Saturday, August 27, 2022

Dily Bread Sunday- அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-08-2022) ஞாயிறு

பொதுக்காலம் 22 வாரம் - ஞாயிறு 



முதல் வாசகம்

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3:17-18,20,28-29

குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். ஆண்டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார். இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றிவிட்டது. நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்து கொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 68: 3-4. 5-6. 9-10

பல்லவி: ஒடுக்கப்பட்டோர்க்கு கடவுளே, மறுவாழ்வு அளித்தீர்.


3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்.

4 கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!

6 தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி

9 கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.

10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன் கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். பல்லவி


இரண்டாம் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 18-19, 22-24


சகோதரர் சகோதரிகளே, நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள் சூழ்ந்த, மந்தாரமான, சுழல் காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல. அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தை கூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக்கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவு பெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும், புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

லூக்கா 14:1, 7-14


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-14

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ஹஇவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ஹநண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர். '' பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ஹஹநீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------


எதிர்பார்ப்பின் உலகம்

எதிர்பார்ப்பு என்பது இந்த உலகத்தின் மதிப்பீடு. நாம் ஒருவருடைய உதவியைப் பெறுகிறோம் என்றால், நிச்சயம் அவர் நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பார். சாதாரண அரசு அலுவலகங்கள் இதற்கு சிறந்த உதாரணம். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக, ஏற்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் மக்களின் தேவைகளை சரிசெய்வதற்காக, மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொள்கிறவர்கள். ஆனால் நடப்பது என்ன? சாதாரணமான வேலைக்கும், நாகூசாமல் பெரும்பாலான அரசு ஊழியர்கள், எதையாவது கேட்டே பெற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். ஆக, எதிர்பார்ப்பு என்பது, சாதாரண வாழ்க்கை நடைமுறையாகி விட்டது.

இப்படிப்பட்ட காலப்பிண்ணனியில் வாழும் நமக்கு இயேசுவின் போதனை சற்று எச்சரிக்கையாக அமைகிறது. எதையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஒன்றை நாம் செய்கிறபோது, அது நமக்கு திரும்பச் செய்ய முடியாத மனிதர்களுக்குச் செய்வதுதான், எதனையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வதற்கு சமமானதாக இருக்கிறது. வறியவர்கள், ஏழைகள், சாதாரண நிலையில் இருக்கிறவர்களுக்கு நாம் எதைக்கொடுத்தாலும், அவர்களால் நமக்கு திரும்ப கொடுக்க முடியாது. ஆனால், அவர்கள் வழியாக கடவுள் நமக்கு நிறைவாகக் கொடுப்பார். கடவுள் கொடுப்பார் என்பதற்காக அல்ல, மாறாக, கொடுப்பதே நமது ஆன்மாவிற்கு நிறைவு. அதற்காக நாம் மற்றவர்களுக்கு கொடுப்பதை, வாழ்வின் முக்கிய மதிப்பீடாக வைத்துக்கொள்வோம்.

கடவுளிடமிருந்து நாம் ஏராளமான காரியங்களைக் கொடையாகப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். கடவுள் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. நாம் எவ்வளவு தான், நன்றியற்றவர்களாக இருந்தாலும், கடவுள் நமக்கு வேண்டியதை, கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறார். இறைத்தந்தையிடமிருந்து கொடைகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் நாம், மற்றவர்களுக்கு கொடுத்து பயன்பெறுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

