தைகளாகவே இருக்கிறீர்கள், கூறுகிறார். அப்படி என்றால் குழந்தை அறிவுத்தெளிவில்  எவ்வாறு பலவீனமாக இருக்குமோ அதைப்போல அவர்களும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் எனபதை சுட்டிக்காட்டுகிறார்.இத்தகைய முதிர்வற்ற தன்மையால் கிறிஸ்துவை முழுமையாக அறியாமல் அவரைப்பற்றி போதிக்கின்றவர்கள் பெயரால்  பிரிவினைகளும் சண்டைகளும் நிறைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த பிரிவினையால் உண்மைக்கடவுளை மறந்துவிடும் அபாயம் ஏற்படும் நிலையையும் அவர் எடுத்துக்கூறுகிறார். இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்முடைய முதிர்ச்சி என்ன என்பதை சோதித்துப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இன்றைய உலகில் மதம் சாதி இன மொழிகளின் பெயரால் எத்தனைப் பிரிவினைகள்? ஏன் திருஅவையின் மக்கள் என மார்தட்டிகொள்ளும் நமக்குள்ளும், எத்தனை பிரிவினைகள். இவற்றிற்கெல்லாம் ஏதாவது ஒரு வகையில் நாம் காரணமாயிருக்கிறோம் என நாம் உணர்ந்தால், அது கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள உறவின் முதிர்ச்சியற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது. அவரைப்பற்றிய நம் அறிவின் தெளிவற்ற நிலையை உணர்த்துகிறது. 

இந்நிலைமாற நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள உறவை ஆழப்படுத்த வேண்டும். அவரை முழுமையாக நம்பி அவரோடு நேரம் செலவிட வேண்டும்.அவ்வாறு நமக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு ஆழப்பட்டால் நாமும் செல்லும் இடமெல்லாம் நன்மையை செய்ய இயலும். 

இன்றைய நற்செய்தியில் பல்வேறு அலுவல்களுக்கு மத்தியிலும் இயேசு தனிமையான இடத்திற்கு சென்றார் என வாசிக்கிறோம். தனிமையான இடத்தில் தந்தையுடன் உள்ள தன் உறவை ஆழப்படுத்தினார்.அந்த ஆழமான உறவு தந்த சக்தியினால்தான் அவர் பல வல்ல செயல்களை சென்ற இடமெல்லாம் செய்தார். நோய்களை நீக்கினார். பேய்களை ஓட்டினார். எனவே நாமும் கிறிஸ்துவோடு நமக்குள்ள உறவை இன்னும் ஆழப்படுத்துவோம். குழந்தைத்தனமான புரிதல்களைக்  களைவோம்.போகின்ற இடங்களிலெல்லாம் நன்மைகளை செய்து சமூக நோய்களையும் பிரிவினைப் பேய்களையும் அகற்ற நமக்கும் கடவுள் சக்தி தருவார்.

 இறைவேண்டல்

உறவில் வாழ எம்மை அழைக்கும் இறைவா, உம்மோடு கொண்டுள்ள உறவில் முதிர்ச்சியின்றி குழந்தைத்தனமாக வாழ்ந்து வருகிறோம்.  பல சமயங்களில் பிரிவினைகளுக்கும் சண்டைகளுக்கும் கூட துணை போகிறோம். எம்மை மன்னியும் .நாங்கள் ஒவ்வொரு நாளும் உம்மோடு  கொண்டுள்ள உறவில் வளர்ந்து சமூகத்தில் நல்ல செயல்கள் ஆற்றும் உம்முடைய பணியாளர்களாய் வாழும் வரம் தாரும். ஆமென்.

 அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

--------------------------------

“அவரே நமக்குத் துணை”


மூதாட்டியின் அறிவுரை:

மூதாட்டி ஒருத்தி தன்னுடைய 85 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது பிறந்த நாள் விழாவிற்குப் பலரும் வந்திருந்தனர். அவருக்கு 85 வயது ஆகியிருந்தாலும், மிகவும் திடகாத்திரமாகவும், உடல் உள்ள நலத்தோடும் இருந்தார்.

