Monday, September 12, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (13-09-2022)

 

பொதுக்காலம் 24ஆம் வாரம் - செவ்வாய்


முதல் வாசகம்



நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14, 27-31a

சகோதரர் சகோதரிகளே,

உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது.

நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்ல செயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே! எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 3c)

பல்லவி: ஆண்டவரின் மக்கள் நாம், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி
3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! - பல்லவி

5
ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17

அக்காலத்தில்

இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.

அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள்.

அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.

அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


“ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்”

பொதுக் காலத்தின் இருபத்து நான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை

திருப்பாடல் 100: 1-2, 3, 4 5 (3ac)

“ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்”

மரியாதையும் ஆராதனையும்:


மார்க், மேத்யூ என நண்பர்கள் இருவர் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சின் நடுவில் மேத்யூ தன் நண்பன் மார்கிடம், “நண்பா! இப்போது உனக்குப் பிடித்த கார்ல் மார்க்ஸ் உனக்கு முன் தோன்றினால், நீ என்ன செய்வாய்?” என்றான். “ஒருவேளை நீ சொல்வது போல் எனக்குப் பிடித்த கார்ல் மார்க்ஸ் எனக்கு முன்பு தோன்றினால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்து நின்று, அவருக்கு மரியாதை செலுத்துவேன்” என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் மார்க்.

இதைத் தொடர்ந்து மார்க் தன் நண்பன் மேத்யூவிடம், “ஒருவேளை இயேசு உனக்கு முன்பாகத் தோன்றினால் நீ என்ன செய்வாய்?” என்றான். இதற்கு மேத்யூ சிறிதும் தாமதியாமல், “இயேசு எனக்கு முன்பு தோன்றினால், உன்னைப் போன்று நான் எழுந்து நின்று இயேசுவுக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கமாட்டேன். மாறாக, நான் அவர் முன் முகங்குப்புற விழுந்து, அவரைத் தொழுவேன். ஏனெனில், அவர் மிகப்பெரிய ஆளுமை மட்டுமல்ல, அவர் ஆண்டவர்” என்று கண்களில் ஒளிமின்னப் பதிலளித்தான்.

ஆம், இயேசு கிறிஸ்து மிகப்பெரிய ஆளுமை மட்டும் கிடையாது; அவர் ஆண்டவர், அனைத்துலகின் அரசர்.. அதனால் அவரை மகிழ்வுடன் வழிபடவேண்டும் என்ற சிந்தனையை மேலே உள்ள நிகழ்வும், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலும் தருகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

திருப்பாடல் 93, மற்றும் 95 முதல் 100 வரையிலான திருப்பாடல்களுக்கு ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அது என்னவெனில், இவையெல்லாம் ஆண்டவரே அனைத்துலகின் அரசர், அதனால் அவரைப் போற்றிப் புகழவேண்டும் என்ற முதன்மையான கருத்தினைத் தாங்கி வருவதுதான்.

“அனைத்துலகோரே ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துகள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்” என்று வரிகளோடு தொடங்கும், இன்று நாம் பதிலுரைப் பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 100, அனைத்துலகோரும் ஏன் ஆண்டவரை வழிபடவேண்டும்? என்ற காரணத்தைப் பதிவு செய்யாமல் இல்லை. “ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவரது பேரன்பு; தலைமுறை தோறும் அவர் நம்பத் தக்கவர்” என்பதால் அவரை அனைத்துலகோரும் மகிழ்ச்சியுடன் வழிபடுவது மிகவும் பொருத்தமானது.

கடவுள் யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் நல்லது செய்கின்றவர். தவிர, எல்லார்மீதும் அவர் தம் பேரன்பைக் காட்டியிருக்கின்றவர். அதனால் நாம் அவரை மகிழ்ச்சியுடன் வழிபடுவது சிறந்தது. நமது வாழ்வில் ஆண்டவர் காட்டியிருக்கும் பேரன்பிற்காக நாம் அவரை வழிபடுகின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 நல்லவர் ஒருவரே, அவரே அனைத்துலகையும் ஆளுகின்ற கடவுள்!

 கடவுள் நல்லவராய் இருப்பதால், அவரது சாயலைத் தாங்கியிருக்கும் நாமும் நல்லவர்களாய் இருப்பதே முறை.

 பேரன்பு ஆண்டவர் ஒருவரிடம் மட்டுமே இருப்பதால் அவரை நாம் இறுகப் பற்றிக் கொள்வோம்.

