Friday, August 26, 2022

Dily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-08-2022)

 முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்? ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார். அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடைவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, ஹஹபெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 33: 12-13. 18-19. 20-21

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.


12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஹஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


மத்தேயு 25:14-30

பொதுக்காலம் 21 வாரம் சனி


நற்செய்தி வாசகம்



மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: ஹஹவிண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ஹஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ஹநன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ஹஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ஹநன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ஹஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், ஹசோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். ஹஎனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

போதாது என்ற மனம் வேண்டும்

மத்தேயு 25:14-30

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

வாழ்க்கையில் நான் வளா்ந்துவிட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது. எல்லாருமே வளா்ந்துக் கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து வளர கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் திறமைகளை நன்கு பயன்படுத்த வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகம் கடவுள் கொடுத்த திறமைகளை ஒருவர் பயன்படுத்தும் போது அவர் எப்படி வளருகிறார் எனவும் கடவுளின் நன்மதிப்பை எப்படி பெறுகிறார் என்பதையும் எடுத்துரைக்கிறது. மேலும் கடவுள் கொடுத்த திறமைகளை சரியாக பயன்படுத்தாதவர் எப்படி இன்னுலுகிறார் என்பதையும் சொல்கிறது. இரண்டு பிரச்சினைகளை அவர் சந்திக்கிறார்.

1. மரியாதை இருக்காது

சரியாக திறமைகளை பயன்படுத்தாதவருக்கு மரியாதை என்பது இல்லை. அவர் வீட்டிலும் மதிக்கப்படுவதில்லை, காட்டிலும் மதிக்கப்படுவதில்லை. எங்கு சென்றாலும் அவா் தூரே தூக்கி எறியப்படுகிறார்.

2. மகிழ்ச்சி இருக்காது

திறமைகளை நாம் சரியாக பயன்படுத்தும்போது நாம் பாராட்டுக்களை பரிசாக நம் இரத்த உறவுகள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலரிடமிருந்து பெறுவோம். அதில் ஊறுகின்ற மகிழ்ச்சி அளவே இல்லை. திறமைகளை நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் யாரிடமிருந்தும் பாராட்டுக்களை பெறுவது இல்லை. ஆகவே இயல்பிலே மகிழ்ச்சி என்பது நமக்கு எட்டாமல் போகிறது.

மனதில் கேட்க…

1. எனக்கு மரியாதை, மகிழ்ச்சி இரண்டையும் என் திறமைகள் தானே தர முடியும்?

2. நான் பெற்றிருப்பது போதாது இன்னும் வளருவேன். திறமைகளைப் பயன்படுத்துவேன். இந்த வேகத்தோடு செயல்படலாமா?

மனதில் பதிக்க…

நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன.(மத் 25:21)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

---------------------------------------------------------------


1கொரிந்தியர் 1: 26 – 31

இறைவனின் இரக்கம்

பவுலடியார், கொரிந்து மக்களிடையே இருந்த பிரச்சனைகள் அடிப்படையில் இந்த கடிதத்தை எழுதுகிறார், ”உங்களிடையே சண்டை, சச்சரவுகள் இருப்பதாக, குலோயி வீட்டார் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்”(1: 11). அவர்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டிய அவசியத்தை விளக்குகிறார். அதன்பிறகு, அவருடைய கவனம் சிலுiவின் பக்கம் திரும்புகிறது. யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் சிலுவை பல கேள்விகளை எழுப்புகிறது. கொரிந்து ஒரு கிரேக்க நகரம். ஆனால், அங்கு ஏராளமான யூதர்கள் வாழ்ந்து வந்தனர். கொரிந்து நகரில் வாழ்ந்தபோது, யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் என இருவர் நடுவிலும், பவுலடியார் பணியாற்றினார். இவர்கள் இரண்டு பேரும் இணைந்தது தான், கொரிந்து நகரத்திருச்சபை. வலுவான போர்த்திறமையுள்ள மெசியாவை எதிர்பார்த்திருந்த யூதர்களுக்கும், ஞானத்தைக் கடவுளாக பார்க்கிற கிரேக்கர்களுக்கும், சிலுவை மடமையாகத் தோன்றியது.

யூதர்களுக்கு சிலுவை வலுவானதாக அல்ல, வலுவற்றதாக தோன்றியது. அதேபோல, கிரேக்கர்களுக்கு ஞானமாக அல்ல, மடமையாக தோன்றியது, பவுலடியார் இந்த இரண்டுவிதமான மனநிலைகளுக்கு விளக்கம் தரக்கூடிய வகையில் இந்த பகுதியை எழுதுகிறார். நம்முடைய வலுவின்மையை நாம் உணர வேண்டும் என்பதே பவுலடியாரின் மையச்சிந்தனையாக இருக்கிறது. நம்முடைய ஆற்றலினாலோ, வலிமையினாலோ, ஞானத்தினாலோ அல்ல, கடவுளின் இரக்கத்தினாலேயே நாம் அனைவரும் மீட்கப்பட்டோம் என்பதை, மிக அழுத்தமாக அவர் பதிவு செய்கிறார். மனிதர்கள் அவமானச்சின்னமாக கருதிய சிலுவையே, நம் அனைவருக்கும் மீட்பின் சின்னமாக விளங்குகிறது. கடவுளின் வல்லமைக்கும், ஞானத்திற்கும் முன்னால் நாம் ஒன்றுமில்லாதவர்களாக மாறிவிடுகிறோம். எனவே, கடவுள் தரும் மீட்பை இரக்கத்தினால், மன்னிப்பினால் பெற்றுக்கொள்வோம் என்பது, பவுலடியார் நமக்குத் தருகிற அறிவுரையாக இருக்கிறது.

வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடக்கிறபோது, கடவுள் ஏன் இதை இப்படிச் செய்ய வேண்டும்? இதனை இப்படி செய்திருக்கலாமே? என்று கடவுளுக்கே, கற்றுக்கொடுக்கிற அளவுக்கு, மனிதன் தன்னுடைய ஞானத்தில் கர்வம் கொள்கிறான். ஆனால், கடவுளின் வல்லமையைப் புரிந்து கொள்வதற்கு மனித ஞானம் போதாது. மனித ஞானத்தைக் கொண்டு கடவுளைக் கண்டுபிடித்து விடலாம் என்று, நாம் எண்ணிவிடக்கூடாது. இறைவனின் இரக்கத்திற்காக நாம் மன்றாடுவோம்.


- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


-------------------------------------------------

நம்பிக்கைக்குரியவர்

நம்பிக்கைக்குரியவர் யார்? என்ற கேள்விக்கு பதிலாக வருவதுதான் இன்றைய நற்செய்தி. நமது வாழ்வில் நாம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். யாருக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்? ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த அலுவலகத்தலைவரின் நம்பிக்கைக்கு எல்லாருமே உரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் மட்டும் தான். எது அவர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற்றுகிறது? அவர்கள் தலைவர் மீது வைத்திருக்கக்கூடிய மதிப்பு, அவர்களின் கீழ்ப்படிதல், உண்மை, தலைவர் சொல்லக்கூடிய பணியைச் சிறப்பாகச் செய்வது – இவைதான் ஒரு மனிதரை நம்பிக்கைக்கு உரியவராக வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கை ஏதோ ஒரு நாளில் பெற்றுவிடுவதல்ல. சின்ன காரியங்களில் உண்மையாக இருக்கிறபோது, அந்த மனிதர் மட்டில், நமது நம்பிக்கையும் பெறுகிறது. ஆக, சிறிய காரியத்தில் நாம் உண்மையாக, நேர்மையாக இருக்கிறபோது, மற்றவர்களின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக மாறுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் தலைவர் தனது பணியாளர்களிடம் தாலந்து ஒப்படைத்து பயணம் மேற்கொள்கிறார். திரும்பிவந்து, தான் கொடுத்த தாலந்தைப் பற்றி விசாரிக்கிறார். தாலந்து என்பது பணத்தின் மதிப்பைக் குறிக்கக்கூடிய சொல். அது விலைமதிப்புமிக்கது. அதனை தலைவர் சிறிய பொறுப்பு என்று கூறுவது, எந்த அளவுக்கு அவர் செல்வமிக்கவர் என்பதனையும், தன்னுடைய பணியாளர்கள் மட்டில், அவர் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையையும் நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணியை திறம்பட செய்தவர்கள், தலைவரின் பாராட்டையும், மதிப்பையும் பெறுகிறார்கள். திறம்படச் செய்யாதவன் தண்டிக்கப்படுகிறான். அந்த மூன்றாவது மனிதரிடமும் தலைவன் நம்பிக்கை வைத்திருந்தான். எனவே தான், அந்த தாலந்தை அவனுக்குக் கொடுத்திருந்தான். எத்தனையோ பணியாளர்கள் இருக்கிறபோது, தலைவர் அவரிடம் கொடுத்திருந்தால், மற்றவர்களை விட, அவன் மீது அவர் அதிகமான மதிப்பு வைத்திருக்கிறார் என்று தான் நாம் நினைகக முடியும். ஆனால், தலைவரின் நம்பிக்கைக்கு அவன் ஏற்புடையவனாக இல்லை.

நாம் கடவுளின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இந்த நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடவுளின் நம்பிக்கையை பெறுவது கடினமானது அல்ல. நாம் செய்யக்கூடிய சாதாரண காரியங்களில், உண்மையாக இருப்பதுதான். சிறிய காரியங்களில் பொறுப்புணர்வோடு, உண்மையுள்ளவர்களாக வாழ, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை

ஒரு தாலந்து என்பது வெள்ளி நாணய அடிப்படையில் ஒரு தொழிலாளியின் 15 வருட கூலிக்கு சமம். முதல் இரண்டு நபரும் தலைவர் கொடுத்த தாலந்தை வைத்து இன்னும் அதிகமாக சம்பாதிக்க முயற்சி எடுக்கிறார்கள். தலைவர் அந்த முயற்சியை பாராட்டுகிறார். ஒருவேளை அவர்கள் அதில் நஷ்டம் அடைந்திருந்தாலும், தலைவர் அவர்களின் முயற்சியை நிச்சயமாகப்பாராட்டியிருப்பார். தலைவர் கோபப்படுவது மூன்றாவது ஊழியரை. அதற்கு காரணம் அவரின் முயற்சியின்மை, சோம்பேறித்தனம்.

