Friday, September 9, 2022

Liturgy of the Hours in Tamil - தமிழ் திருப்புகழ் மாலை

 பொதுக்காலம் 24ஆம் வாரம் - ஞாயிறு



காலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

இரவை நிறைத்த இருள்மறைந் ததுவே
கரையில் விடிவெள்ளி ஒளிர்ந்தெழுந் ததுவே;
இறைவா, எல்லாம் வல்லவா, உமது
திருத்தாள் பணிந்து வேண்டுகிறோம்.

இறைவன் நம்மேல் இரங்கி அனைத்துக்
குறைகளைப் போக்கி மீட்பை அருளி,
நிறையன் புடனே இறைவன் தாளாம்
இறையர சைநமக்(கு) ஈந்திடவே.

வேண்டுதல் இதனை இறைவா, கேட்பீர்
விண்ணகம் உறையும் தந்தையும் மகனும்
தூண்டுதல் தரும்திருத் தூய ஆவியாரும்
குன்றாப் புகழுடன் ஆண்டருள்க. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு, அல்லேலூயா.

மீட்புப் பற்றிய மகிழ்ச்சிக் கீதம்

திபா 118

‘கட்டுகிறவர்களாகிய உங்களால்இகழ்ந்து தள்ளப்பட்ட கல், ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ (திப 4:11)

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என
இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என
ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என
ஆண்டவருக்கு அஞ்சுவோர் சாற்றுவார்களாக!

நெருக்கடி வேளையில்
நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்;
அவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்

ஆண்டவர் என் பக்கம் இருக்க
நான் ஏன் அஞ்ச வேண்டும்?
மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய இயலும்?
எனக்குத் துணை செய்யும் ஆண்டவர்
என் பக்கம் உள்ளார்;
என் பகைவர்க்கு நேர்வதை
நான் கண்ணாரக் காண்பேன்.

மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட,
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பதைவிட,
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

வேற்றினத்தார் அனைவரும்
என்னைச் சூழ்ந்துகொண்டனர்;
ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.
எப்பக்கமும் அவர்கள் என்னை
வளைத்துக்கொண்டார்கள்;
ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.
தேனீக்களைப்போல்
அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்,
நெருப்பிலிட்ட முட்களைப்போல்
அவர்கள் சாம்ப்லானார்கள்:
ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி
வீழ்த்த முயன்றார்கள்;
ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்;
என் மீட்பும் அவரே.
நேர்மையாளரின் கூடாரங்களில்
மீட்பின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது:

ஆண்டவரது வலக்கை
வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;

ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச்
செயலாற்றியுள்ளது.
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;
ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;
கண்டித்தார். ஆண்டவர் என்னைக் கண்டித்தார்;
ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.

நேர்மையாளர் செல்லும் வாயில்களை
எனக்குத் திறந்துவிடுங்கள்;
உள்ளே நுழைந்து ஆண்டவருக்கு நான்
நன்றி செலுத்துவேன்.
ஆண்டவரது வாயில் இதுவே!
இது வழியாய் நேர்மையாளரே நுழைவர்.
என் மன்றாட்டை நீர் கேட்டதால்,
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.
எனக்கு நீர் மீட்பரானதால்
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

கட்டுவோர் புறக்கணித்த கல்லே
கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!
நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே;
இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்.

ஆண்டவரே மீட்டருளும்!
ஆண்டவரே வெற்றி தாரும்!
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்!
ஆண்டவரது இல்லத்தினின்று
உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
ஆண்டவரே இறைவன்;
அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்;

கிளைகளைக் கையிலேந்தி
விழாவினைத் தொடங்குங்கள்
பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்
என் இறைவன் நீரே!
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்;
கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு, அல்லேலூயா.


மு. மொ. 2: அல்லேலூயா, ஆண்டவரின் அனைத்துச் செயல்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள், அல்லேலூயா.

படைப்பனைத்தும் ஆண்டவரைப் புகழட்டும்

சிறுபாடல்
தானி (இ) 1: 29-32

‘படைத்தவரே என்றென்றும் போற்றுதற்குரியவர்’ (உரோ 1:25)

“எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே,
நீர் வாழ்த்தப் பெறுவீராக;
என்றென்றும் நீர் புகழப்பெறவும்
ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.

மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர்
வாழ்த்துக்குரியது.
எக்காலத்துக்கும் அது புகழ்ந்தேத்தற்குரியது;
ஏத்திப் போற்றற்குரியது.

உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில்
நீர் வாழ்த்தப் பெறுவீராக;
உயர் புகழ்ச்சிக்கும் மிகுமாட்சிக்கும் நீர் உரியவர்.

கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே,
நீர் வாழ்த்தப் பெறுவீராக;
நீர் என்றென்றும் புகழப்படவும்
ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர்.

உமது ஆட்சிக்குரிய அரியணைமீது
நீர் வாழ்த்தப் பெறுவீராக;
என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப்பெறுவீராக,
ஏத்திப் போற்றப்பெறுவீராக.

உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப்பெறுவீராக;
என்றென்றும் நீர் பாடல் பெறவும்,
மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : அல்லேலூயா, ஆண்டவரின் அனைத்துச் செயல்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள், அல்லேலூயா.


மு. மொ. 3: அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள், அல்லேலூயா.

இறைவனுக்குப் புகழ்

திபா 150

உள்ளத்தின் ஆழத்திலிருந்து இறைவனைப் போற்றுங்கள்; உங்கள் ஆன்மாவோடு அவரைப் போற்றுங்கள்: அதாவது உடலையும் ஆன்மாவையும் கொண்டு இறைவனை மகிமைப்படுத்துங்கள். (ஹெசிகியாஸ்).

தூயகத்தில்
இறைவனைப் போற்றுங்கள்!
வலிமைமிகு விண்விரிவில்
அவரைப் போற்றுங்கள்!
அவர் தம் வல்ல செயல்களுக்காய்
அவரைப் போற்றுங்கள்!
அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து
அவரைப் போற்றுங்கள்!

எக்காளம் முழங்கியே
அவரைப் போற்றுங்கள்!
வீணையுடன் யாழிசைத்து
அவரைப் போற்றுங்கள்.
முரசொலித்து நடனம்செய்து
அவரைப் போற்றுங்கள்!
யாழினை மீட்டி, குழலினை ஊதி
அவரைப் போற்றுங்கள்!

சிலம்பிடும் சதங்கையுடன்
அவரைப் போற்றுங்கள்.
கைத்தாள ஒலிமுழங்க
அவரைப் போற்றுங்கள்!
அனைத்து உயிர்களே
ஆண்டவரைப் புகழ்ந்திடுக!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள், அல்லேலூயா.


அருள்வாக்கு

2 திமொ 2: 8, 11-13

தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர் பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம் அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில், தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது. இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.


சிறு மறுமொழி

முதல்:கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம்.
எல்:கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம்.
முதல்:நாங்கள் உமது வியப்புக்குரிய செயல்களை எடுத்துரைக்கிறோம்.
எல்:கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம்.

செக்கரியாவின் பாடல்

மு. மொ. : என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார் என்கிறார் ஆண்டவர்.

லூக் 1: 68-79

மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.

இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.

தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார் என்கிறார் ஆண்டவர்.


மன்றாட்டுகள்

எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக எம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு மாட்சியும் மாண்பும் ஆட்சியும் வல்லமையும் எல்லாக் காலத்திற்கும் உரியதாகுக.

எல்: இறைவா, உம்மை வாழ்த்துகிறோம்; ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்.

உலகைப் படைத்த ஆண்டவரே உம்மைப் போற்றுகிறோம். பாவிகளாகிய நாங்கள் உமது அருளை வேண்டி நிற்கிறோம் — இப்போது உம்மை அறிந்து

ஊழியம் செய்ய எங்களை அழைத்திருக்கின்றீர்.

உம் மகன் எங்களுக்கு வழி காட்டியுள்ளார் – நாங்கள் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி, வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வழியை விட்டு அகலாதிருக்க அருள்புரியும்.

இன்று நாங்கள் உம் மகனின் உயிர்ப்பைப் கொண்டாடுகிறோம் — எம் வாழ்வின் துன்பத்திலும் இன்பத்திலும் அது ஆழ்ந்த அக்களிப்பை எங்களுக்குக் கொண்டு வருவதாக.

