Sunday, August 28, 2022

Daily Bread Monday - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (29-08-2022) திங்கள்

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவுக்கு உரியது.


முதல் வாசகம்


இயேசுவைத் தவிர வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

சகோதரர் சகோதரிகளே,

கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறிய வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்


திபா 119: 97-98. 99-100. 101-102 (பல்லவி: 97a)

பல்லவி: ஆண்டவரே! திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!

ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.

என் எதிரிகளை விட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை; ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது. - பல்லவி

எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளவனாய் இருக்கின்றேன்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்;

முதியோர்களை விட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன். - பல்லவி

உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன்.

உம் நீதி நெறிகளை விட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29

அக்காலத்தில்

ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.

ஏனெனில் யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.

ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான்.

அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான். “நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான்.

அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன் தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள்.

உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள்.

இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.

இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------------------------

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது அப்படியேதான் இருக்கும். மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலைக் கொடுக்கும். (யோவான் 12)

இன்று திருச்சபையானது தூய திருமுழுக்கு யோவானுடைய பாடுகளை நினைவுகூர்ந்து பார்க்கிறது. ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்தவர், பாலைவனத்தில் ஒலித்த குரல், இயேசுவுக்கு திருமுழுக்குக் கொடுத்தவர், இயேசுவை மக்களுக்கு சுட்டிக்காட்டியவர், இறுதி இறைவாக்கினர் போன்ற பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான இவரது பாடுகளை நினைவுகூர்ந்து பார்ப்பது நாம் நமது விசுவாசகத்தில் வளர்வதற்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

திருமுழுக்கு யோவான் ஆண்டவருடைய கைவன்மையையும், எலியா இறைவாக்கினரின் உளப்பாங்கையும் பெற்றிருந்தவர் (லூக் 1:17) அதன்மூலம் மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் சென்றவர். குறிப்பாக உண்மையை உரக்கச் சொன்னவர். அதற்காக தன்னுடைய உயிரையும் விலையாகத் தந்தவர்.

ஏரோது தன்னுடைய சகோதரனான பிலிப்பின் மனைவியோடு வாழ்வதைப் பார்த்த திருமுழுக்கு யோவான் அவனிடம், நீ உன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்வது முறையல்ல’ என்று அவனுடைய தவறைச் சுட்டிக்காட்டுகிறார். அதற்கு விலையாக தன்னுடைய உயிரையே தருகிறார். இவ்வாறு அவர் எப்படிப்பட்டட் துன்பம் வந்தாலும் உண்மையைத் துணிச்சலாக அறிவிக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

இயேசுவின் வழியின் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் உண்மையின் வழியில் நடந்து உண்மைக்குச் சான்று பகரவேண்டும்.

இந்நேரத்தில் அமெரிக்காவில் இருந்த கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மாட்டின் லூதர் கிங் என்பவரை நினைத்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மார்டின் லூதர் கிங் வெள்ளை இனத்தவரால் கறுப்பினத்தவருக்கு நேர்ந்த கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் துணிச்சலோடு எடுத்துரைத்தார். இதனால் அவர் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தார். ஆனாலும் அவர் சாவைக் கண்டு கலங்காமல் தான் மேற்கொண்ட பணியில் மிகவும் உறுதியாக இருந்தார்.

1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, அதாவது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுவதற்கு முந்தின நாள் திரண்டிருந்த மக்களைப் பார்த்துப் பேசினார், “அன்பார்ந்த மக்களே! என்னுடைய சாவு நெருங்கி வருவதை நான் நன்றாகவே உணர்கிறேன். ஆனாலும் நான் சாவைக் குறித்துக் கவலைப்படவில்லை. எனக்கு முன்பாக வாக்களிக்கப்பட்ட நாடு (கறுப்பினத்தவர் எல்லா உரிமையையும் பெற்று அமைதியாக வாழும் நாடு) மிகத் தெளிவாகத் தெரிகிறது. அந்நாட்டில் நான் நுழைவேனோ இல்லையோ, என்னுடைய மக்கள் நுழைவார்கள். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று.

அவர் சொன்னது போன்று 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் மார்டின் லூதர் கிங் பகைவரால் துப்பாக்கியில் சுடப்பட்டு, கொல்லப்பட்டார். அவர் எதிர்பார்த்த கருப்பினத்தவரும் சம உரிமை பெற்று வாழும் நாட்டில் அவர் வாழ முடியாவிட்டாலும்கூட, அவர் கண்ட கனவு சில ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியது. இவ்வாறு அவர் உண்மையை உரக்கச் சொன்னதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

திருமுழுக்கு யோவானும் தான் அரசனின் தவற்றைச் சுட்டிக்காட்டுகிறோம் என்றெல்லாம் நினைத்துக் கவலைப்படவில்லை. குற்றம் என்றால் குற்றம்தான். அது யார் செய்தால் என்ன? என்பதில் மிகத் தெளிவாக இருந்து, உண்மையை எடுத்துரைத்து இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.

அடுத்ததாக திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அவரிடம் விளங்கிய நேர்மையும், தூய்மையுமே ஆகும். நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் நேர்மையும், தூய்மையும் உள்ளவராக விளங்கியதால் ஏரோது அவரைக் கண்டு அஞ்சுகிறார். நாம் நம்முடைய வாழ்வில் நேர்மையோடும், தூய்மையோடு விளங்கினோம் என்றால் நமது வாழ்வு மிகச்சிறந்த சாட்சிய வாழ்வாக இருக்கும் என்பதில் எந்தவித சங்கமும் இல்லை.

விவிலியத்தில் கடவுள்தான் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். தூய்மை என்பது அவருடைய தனிப்பட்ட குணம். அதனால்தான் லேவியர் புத்தகம் 19:2ல் வாசிக்கின்றோம், “உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராக இருப்பது போல நீங்களும் தூயவராக இருங்கள்” என்று. எனவே கடவுளின் பிள்ளைகளாகிய நாம் தூயவர்களாக இருக்க முயற்சிப்போம்.

பல நேரங்கில் நாம் நமது சிந்தனையால், சொல்லால், செயலால் பாவம் செய்து, கடவுளை விட்டு வெகுதொலைவில் போய்விடுகிறோம். எனவே நாம் நம்மிடம் இருக்கும் பாவத்தை விட்டுவிட்டு திருமுழுக்கு யோவானைப் போன்று தூயவர்களாக வாழ முயற்சிப்போம்.

இயேசு கூறுவார், “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்று. நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று தூயவர்களாகவும், உண்மைக்குக் சான்று பகர்பவர்களாகவும் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

----------------------------------

முயற்சி திருவினையாக்கும்

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்


முயற்சி திருவினையாக்கும்


'வாழ்க்கை மிக குறுகியது. காதல் கொள்ளுங்கள்!' (Life is short. Have an affair) என்ற கவர்ந்திழுக்கும் முதற்பக்கத்துடன் இயங்கிவந்த 'ஆஷ்லி மேடிசன்' (Ashley Madison) என்ற 'காதல்' வலைதளம் கடந்த வாரம் சில தொழில்நுட்ப கில்லாடிகளால் ஊடுருவப்பட்டது. 'திருமணத்திற்கு வெளியே உறவு கொள்ள' ஒருவர் மற்றவரை நெருக்கமாக்கும் இந்த வலைதளத்தில் தங்கள் விவரங்கள் மற்றும் நிழற்படங்களைப் பதிவு செய்திருந்த பலரையும் இந்த கில்லாடிகள் இப்போது பயமுறுத்தி காசுபார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். 'திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி' இதில் பதிவு செய்தவர்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் இந்திய நகரங்களில் இந்த இணையதளத்தில் பதிவு செய்தவர்களின் பட்டியிலில் நம்ம சென்னைக்கு மூன்றாம் இடம் வேறு.

சரி! இப்போ எதுக்கு இந்த டீடெய்ல்ஸ் எல்லாம்!

நேற்று மதியம் என் நண்பர் ஒருவருடன் வங்கிக்குச் சென்றபோது, உரையாடலில் போகிற போக்கில் அவர், 'இப்ப எல்லாம் யாரு ப்ராமிஸ் எல்லாம் கீப்-அப் பண்ணுறா? நாங்களும் இறுதி வார்த்தைப்பாடு கொடுக்கும்போது எல்லார் முன்னிலையிலும் ப்ராமிஸ் கொடுத்தோம். ஆனால், திருப்பலி, விருந்து, அன்பளிப்பு என கொண்டாடி மகிழ்ந்த அந்த நாளை மறந்தது போல கொடுத்த ப்ராமிஸையும் மறந்துவிட்டோம்!' என்றார்.

இதற்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அப்படியே உரையாடல் வேறு தலைப்பிற்கு மாறியது.

இன்று காலை அருட்செல்வியரின் இல்லத்தில் திருப்பலியில் மறையுரை வைத்துக்கொண்டிருந்தபோது ஒரு புதிய ஐடியா வந்தது.

இன்று திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியத்தைக் கொண்டாடினோம். இன்றைய நற்செய்திப் பகுதியில் மாற்கு நற்செய்தியாளர் யோவானின் மறைசாட்சியத்தைப் பற்றிப் பதிவு செய்ததை நாம் வாசித்தோம். திருப்பலி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதும் என்னுள் அந்த வசனம் ஓடிக்கொண்டே இருந்தது.

அது என்ன வசனம்?

'இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் (வாக்கு கொடுத்ததால்) அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான்.' (மாற்கு 6:26-27)

துரியோதனன் என்றவுடன் நமக்கு அவன் தீயவன் என எப்படித் தோன்றுகிறதோ, அப்படித்தான் ஏரோது என்றவுடன் நான் அவனை தீயவன் என நினைக்கின்றோம். ஆனால் தீயவர்களிடத்திலும் சில நல்ல குணங்கள் இருக்கின்றன. ஏரோதிடம் நான் மூன்று நற்குணங்களைக் காண்கின்றேன்:

1. அவன் ஏரோதியாவைக் கட்டாயப்படுத்தி தன்னுடன் வைத்திருக்கவில்லை. 'ஏரோது அவனது சகோதரனின் மனைவியை வைத்திருப்பது தவறு' என யோவான் சுட்டிக்காட்டுகின்றார். ஒரு அரசனுக்கு யாருடைய மனைவியையும் வைத்துக்கொள்ள உரிமை இருந்ததை நாம் அறிவோம். அவன் கட்டாயப்படுத்தி ஒருத்தியை மனைவியாக்கினால் அது தவறு. ஆனால், இங்கே ஏரோதியா கட்டாயத்தின் பேரில் ஏரோதிடம் இணையவில்லை (தாவீது செய்ததுபோல!). அவளுக்கும் ஏரோதுவை பிடித்திருக்கிறது.

2. 'ஏரோது யோவானின் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்' (6:21) எனப் பதிவு செய்கிறார் மாற்கு. அதாவது, அவன் ஒரு சந்தர்ப்பக் கைதி. 'நல்லது செய்யக் கூடாது என்பதல்ல. நான் நல்லது செய்யத்தான் நினைக்கிறேன். ஆனால் அதை செய்யத்தான் முடியவில்லை' என்ற பவுலின் போராட்டத்தைத்தான், ஏரோதும் போராடுகிறான். இதுதான் நம் போராட்டமும்கூட. 'இது தவறு! இதை செய்யக்கூடாது!' எனத் தோன்றினாலும், நம்முள் இருக்கும் ஏவாளின் கைவிரல்கள், அந்தத் தவற்றைத் தழுவிக்கொள்ளவே ஆசைப்படுகின்றன.

3. சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது! அவன் வாக்கு தவறுவானா? இல்லையா? என்ற கேள்வியை வாசகர் உள்ளத்தில் விதைப்பதற்கு மாற்கு அவனின் வாக்குறுதியை இரண்டுமுறை பதிவு செய்கின்றார்: அ. 'உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்!' ஆ. 'நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்!'

ஏரோதின் இந்த மூன்றாவது குணத்தை மட்டும் கொஞ்சம் நெருக்கமாகப் பார்ப்போம்.

யார் வாக்கு கொடுக்கிறார்? ஏரோது.

யாருக்கு? ஏரோதியாவின் மகளுக்கு ('சலோமி' என்பது வரலாறு). இவள் ஏரோதின் சகோதரன் பிலிப்பு வழியாகப் பிறந்தவள். ஆக, ஏரோதுக்கும் இவளுக்கும் நேரடியான இரத்த உறவு கிடையாது.

யார் முன்னிலையில்? விருந்தினர்கள் முன்னிலையில் (அரசவையினர், ஆயிரத்தலைவர், முதன்மைக் குடிமக்கள் - ஆக, எல்லாரும் மனிதர்கள்!)

இந்த விருந்தினர்கள் முன்னிலையில் தான் வாக்குக்கொடுத்துவிட்டோமே என்பதற்காக - அதாவது, அவர்கள் முன் தன் தலை குனிந்துவிடக்கூடாது என்பதற்காக கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகிறான்.

நாம் நம் படுக்கையருகில் வைக்கும் அலார்ம்கூட நாம் நமக்கு கொடுக்கும் வாக்குறுதியே. இப்படித் தொடங்கி அன்றாடம் நாம் நமக்கும், நாம் பிறருக்கும் கொடுக்கும் வாக்குறுதிகள் ஆயிரமாயிரம். மற்றொரு பக்கம், அரசியலில் ப்ராமிஸ், மதங்களில் ப்ராமிஸ், விளையாட்டில் ப்ராமிஸ் என எல்லா இடத்திலும் 'ப்ராமிஸ்' நிறைந்து கிடக்கிறது. நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டில்கூட 'I promise to pay the bearer the sum of rupees' என அச்சிடப்பட்டு அதன்கீழ் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பமும் இருக்கிறது.

'ஆஷ்லி மேடிசன்' வழியாக ஒருவர் மற்றவர் தங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு தவறு இழைத்தது, அல்லது பிரமாணிக்கத்தை உடைத்தது, 'நல்லதா', 'கெட்டதா' என்ற கலந்தாய்வு இப்போது வேண்டாம். அல்லது அருள்நிலை வாழ்வில் தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் எந்த அளவிற்கு தங்கள் வாக்குறுதிகளில் நிலைத்திருக்கிறார்கள் என்ற ஆய்வும் வேண்டாம்.

நமக்கு ஏரோது வைக்கும் சின்ன கேள்வி இதுதான்:

'கொஞ்ச நேரம் தன்னுடன் இருந்த சில வருடங்களில் அழிந்து போகும் மனிதர்களுக்குத் தன் குடிபோதையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சமரசத்திற்கே இடமில்லாமல் நான் முயற்சி செய்தேன் என்றால், என்றும் உங்களுடன் இருக்கும் உங்கள் கடவுளுக்கு அல்லது கடவுள் முன் நீங்கள் தரும் வாக்குறுதியைக் காப்பாற்ற நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்?'

'முயற்சி திருவினையாக்கும்!'

- அருள்திரு. யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்டம்.

-----------------------------------------

நற்செய்தி (மாற்கு 6:17-29) - ஏரோதுவின் பிறந்தநாள்

தூய திருமுழுக்கு யோவானின் பாடுகள் விழாவைக் கொண்டாடுகின்றோம்.

'அதிக வருத்தமாக இருக்கும்போது முடிவு எடுக்கக் கூடாது. அதிக மகிழ்ச்சியாக இருக்கும்போது வாக்குறுதி கொடுக்கக் கூடாது' என்பது சொலவடை.

தன் பிறந்தநாளில் ஏரோது கொடுத்த வாக்குறதியால், அவரின் பிறந்தநாள் திருமுழுக்கு யோவானின் இறந்த நாள் ஆகிறது.

மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்யும் இந்நிகழ்வில் வரும் ஏரோது என்னும் கதைமாந்தரைப் பற்றி நாம் சிந்திப்போம்.

மொத்தம் இந்த நிகழ்வில் 4 கதைமாந்தர்கள்: (அ) ஏரோது, (ஆ) பிலிப்பின் முன்னாள் மனைவியும் ஏரோதின் இன்னாள் துணைவியுமான ஏரோதியா, (இ) ஏரோதியாவின் மகள் (பிலிப்புக்குப் பிறந்தவள்) சலோமி, மற்றும் (ஈ) திருமுழுக்கு யோவான். இந்த நான்கு கதைமாந்தர்களில் 'ஏரோது' தவிர மற்ற எல்லாரும் தொடக்கத்தில் எப்படி இருந்தார்களோ, அப்படியே இருக்கின்றார்கள். ஏரோதியா காழ்ப்புணர்வோடு இருக்கிறாள். சலோமி கீழ்ப்படிதல் உணர்வோடு இருக்கிறாள். திருமுழுக்கு யோவான் நீதி உணர்வோடு இருக்கிறார்.
ஆனால், ஏரோது ஒரே நேரத்தில் நல்லவராகவும், கெட்டவராகவும் முன்வைக்கப்படுகின்றார். எப்படி?

'யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து, அஞ்சி, அவருக்கு பாதுகாப்பு அளித்தார்'

'அவர் சொல்லைக் கேட்டு குழப்பமுற்ற போதிலும் அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தார்'

'ஏரோது தன்னைவிட பெரியவர்களுக்கு விருந்து கொடுத்தார்'

'ஏரோது ஆணையிட்டுக் கூறினார்'

'ஏரோது விருந்தினார்'

'ஏரோது யோவானின் தலையைக் கொண்டுவருமாறு பணித்தார்'

ஏரோது இந்த நிகழ்வில் எல்லாரோடும் உறவாடுபவராக இருக்கிறார். ஒரே நேரத்தில் யோவான், ஏரோதியா, சலோமி, பெரியவர்கள், குடிமக்கள் என எல்லாரோடும் பேசுகிறார். அரசனாக இருப்பதன் நன்மை இதுதான்.

ஏரோது யோவானின் கொலையை தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?

அவன் செய்த தவறு என்ன? அவரைச் சிறையில் அடைத்ததா? அல்லது அதீதமாக ஆணையிட்டதா? அல்லது வாக்குறுதியை நிறைவேற்ற நினைத்ததா?

என்னைப் பொறுத்தவரையில் அவரின் பிரச்சினை என்னவென்றால், 'அவர் எல்லாரையும் திருப்திப்படுத்த விரும்பினார்.' எல்லாரையும் திருப்திப்படுத்துவது எப்போதும் ஆபத்தே.

யோவானை திருப்திப்படுத்த அவரின் வார்த்தைக்குச் செவிமடுக்கிறார்.

ஏரோதியாவை திருப்திப்படுத்த யோவானைச் சிறையில் அடைக்கிறார்.

சலோமியை திருப்திப்படுத்த ஆணையிடுகிறார்.

விருந்தினரைத் திருப்திப்படுத்த யோவானைக் கொல்கின்றார்.

ஆனால், பாவம்...கடைசி வரை அவன் தன்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை. சில நேரங்களில் வாழ்க்கை இப்படித்தான் சோகமாக முடிந்துவிடும். நாம் காலையிலிருந்து மாலைவரை எல்லாரையும் திருப்திப்படுத்த ஓடிக்கொண்டே இருப்போம். சோர்ந்து கட்டிலில் விழும்போது, 'இன்று நான் மகிழ்ச்சியாக இருந்தேனா?' என்று நம்மையே கேட்டால், பதில், பெரும்பாலும், 'இல்லை' என்றே இருக்கும்.