தாழ்ந்தோரால் மாட்சி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

“தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர்” என்னும் இன்றைய மையக் கருத்தினை முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில் காண்கிறோம். மானிட வாழ்வின் சுவைமிகு முரண்பாடுகளுள் இதுவும் ஒன்று. வலிமையுடையோர் எப்போதும் வெற்றி பெறமுடிவதில்லை. வலிமை குன்றியவர்களும் வெல்ல முடிகிறது. அதுபோல, நெஞ்சிலே செருக்குற்றோர் எப்போதும் இறைவனால் சிதறடிக்கப்படுகின்றனர். தம்மையே தாழ்த்திக் கொள்பவர்களுக்கு இறைவனின் முன்னிலையில் பரிவு கிடைக்கும் என்று இன்றைய முதல் வாசகம்- சீராக்கின் ஞானநூல் தெரிவிக்கிறது. “ ஆண்டவரின் ஆற்றல் பெரிது. ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகிறார்” என்று வாசிக்கிறோம். எனவே, வாசகம் தொடங்கும் முதல் வாக்கியத்தை மீண்டும் கவனிப்போம்: “குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்”. நம் இதயத்தில் தாழ்ச்சியை, பணிவை வளர்த்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: தாழ்ந்தோரை உயர்த்தும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இதயத்தில் தாழ்ச்சியும், பணிவும் மிக்கவர்களாக நாங்கள் வாழ, பணிபுரிய அருள்தாரும். எங்கள் வாழ்விலும், பணியிலும் நீரே மாட்சி அடைவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

------------------------------------------------

மதிப்புப் பெறுதல் !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் ”செயல்வழிக் கற்றல் ” முறை இன்றும் தொடர்கிறது. உணவு அருந்தும் வேளையைப் பயன்படுத்தி இயேசு நல்ல மதிப்பீடுகளை மக்களுக்குக் கற்றுத் தருகிறார். குறிப்பாக, இயேசுவின் சீடர்கள் முதன்மையான இடத்தையும், மதிப்பையும் விரும்பித் தேட வேண்டாம் என்று அறிவுரை பகர்கின்றார். அதற்காக நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் தருகிறார்.

விருந்துக்கு செல்லும்போது விருந்தளிப்பவர் தருகின்ற மதிப்பைப் பற்றி இயேசு கூறுகின்ற எடுத்துக்காட்டு நமது வாழ்விலேகூட எப்போதேனும் நடந்திருக்கச்கூடிய ஒரு நிகழ்வுதான். நாம் முதன்மை இடத்தைத் தேடினால், அதை இழந்து பி;ன்னிடத்திற்கு செல்ல நேரிடும். கடைசி இடத்தைத் தேர்ந்தெடுத்தால், அனைவரின் முன்பாக மேலிடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பெருமைக்கு உள்ளாகியிருப்போம்.

ஆகவே, முதன்மை இடத்தை, பெருமையை, பாராட்டை பிறருக்கு விட்டுக்கொடுக்கின்ற நல்ல பழக்கத்தை ஒரு வாழ்வு மதிப்பீடாக ஏற்றுக்கொள்வோம். அப்போது, இறைவன் நம்மைப் பெருமைப்படுத்துவார்.

மன்றாடுவோம்: தாழ்ந்தோரை உயர்த்துகின்ற இயேசுவே, எங்கள் வாழ்வில் நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்தி வாழும் அருளைத் தாரும். பிறரிடமிருந்து பாராட்டை, முதன்மையை, மதிப்பை நாங்கள் எதிர்பார்க்காமல், பிறருக்கு நாங்கள் வழங்குகின்ற நல்ல மனதை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு, 'தம்மைத்தாமே உயர்த்துவோர் எவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்' என்றார்''(லூக்கா 14:11)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளாட்சியை மக்களுக்கு அறிவித்த இயேசு உலகப் பார்வையில் அமைந்த மதிப்பீடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டார். எனவே அவருடைய போதனை புரட்சிகரமானதாக இருந்தது. அந்தப் புரட்சி அரசியல் புரட்சியோ சமுதாயப் புரட்சியோ அல்ல் மாறாக, ஒரு வேரோட்டமான ஆன்மிகப் புரட்சி. அதன் விளைவாக மனித சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்றும், மனித உறவுகள் அன்பையும் நீதியையும் அடித்தளமாகக் கொண்டு எழ வேண்டும் என்றும் இயேசு போதித்தார். உலகக் கணிப்புப்படி, யார் யார் தம்மை உயர்த்துகிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். தாழ்நிலையில் உள்ளோர் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இயேசுவின் பார்வை வேறு. தாழ்ச்சி என்னும் நற்பண்பு நமக்கு வேண்டும் என அவர் கற்பித்தார். அப்பண்பு நம்மிடம் இருந்தால் நம்மையே உயர்ந்தவர்களாகக் கருதவோ பிறரைத் தாழ்ந்தவர்களாகக் கணிக்கவோ நாம் முற்பட மாட்டோம். உயர்வும் தாழ்வும் மனிதப் பார்வையில் எழுவது. கடவுளைப் பொறுத்தமட்டில் எல்லா மனிதரும் சமமே.

