Sunday, September 11, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (12-09-2022)

 

பொதுக்காலம் 24ஆம் வாரம் - திங்கள்

முதல் வாசகம்



உங்களிடையே பிளவுகள் இருக்கும் நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 17-26

சகோதரர் சகோதரிகளே,

இவ்வறிவுரைகளைக் கொடுக்கும் நான் உங்களைப் பாராட்ட மாட்டேன். ஏனெனில் நீங்கள் ஒன்றுகூடி வரும்போது நன்மையை விடத் தீமையே மிகுதியாக விளைகிறது. முதலாவது, நீங்கள் சபையாகக் கூடிவரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஓரளவு அதை நம்புகிறேன். உங்களிடையே கட்சிகள் இருக்கத்தான் செய்யும். அப்போதுதான் உங்களுள் தகுதியுள்ளவர்கள் யாரென வெளிப்படும். இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல. ஏனெனில் நீங்கள் உண்ணும் நேரத்தில், ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முந்தியே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள். உண்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது கடவுளின் திருச்சபையை இழிவுபடுத்தி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? என்ன சொல்வது? உங்களைப் பாராட்டுவதா? இதில் உங்களைப் பாராட்டமாட்டேன்.

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 40: 6-7. 8. 9. 16 (பல்லவி: 1 கொரி 11: 26b)

பல்லவி: ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7
எனவே இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது. - பல்லவி

8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி

9
என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

16
உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், ‘ஆண்டவர் எத்துணை பெரியவர்!’ என்று எப்போதும் சொல்லட்டும்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-10

அக்காலத்தில்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.

அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள்மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். இயேசு அவர்களோடு சென்றார்.

வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்."

இவற்றைக் கேட்ட இயேசு அவரைக் குறித்து வியப்புற்றார். தம்மைப் பின் தொடரும் மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


------------------------------

எதுவும் சொல்லாமலேயே

இன்றைய (12 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 7:1-10)

எதுவும் சொல்லாமலேயே

நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல் நிகழ்வை மத்தேயு, லூக்கா, மற்றும் யோவான் நற்செய்தியாளர்கள் பதிவு செய்கின்றனர். தூரத்திலேயே குணமாக்கும் நிகழ்வு என்று இந்த வல்ல செயல் அழைக்கப்படுகின்றது. இன்று நாம் லூக்காவின் பதிவை வாசிக்கின்றோம். மற்ற பதிவுகளுக்கும் லூக்காவின் பதிவுக்கும் இடையே சில முக்கியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன: (அ) மற்ற நற்செய்திகளில் நூற்றுவர் தலைவர் இயேசுவிடம் செல்கின்றார். லூக்காவில் தலைவரால் அனுப்பப்பட்ட ஒரு குழுவினர் இயேசுவைச் சந்திக்கின்றனர். (ஆ) மற்ற நற்செய்திகளில் இயேசு தான் தொடங்கிய இடத்திலிருந்தே நலம் தருகின்றார். லூக்காவில் இயேசு பாதி வழி நடக்கின்றார். (இ) மற்ற நற்செய்திகளில் இயேசு, 'நீர் போகலாம். பணியாளர் அல்லது மகன் நலம் பெற்றார்' என்று மொழிகின்றார். லூக்காவில் இயேசு அப்படி எதுவும் பேசவில்லை.

இந்நிகழ்வில் வரும் தொழுகைக்கூடத் தலைவர் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றார்:

(அ) பணியாளர்மீது மதிப்பு

மிலிட்டரி போன்ற பணிகளில் கிரேட் அல்லது தலைமையைப் பொறுத்தே மனிதர்கள் உறவுகொள்வார்கள். பெரும்பாலும் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களிடம் உரையாடவோ உறவாடவோ செய்வதில்லை. ஆனால், இந்த நூற்றுவர்தலைவர் தனக்குக் கீழ் உள்ள பணியாளர்மீது மதிப்பும் அக்கறையும் கொண்டவராக இருக்கின்றார். இவர் ஒருவேளை தலைவரின் தனிச் செயலராக அல்லது காப்பாளராக அல்லது உதவியாளராக இருந்திருக்கலாம். அல்லது இயல்பாகவே தலைவர் தன் பணியாளர்கள்மேல் அக்கறை உள்ளவராக இருத்தல் வேண்டும்.