அடுத்தவரைத் திருப்திப்படுத்த ஏன் இந்த ஓட்டம்?

யாவரையும் திருப்திப்படுத்த தேவையில்லை என்றும், உன் மனதுக்கு சரி என்பதை துணிந்து செய் என்றும் சொல்கிறார் யோவான்.

யாரையும் திருப்திப்படுத்த தேவையில்லாத யோவான் கொல்லப்படுகின்றார்.

எல்லாரையும் திருப்திப்படுத்த நினைத்த ஏரோதும் அத்தோடு இறந்துவிடுகின்றார்.

- அருள்திரு. யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்டம்.

-------------------------------------------------

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்


இயேசுவின் முன்னோடி, இறுதி இறைவாக்கினர், ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்தவர் போன்ற பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான தூய திருமுழுக்கு யோவானின் பாடுகளை இன்றைய நாளிலே திருச்சபையானது நினைவுகூறுகிறது.

இவருடைய நினைவுநாளைக் கொண்டாடுகின்ற இந்த வேளையிலே இவ்விழா நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக நாம் ஓவ்வொருவருமே நேர்மையோடும், உண்மைக்குச் சான்று பகரக்கூடியவர்களாகவும் வாழ அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலே திருமுழுக்கு யோவான் நேர்மையும், தூய்மையும் கொண்டவராக விளங்கினார் என்று படிக்கின்றோம். திருமுழுக்கு யோவான் நேர்மையோடும், துணிவோடும் இறைவனின் வார்த்தையை எடுத்துரைக்கக்கூடியவராக இருந்தார் (மாற் 6:20). மேலும் ஒரு இறைவாக்கினர் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார்.

இன்றைய முதல் வாசகத்திலே கடவுள் எரேமியா இறைவாக்கினரைப் பார்த்து, “நான் உனக்குச் சொல்லக்கூடியவற்றை அம்மக்களிடம் போய் சொல்” என்ற இறைவார்த்தையை திருமுழுக்கு யோவான் தனது வாழ்வாக்கினார். எப்படி என்றால் அவர், தன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்ந்துகொண்டிருந்த ஏரோதின் தவறைச் சுட்டிக்காட்டுகிறார். அதற்காக தன்னுடைய உயிரையும் தருகிறார். இப்படியாக நேர்மையும், தூய்மையும் கொண்ட திருமுழுக்கு யோவான் இறைவாக்குப் பணிக்காக எதையும் இழக்கக்கூடியவராக இருக்கிறார்.

பலவேளைகளில் நேர்மையோடு நாம் வாழ்கின்றபோது அதற்காக தரக்கூடிய விலை அதிகம். சில மாதங்களுக்கு முன்பாக (அக்டோபர் 12, 2014) நேர்மையோடு செயல்பட்டு, 260 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலத்தை மீ்ட்ட சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் என்று செய்தித்தாளிலே படித்திருப்போம். அரசு நிர்வாகத்தில் நேர்மையை தங்கள் பணியில் கடைப்பிடித்து வந்தால், அவர்களால் ஒரே இடத்தில் பணி செய்ய முடியாது என்பதை சகாயம், அன்சுல் மிஸ்ரா, இறையன்பு போன்ற மாவட்ட ஆட்சியர்களின் மாற்றத்திலிருந்து நாம் தெரிந்து கொண்டதுதான். ஆனால் இப்போது மாவட்ட ஆட்சியர் மட்டுமில்லை, நேர்மையாகச் செயல்படும் அதிகாரி யாராக இருந்தாலும் அவர் இடமாற்றம் செய்யப்படுவார் என்பதற்கு உதாரணமாக சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் இருக்கிறார்.

மத் 5:10 ல் படிக்கின்றோம், “நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது” என்று. நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று நேரியவழியில் நடப்போம். இறைவனின் அரசை உரித்தாக்கிகொள்வோம்.

இவ்விழா நமக்குச் சுட்டிக்காட்டும் இரண்டாவது பாடம். கடவுளின் உடனிருப்பு மற்றும் பராமரிப்புதான். முதல் வாசகத்திலே கடவுள், “உன்னை விடுக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார். இறைவனின் வழியில் நடக்கின்றபோது, அவருக்கு பணிசெய்கின்றபோது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் அசைக்கமுடியாத உண்மை.

ஓர் ஊரிலே விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளுக்குப் பயந்து வாழக்கூடியவர். ஒருமுறை அவருக்கு சிறிய வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். இதனால் அவர் மிகவும் மன வருத்தமடைந்தார். “எனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு நிலை?” என்று கண்கலங்கினார். ஆனால் மருத்துவர்களோ, “அறுவைச் சிகிச்சை செய்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொல்லி மருத்துவமனையிலே அனுமதித்தனர்.

அன்று இரவு அவர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அதிலே அவர் ஓர் ஏரிக்கரையிலே இருந்த படகை ஒன்றை எடுத்துக்கொண்டு, உள்ளே பயணம் செய்தார். அந்தப் படகானது தண்ணீரில் மிகவும் தத்தளித்தது. அப்போது அவருக்கு எதிரே ஒரு வானவில் தோன்றி, அதிலிருந்து ஒரு குரல், “மகனே நீ எதைக்குறித்தும் கவலைப்படாதே!, நீ தனி ஆள் கிடையாது. நான் உன்னோடு இருக்கிறேன்” என்று சொல்லி மறைந்தது. உடனே தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தார்.

அடுத்த நாள் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அது வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சையை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, ஒரு சிறுமி கையிலே காகிதத்தை வைத்திருந்தாள். அந்தக் காகிதத்தில் ஏரிக்கரை, அதிலே ஒரு படகு, அதற்கு நேர் எதிரே வானவில் என்றிருந்தது. அப்போதுதான் அவர் முந்தின நாள் தான் கண்ட கனவு அது என்பதை அறிந்து, கடவுள் தன்னைக் குணப்படுத்த இருக்கிறார் என்பதைக் கனவின் வழியாகச் சொல்லி இருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டார்.

இறைவழியில் நடப்போருக்கு இறைவனின் துணை எப்போதும் உண்டு என்பத்தை தான் இக்கதை நமக்கு உணர்த்துகிறது. எனவே தூய திருமுழுக்கு யோவானின் பாடுகளை நினைவுகூறுகிற வேளையில் அவரைப் போன்று நேரிய வழியில் நடந்து உண்மைக்கு – இயேசுவுக்கு – சான்று பகர்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

--------------------------------------------

“நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்”

பொதுக் காலத்தின் இருபத்து இரண்டாம் வாரம் திங்கட்கிழமை


திருப்பாடல் 119: 97-98, 99-100, 101-102 (97)

“நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்”

நாத்திகரும் திருவிவிலியமும்:


ஒரு பொதுக் கூட்டத்தில் நாத்திகர் ஒருவர், “திருவிவிலியத்தை யார் எழுதினார் என்றே தெரியவில்லை. அதனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

அக்கூட்டத்தில் கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவர் நேராக மேடைக்குச் சென்று, ‘திருவிவிலியத்தை எழுதியவர் யார் எனத் தெரியாததால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்கிறீர். இதோ இங்கே இருக்கின்ற மேசையை யார் செய்தது என்று உமக்குத் தெரியுமா?” என்றார். “இல்லை” என்று நாத்திகர் சொன்னதும், கிறிஸ்தவர், “இதை மேசையைச் செய்தவர் யார் எனத் தெரியாததால், இது இல்லை என்று ஆகிவிடுமா?” என்றார்.

“அது பயன்படுகின்றது, அதனால் அது இருக்கின்றது என்று நம்புகின்றேன்” என்று நாத்திகர் சொன்னதும், கிறிஸ்தவர் அவரிடம், “நீர் சொல்வது மிகச் சரி. மேசை பயன்படுவதால் அது இருக்கின்றது என நம்புகிறீர். அப்படித்தான் இந்தத் திருவிவிலியம் எங்களுக்கு பலவிதங்களில் பயன்படுகின்றது; ஏன், எங்களுடைய வாழ்விற்கு வளம் சேர்க்கின்றது. அதனால் இது உயிருள்ள புத்தகம் என்று உறுதியாகச் சொல்வேன்” என்றார். இதற்கு நாத்திகரால் பதில் சொல்லவேண்டும்.

ஆம், திருவிவிலியம் உயிருள்ள, வாழ்விற்கு வளம் சேர்க்கும் நூல். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில், அதன் ஆசிரியர், “ஆண்டவரே, நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஆண்டவருடைய திருச்சட்டம், அல்லது அவரது வார்த்தையின் பல்வேறு சிறப்புகளை எடுத்தியம்புகின்ற ஓர் அதிகாரம் திருவிவிலியத்தில் இருக்கின்றதென்றால் அது திருப்பாடல் 119 என்று உறுதியாகச் சொல்லலாம்.

நூற்று ஐம்பது திருப்பாடலில் பெரிய திருப்பாடல், திருவிவிலியத்தில் பெரிய அதிகாரம், எபிரேய மொழியில் வரும் இருபத்து இரண்டு உயிரெழுத்துகளையும் முதலில் கொண்டு தொடங்கும் திருப்பாடல் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருப்பாடல் 119 யாரால் பாடப்பட்டது என்பது பற்றிய சரியான குறிப்பு இல்லை. ஆனால், இது பாடப்பட்டுள்ள விதம் வியப்புக்குரியதாக இருக்கின்றது.

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட இறைவாக்குப் பகுதியில், திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவரின் திருச்சட்டம் தனக்கு ஞானத்தையும் விவேகத்தையும் அளித்ததால் அதைப் பற்றியே சிந்தித்து, அதைக் கடைப்பிடித்து வருவதாகக் கூறுகின்றார். கடவுளின் வார்த்தைகள் நமக்கு அறிவை மட்டுமல்லாமல், ஆற்றலையும் அளிக்கக்கூடியவை, அதனால் நாம் அதனைக் கடைப்பிடித்து வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 திருவிவிலியத்தை நாம் புரட்டும்போது, அவர் நமது வாழ்வையே புரட்டிப் போடும்.