ஆண்டவரே, எங்களுக்கு இறைவேண்டுதலில் பற்றுதலையும் உம்மைப் புகழ்வதில் ஆர்வத்தையும் தாரும் — நாங்கள் எப்பொழுதும் எங்கெங்கும் உமக்கு நன்றி செலுத்துவோமாக.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

அனைத்தையும் படைத்து ஆண்டு வரும் கடவுளே! எங்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; எங்கள் முழு உள்ளத்துடன் உமக்கு பணி செய்யவும் உம்முடைய மன்னிப்பு, அன்பு இவற்றின் வல்லமையை உய்த்துணரவும் எங்களுக்கு அருள் தாரும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


பொதுக்காலம் 24ஆம் வாரம் - ஞாயிறு

நண்பகல் இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

வல்ல அரசரே, உண்மைக் கடவுளே,
எல்லாக் காலச் சுழற்சியை அமைத்தீர்,
தண்ணொளியைக் காலைப் பொழுதிற்(கு) தந்தீர்,
நண்பகல் வேளையில் வெப்பம் தந்தீர்.

பற்றி எரியும் பகைமையை அணைப்பீர்,
குற்றங் குறைகளின் வெப்பம் தணிப்பீர்,
உமது காவலை உடலுக்கு அளிப்பீர்,
எமக்கு உள்ள அமைதியை அருள்வீர்.

தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே,
தந்தைக்கு இணையான ஒரேதிருப் புதல்வரே,
ஆறுதல் அளிக்கும் தூயநல் ஆவியாரே,
ஆண்டாண்டு காலம் புகழ்பெற்(று) ஆள்வீர்,ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், அல்லேலூயா.

நல்லாயன் ஆண்டவர்

திபா 23

ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும், வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிந்டத்திச் செல்லும்’. (திவெ7:17)

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
பசும்புல் வெளிமீது
அவர் எனை இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு
அழைத்துச் செல்வார்.
எனக்கு அவர் புத்துயிர் அளிப்பார்;
தம் பெயருக்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்
நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

என்னுடைய எதிரிகளின் கண்முன்
எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;
எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்
உம் அருள்நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், அல்லேலூயா.


மு. மொ. 2: ஆண்டவர் மாட்சியோடு வருவார்; அவர் தம் புனிதர்களுக்கு வியப்புக்குரியவற்றைச் செய்வார் அல்லேலூயா.

வெற்றிக்காக நன்றிக்கீதம்

திபா 76: 1-6

‘மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார்’ (மத் 24 : 30).

யூதாவில் கடவுள் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார்;
இஸ்ரயேலில் அவரது பெயர் மாண்புடன் திகழ்கின்றது.
எருசலேமில் அவரது கூடாரம் இருக்கின்றது.
சீயோனில் அவரது உறைவிடம் இருக்கின்றது.
அங்கே அவர் மின்னும் அம்புகளை முறித்தெறிந்தார்.
கேடயத்தையும் வாளையும்
படைக்கலன்களையும் தகர்த்தெறிந்தார்.

ஆண்டவரே, நீர் ஒளி மிக்கவர்;
உமது மாட்சி என்றுமுள மலைகளினும் உயர்ந்தது.
நெஞ்சுறுதி கொண்ட வீரர்கள்
கொள்ளையிடப்பட்டார்கள்;
அவர்கள் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார்கள்;
போர்க்கலன் தாங்கும் வலுவை,
அவர்கள் கைகள் இழந்துவிட்டன.
யாக்கோபின் கடவுளே, உமது கடிந்துரையால்
குதிரைகளும் வீரர்களும் மடிந்து விழுந்தனர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவர் மாட்சியோடு வருவார்; அவர் தம் புனிதர்களுக்கு வியப்புக்குரியவற்றைச் செய்வார் அல்லேலூயா.


மு. மொ. 3: உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பொருத்தனைகளையும் காணிக்கைகளையும் கொண்டு வாருங்கள், அல்லேலூயா.

திபா 76: 7-12

நீர் பேரச்சத்திற்குரியவர்;
உம் சினம் கொதித்தெழும் வளையில்
உம்மை எதிர்த்து நிற்பவர் யார்
நீதித் தீர்ப்பளிக்க நீர் எழுந்தபோது

மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரை
நீர் காக்க விழைந்தபோது,
வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்;
பூவுலகு அச்சமுற்று அடங்கிற்று.