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு என்னும் கொடையைத் தந்திருக்கிறார். இந்த வாழ்வில் நமக்கென்று குறைகள் இருக்கலாம், நமக்கென்று பலவீனங்கள் இருக்கலாம். ஆனால், அந்த வாழ்வை எந்த அளவுக்கு முயற்சி எடுத்து நாமும் பயன்பெற்று, மற்றவர்களின் வாழ்விலும் ஒளியேற்றுகிறோம் என்பதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. நான் குறையுள்ளவன், எத்தனைமுறை முயன்றாலும், நான் வெற்றி பெற மாட்டேன் என்கிற முயற்சியின்மையை தலைவர் வெறுக்க மட்டும் செய்யவில்லை. அவனுக்கு தண்டனையும் கொடுக்கிறார்.

கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற கொடை மூலமாக எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்ய முடியும். இருளில் வாழ்கிற மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். இதை சாதித்திருக்கிறவர்களின் மாதிரியைப்பின்பற்றி, நாமும் வாழ்வை நல்ல முறையில் வாழ்வோம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------------------

இறைவனின் வல்லமையும், ஞானமும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய முதல் வாசகப் பகுதி கொரிந்தியர் திருமடலிலேயே ஒரு சிறப்பான பகுதி. சிலுவையின் மேன்மையைப் புகழும் இந்த இறையியல் பகுதியில் பவுலடியார் இறைவனின் இயல்பு பற்றிய புதிய ஒரு புரிதலை நமக்கு வழங்குகிறார். பழைய ஏற்பாட்டில் இறைவனின் படைப்பு கடவுளின் வல்லமைக்கும், ஞானத்துக்கும் அடையாளமாக இருந்தது. இந்த உலகப் படைப்புகளைக் காணும்போதெல்லாம், நாம் இறைவனின் வல்லமையையும், ஞானத்தையும் கண்டு வியக்கிறோம். காரணம், ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் ஆற்றல் மிக்க படைப்புகளை உருவாக்கினார். அத்துடன், வியத்தகு முறையில் ஆறு, கடல், மலர்கள், மலைகள், இயற்கை அனைத்தையும் உருவாக்கினார். இறைவனின் ஞானம் அதில் வெளிப்படுகிறது. புதிய ஏற்பாட்டிலோ, சிலுவையில் அறையுண்ட மெசியாவான இயேசுதான் கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார். சிலுவை மனிதர்களுக்கு வலிமைக் குறைவானதாகவும் (தோல்வி), மடமையாகவும் (அவமானம்) தோன்றியது. ஆனால், “மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது. மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது”. எனவே, நமது சிலுவைகளை, துன்பங்களைக் கண்டு அஞ்சவேண்டாம். இயேசு அவைகளை வென்றுவிட்டார்.

மன்றாடுவோம்: இறைவல்லமையும், ஞானமுமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள்; வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சிலுவைகளை உமது வல்லமையாக, ஞானமாக ஏற்றுக்கொள்ளும் அருளைத் தந்தருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...

இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்'' (மத்தேயு 25:29)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பயன்படுத்தாத செல்வம் பாழாய்ப்போகும் என்னும் உண்மையை இயேசு நமக்குக் கற்பிக்கிறார். வெவ்வேறு அளவில் தாலந்துகளைப் பெற்றவர்கள் அவற்றைப் பயன்படுத்தி மேலும் செல்வம் ஈட்டினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தாலந்தைப் பயன்படுத்தாமல் நிலத்தில் புதைத்துவைத்தார். கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற கொடைகள் பல. அவற்றை நாம் நன்முறையில் பயன்படுத்தி நன்மை செய்ய முன்வரவேண்டும். கடவுள் நமக்குத் தருகின்ற காலம் குறுகியது, நாம் பெற்றுள்ள கொடைகளும் சில இலட்சியங்களை அடைய வேண்டும் என நம் உள்ளத்தில் எழுகின்ற ஆர்வங்களும் எல்லைகளுக்கு உட்பட்டவை. இவற்றை அறிவோடு பயன்படுத்த வேண்டும். இதற்கு மாறாகச் சிலர் தாம் பெற்ற கொடைகளை மனம்போன போக்கில் செலவழித்து வீணடிக்கிறார்கள்; வேறு சிலரோ தம் கொடைகளைப் பத்திரமாகப் பொதிந்துவைத்து யாருக்கும் பயன்படா வண்ணம் அழிந்துபட விட்டுவிடுகிறார்கள். இந்த இரு போக்குகளுமே தவறானவை. எதிர்காலத்தைப் பற்றி யாதொரு கவலையும் இல்லாமல் இருப்பதும் தவறு, எதிர்காலத்தில் என்ன நிகழ்ந்துவிடுமோ என்னும் அச்சத்தால் வாழ்க்கையை வீணடிப்பதும் தவறு.