-- ஆனால் பதவி, அந்தஸ்து போன்ற அளவீடுகளின் அடிப்படையில் மனிதரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பாகுபடுத்தி, உயர்;ந்தோருக்கு முதலிடம் தாழ்ந்தோருக்குக்குக் கடைசி இடம் எனச் சட்டங்கள் வகுக்கின்ற மனிதர்கள் கடவுளின் பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். மனித மதிப்பீடுகளைக் கடவுள் புரட்டிப் போடுவதை லூக்கா ஏற்கெனவே பதிவுசெய்தார். எடுத்துக்காட்டாகக் காண்க: லூக் 1:51-53. அங்கே மரியா கடவுளின் அரும் செயல்களை வியந்து பாடியபோது, ''வலியேரரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்'' எனப் பறைசாற்றுகின்றார். உண்மையான தாழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது? இப்போது பணிந்து போனால் பிறகு உயர்வடைவோம் என்னும் எதிர்பார்ப்போடு செயல்படுவது உண்மையான தாழ்ச்சி அல்ல. மாறாக, தற்புகழ்ச்சி என்பது கடவுளின் முன்னிலையில் எல்லா மனிதரும் சமம் என்னும் உண்மைக்கு எதிராகப் போவதை நாம் உணர்வதும், நம்மைத் தேடி வந்த கடவுள் தம்மையே தாழ்த்திக் கொண்டு நம்மோடு தம்மை ஒன்றுபடுத்திய கடவுள் என்பதைக் கருத்தில் கொள்வதும் இன்றியமையாதது. அப்போது கடவுள் செயல்படுகின்ற விதத்தில் நாமும் செயல்படுவோம். அதாவது, மனிதரிடையே பாகுபாடுகள் கற்பிக்காமல், அனைவரும் மாண்பு மிக்கவர்களே என்னும் தத்துவத்தின் அடிப்படையில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயம் உருவாகிட நாமும் மனமுவந்து உழைப்போம்.

மன்றாட்டு

இறைவா, எங்களை வேறுபாடின்றி அன்புசெய்கின்ற உம் இரக்கத்தை வியந்து போற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

_________________________________

தேடி வரும் முதலிடம்

ஒரு மனிதனுடைய குணத்தை, பண்பாட்டை உணவு உண்ணும் இடத்தில் கண்டுகொள்ளலாம் என்பர். இங்கு மனிதன் இயல்பாக செயல்படுவதால் அவனுள் இருக்கும் உண்மை இயல்பை அறிந்து கொள்ளலாம். அதிலும் விருந்துகள் வெறுமனே உணவுப் பறிமாற்றம் மட்டும் அல்ல. அதனுள் பல மனித நேய உண்மைகள், இறை உணர்வுகளும் அடங்கியிருக்கின்றன. இவை மனித வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதையே இயேசு இங்கே உணர்த்துகிறார்.