சினமுற்ற மாந்தர், உம்மைப் புகழ்ந்தேத்துவர்;
உமது கோபக் கனலுக்குத் தப்பியோர்
உமக்கு விழாக்கொண்டாடுவர்;
உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப்
பொருத்தனை செய்து அதை நிறைவேற்றுங்கள்;
அவரைச் சூழ இருக்கும் யாவரும்
அஞ்சுதற்குரிய அவருக்கே
காணிக்கைகளைக் கொண்டு வருவராக!
செருக்குற்ற தலைவர்களை அவர் அழிக்கின்றார்;
பூவுலகின் அரசருக்கு அவர் பேரச்சம் ஆனார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பொருத்தனைகளையும் காணிக்கைகளையும் கொண்டு வாருங்கள், அல்லேலூயா.


அருள்வாக்கு

இச 10: 12-13

இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர்மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து, உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர் தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?


முதல்:ஆண்டவரே, உம் திருத்தலத்தில் நுழையத் தகுதி உள்ளவன் யார்?
எல்:தீய வழிகளுக்குத் தன் கால்களை இட்டுச் செல்லாதவன். நெஞ்சத்திலிருந்து உண்மை பேசுகிறவன்.

இறுதி மன்றாட்டு

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


பொதுக்காலம் 24ஆம் வாரம் - ஞாயிறு

மாலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

ஒளியைச் சிறப்பாய்ப் படைத்தவரே,
ஒளியைப் பகலென அழைத்தீரே;
படைப்புத் தோன்றிய முதல்நாளில்
கொடுத்தீர் ஒளியை முதற்கொடையாய்.

மாலையும் காலையும் இணைத்(து) அதை
நாளென அழைக்கக் கற்பித்தீரே;
அச்சமூட்டும் இரவு வருமுன்னே
அழுதோம், எம்வேண்டல் ஏற்பீரே.

பாவச்சுமை எம்மை அழுத்தாமல்,
சாவுநிலைக்கு எம்மை இழுக்காமல்
நிலை யானவற்றையே நினைத்திடுவோம்
வினைகளின் தளைகளை அகற்றிடுவோம்.

வானின் உணர்வுகள் எமைநிரப்பவும்,
வாழ்வின் பரிசை யாம்பெறவும்,
தீங்குக ளெல்லாம் விலகிடவும்,
தீமைகள் அனைத்தையும் கழுவிடவும்.

அருள்வீர், அன்புநிறை தந்தையேநீர்;
திருமக னோடும், துணைநிற்கும்
ஆவியா ரோடும் ஆள்கின்றீர்;
பூவுல கில் நிறை புகழ்பெறுவீர், ஆமென்


திருப்பாடல்கள்

மு. மொ. 1: வைகறை கருவுயிர்க்குமுன் தூய்மைக் கோலத்துடன் நான் உன்னை ஈன்றுள்ளேன், அல்லேலூயா.

மெசியா அரசரும் குருவும்

திபா 110: 1-5, 7

எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்குமவரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும் (1 கொரி 15:25).

ஆண்டவர் என் தலைவரிடம்,
‘நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை
நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார்.

வலிமைமிகு உமது செங்கோலை
ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்;
உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!

நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில்
தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உமக்கு
உவந்தளிப்பர்;
வைகறை கருவுயிர்த்த பனிபோல்
உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.

‘மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’
என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்;
அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.

என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;
தம் சினத்தின் நாளில் அவர்
மன்னர்களை நொறுக்குவார்.

வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்:
ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : வைகறை கருவுயிர்க்குமுன் தூய்மைக் கோலத்துடன் நான் உன்னை ஈன்றுள்ளேன், அல்லேலூயா.


மு. மொ. 2: நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர்.

நீதிமானின் மகிழ்ச்சி

திபா 112

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது (எபே 5:8-9).

ஆண்டவருக்கு அஞ்சி அவர்தம் கட்டளைகளில்
பெருமகிழ்வு கொள்வோர் பேறுபெற்றோர்.
அவர்களது வழிமரபு
பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்;
நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும்.
சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்;
அவர்கள து நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.

நேர்மையாளரிடையே அவர்கள்
இருளில் ஒளியென மிளிர்வார்கள்;
அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்கள்.
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர்கள்
நன்மை அடைவர்கள்;

அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவார்கள்.
அன்னோர் எந்நாளும் அசைவுறார்;
நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.

தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது
அவர்கள் இதயம் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு
உறுதியாய் இருக்கும்.
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்;
அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;
இறுதியில் தம் எதிரிகள் அழிவதை
அவர்கள் காண்பது உறுதி.

அவர்கள் வாரி வழங்கினார்கள்;
ஏழைகளுக்கு ஈந்தார்கள்;
அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.
தீயோர் அதைப் பார்த்து எரிச்சல் அடைவர்;
பல்லை நெரிப்பர்; சோர்ந்து போவர்;
தீயோரின் விருப்பமெல்லாம் வீணாய்ப் போம்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர்.


மு. மொ. 3: கடவுளின் பணியாளர்களே, சிறியோர்களே பெரியோர்களே! நீங்கள் அனைவரும் கடவுளைப் புகழுங்கள், அல்லேலூயா.

ஆட்டுக்குட்டியின் திருமணப்பாடல்

சிறுபாடல்
திவெ 19: 1ஆ-2, 5-7

பாடும்போது பின் அமைந்துள்ளவாறு ‘அல்லேலூயாவுடன்’ பாடவும். இறைவேண்டல்செய்யும்போது ஒவ்வொரு அடியின் தொடக்கத்திலும் முடிவிலும் ‘அல்லேலூயா’ சொன்னால்போதும்.


எல்: அல்லேலூயா!
மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.
எல்: அல்லேலூயா

ஏனெனில் அவருடைய தீர்ப்புகள்
உண்மை உள்ளவை, நீதியானவை.
எல்: அல்லேலூயா (அல்லேலூயா).

கடவுளின் பணியாளர்களே, நம் கடவுளைப் புகழுங்கள்.
எல்: அல்லேலூயா

அவருக்கு அஞ்சிநடப்பவர்களே
சிறியோர்களே, பெரியோர்களே
நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்.
எல்: அல்லேலூயா (அல்லேலூயா).

உன் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்;
அவர் ஆட்சி செலுத்துகின்றார்.
எல்: அல்லேலூயா

எனவே மகிழ்வோம்,
பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம்.
எல்: அல்லேலூயா (அல்லேலூயா).

ஏனெனில் ஆட்டுக் குட்டியின் திருமண விழா
வந்துவிட்டது.
எல்: அல்லேலூயா.

மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.
எல்: அல்லேலூயா (அல்லேலூயா).

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கடவுளின் பணியாளர்களே, சிறியோர்களே பெரியோர்களே! நீங்கள் அனைவரும் கடவுளைப் புகழுங்கள், அல்லேலூயா.


அருள்வாக்கு

எபி 12: 22-24

நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக்கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப் பேறானவர்களின் திருச்சபை, விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவு பெற்ற நேர்மையாளர்களேடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும் புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.


சிறு மறுமொழி

முதல்:நம் ஆண்டவர் பெரியவர்; அவரது ஆற்றல் பெரியது.
எல்:நம் ஆண்டவர் பெரியவர்; அவரது ஆற்றல் பெரியது.
முதல்:அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கரியது.
எல்:நம் ஆண்டவர் பெரியவர்; அவரது ஆற்றல் பெரியது.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:நம் ஆண்டவர் பெரியவர்; அவரது ஆற்றல் பெரியது.

கன்னிமரியாவின் பாடல்

மு. மொ. : மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.

லூக் 1: 47-55

என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.

ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக்
கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள்
எக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.


மன்றாட்டுகள்

திருச்சபையில் கடவுள் தமது மறைவான திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்; அனைத்தையும் கிறிஸ்துவில் ஒன்றாக்க விரும்புகிறார். அவருடைய திருவுளம் நிறைவேறும்படியாக நாம் மன்றாடுவோம்.

எல்: தந்தையே கிறிஸ்துவில் அனைத்தையும் ஒன்றுசேர்த்தருளும்.

திருச்சபையில் உமது ஆவியாரின் பிரசன்னத்திற்காகவும் ஆற்றலுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் — ஒற்றுமையைத் தேடவேண்டிய விருப்பத்தை எங்களுக்குத் தாரும்; இணைந்து இறைவேண்டல் செய்யவும் உழைக்கவும் தூண்டியருளும்.

உமது அன்பை பறைசாற்றும் பணியாளர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் — நாங்கள் பகிர்ந்து வாழும் குழுமங்களுக்கு பணி புரியத் துணை செய்யும்.

