Friday, September 9, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (11-09-2022)

 

பொதுக்காலம் 24ஆம் வாரம் - ஞாயிறு


திருப்பலி முன்னுரை:

 காணாமல் போன ஆட்டைக் கண்டு மனமகிழ்ச்சி கொள்ளும் இறைவனைத் தேடி இன்று ஆலயம் வந்துள்ள இறைஇயேசுவின் மகிழ்ச்சிக்குரிய அன்பர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் மனமாற்றத்தோடு, மன்னிப்பையும் பெற அன்புடன் வரவேற்கின்றோம்.
பொதுவாக நாம் ஒரு பொருள் காணாமல் போய், மீண்டும் தேடிக் கண்டு, அதைப் பெறும்போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்படி இருக்கத் தான் படைத்த மானிடர் தன்னை விட்டு வெகுதூரம் சென்றவர் மீண்டும் மனமாற்றம் அடைந்துத் தன்னிடம் வருதைக் காணும் தந்தையாம் கடவுளின் மகிழ்ச்சிக்கு எப்படி இருக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் தெள்ளத்தெளிவாகப் பதிவு செய்கின்றன.
விடுதலைப் பயணநூலில் மோசே கடவுளின் கோபம் இஸ்ரயேல் மக்களின் மேல் உள்ளதை அறிந்து அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவுட்டி மக்களைக் காப்பாற்றினார். திருத்தூதர் பவுல் இயேசுவிற்கு எதிராய் நடந்தாலும் கடவுள் தனக்காக மனமிரங்கியதை நினைவுகூர்கின்றார்.
இந்த நாளில் இறைவனின் மகிழ்ச்சிக்குக் காரணமான நம் மனமாற்றத்தையும் அதன் பலனாக மன்னிப்பையும் பெற்றுக் கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம். இறைஇரக்கத்தை வேண்டுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளுக்கு எதிராகக் கன்றுக்குட்டியை வழிபாட ஆரம்பித்தனர். உண்மை கடவுளிடமிருந்து வெகுதொலைவுக்குச் சென்றனர். எனவே கோபம் கொண்ட கடவுள் மோசேயிடம் தன் மக்களை அழிக்கப்போவதாகக் கூறியபோது, மோசே கடவுளிடம் அவரின் அன்புக்குரிய இறையடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நினைவுக் கூர்ந்து மக்களுக்காக மன்றாடித் தண்டனையிலிருந்து காப்பாற்றியதை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 51:1-2,10-11,15,17
பல்லவி: நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்.

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.  என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்-பல்லவி

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.  உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். கடவுளுக்கு ஏற்றப் பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.  -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுல் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராய் நடத்திய போரட்டத்தை உணர்ந்தும் கடவுள் அவருக்குக் காட்டிய இரக்கத்தை நன்றியோடு பதிவுச் செய்கிறார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு அவர் முன்மாதிரியாய் விளங்க அருள் புரிந்ததைப் பெருமிதத்துடன் நமக்கு விவரிக்கும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்தலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. என்றென்றும் இரக்கமுள்ள எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தையும், மன்னிப்பின் மாண்பையும் உணர்ந்தவர்களாய், இந்த இறைஇரக்கத்தின் ஆண்டில் அடுத்திருப்பவர்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் தந்தையின் மனபாக்குவத்தையும், அன்பையையும் பெற்றுச் சாட்சியவாழ்வு வாழத் தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அருளே உருவான எம் இறைவா! புனித அன்னை தெரசாள் போல் நற்கருணையில் வீற்றிருக்கும் உம்மீது அளவில்லா அன்பும், நம்பிக்கையும் கொண்டு தன்னலமற்ற சேவையில் அவரைப் போல் எமக்கு அடுத்திருப்பவர்களை இறைமகன் இயேசுவாகப் பாவித்துத் தொண்டுள்ளம் கொண்டவர்களாய் பணிவிடை செய்து வாழ்ந்திட அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! கைவிடப்பட்ட சிறார், நோயாளர், வயதானவர்கள், உணவு அல்லது வேலையின்றி இருப்போர், வீடற்றவர், கைதிகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோர் என, உதவி தேவைப்படும் அனைவருக்கும் பணிபுரிந்துவருபவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும், பொருளாதார உதவிகளைப் பெற்றிடவும், உம்மேல் தளராத நம்பிக்கையும், உம் அன்பில் என்றும் நிலைத்திருந்து பணியாற்றிட வேண்டிய நல்ல சூழல் அமைந்திடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றும் வாழும் எம் இறைவா! எங்கள் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். தேவையில் இருக்கும் எம்சகோதர, சகோதரிகள் முன்பாக, எங்கள் பார்வையைக் குறைத்து, எம் இதயங்களைக் கடினப்படுத்தும் தன்னலத்தைத் தோற்கடிக்கவும், குடும்பங்களில் ஆரோக்கியமும், நட்புறவும், சமாதானமும், ஒற்றுமையும் ஓங்கி வளர்ந்திட வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. திருவிவிலியத்தின் வழியாய் எம்மோடு பேசும் இறைவா! திருவிவிலியத்தை முழுவதும் படித்து அதன் பொருள் உணர்ந்து ஆழ்மனதில் பதிவு செய்து நாங்களும் சாட்சிகளாய் அடுத்திருப்பவர்களக்கு உமத திருதூதராய் பணியாற்றிட தேவை பொறுமையையும், அன்போடு அரவணைத்துச் செல்ல நல்அருளையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


முதல் வாசகம்

ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-11, 13-14

அந்நாள்களில்

ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்தி வந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்னெ ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, ‘இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே’ என்று கூறிக் கொள்கிறார்கள்” என்றார்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம், “இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்” என்றார்.

அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர் முன் மன்றாடி, “ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?

உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே” என்று வேண்டிக்கொண்டார்.

அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 10-11. 15,17 (பல்லவி: லூக் 15:18)

பல்லவி: நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்.

1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

15
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

இரண்டாம் வாசகம்

பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-17

அன்பிற்குரியவரே,

எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.

‘பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்'. - இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. - அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார்.

அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராய் இருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-32

அக்காலத்தில்

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டு பிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.

அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

மேலும் இயேசு கூறியது: “ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ‘அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.

மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.

அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.

அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10

அக்காலத்தில்

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டு பிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...