விருந்தில் முதலிடத்தைத் தேடும்போது தன்னைப்பற்றியும் நினைக்கவில்லை, அடுத்திருப்பவனைப்பற்றியும் எண்ணமில்லை. மனித நேயமும் இல்லை, இறை உணர்வும் இல்லை. உணவை மட்டுமே எண்ணமாக இருப்பது மனித நிலை தாழ்ந்த ஒரு பிறவி.

ஒவ்வொரு விருந்தும் மனிதாபிமானத்தை வளர்த்துக்கொள்ளும் ஒரு அருமையான வாய்ப்பு. தெய்வீகத்தன்மையை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பு. எனவேதான் நற்கருணை அருட்சாதனத்தை விருந்துச் சூழலில் ஏற்படுத்துகிறார். எந்த வீட்டிற்கு விருந்துக்குச் சென்றாலும் அங்கு வந்திருக்கும் நோயுற்றவர்களை அடையாளம் கண்டு அவர்களைக் குணமாக்குகிறார். முதலில் அவர்களின் மனச்சுமையை இறக்கி வைக்கிறார். பாதங்களைக் கழுவுகிறார்.

இயேசுவின் போதனையை கருத்தூன்றிக் கேட்டு அவர் செயல்பட்டதுபோல நாமும் வாழ்ந்தால் முதலிடம் நம்மைத் தேடி வரும்.

--அருட்திரு ஜோசப் லீயோன்

------------------------------------------------

தாழ்ச்சியே மாட்சி


💠உலகில் உள்ள எல்லா சமயங்களும் வலியுறுத்தும் புண்ணியங்களுள் ஒன்று தாழ்ச்சி. 

💠இது பணிவு, தன்னடக்கம் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. 

💠இன்றைய நற்செய்தி, ஆண்டவர் இயேசு நமக்கு அறிவுறுத்தும் நல்ல வழிமுறையாக இது அமைந்துள்ளது. 

லூக் 14:11 "தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்;          தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்படுவார்"  – என்று அறிவுறுத்துகிறார்.  

✝️மரியாள் இறைவன் முன் (லூக் 1:38) 

"நான் ஆண்டவரின் அடிமை" என்று தன்னைத் தாழ்த்தினார்.  ஆண்டவர் அவரை எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் என்று போற்றும் அளவிற்கு உயர்த்தி, திருச்சபை வழி  மாடசியுறச் செய்தார்.  எனவே பணிவோடு, மனத்தாழ்மையோடு, பணியாற்ற அழைக்கப்படுகின்றோம். 

நிகழ்வு :

ஆப்பிரிகக் கண்டத்தில் உள்ள நாடுகளுள் ஒன்று சூடான்.  இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடு.  தெற்கு சூடானில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.  இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே நீண்ட நாள் போர்.  நீண்டநாள் போராட்டத்திற்குப் பிறகு 2011-ஆம் ஆண்டு தெற்கு சூடான் சுதந்திர நாடானது.  மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர்.  தெற்கு சூடானியர் மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.  இரண்டு ஆண்டுகளில் தெற்கு சூடானில் நிலைமை மாறிப்போனது.  சூடானில் இருந்து விடுதலை பெற இணைந்து தியாக மனநிலையோடு உழைத்தவர்கள் 2013 –ஆம் ஆண்டு முதல் தங்களுக்குள் இரு குழுக்களாகப் பிரிந்து சண்டை போடத் தொடங்கினர்.  கிட்டத்தட்ட நான்கு லட்சம் கிறிஸ்தவர்கள் இனக் குழுக்களுக்குள் நடைபெற்ற இனப்போரில் மாண்டு போயினர்.  உலகம் இவர்களை உற்று நோக்கியது.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அவர்களின் இனக்குழுக்களின் போரினை உற்று நோக்கியதோடல்லாமல் அவர்களை சமாதானப் பேச்சு மற்றும் தியானத்திற்கு அழைப்பு விடுத்தார்.  இரு இனக்குழுக்களின் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.  இதன் இறுதி நாளில் 2019 ஏப்ரல் 12 அன்று 82 வயது நிரம்பிய, தொடர் மூடடு வலியால் அவதியுறும் திருதத்ந்தை பிரான்சிஸ் திடீர் எனக் குனிந்து அவர்களின் கால்களை முத்தம் செய்தார்.  இரு இனக்குழுக்களின் தலைவர்களும் திகைத்துப் போயினர்.  திருத்தந்தை நம் கால்களை நாம் செய்யும் தவற்றிற்காய் முத்தம் செய்வதா? என்று,  அதோடு திருந்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பார்த்து கெஞ்சி மன்றாடியது, அன்புச் சகோதரமே! உங்களை இரந்து கேட்கிறேன் ஆண்டவர் இயேசுவின் அமைதியில் நிலைத்திருங்கள்.  என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மிகப்பணிவோடு வேண்டுகிறேன்.  இன்னும் நீண்ட  தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.  பயணப் பாதையில் பலப் பிரச்சனைகள்  உண்டு.  அவை நம்மை மேற்கொள்ளாத படி, அந்த பிரச்சனைகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள்.  உயிர்ப்பலிகள் வேண்டாம்.  அமைதியைக் கடைபிடியுங்கள் என்றார். திருத்தந்தையின் இந்தச் செயலால் அவரை இந்த உலகம் வியந்து பார்த்தது.  உலகில் அறிவுரைகளையும், நெறிமுறைகளையும் எல்லாரும் வழங்கிக் கொண்டிருக்க திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் செயல் எல்லாரையும் மெய்சிலிர்க்க வைத்தது. 