(ஆ) பணிப் பகிர்வு

நூற்றுவர் தலைவர் இரு குழுக்களை இயேசுவிடம் அனுப்புகின்றார். முதலில், யூதர்களின் மூப்பர்கள். அவர்கள் நூற்றுவர் தலைவரின் நற்குணத்தை இயேசுவிடம் எடுத்துச் சொல்லி அவருக்காகப் பரிந்து பேசுகின்றனர். இரண்டாவதாக, நண்பர்கள். அவர்கள் வழியாகவே இயேசுவின்மேல் உள்ள நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார் நூற்றுவர் தலைவர். தான் இயேசுவை ஏற்கத் தகுதியற்றவர் என்பதை இதன் வழியாக அறிக்கையிட்டுத் தாழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன் தன் பணியைத் தகுதியான நபர்களிடம் பகிர்ந்து கொடுக்கவும் துணிகின்றார் தலைவர்.

(இ) நம்பிக்கை

பணியில் இருக்கும் தன் சொற்களுக்கே ஆற்றல் இருக்கிறது என்றால், ஆண்டவராகிய இயேசுவின் சொற்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும் என்பதை உணர்ந்தவராக இருக்கின்றார் அவர். இயேசு அவரின் நம்பிக்கையைப் பாராட்டுவதோடு, தன்னால் சொற்கள் இல்லாமலும் செயலாற்ற முடியும் என்று அறிகுறியை நிகழ்த்துகின்றார்.

மொத்தத்தில் இந்த நிகழ்வு இயேசுவின் சொற்களுக்கு இருந்த ஆற்றலையும், அதை அவருடைய சமகாலத்தவர்கள் கண்டுணர்ந்ததையும் நமக்கு எடுத்துரைக்கின்றது.

இன்று இறைவார்த்தையை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். எத்தனை முறை அவற்றை இயேசுவின் வார்த்தைகளாகவே எடுத்துள்ளோம்? அவற்றின் ஆற்றலையும், அவற்றால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் எத்தனை முறை நாம் உணர்ந்துள்ளோம்? இறைவார்த்தை வாசிப்பு வெறும் சடங்காகவோ, அல்லது கற்றல்நிகழ்வாகவோ மட்டும் இருந்தால் நம்மை இறைவார்த்தை தொடாது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

------------------------------


அடுத்தவர்மீதான அன்பு!

பொதுக்காலம் 24ஆம் வாரம் – திங்கள் 12 09 2022

I 1 கொரிந்தியர் 11: 17-26
II லூக்கா 7:1-10

அடுத்தவர்மீதான அன்பு!

120 பேருக்கும் உணவிடும் தமிழாசிரியர்:

வடசென்னையில் உள்ள கொடுங்கல்யூரில் அரசு உயிர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இதில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருபவர் இளமாறன்.

ஒருநாள் இவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, வகுப்பிலிருந்த மாணவி ஒருத்தி மயங்கி விழுந்தாள். ஏன் என்று இவர் பார்த்தபோதுதான், அவள் இரவு உணவும் காலை உணவும் சாப்பிடவில்லை என்பது தெரிந்தது. தொடர்ந்து வந்த நாள்களில் வேறு சில மாணவ மாணவிகளும் மயங்கி விழுந்தார்கள். அதற்கும், அவர்கள் குடும்பத்தில் நிலவிய வறுமையே காரணம் என்று தெரிந்தது.

இதுபற்றித் தமிழாசிரியர் இளமாறன், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரோடு கலந்துபேசிவிட்டு, வறுமையினாலும் பெற்றோர் இல்லாமலும் இருக்கும் பள்ளிக்குச் சாப்பிடாமல் வரும் மாணவ மாணவிகளைக் கணக்கில் எடுத்தார். அப்படிக் கணக்கில் எடுத்தபோது 120 பேர் வந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள அம்மா உணவகத்திலிருந்து உணவை வருவித்து, பசியாற்றுகின்றார் தமிழாசிரியர் இளமாறன். இதற்காக அவருக்கு ஒவ்வொரு மாதமும் ஆகும் செலவு, ரூபாய் ஐயாரத்திற்கும் மேல்.