-- வாழ்க்கையில் நம்மைத் தேடி வருகின்ற சவால்களை நாம் துணிவோடு சந்திக்க வேண்டும். நன்மை செய்வதில் ஈடுபாடு வேண்டும். இத்தகைய துணிச்சலான செயல்பாடு இல்லாத இடத்தில் இலட்சியங்கள் படிப்படியாக மடிந்துபோகும். எனவே, இயேசு அறிவிக்கின்ற நற்செய்தியை உள்வாங்கி அதன்படி நடக்க விரும்புவோரிடத்தில் துணிந்து செயல்படுகின்ற மன நிலை வளர வேண்டும். கடவுள் நமக்கு அளிக்கின்ற கொடைகளை நன்முறையில் செலவிட்டு உலகம் உய்ந்திட நம்மை ஈடுபடுத்த வேண்டும் என்பதே இயேசு நமக்கு விடுக்கின்ற அழைப்பு.

மன்றாட்டு

இறைவா, நாங்கள் பெற்ற கொடைகளை நன்முறையில் பயன்படுத்தி நன்மை செய்வதில் எங்களை ஈடுபடுத்த அருள்தாரும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்


-------------------------

செய்து பாருங்க.. ..

காலம் பொன்போன்றது. பத்து தோழியர் உவமையிலும் தாலந்து உவமையிலும் காத்திருக்கிறார்கள், மணமகனுக்காக அல்லது தலைவனுக்காக. இந்த உவமையின் சிறப்பு செய்தி, காத்திருக்கும்போதும் உழைக்க வேண்டும் என்பதுதான்.

தன் வேலை உண்டு, தான் உண்டு என்று வேலையில் கவனம் இருக்கவேண்டும். அடுத்தவனைக் குறை சொல்லுகிறவன், அதிலும் பணம் பொருள் உதவிகள் கொடுக்கும் ஒருவரையே குறை சொல்பவன், வேலையைச் செய்யமாட்டான். குருக்குவழி ஏதாவது உண்டா என்று பார்ப்பான்.

விதைத்துப் பெருக்கவேண்டிய பணத்தை, பொருளை, திறமையை,மண்ணுக்குள் புதைத்து மக்கிப்போகவைத்தது மா பெருந்தவறு. ஆகவே, உழைக்காதவன், அடுத்தவனைக் குறைசொல்பவன், குருக்குவழியில் சம்பாதிக்க நினைப்பவன், கிடைத்ததையும் பயன்படுத்தத்தெறியாதவன்,கிடைத்ததைக் கெடுப்பவன், உள்ளதையும் இழந்து தண்டனையும் பெருவது சரியானதே.

இந்த குறைகள் இல்லாதவன் வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் உயர்வான். எல்லாம் சேர்ந்துகொண்டே இருக்கும்.அவனுக்கு எதுவும் குறையிருக்காது. செய்து பாருங்கரூhநடடip;..


--அருட்திரு ஜோசப் லீயோன்


----------------------------

உழைப்பவர்க்கே உயர்வு வரும்

நிகழ்வு

ஓரூரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ‘மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன வழி?’ எனத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். எனவே, அவன் பழங்காலத்தில் இருந்த துறவிகளைப் போன்று காட்டிற்குச் சென்று, கடுந்தவம் புரிந்து, அதன்மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்று முடிவுசெய்தான். அதனடிப்படையில் அவன் குடும்பம், உறவுகள், சொந்த பந்தங்கள என எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு காட்டிற்குள் சென்றான்.

இரண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடந்துகொண்டே சென்றான். ஆனால், அவன் தவம் புரிவதற்கான சரியான மட்டும் அமையவில்லை. அதனால் அவன் இன்னும் தொடர்ந்து நடந்தான். ஓரிடத்தில் சலசலத்து ஓடும் சிற்றாறின் சத்தம் கேட்டது. உடனே அவன் அதனருகே சென்றான். அங்கு ரம்மியமான ஓர் இடமிருந்தது. அதனருகே மரங்களும் செடி கொடிகளும் என்று பார்ப்பதற்கே அந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது. அதைப் பார்த்த அவனது உள்ளம் பூரித்துப்போனது. ‘நாம் தேடிக்கொண்டிருந்த இடம் இதுதான்... இந்த இடத்திலிருந்து தவம் செய்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்று முடிவுசெய்தான்.

அதன்பிறகு அவ்விடத்தில் இருந்த ஒரு மேடான பகுதியில் அமர்ந்துகொண்டு தவம் செய்யத் தொடங்கினான். ஓரிரு நாள்கள் அவனுக்கு நன்றான இருந்தன. ஏதோ புதுவிதமான ஓர் உலகத்திற்குள் செல்வதைப் போன்று அவன் உணர்ந்தான். அதன்பிறகு அவனால் தவம் செய்யமுடியில்லை. தனிமையாக இருப்பது அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. இதனால் அவன் சிந்தை கலங்கித் தன்னையே வெறுக்கத் தொடங்கி, கடவுளை நோக்கி கூக்குரலிட்டான்: “கடவுளே! என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே கிடையாதா?” இதற்கிடையில் அவன் இரண்டு மூன்று நாள்களாகச் சாப்பிடாததால், மயக்கம் போட்டு கீழே சரிந்து விழுந்தான்.