 ஆண்டவராகிய கடவுள் மனித இனத்திற்கு அளித்திருக்கும் மிகப்பெரிய கொடை அவரது வார்த்தைகள் அடங்கியிருக்கும் திருவிவிலியம்தான்.

 கடவுளின் வார்த்தைகள் நம்மைத் திடப்படுத்தும், அதைக் கொண்டு நாம் மற்றவரைத் திடப்படுத்துவோம்.

இறைவாக்கு:

‘ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன’ (திபா 19: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமது வாழ்வை ஒளிர்விக்கும் ஆண்டவரின் கட்டளைகளின் படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

--------------------------------

எல்லாருக்கும் நற்செய்தி

பொதுக் காலத்தின் இருபத்து இரண்டாம் வாரம் திங்கட்கிழமை


I 1 கொரிந்தியர் 2: 1-5
II லூக்கா 4: 16-30

எல்லாருக்கும் நற்செய்தி

குடும்பத்திலிருந்து தொடங்குவோம்:


ஞாயிறு திருப்பலி முடிந்ததும் கோயிலை விட்டு வெளியே வந்த பங்குப் பணியாளரை ஒரு பெண்மணி எதிர்கொண்டார். அவரோடு ஒரு சிறுவன் இருந்தான். அவர் பங்குப் பணியாளரிடம், “சுவாமி! இன்று நீங்கள் மறையுரையில், ‘உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கவேண்டும்’ என்று சொன்னீர்கள் அல்லவா! நீங்கள் சொன்னதைக் குறித்து நான் பல சிந்தித்துப் பார்த்துவிட்டேன். கடவுள் என்னைத் தன்னுடைய பணிக்காக அழைப்பதை உணர்கின்றேன். இப்போது நான் என்ன செய்வது?” என்று சொல்லிவிட்டு, அவரது பதிலுக்காகக் காத்திருந்தார்.

“கடவுள் உங்களைத் தன்னுடைய பணிக்கென அழைக்கின்றாரா?” என்று சொல்லிக்கொண்டு பங்குப் பணியாளர் அந்தப் பெண்மணியையும் அவரோடு இருந்த சிறுவனைப் பார்த்தார். பின்னர் அவர், “இந்தச் சிறுவன் உங்கள் மகன்தானே?” என்று கேட்டார். “ஆமாம்!” என்று பெண்மணி சொன்னதும், “நீங்கள் ஏன் உங்களுடைய மகனிடமிருந்து நற்செய்தி அறிவிக்கத் தொடங்கக் கூடாது” என்றார்.

பங்குப் பணியாளர் இவ்வாறு சொன்னதற்கும் ஒரு காரணம் இருந்தது. அது என்னவெனில், கோயிலில் திருப்பலி நடந்துகொண்டிருந்தபோது சிறுவன் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு, இடையூறு செய்துகொண்டிருந்தான். அதனால்தான் பங்குப் பணியாளர் அந்தப் பெண்மணியிடம் அவ்வாறு சொன்னார். இதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி சிரித்துக்கொண்டே பங்குப் பணியாளரிடமிருந்து விடைபெற்றார் .

ஒவ்வொருவரும் நற்செய்திப் பணியைச் செய்யவேண்டும். அதை நாம் நமது குடும்பத்திலிருந்து தொடங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். இன்றைய இறைவார்த்தை எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

நற்செய்திப் பணியை நம்முடைய குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று மேலே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா! லூக்கா நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்திலிருந்து நற்செய்திப் பணியைத் தொடங்குவதைக் குறித்து வாசிக்கின்றோம்.

யோவான் நற்செய்தியாளர் இயேசு, நாசரேத்தில் உள்ள தொழுகைக் கூடத்தில் நற்செய்தி அறிவிக்கும் முன்பே கலிலேயாவில் உள்ள கானாவில் இரண்டு அரும் அடையாளங்களைச் செய்ததாகவும் (யோவா 2:1-11, 4: 46-54), அதன்பிறகு கப்பர்நாகுமில் நற்செய்தி அறிவித்ததாகவும் (யோவா 2:12) குறிப்பிடுகின்றார். ஆனால், லூக்கா நற்செய்தியாளரோ நாசரேத்தில்தான் இயேசு தன்னுடைய பணியைத் தொடங்கியதாகக் குறிப்பிடுகின்றார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இயேசு நாசரேத்தில் இருந்த தொழுகைக்கூடத்தில் இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டை வாசித்துவிட்டு, இறைவாக்கினர் எலியாவையும் எலிசாவையும் குறிப்பிடுவதன் மூலம் தன்னுடைய பணி எல்லாருக்குமானது என்று குறிப்பிடுகின்றார். அதைப் பல்வேறு சவால்களுக்கு நடுவில் அவர் செய்தும் காட்டுகின்றார்.

முதல் வாசகத்தில் பவுல், கொரிந்து நகர மக்களிடம் நற்செய்தி அறிவிக்க வந்தபோது மிகுந்த சொல்வன்மையோடோ ஞானத்தோடோ வரவில்லை என்று கூறிவிட்டு, “நான் உங்கள் நடுவில் வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன்” என்கிறார். பவுல் இவ்வாறு சொல்வதற்குக் காரணம், அவர் இதற்கு முன்பு நற்செய்தி அறிவித்த பிலிப்பி நகரில் எதிர்கொண்ட துன்பங்கள்தான். பவுல் தனது பணிவாழ்வில் பல துன்பங்களைச் சந்தித்தாலும் அவர் எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்கத் தவறவில்லை.

எனவே, நாமும் இயேசுவைப் போன்று, பவுலைப் போன்று எத்தகைய சவால்கள் வந்தாலும் எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்க மறக்க வேண்டாம்.

சிந்தனைக்கு:

 படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள் என்று இயேசு விடுத்திருக்கும் அழைப்பினை நாம் நிறைவேற்ற முயற்சி செய்வோம்.

 வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்வாலும் நற்செய்தி அறிவிப்போம்.

 நற்செய்தியானது எல்லாருக்குமானது; அதைத் தடைசெய்வதோ, தர மறுப்பதோ மிகப்பெரிய பாவம்.

ஆன்றோர் வாக்கு:

‘நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது குறிப்பிட்ட சிலர் மட்டும் செய்யும் பணி அல்ல, அது எல்லாரும் செய்ய வேண்டிய பணி’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நற்செய்திப் பணி எல்லாரும் செய்யவேண்டிய ஒரு பணி என்பதை உணர்ந்து செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

------------------------------------

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்

இருந்து பார்ப்போமா… சந்தித்து சாதிப்போமா..

மாற்கு 6:17-29


இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.


அன்புமிக்கவர்களே! இன்று நாம் புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் பற்றி சிந்திக்கிறோம். ஐயோ பாடுகளா? என பாடுகளைப் பார்த்ததும் பயந்து ஒளிந்துக் கொள்ளும் மனிதர்கள் வாழும் உலகம் இது. இன்றைய திருவிழா பாடுகளை மகிழ்வோடு ஏற்ற புனித திருமுழுக்கு யோவானை சுட்டிக்காட்டுகிறது. அவருக்கு எதற்காக பாடுகள்? எதற்காக அச்சுறுத்தல்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?


அவர் நேர்மையோடும் தூய்மையோடும் இருந்தார். ஆகவே அவர் பாடுகளை சந்தித்தார். அதற்காகவே அவர் கொலை செய்யப்பட்டார். நாமும் அவரைப் போல இருந்து பாடுகளை சந்திப்பதே, கிறிஸ்துவுக்கு சாட்சியாவதே இந்த விழாவின் நோக்கமாகும். பொய்யிலிந்து உண்மைக்கும், அசுத்தத்திலிந்து தூய்மைக்கும் கடந்து வருவதே இந்த திருவிழாவின் சிறப்பு.


1. நேர்மையோடு இருப்போமா..

புனித திருமுழுக்கு யோவான் உண்மையோடு இருந்ததற்காக பாடுகள். உண்மையோடு இருப்பது குற்றமாப்பா? ஆம். உண்மையோடு இருப்பது தான் குற்றம் இந்த உலகில். பொய்யை கொண்டிருந்தால் வாழலாம். ஆனால் உண்மையோடு இருந்தால் வாழ முடியாது. இது உலகின் கூற்று.


இதை உடைப்போம். நாம் பலர் உண்மையோடு வாழ்வோம். நேர்மையோடு வாழ்வோம். உறுதிமொழி எடுத்து உறுதியாய் இருப்போம்.


2. தூய்மையோடு இருப்போமா…

புனித திருமுழுக்கு யோவான் தூய்மையோடு இருந்தற்காக மரணத்தண்டனையை அனுபவித்தார். தூய்மையோடு இருப்பது குற்றமாப்பா? ஆம். தூய்மையோடு இருப்பது தான் குற்றம் இந்த உலகில். அசுத்தத்தை கொண்டிருந்தால் வாழலாம். ஆனால் தூய்மையோடு இருந்தால் வாழ முடியாது. இது உலகின் கூற்று.


இதை உடைப்போம். நாம் பலர் சுத்தமாக வாழ்வோம். தூய்மையோடு வாழ்வோம். உறுதிமொழி எடுத்து உறுதியாய் இருப்போம்.


மனதில் கேட்க…

1. நான் திருமுழுக்கு பெற்றது எதற்கு? உண்மையோடும் தூய்மையோடும் இருக்கத்தானே?

2. திருமுழுக்கு யோவான் போல நான் உண்மையோடு இருந்து தூய்மையைச் சந்தித்து சாதிப்பேனா?