ஆம், பள்ளிக்கூடத்திற்குப் பசியோடு வருகின்ற மாணவ மாணவிகளுக்குத் தாயுள்ளத்தோடு ஒவ்வொரு நாளும் உணவளிக்கும் தமிழாசிரியர் இளமாறன் உண்மையில் மிகப்பெரியவர். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நாம் நம்மிடம் உள்ள உணவைப் பகிர்ந்து கொள்ளவேண்டும், அடுத்திருப்பவர்மீது அன்போடு வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தொடக்கத் திருஅவையில் இறைமக்கள் இல்லங்களில் கூடி வந்தார்கள். அவ்வாறு கூடிவரும்போது ‘அன்பு விருந்து’ ஒரு முக்கியமான நிகழ்வாக நடைபெற்றது. இந்த அன்பு விருந்தில் வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து உணவை எடுத்துக்கொண்டு வந்து, அதை வறியவர்களோடு பகிர்ந்து உண்டார்கள்.

பணக்காரர்கள், ஏழைகள் என பலதரப்பட்ட மக்கள் இருந்த கொரிந்து நகர்த் திருஅவையிலோ வசதிபடைத்தவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்த உணவைத் தாங்களாகவே உண்டுவிட்டு, அதை நம்பி வந்த ஏழைகளைப் பசியோடு விட்டார்கள். இதை அறிந்த பவுல் அவர்களிடம், “நீங்கள் ஒன்றுகூடி வரும்போது நன்மையைவிடத் தீமையே விளைகிறது” என்கிறார். கொரிந்து நகரில் இருந்த வசதி படைத்தவர்களுக்கு அங்கிருந்த ஏழைகள்மீது உண்மையான அன்பிருந்தால், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவைத் தாங்களாகவே உண்டிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு வறியவர்களுக்கு அன்பு இல்லாததாலேயே இப்படியொரு செயலைச் செய்தார்கள்.

இதற்கு முற்றிலும் மாறாக, இன்றைய நற்செய்தியில் வரும் நூற்றுவத் தலைவர் தன்னுடைய பணியாளரிடமும்; ஏன், தன்னை வெறுத்த யூதர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டவராக இருக்கின்றார். அக்காலத்தில் ‘ஆண்டான்’ அடிமையின்மீது அன்பு கொண்டிருக்க வாய்ப்பில்லை; ஆனால், நூற்றுவத் தலைவர் தன் பணியாளர்மீது மதிப்பும் அன்பும் வைத்திருக்கின்றார். அதைவிடவும் பிறவினத்தாரைத் தீட்டு எனக் கருதும் யூதர்களுக்கென ஒரு தொழுகைக் கூடத்தையும் அவர் கட்டித் தருகின்றார். இப்படி அடுத்திருப்பவர்மீது அன்பு கொண்டிருந்த நூற்றுவத் தலைவரின் பணியாளர்மீது இயேசு அன்பு கொண்டு அவருக்கு நலமாளிக்கின்றார். எனில், நாம் அடுத்திருப்பவர்மீது அன்போடு இருக்கும்போது, ஆண்டவர் நம்மீது அன்புகொள்வார் என்பது உறுதி.

சிந்தனைக்கு:

 இருப்பவர் இல்லாதவருக்குக் கொடுக்கும்போதுதான், மேலே இருந்து கொடுப்பவர் நமக்குத் தாராளமாகக் கொடுப்பார்.

 அடுத்திருப்பவர் பசியோடு இருக்கும்போது அறுசுவை உணவு உண்ணும் எவரும் பாவியே!

 நமக்குக் கீழே உள்ளவர்மீது நாம் அன்பு காட்டும்போது, நமக்கு மேலே உள்ளவர் நம்மீது அன்பு காட்டுவார்.

இறைவாக்கு:

‘வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்’ (உரோ 12:13) என்பார் புனித பவுல். எனவே நாம் வறியவர்களோடு நம்மிடமுள்ளத்தைப் பகிர்ந்து, அவர்கள்மீது அன்பு காட்டி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

--------------------------------------


“உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”

பொதுக்காலம் 24ஆம் வாரம் – திங்கள் 12 09 2022

திருப்பாடல் 40: 6-7, 8, 9, 16 (1 கொரி 11: 26b)

“உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”

கடவுளின் திருவுளம் நிறைவேற்ற அச்சம்:

ஒரு தாய் பங்குப்பணியாளரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கையில், “சுவாமி! எனக்கு, மரியாவைப் போன்று, ‘உமது திருவுளப்படி நிகழட்டும்’ என்று கடவுளிடம் சொல்வதற்கு அச்சமாக இருக்கின்றது. ஒருவேளை நான் அவ்வாறு சொன்னால், அவர் என்னுடைய ஒரே மகனையும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா!” என்றார்.