அப்பொழுது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் வானதூதர் ஒருவர் தோன்றினார். அவரிடம் அவன் தன்னுடைய நிலையை எடுத்துச் சொன்னபோது, அவர் ‘இதோ பார்! உனக்கு முன்னம் ஒரு பெரிய மரம் இருக்கின்றதல்லவா. இதை வெட்டிக் கயிறுகளாகத் திரித்து மக்களிடம் விற்பனை செய். அவர்கள் உனக்குப் பதிலுக்குப் பணம் தருவார்கள். அவற்றைக் கொண்டு நீ உன்னுடைய குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ். அதுதான் நீ மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழி. இப்படிச் சோம்பேறியாய் உட்கார்ந்திருப்பதால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” என்று சொல்லி மறைந்து போனார். கனவிலிருந்து நிஜ உலகிற்கு வந்த அவன், வானதூதர் தன்னிடம் சொன்னது போன்றே செய்தான். அதன்மூலம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டான்.

ஒருவர்க்கு மகிழ்ச்சியும் உயர்வும் அவர் உழைப்பதனால் மட்டும் கிடைக்குமே ஒழிய, சோம்பித் திரிவதனால் கிடைப்பதில்லை என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தி வாசகமும் உழைத்தால் உயர்வு, உழைக்காவிட்டால் தாழ்வு என்ற செய்தியை எடுத்துச் சொல்கிறது. எனவே, நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.


உழைப்பால் உயர்ந்த இரண்டு பணியாளர்கள்

நற்செய்தியில் இயேசு தாலந்து உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இவ்வுவமையில் நெடும்பயணம் செல்லவிருந்த ஒருவர், தம் மூன்று பணியாளர்களை அழைத்து அவர்களிடம் அவரவர் திறமைக்கேற்ப அவர்களில் ஒருவர்க்கு ஐந்து தாலந்தும் இன்னொருவர்க்கு இரண்டு தாலந்தும் மற்றொருவர்க்கு ஒரு தாலந்தும் என பிரித்துக் கொடுக்கின்றார்.

இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், தலைவர் ஒவ்வொருவர்க்கும் அவரவர் திறமைக்கேற்ப தலாந்துகளைப் பிரித்துக் கொடுப்பதுதான். ஐந்து தாலந்தை வைத்து வேலைபார்க்கும் ஒருவரிடம் ஒரு தாலந்தைக் கொடுத்து வேலை பார்க்கச் சொன்னாலும் பிரச்சினைதான். அதே நேரத்தில் ஒரு தாலந்தை வைத்துப் பணிசெய்பவரிடம் ஐந்து தாலந்துகளைக் கொடுத்தாலும் பிரச்சினைதான். அதனால்தான் அவர்களின் தலைவர் அவரவர் திறமைக்கேற்பத் தாலந்தைப் பிரித்துக் கொடுக்கின்றார். இதில் முதலில் வருகின்ற இரண்டு பணியாளர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட வேலைக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து மேலும் ஐந்து, இரண்டு தாலந்துகளை ஈட்டி, தங்கள் தலைவரால் உயர்ந்த பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றார்கள்.

உழைக்காமல் சோம்பேறியாக இருந்து, தாழ்ந்த ஒரு பணியாளர் 

இதற்கு முற்றிலும் மாறாக, ஒரு தாலந்தைப் பெற்றவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிக்கு நம்பிக்கைக்குரியவராய் இல்லாமல், அதைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றார். இறுதியில் அவருடைய தலைவர் வருகின்றபோது கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றார். கடைசியில் வரும் இந்தப் பணியாளர், ‘தலைவர் தன்னை நம்பி ஒரு தாலந்தை ஒப்படைத்திருக்கின்றாரே (ஒரு தாலந்து என்பது இருபது ஆண்டுகால ஊதியம்), அதை பொறுப்போடு பயன்படுத்த வேண்டுமே’ என்று நினைக்கவில்லை; கடினமாக உழைக்கவுமில்லை. அதனால் தலைவரால் தண்டிக்கப்படுகின்றார்.

ஆகையால், நாம் கடவுள் நம்மை நம்பி ஒப்படைத்திருக்கின்ற பொறுப்புகளை, திறமைகளை வளர்த்தெடுக்கவேண்டும். அதற்காகக் கடுமையாக உழைக்கவேண்டும். அப்பொழுதான் நாம் கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம்.