மனதில் பதிக்க…

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். (எபே 1:4)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

----------------------------------------------------------------------

எரேமியா 1: 17 – 19

இறைவாக்குரைக்கும் வாழ்வு


இன்றைக்கு நமக்குத் தரப்பட்டிருக்கிற வாசகமானது, இறைவாக்கினர் எரேமியாவின் அழைப்பு வாழ்வைக் குறித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. முதல் அதிகாரத்தில் இறைவாக்கினரின் அழைப்பையும், அதற்கு அவர் சொல்கிற மறுப்பையும், பின்பு அவர் இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்வதையும் பார்க்கிறோம். அதற்கு பிறகு, இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய செய்தியானது, காட்சி வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. யூதாவின் அழிவு நெருங்கி வருவதையும், எருசலேமின் அழிவையும் இந்த காட்சி விவரிக்கிறது. இஸ்ரயேல் மக்களுக்கு கடவுளின் செய்தியை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தையும், அதன்பொருட்டு வருகிற விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் துணிவு கொள்ளவும் இந்த பகுதியில் ஆண்டவர் பணிக்கின்றார். ஏனெனில், கடவுளின் பிரசன்னம் அவரோடு இருக்கும் என்கிற உறுதி, அவருக்குக் கொடுக்கப்படுகிறது.

இந்த பகுதியில் இரண்டு செய்திகள் இறைவாக்கினருக்கு தரப்படுகிறது. முதலாவது, அவர் அந்த செய்தியை அறிவிக்க வேண்டும். எப்படி அறிவிக்க வேண்டும்? துணிவோடு அறிவிக்க வேண்டும். கடவுள் சொல்வதை அறிவிக்க வேண்டும். வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அறிவிக்கக் கூடாது. கடவுள் சொன்ன அனைத்தையும் அறிவிக்க வேண்டும். இரண்டாவது, இறைவன் வழங்குகிற செய்தியை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். அரசர், நாட்டின் தலைவர்கள், குருக்கள் என அனைவர்க்கும், இறைவன் வழங்குகிற செய்தியை அறிவிக்க வேண்டும். எதனையும் மறைக்காமல், நேரடியாக இறைவனின் செய்தி, அவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு செய்திகளும், இறைவாக்கினராக அழைக்கப்பட்ட, எரேமியாவுக்கு கொடுக்கப்படுகிறது.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஓர் அழைத்தல் வாழ்வு. இறைவனின் வார்த்தைகளை அறிவிக்க வேண்டிய பொறுப்புணர்வுள்ள வாழ்வு. யாருக்கும் பயப்படாமல், எதனைக் கண்டும் அஞ்சாமல் வாழ நிர்பந்திக்கிற வாழ்வு. இறைவன் ஒருவருக்கே அஞ்சி வாழ வேண்டும் என்பதான வாழ்வு. அந்த வாழ்க்கையில் நாம் நிலைத்திருப்போம். அதனை வாழ்ந்து காட்டுவோம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


-------------------------------------------------

நல்ல மனிதர்களாக வாழ்வோம்

ஆணவம், அகங்காரம், செருக்கு போன்றவை ஒரு மனிதனை மோசமான நிலைக்குத் தள்ளுகிறது. மனித உணர்வுகளை அகற்றி, அவனுள் மிருக எண்ணங்களை உருவாக்குகிறது. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஏரோதியாள். மேலே சொன்ன தீய எண்ணங்கள், சிந்தனைகள் ஒரு மனிதனை எந்த அளவுக்கு, கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை, இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

வழக்கமாக, இறப்பு என்றாலோ, கொலை என்றாலோ, குழந்தைகளை, பிள்ளைகளை அருகில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் பயந்து விடக்கூடாது, அவர்களுக்கு ஒரு தீங்கும் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் இதற்கு காரணம். இங்கு, சொந்த தாயே தனது மகளை, ஒரு கொலை நடப்பதற்கு காரணமாகிறாள். தன்னுடைய சொந்த மகளை, தன்னுடைய பழிவாங்கும் குரூர புத்திக்கு உபயோகப்படுத்துகிறாள். இதனால், தனது மகளின் மனநிலை பாதிக்கப்படுமே, அவளது வாழ்க்கை வீணாகிப்போய் விடுமே என்று அவள் சிறிதும் கவலைகொள்ளவில்லை. காரணம், அவளது நினைவுகள் முழுவதும், பழிவாங்கும் வேட்கையில் ஊறிப்போய் இருக்கிறது. அவளது சிந்தனைகளை, பழியுணர்வு வெறிபிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. திருமுழுக்கு யோவானுடைய தலை கொண்டு வந்தபிறகு, அவளது கோபம் தணிகிறது. எதையோ சாதித்து விட்டோம் என்கிற உணர்வு அவளை, ஆட்டிப்படைக்கிறது. ஆனால், நிச்சயம், திருமுழுக்கு யோவானின் தலை கொடுக்கப்பட்ட பிறகு, அவரது உணர்வு எப்படி இருந்திருக்கும்? அந்த தலை தன்னிடம் கொடுக்கப்பட்டதில், அவளுக்கு என்ன நிறைவு இருந்திருக்கும்? ஒன்றுமில்லாத இதற்கா, நான் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டேன் என்கிற குற்ற உணர்வு தான், அவளுக்குள்ளாக நிச்சயம் மேலோங்கியிருக்கும்.

நாமும் கூட, கோபத்தை வரவழைக்கக்கூடிய நேரத்தில், நமது மனித உணர்வுகளை இழந்து, மிருக உணர்வுகளுக்குள்ளாகச் சென்றுவிடுகிறோம். என்ன செய்கிறோம்? என்பதை, அறியாமலேயே பல தவறுகளைச் செய்துவிடுகிறோம். அதற்கு பிறகு மனம் வருந்துகிறோம். இந்த கோப உணர்வுகளுக்கு இடங்கொடுக்காமல் நல்ல மனிதா்களாக வாழ முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

உண்மையான அன்பு

லேவியர் 18: 16 சொல்கிறது: ”உன் சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு”. ஆனால், ஏரோது குடும்பத்தினரின் வாரிசுகள், யூதர்களின் இந்த சட்டத்தை பொருட்படுத்தியதே இல்லை. யூதச்சட்டத்திற்கு எதிரான இந்த செயலைத்தான், திருமுழுக்கு யோவான் எதிர்க்கிறார். திருமுழுக்கு யோவான் தனக்கு எதிராகச் சொன்னாலும், ஏரோது அவரை முதலில் அவரை ஒன்றும் செய்யவில்லை. அதற்கு பயமும், அவர் மேல் அவன் வைத்திருந்த மரியாதையும் காரணம். ஆனால், ஏரோதியாவிற்கு யோவான் எதிரியாகினார். அவரை பழிவாங்க, ஏரோதியா சமயம் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஏரோதுவின் பிறந்தநாளில் முக்கியமான விருந்தினர்கள் வந்திருந்தார்கள். பொதுவாக, தனிநபர் நடனம் அருவருக்கத்தக்க ஒன்றாகவும், விலைமாதுக்கள் பார்ப்பவரைக் கவரவும் ஆடப்பட்ட நடனம். அரச குடும்பத்தினர் அப்படிப்பட்ட நடனங்களை ஆடுவது கிடையாது. ஆனால், இங்கே சலோமி அப்படிப்பட்ட நடனம் ஆடுவதும், அவளது தாய் அவளை, அத்தனை பேர் முன்னிலையில் ஆட வைப்பதும், அவர்களின் ஒழுக்கம் எத்தகையது என்பதை வெளிக்காட்டுகிறது. அதைப்பற்றி ஏரோதுவும் கவலைப்படவில்லை. இதலிருந்து, தனது இன்பம், கேளிக்கை தான் தனக்கு முக்கியமே தவிர, மற்றவர்களை உண்மையான அன்பு செய்வதும், மனிதர்களுக்கான மதிப்பு கொடுப்பதும் தன்னால் முடியாது என்பதை, ஏரோது வெளிப்படுத்துகிறான்.

இன்றைக்கும் நம்மில் பலர், நமது தேவைகளை முன்னிறுத்தியே வாழ்ந்து வருகிறோம். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளாமலும், அடுத்தவர்களுக்கான மதிப்பைக்கொடுக்காமலும் வாழ்ந்து வருகிறோம். அடுத்தவர்களை உண்மையாக, முழுமையாக அன்பு செய்வோம். அதற்கு நம்மை பயிற்றுவிப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வாழ்வின் போராட்டம்

”மனிதன் என்பவன் முரண்பாடுகளின் மூட்டை“ – என்று தத்துவ இயலில் சொல்வார்கள். ஒவ்வொரு மனிதரிடத்திலும் நல்ல குணங்களும் உண்டு. கெட்ட குணங்களும் உண்டு. ஏரோது அரசன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. யோவான் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தான் ஏரோது. அதே வேளையில் அவரை சிறையில் அடைத்ததும் ஏரோது தான். திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைக் கேட்டு குழப்பமுற்றிருந்தான். அதே வேளையில் அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். யோவானின் தலையை சிறுமி கேட்டபோது வருத்தமுற்றான், ஆனாலும் அவரைக்கொல்ல பணித்தான்.