தாழ்நிலையில், தாழ்ச்சியுடன், பணிவுடன் செயல்படுகிறவர்களை கடவுள் மாட்சிப்படுத்துவார். ஆனால் செருக்குற்றோரை அவர் பொருட்படுத்துவதில்லை. 

யாக் 4:6 

"செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார், தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்".  

♦️செருக்கும், ஆணவமும் நம்மை இழிநிலைக்கு இட்டுச் செல்லும். 

♦️தாழ்ச்சியோ உயர்வடையச் செய்யும். இன்றைய வழிபாடு இதை உணர்த்துகிறது. 

💠பரிசேயர்கள் இயேசுவை மீட்பர் என ஏற்றுக் கொள்ளாமல் தச்சன், மரியாவின் மகன், மதிமயங்கிப் பேசுகிறவன் என்று ஏளனமாய் பார்த்தனர்.  ஆனால் இயேசு அவர்களை அன்பு செய்தார். ஏனெனில், 

மத் 18:14 

"இச்சிறியோருள் ஒருவர் கூட நெறிதவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்". எனவே அவர்களோடு  

விருந்துண்டு அனைவரும் கடவுளின் அன்புப் பிள்ளைகள் தாம், என்பதை உணரச் செய்தார்.  வாழ்வியல் நியமங்களைத் கற்பித்தார். 

💠 நாம் வாழ்வில் முதன்மையான இடங்களைத் தேடி ஓடினால் நம்மிடம், அதிகாரம், பணபலம், பதவி வெறி, ஆணவம், அகங்காரம், புகழ் அடைய வேண்டும் என்ற வெறி போன்றவை மேலோங்கி நிற்கும்.  ஆனால் நமக்குத் தேவை என இறைவன் விரும்புவது, தாழ்ச்சி, பணிவு, இறையச்சம் என்பவையே.  இவற்றை நாம் வாழ்வாக்கும் போது இறைவன் பார்வையில் நாம் உயர்வடைவோம்.  அன்னை மரியாள் தன் பாடலில் 

லூக் 1:52 

"உள்ளத்தில்  செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.  வலியோரை அரியணை நின்று தூக்கி எறிந்துள்ளார்.  தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்" என்றார்.  மரியா தன்னை ஆண்டவரின் அடிமையாக்கினார்.  எனவே எல்லாத் தலைமுறையினரும் அவரை பேறு பெற்றவளாக வணங்கச் செய்தார். 