தந்தையே உமது திருச்சபையில் இருக்கும் அருள்வாக்கு, அருளடையாளப் பணியாளர்களை உமது பராமரிப்பில் வைத்துக் காத்தருளும் — கிறிஸ்து விரும்பி செபித்த ஒற்றுமைக்கு அவர்கள் உமது குடும்பம் முழுவதையும் கொண்டுவந்து சேர்ப்பார்களாக.

போர், பகைமை, இவற்றின் கொடுமைகளை உம் மக்கள் நன்குணர்ந்துள்ளார்கள் — உம் மகன் விட்டுச்சென்ற அமைதியை அவர்கள் அனுபவிக்க அருள்புரியும்.

உமது அமைதியில் இளைப்பாறும் அனைவரின் நம்பிக்கையையும் நிறைவேறச் செய்யும் — நீர் அனைத்திலும் அனைத்துமாக இருக்கின்ற அந்த இறுதி உயிர்த்தெழுதலுக்கு அவர்களைக் கொண்டு வந்து சேர்த்தருளும்.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

அனைத்தையும் படைத்து ஆண்டு வரும் கடவுளே! எங்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; எங்கள் முழு உள்ளத்துடன் உமக்கு பணி செய்யவும் உம்முடைய மன்னிப்பு, அன்பு இவற்றின் வல்லமையை உய்த்துணரவும் எங்களுக்கு அருள் தாரும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

பொதுக்காலம் 24ஆம் வாரம் - ஞாயிறு

இரவு இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா,
காரிருள் புகஉம் கழலினைத் தொழுதோம்;
பேரருள் புரிந்து எம்மீது) இரங்கிக்
கோரிடும் எம்மைக் காத்தருள் வீரே.

கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக,
நினைவிலாத் துயிலிலும் உமமையே உணர்க;
நனிசேர் புதுநாள் புலரும் போதும்
இனியவும் புகழை இசைத்தேத் திடுக.

இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக
அன்பனல் எமக்குள் கனன்றிடச் செய்க
துன்பமும் துயரமும் தரும்கார் இருளை
உன்பெரும் ஒளியில் சுடர்போக் கிடுக.

இறைவா, எல்லாம் வல்ல தந்தாய்
மகன்வழி யாய்எமக் கிவை அருள்வாய்
ஒருபொருள் தந்தை மகன் தூய ஆவியார்
தரைதனில் ஆட்சியும் மாட்சியும் பெறுக. ஆமென்.

அல்லது

கிறிஸ்துவே ஒளியும் பகலும் நீரே
இரவின் இருளை ஈந்தீர் எனினும்
மறுமையில் நீரே ஒளியென விளங்க
தரையிலும் பேரொளி விளக்கா வீரே.

தூயவரே, ஆண்டவரே, துயிலுறு இரவிதில்
நேயமாய் எம்மைக் காத்திட வேண்டுவோம்;
எமதிளைப் பாற்றி உம்மிலே ஆகுக.
அமைதி மிகுந்த இரவினைத் தருக.

உடலின் கண்கள் உறங்கி மூடினும்
உளத்தின் கண்கள் விழித்துமை நோக்குக
உம்மை அன்பு செய்தோம் எனவே
எம்மை ஆற்ற லுடன்காத் தருள்க.

காவல் நீரே கருணைக்கண் ணோக்கிப்
பேயின் சோதனை நின்றெமைக் காப்பீர்;
செந்நீர் சிந்தி மீட்டவும் மக்களை
இன்னல் நீக்கிக் காத்தருள் வீரே.

எம்மை அன்பு செய்யும் கிறிஸ்துவே.
உம்முடன் தந்தையும் ஆவி யாரும்
இம்மையில் மறுமையில் இடையறா தென்றும்
உண்மை மாட்சியும் புகழும் பெறுக. ஆமென்.

அல்லது

போயது பொழுது புகுந்தது இரவு;
தூயரே உமது பொன்னடி தொழுவோம்;
நேயமாய் எல்லா ஏதமும் நீக்கி,
நேயரெமை ஆண்டு காத்தருள் வீரே.

கனவுகள் துயில்வழி காணுதல் வேண்டாம்
கனவிருள் பூதமும் கண்ணுறல் வேண்டாம்
சினமுறு பகைவர் முரணெலாம் வெல்வாய்
ஈனமும் உடலில் சேர்ந்திடாதருள்வாய்.