இறைவாக்கு:

‘ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்’ (திபா 145: 9) என்பார் தாவீது அரசர். எனவே, நாம் நல்லவராம் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

------------------------------


“மேலான அருட்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்”

பொதுக் காலத்தின் இருபத்து நான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை

I 1 கொரிந்தியர் 12: 12-14, 27-31a
II லூக்கா 7: 11-17

“மேலான அருட்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்”

பழங்குடி மக்களுக்கு அறிவொளி:


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், எடுமலைக்குடி என்ற இடத்தில் ‘முத்துவான்’ என்ற பழங்குடி மக்கள் மிகுதியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் தேநீர்க் கடை நடத்தி வருபவர் பி.வி. சின்னத்தம்பி என்ற 73 வது பெரியவர். இவர் வெறுமனே தேநீர்க் கடை நடத்துவதோடு நின்றுவிடாமல், அப்பகுதியில் உள்ளவர்கள் அறிவொளி பெறும் வகையில் நடமாடும் நூலகம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

‘முரளி’ என்ற தன்னுடைய நண்பர் ஒருவரோடு தன்னிடம் உள்ள புத்தகங்களை மக்கள் நடுவில் கொண்டு செல்லும் இவர், அவற்றை மக்களுக்கு வாசிக்கக் கொடுத்து, அவர்களுக்கு அறிவொளி ஊட்டி வருகின்றார். இத்தகைய பணியைக் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இவர் செய்து வருகின்றார் என்பதுதான் கூடுதல் சிறப்பு.

ஆம், தாம் பெற்ற அறிவை பிவி. சின்னத்தம்பி என்ற அந்தப் பெரியவர் தனக்குள் வைத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர் கல்வியறிவில் மிகவும் பின்தங்கி இருக்கும் முத்துவான் என்ற பழங்குடி மக்களுக்குக் கொடுத்து, அவர்களுக்கு அறிவொளி ஊட்டி வருகின்றார் என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இன்று வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை நாம் பெற்றிருக்கும் கொடைகளை நமக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இன்றைய முதல் வாசகம், “நீங்கள் மேலான அருட்கொடைகளை ஆர்வமாய் நாடுங்கள்” என்ற வார்த்தைகளோடு முடிகின்றது. மேலான அருட்கொடைகள் எனும்போது, ஒவ்வொரு வரும் தனக்குக் கொடுக்க கொடையை – அது வல்ல செயல் செய்வதாக இருக்கலாம், பிணிதீர்க்கும் ஆற்றலாக இருக்கலாம், பரவசப் பேச்சுப் பேசுவதாக இருக்கலாம் – எதுவாக இருந்தாலும், அதைத் தனக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்பதே ஆகும். ஏனெனில், நாம் கிறிஸ்து என்ற மறையுடலின் உறுப்புகளாக இருக்கின்றோம்.

ஓர் உடல் நன்றாக இயங்கவேண்டும் எனில், உடலில் உள்ள உறுப்புகள் நன்றாக இயங்க வேண்டும். அதையே பவுல் இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார். நற்செய்தி வாசகம் இந்த உண்மையை இன்னும் வலியுறுத்திக் கூறுவதாக இருக்கின்றது.

நற்செய்தியில் இயேசு நயீன் என்ற ஊரில் இருந்த கைம்பெண்ணின் இறந்து போன மகனை உயிர்த்தெழச் செய்கின்றார். இறந்த உடலைத் தொட்டால் தீட்டு என்ற இருந்த சூழலில் இயேசு இறந்து போன கைம்பெண்ணின் மகனைத் தொட்டு அவனை உயிர்த்தெழச் செய்கின்றார். இதன்மூலம் இயேசு தன்னுடைய வல்லமையைப் பிறரது நலனுக்குப் பயன்படுத்துகின்றார்.

நாம் கிறிஸ்துவின் சீடர்கள் எனில், அவரது உடலின் உறுப்புகள் எனில், நமக்கானதை மட்டும் நாடாமல், பிறருக்கானதையும் நாடவேண்டும். இது மிகவும் முக்கியம்.

சிந்தனைக்கு:

 தன்னலத்தால் தரணி தழைக்காது; பிறர் நலத்தால் மட்டுமே தரணி தழைக்கும்.

 கடவுள் நமக்குக் கொடுத்த கொடைகள் நமக்கானவை மட்டுமல்ல, பிறருக்கானவை.

 உண்மையான அன்பு தன்னலம் நாடாது.

இறைவாக்கு:

‘நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்’ (பிலி 2:4) என்பார் பவுல் எனவே, நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடைகளைக் கொண்டு, பிறருக்கானதைச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...