மனித வாழ்வு உடல்சார்ந்த வாழ்வுக்கும், ஆவிக்குரிய வாழ்வுக்கும் இடையேயான மிகப்பெரிய போராட்ட வாழ்வு. இதைத்தான் பவுலடியார் தான் எதைச்செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ, அதை செய்ய முடியாமல் தவிப்பதாக கூறுகிறார். இந்தப்போராட்டம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் இருக்கும். நாம் அனைவரும் ஆவிக்குரிய வாழ்வு வாழ போராட வேண்டும். அதற்கு இறைவனுடைய துணையை நாட வேண்டும். அப்படிப்பட்ட இறைத்துணையோடு கூடிய ஆவிக்குரிய வாழ்வை வாழ, நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

நமது வாழ்வை எண்ணிப்பார்ப்போம். ஆவிக்குரிய வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறதா? அந்த எண்ணத்தை செயல்படுத்த நான் எடுக்கக்கூடிய முயற்சிகள் என்ன? அந்த வாழ்வு எனக்கு பிடித்தமான வாழ்வாக இருக்கிறதா? இந்த கேள்விகள் நமது உள்ளத்தில் எழும்போது, நிச்சயம் நமக்குள் தெளிவு பிறக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தலையே போனாலும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று புனித திருமுழுக்கு யோவான் தலைவெட்டப்பட்ட திருநாள். தலையே போனாலும் தாழ்வில்லை, என் நேர்மையும், துணிவும் போகாது என்று சொல்லாமல் சொன்ன இறைவாக்கினரின் மறைசாட்சிய நாள். இன்று புனித திருமுழுக்கு யோவானுக்காக இறைவனைப் போற்றுவோம். பெண்களில் பிறந்தவர்களில் யோவானைவிடப் பெரியவர் எவருமில்லை என்று ஆண்டவர் இயேசுவால் பாராட்டப்பட்டவர் திருமுழுக்கு யோவான். அந்தப் பாராட்டிற்கேற்ப தன் வாழ்விலும், இறப்பிலும் அஞ்சா நெஞ்சராய் வாழ்ந்து இறைவனுக்கு சான்று பகர்ந்தார்.

இந்த நாளில் நாம் அவரது துணிவையும், உண்மைக்காக உயிரையும் இழக்கத் தயாரான அவரது பற்றுறுதியையும் எண்ணி வியக்கிறோம். அவரைப் போல நாமும் வாழ முடியுமா?

அநீதிகளை, சமூகத்திற்கு தீமை விளைவிக்கும் தீய சக்திகளைத் தட்டிக் கேட்க முடியுமா? ஆம், என்றால் பிழைக்கத் தெரியாதவன் என்று உலகம் பழித்தாலும், துணிவுடன் பணி செய்வோம். அதுதான் இறைவனுக்கு நாம் பகரும் சான்று. தலையே போனாலும் தாழ்வில்லை என்று வாழ்ந்த யோவானின் பரிந்துரையால், சிறு துன்பங்கள் வந்தாலும், தாழ்வில்லை. நேர்மையுடன் வாழ்வேன் என்று இன்று உறுதி ஏற்போம்.

மன்றாடுவோம்; நீதியின் கதிரவனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். துணிவுடன் உமக்குச் சான்று பகர்ந்த திருமுழுக்கு யோவானுக்காக உம்மைப் போற்றுகிறேன். அவரைப் போல நானும் உண்மைக்கு சான்று பகரவும், துணிவுடன் வாழவும் எனக்கு அருளும்.. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

நேர்மையும், தூய்மையும் !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியப் பணியைப் பற்றி இன்று நற்செய்தி எடுத்துரைக்கிறது. அவரது இறைவாக்குப் பணி ஏரோது அரசனையே கேள்விக்குள்ளாக்கியதால், யோவான் தன் உயிரையும் இழக்க வேண்டியதிருந்தது. திருமுழுக்கு யோவானைப் பற்றி “அவர் நேர்மையும், தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான் ” என்னும் வரிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. திருமுழுக்கு யோவானைப் பற்றிய முன்னறிவிப்பிலேயே இக்குறிப்பு இருப்பதை நாம் அறிவோம். அவரது தந்தை செக்கரியா தூய ஆவியால் ஏவப்பட்டு பாடிய பாடலில் “நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும்; வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்” (லூக் 1:74-75) என்று முன்னறிவித்தார். அந்த இறைவாக்கின்படியே, திருமுழுக்கு யோவான் தூய்மையோடும், நேர்மையோடும், அச்சமின்றியும் பணியாற்றினார். இறைவாக்குரைத்தார். அதன் விளைவாகத் தன் உயிரையும் இழக்க முன்வந்தார். இறைவனுக்கு சான்று பகர்ந்தார். இன்று இறைவன் நமக்குத் தரும் அழைப்பு இதுவே: நாமும் திருமுழுக்கு யோவானைப் போல, ஆண்டவர் இயேசுவைப் போல, தூய்மையோடும், நேர்மையோடும் விளங்கினால் அச்சமின்றிப் பணியாற்றலாம். அதற்காக மன்றாடுவோம்.


மன்றாடுவோம்: நிறைவின் நாயகனே இறைவா, உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தூய்மையோடும், நேர்மையோடும், அச்சமின்றியும் பணியாற்ற வேண்டும் என்று அழைத்தீரே, உமக்கு நன்றி. எங்களை உமது தூய ஆவியால் நிரப்பியருளும். எங்கள் அச்சத்தைப் போக்கி, நாங்கள் தூய்மையோடும், நேர்மையோடும் பணி செய்ய ஆற்றல் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

----------------------------------------------------

''இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், 'திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்; இதனால்தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன' என்றனர்'' (மாற்கு 6:14-15)


சிந்தனை

-- அதிகாரத்தில் இருப்போர் சிலவேளைகளில் தங்களுக்கு ஏன் அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டது என்பதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் விரும்பியதைச் செய்யலாம் என்றும், சட்டம் ஒழுங்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் இறுமாப்புக் கொண்டுவிடுகிறார்கள். இதுவே ஏரோது அந்திப்பா என்னும் அரசனின் வாழ்விலும் நிகழ்ந்தது. திருமுழுக்கு யோவான் அரசனின் போக்குக்குச் சவால் விடுத்தார்; அரசனின் முறைகேடான வாழ்க்கையைக் கண்டித்தார். ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டது தவறு எனச் சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான். உண்மை பேசிய யோவானுக்குக் கிடைத்த பரிசு கொலைத் தண்டனை.

-- யோவானின் வரலாற்றுக்கும் இயேசுவின் வரலாற்றுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. மாற்கு இதைத் தெளிவாகக் காட்டுகிறார். கடவுளாட்சி வந்துகொண்டிருக்கிறது எனவும் அந்த ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் யோவான் முழங்கினார். இயேசுவும் இறையாட்சி பற்றிய செய்தியை மக்களுக்குச் சொல்லாலும் செயலாலும் அறிவித்தார். யோவான் இருப்பதை விட இறப்பதே மேல் என முடிவுகட்டினாள் ஏரோதியா (மாற் 6:24). பிலாத்து என்னும் ஆட்சியாளனும் அதே முடிவெடுத்து இயேசுவைக் கொலைத் தண்டனைக்கு ஆளாக்குவான். யோவான் இறந்ததும் அவருடைய சீடர்கள் அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள் (மாற் 6:29). இயேசு சிலுவையில் இறந்ததும் அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு என்பவர் அவருடைய உடலைக் கல்லறையில் கொண்டுவைத்தார் (மாற் 15:46). துன்பங்கள் வந்தாலும் சரி, ஏன் சாக வேண்டிய கட்டாயம் எழுந்தாலும் சரி, உண்மைக்குச் சான்று பகர்கின்ற பணியை ஊக்கத்தோடு செய்ய வேண்டும் என்று யோவான் முடிவுசெய்தார்; உயிர்துறந்தார். அதுபோலவே, இயேசுவும் இறுதிவரை உண்மைக்குச் சான்று பகர்ந்தார்; சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இயேசுவைப் பின்செல்கின்ற மக்களும் அதே வழியில் நடந்து சென்றிட அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு

''ஏரோது ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான்...

யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தனர்'' (மாற்கு 6:27,29)

-----------------------------------------------


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருமுழுக்கு யோவானின் வரலாறும் இயேசுவின் வரலாறும் ஒன்றோடொன்று நெருங்கிப் பிணைந்தவை. முதலில் இயேசுவின் வருகையை யோவான் முன்னறிவித்தார். இயேசுவுக்கு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்தார். இயேசுவைப் போல யோவானும் இறையாட்சி வருகிறது என அறிவித்து மக்கள் மனம் மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். யோவானின் சாவும் இயேசுவின் சாவுக்கு ஒரு முன்னோடிபோல் அமைந்தது. ஏரோது மன்னனின் நடத்தை முறைகேடானது என யோவான் குத்திக் காட்டினார். இதனால் யோவானைப் பழிவாங்கத் துடித்தாள் ஏரோதியா. மன்னனோ தான் கொடுத்த வாக்கை மீறலாகாது என்னும் சாக்குப்போக்குக் காட்டி கோழைத்தனமாக நடந்துகொண்டான். ஏரோதியாவின் மகள் தாய்ச்சொல் தட்டாத பிள்ளையாக வந்து, திருமுழுக்கு யோவானின் தலையை ''ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' எனக் கேட்டாள். அதே பாணியில் யோவானின் வெட்டுண்ட தலையைத் ''தன் தாயிடம் கொடுத்தாள்'' (மாற் 6:26-27). யோவானின் கொலைசெய்யப்பட்டதற்குக் காரணம் என்ன? சூழ்நிலைகள் ஓரளவு பாதகமாக இருந்தன என்பது உண்மையே. ஆயினும் ஏரோதுதான் அச்சாவுக்கு முக்கிய காரணம். ''யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்திருந்தான்''; அப்படியிருந்தும் அவரைப் ''பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்'' (மாற் 6:17). தான் மனைவியாக்கிக் கொண்ட ஏரோதியா காழ்ப்புணர்வு கொண்டு யோவான் சாக வேண்டும் என்று கேட்டதை அறிந்த அரசன் ''மிக வருந்தினான்'' (மாற் 6:26) என்பது உண்மையென்றாலும், அதே அரசன் யோவானின் தலையை வெட்ட ஆணையிட்டான் (மாற் 6:27). இங்கே இயேசுவின் சாவுக்கு யோவானின் சாவு முன்னோடியாக அமைவது தெரிகிறது. இயேசுவும் யோவானைப் போல அரசியல் மற்றும் சமய அதிகாரிகள் புரிந்த அநீதிகளைக் கடிந்துகொண்டார். அதனால் அதிகார வர்க்கம் அவரை ஒழிக்கத் தேடியது. பழிவாங்க நினைத்தவர்கள் சந்தர்ப்பவாதிகளோடு சேர்ந்துகொண்டார்கள் (மாற் 14:10-11). இறுதியாக, பிலாத்து கோழைத்தனமாக நடந்துகொண்டு, ''கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம்'' செயல்பட்டதால் இயேசு சாவுக்குத் தீர்வையிடப்பட்டார் (மாற் 15:15)