முதல்வரே தந்தாய் அருள் புரி வீரே
புதல்வரே கிறிஸ்துவே அருள்புரி வீரே
கதிரொளி வெல்லும் ஆவி யாரே
பதம் பணிந்து போற்றிடு வோமே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; இரவின் திகிலுக்கு நீர் அஞ்சமாட்டீர்.

உன்னதரின் அடைக்கலத்தில்

திபா 91

பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும் பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்குவிளைவிக்காது (லூக்10:19).

உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர்,
எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்,
ஆண்டவரை நோக்கி, ‘நீரே என் புகலிடம்; என் அரண்;
நான் நம்பியிருக்கும் இறைவன்’ என்று உரைப்பார்.

ஏனெனில் ஆண்டவர் உம்மை வேடரின்
கண்ணியினின்றும்
கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.
அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்;
அவர்தம் இறக்கைகளின் கீழ் நீர் புகலிடம் காண்பீர்;
அவரது சொல்லுறுதியே கேடயமும் கவசமும் ஆகும்.

இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும்
நீர் அஞ்சமாட்டீர்.
இருளில் உலவும் கொள்ளைநோய்க்கும்,
நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும்
நீர் அஞ்சமாட்டீர்.

உம் பக்கம் ஆயிரம்பேர் வீழ்ந்தாலும்,
உம் வலப்புறம் பதினாயிரம்பேர் தாக்கினாலும்,
உம்மை எதுவும் அணுகாது.
பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீர் பார்ப்பீர்;
உம் கண்ணாலே நீரே காண்பீர்.
ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்;
உன்னதரை உம் உறைவிடமாய்க் கொண்டீர்.

ஆகவே தீங்கு உமக்கு நேரிடாது;
வாதை உம் கூடாரத்தை நெருங்காது.
நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி,
தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.
உம் கால் கல்லின்மேல் மோதாதபடி,
தங்கள் கைகளில் அவர்கள் உம்மைத்
தாங்கிக்கொள்வார்கள்.
சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்;
இளஞ்சிங்கத்தையும் விரியன் பாம்பையும்
நீர் மிதித்துப் போடுவீர்.

’அவர்கள் என்மீது அன்புகூர்ந்தால்,
அவர்களை விடுவிப்பேன்;
அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால்,
அவர்களைப் பாதுகாப்பேன்;
அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது
அவர்களுக்குப் பதிலளிப்பேன்;
அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்;
அவர்களைத் தப்புவித்துப் பெருமைப்படுத்துவேன்.
நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்;
என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; இரவின் திகிலுக்கு நீர் அஞ்சமாட்டீர்.


அருள்வாக்கு

திவெ 22: 4-5

கடவுளின் பணியளர்கள் அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி விசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.

சிமியோன் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.

லூக் 2: 29-32

கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.

இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி;
இதுவே உம் மக்களாகிய இஸ்ரையேலுக்குப் பெருமை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவரே, எம் இல்லத்தைச் சந்தித்துப் பகைவனின் கண்ணிகள் அனைத்தையும் எங்கள் இல்லத்திலிருந்து அகற்றியருள உம்மை மன்றாடுகிறோம்; உம்முடைய தூதர்கள் இந்த இல்லத்தில் குடியிருந்து எங்களை அமைதியில் காப்பார்களாக. உமது ஆசி எங்கள் மீது என்றென்றும் தங்குவதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


ஆசியுரை

ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.


தூய மரியாவுக்குப் பாடல்

வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க.

தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுமைக் கூவி அழைத்தோம்.

கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.

அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.

உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.

கருணையின் உருவே தாய்மையின் கனிவே
இனிமையின் அன்னை மரியா போற்றி! ஆமென்.

அல்லது

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே
விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே
தண் கடல் மீதொளிர் விண்மீன் நீரே

வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை
ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்.

இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர்
ஈன்ற பின்னரும் கன்னியாய் நின்றீர்

வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர்
ஈனப் பாவிகள் எமக்கு இரங்குவீர். ஆமென்.

அல்லது

வானகம் ஆளும் அரசியே வாழ்க
வானவர் அனைவரின் தலைவியே வாழ்க
எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி
உதயம் ஆகிய வாயிலே வாழ்க.

மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.
ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.
எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி
பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல். ஆமென்

அல்லது

கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்

இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...