✝️ 1சாமுவேல் 17-ஆம் அதிகாரத்தில் இஸ்ரயேலர்களுக்கும், பிலிஸ்தியர்களுக்குமுள்ள பகை குறித்துப் பேசுகிறது.  பிலிஸ்திய படைத்தலைவனாகிய கோலியாத் இஸரயேலரின் கடவுளைப் பழித்தான்.  உரிமைப் பேறான மக்களைப் பழித்தான்.  தாவீது அவனிடம் நீ இகழ்ந்த இஸ்ரயேலரின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் பெயரால் வருகிறேன்.  ஆண்டவர் இன்று உன்னை என்னிடம் ஒப்படைப்பார் என்று ஆண்டவரில் நம்பிக்கை வைத்துச் சொன்னான்.  தாவீது ஒரு கவணும் ஒரு கல்லும் கொண்டு பெலிஸ்தியனை வீழ்த்தினார்.  ஆண்டவர் அவருடன் இருந்தார்.  அகங்கரித்த கோலியாத் வீழ்த்தப்பட்டான். எளியவனான தாவீது உயாத்தப்பட்டார். 

✝️ 1அரசர் 21-ஆம் அதிகாரத்தில் நாபோத்தின் திராட்சைத் தோட்ட நிகழ்வு தரப்படுகிறது.  ஆகாப் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரித்தான்.  ஆண்டவரின் சினம் அவன் மீது உள்ளது என்பதை அறிந்த ஆகாப் தன்னை தாழ்த்தி பணிவோடு நோன்பு காத்தான்.  எனவே ஆண்டவர் அவர் மீது கருணை கொண்டார். 

1அரசர் 21:29 

"என் திருமுன் தன்னைத் தாழ்த்திக் கொண்டதால் நான் அவன் வாழ்நாளின் போது தீமை வரச்செய்ய மாட்டேன்" – என்றார்.  ஆகாப்பின் பணிவு, தாழ்ச்சி, மனதுருக்கம், இறையச்சம் அவனைக் காத்துக் கொண்டது.  அவனை உயர்த்தியது. 

✝️ லூக் 18:9-14 வரை உள்ள இறைவார்த்தையில் அருமையான ஒரு நிகழ்வு.  ஆலயத்தில் இருவர் செபிக்கச் செல்கின்றனர்.  ஒருவன் ஆயக்காரன், மற்றவன் பரிசேயன்.  பரிசேயன் ஆலயத்தின் முன் சென்று தன்னைப் பெருமைப்படுத்தினான்.  ஆயக்காரனை இழிவாகச் சொன்னான்.  செபத்தின் பெயரால் சுய புராணம் பாடினான்.  ஆனால் ஆண்டவர் இயேசு 

பிலி 2:3 

"மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்" என்று சொன்னார். 

பரிசேயன் செபம் என்றப் போர்வையில் கடவுளின் சமூகத்தில் தன்னை உயர்வாகப் பேசுவதையும், மற்றவரைப் பழிப்பதையும் செய்தான். ஆயக்காரரோ தான் பாவி என்பதை மட்டும் தாழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு ஆண்டவரின் இரக்கத்திற்காய் மன்றாடினார்.  ஆண்டவர் இயேசு, 

லூக் 81:14 

"பரிசேயர் அல்ல; வரி தண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.  ஏனெனில் தம்மைத்தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்.  தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயாத்தப் பெறுவர்" என்றார். 

♦️ தற்பெருமை, அகம்பாவம் ஆகிய இரண்டும் மனிதர் நாம் நம்மை நாமே அழிப்பதற்காக உருவாக்கிக் கொண்ட ஆயுதங்கள்.  தற்பெருமையும், அகம்பாவமும் நம்மில் குடி கொண்டால் இறுதியில் நமக்கு மிஞ்சுவது அழிவே. 