-- மாற்கு நற்செய்தியாளர் யோவானின் சீடர்கள் நடந்துகொண்டதையும் இயேசுவின் சீடர்கள் நடந்துகொண்டதையும் ஒப்பிட்டு, வேறுபடுத்திக் காட்டுகிறார். யோவானின் சீடர்கள் ஒரு குழுவாக வந்து, தம் குருவின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தார்கள் (மாற் 6:29). ஆனால் இயேசுவின் சீடர்களோ தம் குரு சாகப் போகிறார் என்றறிந்ததும் அவரை விட்டு ஓடிப் போய்விட்டார்கள். யூதர்களின் தலைமைச் சங்க உறுப்பினராக இருந்த போதிலும் இயேசுவின் போதனையால் கவரப்பட்ட அரிமத்தியா யோசேப்பு மட்டுமே துணிச்சலோடு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் உடலைக் கேட்டு வாங்கி அதைக் கல்லறையில் கொண்டு வைத்தார் (மாற் 15:42-47). மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற விழுமியங்களுக்காக உயிர் துறக்கவும் தயங்காத மனிதரே உலகுக்கு வாழ்வளிக்க தம் உயிரையும் பலியாக்குவார்கள். திருமுழுக்கு யோவான் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புவோர் தம்முயிரை ஈந்தும் பிறருக்கு வாழ்வளிக்க முன்வருவர்.

மன்றாட்டு

இறைவா, உண்மைக்குச் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

---------------------------------

''ஏரோது யோவானின் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்'' (மாற்கு 6:20)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ஏரோது அந்திப்பா என்னும் அரசன் திருமுழுக்கு யோவானைச் சந்திக்கிறான். யோவான் உண்மை பேச ஒருபோதுமே தயங்கியதில்லை. ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டது முறையல்லவென்று அவனைக் கடிந்துகொண்டார் யோவான். இந்நிலையில் யோவானைக் கொலைசெய்ய சதி நடக்கிறது. இதில் ஏரோதுக்குப் பங்கு உண்டு என மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத் 14:5). ஆனால் மாற்கு நற்செய்தியிலோ ''ஏரோது யோவானுக்கு மனமுவந்து செவிசாய்த்தான்'' (காண்க: மாற் 6:20) என்றுள்ளது. இந்த வேறுபாடு இருந்தபோதிலும் உண்மை என்பது நம் உள்ளத்தில் ''குழப்பத்தை ஏற்படுத்தும்'' என்பதில் ஐயமில்லை. உண்மையை அறிய விரும்பாதவர்கள் உண்டு; உண்மையை மறைப்பவர்கள் உண்டு; உண்மையை ஏற்றால் நம் வாழ்க்கையை மாற்றவேண்டிய சூழ்நிலை எழுமே என்றஞ்சி உண்மையை அறிவதையே தள்ளிப்போடுவோரும் உண்டு. ஏரோதுக்குக் குழப்பம் ஏற்படக் காரணம் அவன் யோவான் அறிவித்த உண்மையை ஏற்கத் தயங்கியதுதான்.


-- உண்மை என்பது இருளில் வீசுகின்ன ஒளி போன்றது. ஒளியின் முன் இருளுக்கு இடமில்லை. அதுபோல, உண்மையின் முன் பொய்ம்மைக்கு இடமில்லை. இரண்டும் இணைந்திருப்பது இயலாது. எனவேதான் உண்மையைக் கண்டுகொள்ள நம் உள்ளம் தயங்குகிறது. உண்மை ஏற்றுக்கொண்டால் அதன் கோரிக்கைகளை மறுக்க முடியாது என்பதால் உண்மையைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் சோதனை நமக்கு எழக்கூடும். உண்மையை மறுக்கும்போது தீமையையும் நாம் மறுக்கத் துணிந்துவிடுவோம். இதுவே ஏரோதின் வாழ்வில் நிகழ்ந்தது. யோவான் கூறிய உண்மையை ஏற்காத ஏரோது உண்மை பேசிய யோவானைக் கொன்றுபோட்டான். உண்மை பேசுவோரின் உயிர் மாய்ந்துவிடலாம், ஆனால் அவர்கள் உண்மைக்குச் சாட்சிகளாக என்றுமே உயிர்வாழ்வர்.

மன்றாட்டு

இறைவா, உண்மையின் ஒளியில் நாங்கள் நடக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------------------


இணையதள உறவுகளே

அடடா, இப்படி ஒரு பெண்ணா? இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு மனிதனின் தலையா? தன் குழந்தை அதை தட்டில் ஏந்தி வர வேண்டுமா? எப்படி இந்த கடின மனது? இது என்ன புதிது? நம்ம ஊர்களில் இன்று பெண்கள் இதுபோன்ற வன்செயல்களில் ஈடுபடவில்லையா என்று கேட்பது தெறிகிறது. தினசரிகள் தினமும் ஏதாவது ஒரு செய்தி தாங்கி வருகிறதல்லவா!


இதுபோன்ற பழிச் செயல்களைச் செய்ய ஆண் என்றும் பெண் என்றும் பேதம் அவசியமில்லை. எல்லோருக்கும் அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. அதுதான் குற்றம் அல்லது பாவத்தின் உணர்வு அற்ற நிலை. மனமும் உடலும் உணர்வும் ஆன்மாவும் பாவத்திற்கு உணர்வுகள் மறத்துப்போன ஒரு நிலை. திரும்பத் திரும்ப தவறுகள் பாவங்கள் செய்து மனச்சாட்சி மழுங்கிப்போன நிலை. அப்படிப்பட்ட நிலையில் அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய வன்கொடுமையாகத் தெறியாது.


ஏரோதியாள் ஏற்கெனவே பாவத்தில் வாழ்ந்து வந்தாள். ஒரு பாவம் செய்து மனம் இறுகிப்போனவளுக்கு இன்னொன்று ஒன்று பெரிதாகத் தோன்றாது. தொடர்ந்து பாவத்திலேயே வாழ்வாள். அதிலே அழிவாள். தொடக்க நிலையியே கிள்ளி எறியவில்லை என்றால் பெரிய தவறுகளைச் செய்து நாம் நம்மை அழிப்பது உறுதி. கற்றுக் கொள்வோம். கவனமாய் இருப்போம்.


-ஜோசப் லீயோன்

---------------------------------------

புனித திருமுழுக்கு யோவானின் சாட்சிய வாழ்வு


இந்த உலகம் இறைவன் படைத்த உன்னதமான தூய இடம். இந்த இடத்தில் இறைவனின் பண்புகள் உயிர் பெற நாம் ஒவ்வொருவரும் சான்று பகரக்கூடிய  வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இதைத்தான் இன்றைய விழா நாயகர் புனித திருமுழுக்கு யோவான் தன்னுடைய சான்று பகரக்கூடிய வாழ்வின் வழியாக நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றார்.


நான் மதுரை கருமாத்தூரில் களப்பணி செய்து கொண்டிருந்த பொழுது ஒரு ஊருக்கு அனுபவத்திற்காகச் சென்றிருந்தேன். அந்த ஊர்இப்பொழுதுதான் விழிப்புணர்வோடு வளர்ச்சியை நோக்கி வளர்ந்து வருகின்றது.அந்த ஊரிலே நன்றாகப் படித்த இளைஞர் இருந்தார். நான் அங்கு பணிக்கு செல்லும் போதெல்லாம் அருட்சகோதரராகிய எனக்கு முழுவதுமான ஒத்துழைப்பு கொடுத்தார். எல்லா சிறுவர் சிறுமியர்களும் இளையோர் இளம்பெண்களும் பயனடையும் வகையில் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். நேர்மையோடும் உண்மையோடும் வாழ்ந்து வந்தார். அவர் படித்துவிட்டு அரசு பணிக்காக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் நன்றாக படிக்கக் கூடியவர். அவருக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வேலையைப் பெற படிப்பு தகுதியைத் தாண்டி லஞ்சம் இவரிடம் கேட்கப்பட்டது. அவர் நினைத்திருந்தால் லஞ்சம் கொடுத்து மிகப்பெரிய அரசு வேலையை பெற்றிருக்கலாம். ஆனால் நீதியும் உண்மையும் நேர்மையும்  உள்ளவராக லஞ்சம் கொடுத்து வாங்கும் வேலை தேவை இல்லை என்று மன உறுதியோடு இருந்தார். அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை திட்டினாலும் இப்படிப்பட்ட அநீதி நிறைந்த செயல்பாட்டுக்கு என்னை உட்படுத்திக் கொள்ள மாட்டேன். லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் நான் வேலை வாங்கினால் எனக்கு பின்னால் வரும் நம் ஊர் இளந்தலைமுறையினருக்கு தவறான வழியை காட்டி விடுவேன். அதன் பிறகு அவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்ற மனநிலை விட்டுவிட்டு குறுக்கு வழியில் முன்னேறலாம் என்ற மனநிலையை பெற்றுவிடுவார். இப்படிப்பட்ட வாழ்வை நான் வாழ விரும்பவில்லை என்று மன உறுதியோடு இருந்தார். இறுதிவரை மன உறுதியோடு பல அரசு வேலைக்கான தேர்வினை எழுதி இப்பொழுது மிகப்பெரிய அரசு வேலையில் இருக்கின்றார். அந்த இளைஞனின் உண்மையும் நீதியும் நேர்மையும் எனக்கும் அந்த ஊர் இளைஞர்களுக்கும் பாடமாக இருந்தன.இதுதான் உண்மையான சான்று பகர கூடிய வாழ்வு.