அவரை அந்நிலையில் பார்த்த இளைஞன் ஒருவன், “இங்கே வந்திருப்பவர்களுக்கு நீங்கள் ஏதாவது அறிவுரை கூற விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். மூதாட்டி ஆழ்ந்து யோசித்துவிட்டு, “ஒருவர் மற்றவருக்கு (உறு)துனையாக இருங்கள்” என்றார். உடனே இளைஞன் அவரிடம், “இதுவரைக்கும் யாருக்காவது (உறு)துணையாக இருந்திருக்கின்றீர்களா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டபோது, “ஆமாம், என்னுடைய வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் உள்ள, என்னைவிட வயதில் மூத்த மூதாட்டிக்கு (உறு)துணையாக இருந்து வருகின்றேன்” என்று நிதானமாகச் சொல்லி முடித்தார்.

ஆம், நாம் ஒவ்வொருவரும் மற்றவருக்கு (உறு) துணையாக இருக்கவேண்டும். அது மிகவும் முக்கியம். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், ஆண்டவரே நமக்குத் துணை என்ற சிந்தனைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் சவால்களும் ஆபத்துகளும் ஏராளம். இவற்றையெல்லாம் ஆண்டவரின் துணையின்றி நம்மால் தனியாக எதிர்கொள்ள முடியாது. இந்த உண்மையைத் திருப்பாடல் ஆசிரியர் நன்றாகவே உணர்ந்திருப்பார். அதனால்தான் அவர், “நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்” என்கிறார்.

ஆண்டவர் நமக்குத் துணையாக இருக்கும் பட்சத்தில் நம்மால் எதையும் செய்ய முடியும். இதையே பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு, எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலி 4:13) என்கிறார்.

ஆண்டவர் நமக்குத் துணையும் கேடயமுமாக இருக்கின்றார் என்றால், அவரைப் போற்றிப் புகழ்வது இன்றியமையாதது. அத்தகைய அழைப்பினைத் தருகின்றது இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 33. புகழ்ச்சிப் பாடல் வகையைச் சார்ந்த இத்திருப்பாடல், “நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே” என்கிறது.

எனவே, நாம் நமக்குத் துணையும் கேடயமுமாக இருக்கும் ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்து, அவரது ஆசியைப் பெறுவோம்.


சிந்தனைக்கு:

 ஆபத்துக் காலத்தில் மட்டுமல்ல, அனுதினமும் ஆண்டவரைத் தேடுவோம்.

 ஆண்டவரைத் தேடுவோரின் உள்ளம் உறுதியடைகின்றது.

 ஆண்டவரிடமிருந்து நாம் பெறும் நன்மைகள் ஏராளம். அதற்காக நாம் ஆண்டவரைப் போற்றிப் புகழ்வோம்.


இறைவாக்கு:

‘மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்’ (திபா 121: 1,2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமக்கு உதவி செய்ய வரும், துணையாய் இருந்து வரும் ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

----------------------------------

ஆவிக்குரியோரும் ஊனியல்புடையோரும்


தூய ஆவியாருக்குத் தெரியாதா?

இளைஞன் ஒருவன் ஒருவார காலம் தியானம் மேற்கொள்வதற்காக ஒரு தியான இல்லத்திற்குச் சென்றிருந்தான். அந்தத் தியான இல்லத்தில் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் மேற்கொள்வதற்காக ஒருநாளுக்கு ஒருவேளை உணவுதான் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இரண்டு நாள்களை ஒருவேளை உணவுடன் எப்படியோ சமாளித்த அந்த இளைஞனால் மூன்றாம் நாளைச் சமாளிக்க முடியவில்லை; அவனுக்குக் கடுமையாகப் பசி எடுத்தது. அதனால் அவன் மதிய வேளையில், யாருக்கும் தெரியாமல், தியான இல்லத்தின் மதிற்சுவரை ஏறிக் குறித்து வெளியே சென்று, அங்கிருக்கும் ஏதாவதொரு கடையில் சாப்பிட்டு வரலாம் என முடிவு செய்தான்.