பங்குப் பணியாளர் அவரை அன்பொழுகப் பார்த்தார். பின்னர் அவர், “ஒருநாள் உங்களுடைய மகன் உங்களிடம் வந்து, ‘இன்று நீங்கள் எனக்கு என்ன வேலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்; உங்களுடைய விருப்பத்திற்கேற்ப என்னைப் பயன்படுத்துங்கள்’ என்று சொல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். உங்களுடைய மகன் உங்களிடம் இவ்வாறு சொல்லிவிட்டான் என்பதற்காக, அவனுக்குக் கடினமான வேலைகளைக் கொடுத்து, அவனை வதைப்பீர்களா?” என்று கேட்டார். “அப்படியெல்லாம் செய்யமாட்டேன்” என்று பேசத் தொடங்கிய அந்தத் தாய், “நான் அவன் மனம் குளிருமாறு நடந்துகொள்வேன்” என்றார்.

அப்போது பங்குப் பணியாளர், “நீங்கள் சொல்வது மிகச் சரி. ‘என்னை உங்களுடைய விருப்பத்திற்கேற்றாற்போல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று உங்கள் மகன் சொன்னான் என்பதற்காக எப்படி நீங்கள் அவனை வதைக்கமாட்டீர்களோ, அப்படித்தான் கடவுளும், ‘உமது திருவுளப்படி நிகழட்டும்’ என்று தன்னிடம் சொல்வோரிடம் நடந்து கொள்ளமாட்டார். மேலும் கடவுள் உங்களைவிடவும் என்னைவிடவும் மிகவும் நல்லவர். அதனால் அவர் தன்னுடைய விருப்பத்தின்படி நடக்க முன்வருகின்றவர்களை நல்லவிதமாய்ப் பார்த்துக் கொள்வார்” என்றார்.

ஆம், கடவுளின் திருவுளத்தின்படி நாம் நடக்க நேர்ந்தால், நமக்கு ஆபத்துகள் வரும் என்று அஞ்சத் தேவையில்லை. ஏனெனில், தன்னுடைய திருவுளத்தின்படி வாழ முன்வருகின்றவரைக் கடவுள் நல்லமுறையில் பாதுகாத்துக் கொள்வார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “உமது திருவுளம் திருவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இஸ்ரயேலின் அரசராக இருந்த தாவீதுக்கு எதிரிகளிடமிருந்தும், அவரது சொந்த மகன் அப்சலோமிடமிருந்தும் ஆபத்துகள் வந்தன. அத்தகைய வேளையில் ஆண்டவர் தன்னைக் காத்தருளும் தாவீது மன்றாடினார். மேலும், ஆண்டவர் தனக்கு நிச்சயம் உதவுவார் என்று தாவீது பொறுமையோடு காத்திருந்தார். ஆண்டவரும் அவரை எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் காத்ததால், அவரைத் தாவீது புகழ்ந்து பாடுகின்ற ஒரு பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 40.

இத்திருப்பாடலில் தாவீது, கடவுள் பலிகளில் நாட்டம் கொள்வதில்லை என்று சொல்லிவிட்டு, அவரது திருவுளத்தின்படி நடப்பதுதான் அவரது விருப்பமான பலி என்பதை உணர்ந்தவராய், “என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.

தாவீது ஆண்டவரின் நெஞ்சத்திற்கு நெருக்கமாய் இருந்தார். அதற்கு முக்கியமான காரணம், அவர் ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றியதால்தான். அதனாலேயே ஆண்டவர் தாவீதுக்கு அவர் சென்ற இடங்களிலெல்லாம் வெற்றியை அளித்தார். நாமும் தாவீதைப் போன்று ஆண்டவரின் திருவுளத்தின்படி நடந்தால், அவர் நமக்கு வெற்றிக்கு மேல் வெற்றியைத் தருவார் என்பது உறுதி.

சிந்தனைக்கு:

 ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்வோரைக் குறித்து ஆண்டவர் மிகவும் பூரிப்படைகின்றார்.

 ஆண்டவர் தமது அடியார்களுக்கு எப்போதும் அடைக்கலமாய் இருக்கின்றார்.

 ஆண்டவர் பலிகளில் விருப்பம் கொள்வது கிடையாது. அவர் விரும்புவது மக்கள் தன்னுடைய விருப்பத்தின்படி நடப்பதையே!

இறைவாக்கு:

‘உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்’ (எபி 10:9) என்று இயேசு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற முன்வந்தார். நாமும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற மகிழ்ச்சியோடு முன்வந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...