புனித திருமுழுக்கு யோவான் பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களையும் புதிய ஏற்பாட்டு இறைவாக்கினர்களாகிய சீடர்களையும் இணைக்க கூடியவராக இருக்கின்றார். "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற இந்திய கருத்தியல் கூறுவதுபோல திருமுழுக்கு யோவான் அரசரானாலும் ஆண்டியானாலும் தவறு செய்பவர்களை குற்றமென்று மன உறுதியோடு சுட்டிக்காட்டினார். அரசனுக்கு எதிராக பேசினால் தனது உயிர் போய்விடுமே என்று ஒருபோதும் அவர் நினைக்காது ஏரோது அரசரின் தவறான வாழ்க்கை முறையை துணிவோடு சுட்டிக்காட்டி மனம் மாற அழைப்புவிடுத்தார். இதன் வழியாக உண்மையும் நீதியும் நேர்மையும் இம்மண்ணுலகில் இறையாட்சி பூக்களாய் மலர அழைப்புவிடுத்தார். பொய்மையில் வாழ்ந்த ஏரோது, ஏரோதியாள் மற்றும் பரிசேயர்கள் போன்றோருக்கு திருமுழுக்கு யோவானின் இறைவாக்குகள் ஒருவகையான சலனத்தை ஏற்படுத்தியது.  இதன் விளைவாக அவரின்  உயிரையும் இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இருந்தாலும் இறைவனின் இறையாட்சி மதிப்பீட்டிற்காக இறுதிவரை உண்மையோடும் நேர்மையோடும் நீதியோடும் இறையச்சத்தோடும் வாழ்ந்து வந்தார். இதுதான் உண்மையான சான்று பகரக்கூடிய வாழ்வு. திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படிப்பட்ட சான்று பகர கூடிய வாழ்வை வாழும் பொழுது தான் நாம் வாழும் இந்த கிறிஸ்தவ வாழ்வுக்கு முழு அர்த்தத்தை கொடுக்க முடியும்.


புனித திருமுழுக்கு யோவானின் பாடுகளை தியானித்து அவரின் சாட்சிய மதிப்பீடுகளை வாழ்வாக்க இன்றைய நாளின்  விழா நமக்கு அழைப்பு விடுப்பதாக இருக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்வை சற்று தியானித்து பார்ப்போம். உண்மையாகவே புனித திருமுழுக்கு யோவானின் சான்று பகரக்கூடிய வாழ்வு நம்மில் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்ப்போம். புனித திருமுழுக்கு யோவானிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய கிறிஸ்தவ வாழ்வியல் பாடம் என்ன?


முதலாவதாக, துன்பத்திலும் துணிவோடு சான்று பகர்தல். ஆண்டவர் இயேசு சீடர்களை பார்த்து "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" எனக் கூறியுள்ளார். இது எதை சுட்டி காட்டுகிறது என்றால் இயேசுவைப் பின்பற்றுவது என்பது உண்மைக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் சான்று பகர்வது. அவ்வாறு சான்று பகரும் பொழுது நம் வாழ்வில் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். அவற்றை எல்லாம் இறை மகிமைக்காக என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் பொழுது நிச்சயமாக நாம் சான்றுகள் கூடிய வாழ்வு வாழ முடியும். இதைத்தான் திருமுழுக்கு யோவான் நமக்கு முன் வாழ்ந்து காட்டி  முன்மாதிரியான ஒரு புனிதராக இருக்கின்றார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் சுயநலம் மற்றும் மாயக் கவர்ச்சிகள்  மிகுந்த இந்த உலகத்தில் உண்மையோடும் நேர்மையோடும் நீதியோடும் வாழும் பொழுது நாம் புறக்கணிக்கப்படுவோம்; துன்பப்படுத்தப்படுவோம். ஆனால் அந்தத் துன்பத்தின் மத்தியிலும் இறுதிவரை நிலைத்திருக்கும் பொழுது நம் வாழ்விலே நிறைவை காணமுடியும். இதுதான் உண்மையான சான்று பகரக்கூடிய வாழ்வு .இப்படிப்பட்ட வாழ்வை வாழத்தான் இன்றைய விழா நாயகர் திருமுழுக்கு யோவான் நமக்கு வழிகாட்டியுள்ளார்.


இரண்டாவதாக, திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சி நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது. அவர் எந்த அளவுக்கு தவறு செய்பவர்களுக்கு முன்னால் மிகத் துணிவோடு இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தாரோ, அதற்கு சமமாக தாழ்ச்சி  உள்ளவராகவும் வாழ்ந்தார். திருமுழுக்கு யோவானின் போதனைகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. அவரின் வார்த்தையை கேட்டு அவர் காலத்து மக்கள் மனந்திரும்ப கூடிய நிலைக்கு வருமளவுக்கு ஆணித்தனமாக இருந்தது. ஏன் பரிசேயரும் கூட திருமுழுக்குப் பெற வருவதை கண்டு அவர் எச்சரிக்கிறார். ஏனெனில் பரிசேயர்கள் திருமுழுக்கு பெற வந்தது அவர்கள் நல்லவர்கள் என காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. எனவே அனைவரும் திருமுழுக்கு யோவானை மெசியா என கருதினர். ஆனால் திருமுழுக்கு யோவான் தாழ்ச்சி உள்ளவராக இயேசு தான் இந்த உலகை மீட்க வந்தவர் என்று சுட்டிக்காட்டி அவரது வழியை ஆயத்தப்படுத்தினார். இதுதான் உண்மையான சாட்சிய வாழ்வு. நம்முடைய அன்றாட வாழ்விலும் இயேசு எனும் மீட்பரை தாழ்ச்சியான உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டு அவரின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகரும் பொழுது நம் வாழ்வு நிறைவுள்ள வாழ்வாக மாறும். இப்படிப்பட்ட வாழ்வை வாழத்தான் இன்றைய புனிதர் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.


மூன்றாவதாக, திருமுழுக்கு யோவானை போல இறையாற்றல் உள்ளவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் தனது இறைவாக்கு பணியில் ஆற்றல் உள்ளவராகத் திகழ  இறைவன் அவரை ஊக்கமூட்டியுள்ளார் . எரேமியா இறைவாக்கினர் கடவுளுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டதால் இறையாற்றல் முழுவதுமாக அவரோடு இருந்தது. திருமுழுக்கு யோவானும் தான் இந்த உலகத்திற்கு வந்தேன் என்று தன்னுடைய அழைப்பில் தெளிவு இருந்ததால் இறையச்சத்தோடு வாழ்ந்தார். இதன் வழியாக இறை ஆற்றலை பெற்றார். இந்த இறை ஆற்றல் தான் அவரை ஒரு மிகச்சிறந்த இறைவாக்கினராகவும்  துணி உள்ளவராகவும் உண்மைக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் சான்று பகரக் கூடியவராகவும் உருமாற முடிந்தது. எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் இறைவனின் திட்டத்தை அறிந்துக்கொள்ள இறைவேண்டலில் நிலைத்திருப்போம். அறிந்துகொண்ட இறைவனின் திட்டத்தை இம்மண்ணுலகில் வாழ்வாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.


இறையச்சத்தோடும் இறை ஆற்றலோடும்  வாழ்வதே ஒரு சான்று பெறக்கூடிய வாழ்வு. இப்படிப்பட்ட வாழ்வை வாழத்தான் இன்றைய நாளின் புனித திருமுழுக்கு யோவான்நமக்கு வழிகாட்டுகிறார். இவ்வாறாக அவர் நற்பண்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே புனித வாழ்வு வாழ்ந்த புனிதர்கள் அனைவரும் நமக்கு நல்ல  கிறிஸ்தவ மதிப்பீடுகளை கொடுத்துள்ளனர். அந்த மதிப்பீடுகளை அறிந்து அனுபவித்து வாழ்வாக்கும் பொழுது   நிச்சயமாக நம் வாழ்விலே முன்னேற்றம் காணமுடியும். நாம் வாழக்கூடிய வாழ்விலே  நிறைவை காணமுடியும். நிறைவுள்ள மக்களாக வாழ்ந்து திருமுழுக்கு யோவானை போல இறைவனுக்கு சான்று பகர தேவையான அருளை வேண்டுவோம்.


 *இறைவேண்டல்*

ஆற்றலும் வலிமையுமான இறைவா ! இந்த  அருமையான நாளை கொடுத்ததற்காக நன்றி செலுத்துகிறோம். இன்றைய நாள் புனித திருமுழுக்கு யோவானை எங்களுக்கு முன்னுதாரணமாக கொடுத்ததற்காக நன்றி செலுத்துகின்றோம். எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் திருமுழுக்கு யோவானை போல உண்மைக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் சான்று பகர தேவையான மன உறுதியை தாரும். நாங்கள் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்து இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர அருளைத் தாரும்.  சான்று பகர கூடிய வாழ்வு வாழ இறைவேண்டலில் எந்நாளும்  நிலைத்திருந்து இறை ஆற்றலோடு செயல்பட நல்ல மனப்பக்குவத்தை தாரும். இவை அனைத்தையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஞானத்தையும் விவேகத்தையும் தாரும்.இதன் வழியாக மக்கள் அனைவரும் பலன் பெற்று உம்மிடம் திரும்பிவர எங்களை உம் கருவியாகப் பயன்படுத்தும். ஆமென்.


Join with us 👇

 Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...