சிந்தனை

‘சோம்பேறிக்கு எவ்வழியும் முள்நிறைந்த வழியே; சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்’ (நீமொ 15: 19) என்கின்றது நீதிமொழிகள் நூல். நாம் சோம்பேறிகளாக இல்லாமல், கடின உழைப்பாளர்களாக இருந்து, இறைவன் நம்மை நம்பிக் கொடுத்திருக்கும் தாலந்துகளைப் பெருக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

----------------------------------------

தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் திறம்படச் செயல்பட வேண்டும்


ஒரு தந்தையும் மூன்று மகன்களும்:

சீனாவில் சீப்பு வியாபாரி ஒருவர் இருந்தார். அவருக்கு வயதாகிக் கொண்டே போனதால்இ அவர் தனது வியாபாரத்தை தன்னுடைய மூன்று மகன்களில் திறமையான ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இறக்கலாம் என்று முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்துஇ அவர்களிடம்இ “நீங்கள் மூவரும் அருகில் உள்ள புத்த மடத்திற்குச் சென்றுஇ அங்குள்ள துறவிகளிடம் சீப்புகளை விற்று வாருங்கள். உங்களில் யார் கூடுதலாகச் சீப்புகளை விற்கிறீர்களோஇ அவரிடம் நான் என்னுடைய தொழிலை ஒப்படைப்பேன்” என்றார். இதற்குப் பிறகு மூவரும் ஆளுக்கொரு சாக்குப் பையில் சீப்புகளை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த துறவு மடத்திற்குச் சென்றார்கள்.

போகும் வழியில் மூவருக்கும்இ ‘துறவு மடத்தில் இருக்கும் துறவிகள் யாவரும் தலையில் முடியில்லாமல் மொட்டையாக அல்லவா இருப்பார்கள்! அவர்களிடம் எப்படி சீப்புகளை விற்பது?’ என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது. அவர்கள் துறவு மடத்தை அடைந்துஇ தங்கள் திறமையைப் பயன்படுத்திச் சீப்புகளை விற்கத் தொடங்கினார்கள்.


இரண்டு மூன்று நாள்கள் கழித்துஇ அவர்கள் மூவரும் தங்கள் தந்தையிடம் திரும்பி வந்தார்கள். முதலில் தந்தை மூத்தவனிடம்இ “நீ எத்தனை சீப்புகளை விற்றாய்?” என்று கேட்டதற்குஇ அவன் “இரண்டு” என்று சொன்னதும்இ “அவற்றை எப்படி விற்றாய்?” என்றார் அவர். அவனோஇ “நான் இந்த சீப்புகளைக் கொண்டு முதுகு சொரிந்துகொள்ளலாம் என்றேன். உடனே இரண்டு சீப்புகள் விற்பனையாயின” என்றான்.

அவனை அடுத்துஇ தந்தை இரண்டாமவனிடம்இ “நீ எத்தனை சீப்புகளை விற்றாய்?” என்று கேட்டதற்கு அவன்இ “நூறு சீப்புகளை விற்றேன்” என்றதும்இ “அவற்றை எப்படி விற்றாய்?” என்று அவர் அடுத்த கேள்வியைக் கேட்டார். அவன்இ “இந்தச் சீப்புகள் வாங்கித் துறவி மடத்தில் வைத்தால்இ இங்கு வரும் பார்வையாளர்களுக்குப் பயன்படும் என்றேன். அவர்கள் என்னிடமிருந்து நூறு சீப்புகளை வாங்கிக்கொண்டார்கள்.

கடைசியாக அவர் இளைய மகனிடம் அதே கேள்வியைக் கேட்டபோதுஇ அவன் அவரிடம்இ “நான் அவர்களிடம்இ இந்தச் சீப்புகளில் உங்கள் சமயக் கருத்துகளை பொறித்துஇ இங்கு வருவோரிடம் கொடுத்தால்இ உங்கள் சமயத்தை மிக எளிதாக வளர்க்கலாம் என்றதும்இ அவர்கள் என்னிடமிருந்து ஆயிரம் சீப்புகளை வாங்கிக் கொண்டார்கள்” என்றான். இதைக் கேட்டுப் பூரித்துப் போன தந்தைஇ அவனையோ தனது தொழிலுக்கு அதிபதியாக்கினார்.

ஆம் இந்த நிகழ்வில் வரும் இளைய மகன் தன்னிடமிருந்த திறமையைத் திறம்படப் பயன்படுத்தியதால்இ தன் தந்தையின் தொழிலுக்கு அதிபதியானான். இன்றைய இறைவார்த்தை கடவுள் நம்மைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் எனில்இ நமக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைத் திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல்இ கடவுள் இந்த உலகம் மடமைஇ வலுவற்றவைஇ தாழ்ந்தவை எனக் கருதுவதைத் தேர்ந்தெடுத்ததைப் பற்றிப் பேசுகின்றார். எதற்காகக் கடவுள் இவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்தார் எனில்இ ஞானிகளையும் வலியோரையும் இந்த உலகம் பொருட்டாகக் கருதுவதை அழித்துவிடவே. இதுதான் கடவுளின் திட்டமாக இருக்கின்றது.