✝️தொ.நூல் 11-ஆம் அதிகாரத்தில் அந்த மக்கள் கடவுளை மறந்து, தங்கள் புகழ், பெருமையை உலகுக்குப் பறைசாற்ற முற்பட்ட போது ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுப் போகச் செய்தார்"  எனவே அவர்களுடைய எண்ணங்கள் ஈடேறாமல் போனது. 

♦️அப்படியானால் உயர்வடைவதும், தாழ்த்தப்படுவதும் அவரவர் மனநிலை, செயல்பாடுகளைப் பொறுத்தது. 

♦️ ஆணவம், செருக்கு, இறுமாப்பு உடையவர்கள் தங்களைத் தாங்களே உயர்வாகக் கருதுவார்கள்.  ஆனால் மக்கள் ஒருவரும் மதிக்கமாட்டார்கள்.  அவர்களைக் குறித்த நல்லெண்ணம் யாரிடமும் இருப்பதில்லை. 

💠தாழ்ச்சியுடையோர் எல்லாராலும் போற்றப்படுபவர்,  எல்லாரின் நன்மதிப்பும் பெறுவர். 

எடுத்துக்காட்டாக, திருத்தந்தை பிரான்சிஸ், புனித அன்னை தெரசா போன்றோர் எளிமையை, தாழ்ச்சியை உலகிற்கு உணர்த்துகிறவர்கள். 

💠தாழ்ச்சியுடையோரைக் கடவுளும் உயர்த்துவார்         லூக் 1:52 

"தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்" என்ற மரியாவின் பாடல் நமக்குப் பாடமாகிறது. நம் வாழ்வில் நாம் எப்படி, எதை வாழ்வாக்குகிறோம்? 

✝️யாக் 4:17 

"நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச்  செய்யா விட்டால் அது பாவம்".

கடவுள் நம்மை, பிறருக்கு நன்மை செய்வதற்குரிய நல்ல உயர்ந்தப் பொறுப்புகளில் வைக்கும் போது அல்லது உயர்த்தும் போது நாம் கனிவோடு, பரிவோடு நடந்து கொள்கிறோமா?  இல்லை அகங்கரிக்கிறோமா? பொறுமையோடு பழகுகிறோமா? இல்லை தற்பெருமையோடு பாராமுகமாய் இருக்கிறோமா? எளிமையோடும், தாழ்ச்சியோடும் நாம் நடந்தால் மக்கள் மனங்களில் உயர்வோம். 

✝️நீ.மொ 21:4 "மேட்டிமையானப் பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்". 

மேட்டிமைப் பார்வை என்பது தன்னை உயர்த்தி பிறரை இழிவாக நோக்குவது, மற்றும் இறுமாப்பு கொண்ட உள்ளம் உடையவர்களை இந்த சமூகம் ஒருபோதும் மதிப்பதில்லை.  நாம் இத்தகைய உள்ளம் உடையவராக இருக்கிறோமா? எளிய உள்ளத்தோடு எல்லாரையும் சமமாய் மதிக்கக் கற்றுக் கொள்வோம்.  அப்போது ஆண்டவரின் பார்வையில் மதிப்புக்குரியவராவோம். 

✝️சீராக் 8:18 

"நீ பெரியவனாய் இருக்குமளவிற்குப் பணிந்து நட அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்" நாம் பெரியவர்கள் என்பதை நம்முடைய பணிவான செயல்களால் வெளிப்படுத்தும் போது, ஆணவம், இறுமாப்பு அற்றுப் போகும்.  மனிதர் பார்வையில் நாம் மாண்புக்குரியவராவோம்.  மானுடர் நாம் யாவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற சகோதர உணர்வோடு செயல்படும் போது நாம் மாட்சி பெறுவோம்! 

உயர்ந்து நிற்போம்!

அருட்பணி. ஜெரால்டு  ஜெஸ்டின், குழித்துறை மறைமாவட்டம்.


Join with us 👇

 Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...