அதன்படி அவன் யாருக்கும் தெரியாமல் தியான இல்லத்தின் மதிற்சுவரைத் தாண்டி வெளியே குதிக்கும்போது, தியான இல்லத்தின் தலைமைத் துறவி அவனைப் பார்த்துவிட்டார். “தம்பி இங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?” என்று தலைமைத் துறவி அவனிடம் கேட்டதற்கு, “தூய ஆவியார் என்னிடம் வெளியே சென்று, அருகிலுள்ள கடையில் சாப்பிடச் சொன்னார். அதனால்தான் நான் இங்கு வந்தேன்” என்றான். அப்போது தலைமைத் துறவி அவனை மேலிலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு அவனிடம், “உன்னிடம் கடைக்குச் சென்று சாப்பிடச் சொன்ன தூய ஆவியாருக்கு, இன்று முழுவதும் கடையடைப்பு என்று தெரியாதா?” என்றார்.

இதைக் கேட்டதும் அந்த இளைஞன் பதில் சொல்வதற்கு வார்த்தைகள் ஏதுமின்றித் திக்கி திணறினான்.

நாம் ஆவிக்குரியவர்களாய் வாழ்வதற்குப் பதில், ஊனியல்பு உடையவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை இந்த நிகழ்வு நமகுக் எடுத்துக் கூறுகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் ஊனியல்பு உடையவர்களாய் அல்ல, ஆவிக்குரியவர்களாய்ச் செயல்படவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

எங்கே தூய ஆவியார் இருக்கின்றாரோ அங்கே ஒற்றுமை இருக்கும், ஒன்றிப்பு இருக்கும். பெந்தக்கோஸ்துப் பெருவிழாவில் அதுதான் நடந்தது (திப 2) அதே நேரத்தில் எங்கே பிளவும் போட்டி பொறாமையும், சண்டை சச்சரவும் இருக்கின்றனவோ அங்கே தூய ஆவியார் இருக்க வாய்ப்பில்லை; தீய ஆவியே இருக்கும்.

கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்தவர்கள், ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’, ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’ என்று சண்டை சச்சரவு செய்துகொண்டிருந்தார்கள். இப்படிச் சண்டை சச்சரவு செய்வோர் ஆவிக்குரியோராய் இருக்க வாய்ப்பில்லை; ஊனியல்புடையோராய்த்தான் இருப்பர் என்கிறார் பவுல்.

நற்செய்தியில் இயேசு தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டவராய் பலரிடமிருந்து நோயை நீக்கி, அவர்களுக்கு நலமளிக்கின்றார். குறிப்பாக, அவர் கடுங்காய்ச்சலால் வேதனையுற்ற சீமோனின் மாமியாரிடமிருந்து காய்ச்சலை நீக்குகின்றார். அவரோ காய்ச்சல் தன்னிடமிருந்து நீங்கிய பிறகு எல்லாருக்கும் பணிவிடை செய்கின்றார். இவ்வாறு அவர் ஆவிக்குரியவராய் வாழத் தொடங்குகின்றார்.

ஒருவர் ஊனியல்புடையவராய் வாழும்போது, அவர் மற்றவருக்குப் பணிவிடை செய்வதற்கு வாய்ப்பில்லை; ஆவிக்குரியவராய் இருக்கும்போது மட்டுமே மற்றவருக்குப் பணிவிடை செய்ய முடியும். எனவே, நாம் இயேசுவைப் போன்று, சீமோனின் மாமியாரைப் போன்று ஆவிக்குரியவர்களாய் வாழ்ந்து மற்றவருக்குப் பணிவிடை புரிவோம்.


சிந்தனைக்கு:


 தன்னலத்தை நாடுவோர் அனைவரும் ஊனியல்பேற்க வாழ்வோரே!

 நாம் பெற்ற நன்மையைப் பிறரோடு பகிர்ந்து வாழ்வது மிகவும் முக்கியம்

 ஒன்றுபட்டு வாழும்போது தூய ஆவியார் அங்கே குடியிருக்கின்றார்.


இறைவாக்கு:

‘தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்’ (கலா 5: 16) என்பார் புனித பவுல். எனவே, நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

 Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...