இப்படிக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைத் திறம்படப் பயன்படுத்தவேண்டும். அதை நற்செய்தியில் இயேசு சொல்லும் தாலந்து உவமை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. இயேசு சொல்லும் தாலந்து உவமையில்இ தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட தாலந்துகளைத் திறம்படப் பயன்படுத்தியவர்கள் உயர்ந்த நிலையை அடைகின்றார்கள். இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தார்கள் என்று சொல்லலாம். அதே நேரத்தில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தாலந்தைத் திறம்படப் பயன்படுத்தாதவர் அதற்குரிய தண்டனையைப் பெறுகின்றார். இவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பிற்கு நம்பிக்கைக்குரியவராய் இல்லை என்று சொல்லலாம்.

ஆகவேஇ கடவுள் நம்மைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்துஇ நம்மிடம் பொறுப்புகளை ஒப்படைத்திருக்கின்றார் எனில்இ அதற்கு நாம் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர்வடையலாம்.


சிந்தனைக்கு:

 கடவுள் எல்லாரையும் தேர்ந்துகொள்வதில்லை; அவர் ஒருவரைத் தேர்ந்துகொள்கின்றார் எனில்இ அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அதே நேரத்தில் அவர் கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராய் இருக்க அழைக்கப்படுகின்றார்.

 நம்பிக்கைக்குரியவரே நற்பலன் தருபவராக இருக்கின்றார்

 பலன் தரும் வாழ்க்கை படைத்தவருக்கு ஏற்ற வாழ்க்கை.


ஆன்றோரின் வாக்கு:

‘கடவுள் நம்மை வெற்றியாளர்களாய் அல்லஇ நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவே அழைத்திருக்கின்றார்’ என்பார் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. எனவேஇ நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்துஇ இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ் பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

------------------------------------

திருப்பாடல் 33: 12-13, 18-19, 20-21 (12b)

“அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்”

தலைசிறந்த செயல் எது?


இறைமனிதர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடம் வந்த ஓர் இளைஞன், “ஐயா! தலைசிறந்த செயல் எது? எனக் கேட்டான். இறைமனிதர் சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்துவிட்டு அவனிடம், “பசித்தோருக்கு உணவிடுவதும், தாகத்தோடு இருப்போருக்கு தண்ணீர் கொடுப்பதுதான் தலைசிறந்த செயல். ஏனெனில், இதனைச் செய்வோர் ஒருவருக்கு உயிரளிப்பவருக்குச் சமமாகின்றார்” என்றார்.

ஆம், பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பவரும், தாகத்தோடு இருப்பவருக்குத் தண்ணீர் அளிப்பவரும் உயிரளிப்பவருக்குச் சமமானவர்களே! இதனைக் கடவுள் ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருப்பதால், அவர் உயிரளிப்பவரே! இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “ஆண்டவர் அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

கடவுள் பேரன்புமிக்கவர்; அந்த அன்பினாலேயே அவர் தமக்கு அஞ்சி வாழ்வோரைக் கண்ணோக்குகின்றார்; சாவினின்று காக்கின்றார்; பஞ்சத்தில் வாழ்விக்கின்றார்; துணையும் கேடயமுமாக இருக்கின்றார். இந்த உண்மையை எடுத்துக்கூறுகின்ற ஒரு பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 33.

புகழ்ப்பா வகையைச் சேர்ந்த திருப்பாடல் 33 இன் நடுநாயகமாக இருப்பது, “அவரது – ஆண்டவரது - பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது” (5) என்ற இறைவார்த்தைதான். ஆண்டவர் பேரன்பு மிக்கவராய் இருப்பதால்தான் அவர் எல்லாருக்கும், அதிலும் குறிப்பாக, தமக்கு அஞ்சி வாழ்வோருக்கு மேலே சொல்லப்பட்ட எல்லா நன்மைகளையும் செய்கின்றார்.

ஆண்டவர் தம் மக்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார் என்றால், நிறைவாகப் பெற்றுக்கொண்டவர்கள் பற்றக்குறையோடு இருப்பவர்களோடு தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். அது அவர்களது கடமை (மத் 14:16). இவ்வாறு நிறைவாகப் பெற்றுக்கொண்டவர்கள் பற்றாக்குறையோடு இருப்பவர்களோடு தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும்போது பஞ்சமோ, பட்டினியோ, பசியோ இல்லாமல் போகும்.

ஆதலால், தமது பேரன்பினால் நம்மை ஆபத்துகளிலிருந்து காத்து, உணவிடும் கடவுளைப் போற்றிப் புகழும் அதே நேரத்தில், நாம் நமது சமூகக் கடமைகளை உணர்ந்து, வறியோருக்கு உணவிட முன் வருவோம்.

சிந்தனைக்கு:

 ஆண்டவர் நமக்குச் செய்த நன்மைகள் ஏராளம். அவற்றையெல்லாம் நன்றியோடு நினைத்துப் பார்த்து அவரைப் போற்றிப் புகழ்வோம்.

 ஆண்டவரிடமிருந்து பேரன்பைப் பெறுகின்ற நாம் அதை மற்றவருக்கும் வழங்குவோம்.

 ஆண்டவரை ஏற்றிப் போற்றுவோரின் வாழ்க்கை நிச்சயம் ஏற்றம் பெறும்.


இறைவாக்கு:

‘எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன. தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்’ (திபா 145: 15) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமக்கு உணவளித்து, நம்மை வாழ்விக்கின்ற ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

------------------------------------------

 கடவுள் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்த தயாரா!

 சிறுவயதிலிருந்து பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நான் குருவானவராக செல்வேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிந்தவுடன் எதார்த்தமாக பங்கு ஆலயத்தின் நடைபெற்ற நவநாள் திருப்பலிக்கு சென்றேன். அந்த நவநாள் திருப்பலி முடிந்த பிறகு தான் என்னுடைய பங்கு இணைப்பங்கு பணியாளராக பணி செய்த அருள்பணியாளர் இறையழைத்தலை பற்றி  எனக்கு எடுத்து கூறி இறையழைத்தல் முகாமிற்கு அனுப்பி வைத்தார். அன்று நான் உணர்ந்த இந்த வாய்ப்பு இன்று என்னை கொடுத்து குருத்துவ நிலைக்கு உயர்த்தி உள்ளது. குருத்துவம் என்பது இறைவனின் மாபெரும் கொடை என்று சொல்வேன். இந்த மாபெரும் கொடையை கடவுள் எனக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். எனக்கு இறையழைத்தல் உண்டு என்று கடவுள் அந்த அருள்பணியாளர் வழியாக வெளிப்படுத்தினார். கடவுள் கொடுத்த இந்த வாய்ப்பை அன்று முழுமையாக பயன்படுத்தினேன். இன்று இயேசுவின் பிரதிநிதியாக குருத்துவ வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 

நம்முடைய வாழ்க்கையிலும் கடவுள் பல வாய்ப்புகளை ஒவ்வொரு நிலையிலும் கொடுத்து வருகிறார். அதை முழுமையாக பயன்படுத்தும் பொழுது வாழ்வின் வெற்றி கனியை சுவைக்க முடியும். இந்த மண்ணுலக வாழ்வு கடவுள் கொடுத்த உன்னதமான கொடை.  கிடக்கின்ற வாய்ப்புகளை நேரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் பயணிக்கிற பொழுது, வாழ்வில் சாதனைகள் பல புரிய முடியும். 

கடவுள் தாவீதை அழைத்த பொழுது ஒரு சிறு பையனாக இருந்தார். ஆனால் இறைவன் பெயரால் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினார். எனவே இஸ்ரேல் நாட்டின் இரண்டாவது அரசராக உயர்த்தப்பட்டார். அன்னை மரியாவும் இளம்பெண்ணாக ஆண்டவரின் அழைப்பை ஏற்று இயேசுவின் தாயாக மாறிட தன்னையே முழுவதுமாக கையளித்து மீட்பின் தாயாக மாற வாய்ப்பினை பயன்படுத்தினார். இறுதியிலே கடவுள் அவரின் உடலையும் ஆன்மாவையும் விண்ணகத்திற்கு எடுத்துச் சென்று அவரை விண்ணக மண்ணக அரசியாக உயர்த்தினார். சீடர்களும் தங்களுக்கு கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தினார்கள். வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நற்செய்தியை தொடர்ந்து எல்லா மக்களுக்கும் அறிவித்தார்கள். இறுதியில் ஆண்டவர் இயேசுவின் சாட்சியமுள்ள திருத்தூதர்களாக உயர்த்தப்பட்டார்கள்.

இன்றைய நற்செய்தியில் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தாலந்து உவமையைக் கூறியுள்ளார். கிடைக்கும் வாய்ப்பை‌ப்‌ பயன்படுத்துபவர்கள் வாழ்வில் சாதனைகளை அடைகின்றனர். உழைப்பிற்கேற்ற கைமாற்றை பெறுகின்றனர். உவமையில் கூட ஐந்து காலத்தை பெற்றவர்‌ மேலும் ஐந்து தாலத்தை ஈட்டினார். எனவே தலைவரின் பாராட்டுதலைப் பெற்றார். இரண்டு காலத்தைப் பெற்றவர் மேலும் இரண்டு தாலந்தை ஈட்டினார். எனவே தலைவரின் பாராட்டுதலைப் பெற்றார். ஒரு தாலந்தைப் பெற்றவர் உழைக்காமல் தாலந்தை மண்ணில் புதைத்து  சோம்பேறியாக வாழ்ந்து பெற்றதை அப்படியே கொடுத்தார். எனவே தலைவரால் அவர் தண்டிக்கப்பட்டார். 

இறைவனின் இறையாட்சியிலும் அப்படி தான். கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி இறையாட்சியில் செல்வத்தை சேர்த்து வைக்கும் பொழுது நிலைவாழ்வைப் பெற முடியும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி இறையாட்சி மதிப்பீட்டிற்கு உகந்த வாழ்க்கை வாழவில்லையென்றால் நிலைவாழ்வை இழந்துவிட கூடும். எனவே கடவுள் நம் வாழ்வில் கொடுத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி நிலையான வாழ்வை உரிமைச் சொந்தமாக்கிக் கொள்ள தேவையான அருளை வேண்டுவோம். 

 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் பெறுகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்ந்து நிலைவாழ்வின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு


 Join with us 👇

 Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076





No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...