Sunday, September 11, 2022

Liturgy of the Hours in Tamil - தமிழ் திருப்புகழ் மாலை

 பொதுக்காலம் 24ஆம் வாரம் - திங்கள்



காலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

சிறந்த ஒளியை அளிப்பவரே,
இறந்தது இரவின் காலமிதோ,
பிறந்தது மீண்டும் புதுப்பகலே;
பரந்தஉம் பரிவினைப் புகழ்கிறோம்.

உலகின் உண்மை ஒளிநீரே;
சிலகால் ஒளிர்ந்து மறைகின்ற
பலவகை விண்மீன் போலன்று,
நிலையாய் ஒளிரும பேரொளி நீரே.

பகலவன் தனினும் ஒளிமிகுந்தோய்
பகலும் ஒளியும் நீர்தாமே
அகத்துள் எமக்கு ஒளிபொழிந்து
அகஇருள் அகலச் செய்வீரே.

அடங்காஎன் உடல்இச் சைகளைத்
திடமிகு கற்பினால் தோற்கடிப்பிர்;
தூயஎம் உடலை ஆவியால் நிரப்பி
கோவிலாய் இதைநீர் மாற்றிடுவீர்.

கிறிஸ்துவே, உமக்கும் தந்தைக்கும்
ஆறுதல் அளிக்கும் ஆவியாருக்கும்
பேரர(சு) ஒச்சும் மூவர்க்கும்
ஈறிலாப் புகழ்எக் காலமுமே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவரே, காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.

ஆண்டவருடைய பேரொளி நம்மீது ஒளிரட்டும்

திபா 90

ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன (2 பேது 3: 8).

என் தலைவரே! தலைமுறைதோறும்
நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.
மலைகள் தோன்றுமுன்பே,
நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே,
ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே!

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;
மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
ஏனெனில் ஆயிரம் ஆண்டுகள்,
கடந்துபோன நேற்றைய நாள் போலவும்
இரவின் ஒரு சாமம் போலவும் உம் பார்வையில் உள்ளன.

வெள்ளமென மானிடரை நீர்
வாரிக்கொண்டு செல்கின்றீர்;
வைகறையில் மறந்துவிடும் கனவுபோலவும்
செழித்து முளைக்கும் புல்போலவும் அவர்கள் ஆவார்கள்.
காலையில் அது தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;
மாலையில் அது வாடிக் காய்ந்துபோகும்.

உமது சினத்தால் நாங்கள் அழிந்துபோகின்றோம்;
உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்.
எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்;
மறைவான எம் பாவங்களை
உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.

எங்கள் அனைத்து வாழ்நாள்களும்
உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன;
எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன.
எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே;
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது;

அவற்றில் பெரும்பகுதியோ துன்பமும் துயரமுமே!
அவை விரைவில் கடந்துவிடுகின்றன,
நாங்களும் பறந்துவிடுகின்றோம்.
உமது சினத்தின் வலிமையை உணர்பவர் யார்?
உமது கடுஞ்சீற்றத்திற்கு அஞ்சுபவர் யார்?

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
ஞானமிகு உள்ளத்தை அப்பொழுது பெற்றிடுவோம்.
ஆண்டவரே, திரும்பி வாரும்;
எத்துணைக்காலம் இந்நிலை?
உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.

காலைதோறும் உமது பேரன்பால்
எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம்
நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும்
நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக,
எம்மை மகிழச்செய்யும்.

உம் அடியார்மீது உம் செயலும்
அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும்
விளங்கச் செய்யும்.
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள்
எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.


மு. மொ. 2: உலகின் எல்லைகளிலிருந்து ஆண்டவரின் புகழை எடுத்துச் சொல்லுங்கள்.

வெற்றி வீரரும் மீட்பருமான கடவுளுக்குப் புகழ்

சிறுபாடல்
எசா 42: 10-16

“அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்” (திவெ 14:3).

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகின் எல்லையெங்கும் அவர் புகழ் பாடுங்கள்;
கடலில் பயணம் செய்வோரே, கடல்வாழ் உயிரினங்களே,
தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே,
அவரைப் போற்றுங்கள்.

பாலைநிலமும் அதன் நகர்களும்
கேதாரியர்வாழ் ஊர்களும் பேரொலி எழுப்பட்டும்;
சேலா வாழ் மக்களும் மகிழ்ந்து பாடட்டும்;
மலைகளின் உச்சியிலிருந்து அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.
அவர்கள் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பார்கள்;
அவர் புகழைத் தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்.

ஆண்டவர் வலியோன் எனப் புறப்பட்டுச் செல்வார்;
போர்வீரரைப்போல் தீராச் சினம் கொண்டு எழுவார்;
உரத்தக்குரல் எழுப்பி, முழக்கமிடுவார்;
தம் பகைவருக்கு எதிராக வீரத்துடன் செயல்படுவார்.

வெகுகாலமாய் நான் மெளனம் காத்துவந்தேன்;
அமைதியாய் இருந்து
என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்,
இப்பொழுதோ, பேறுகாலப் பெண்போல்
வேதனைக்குரல் எழுப்புகின்றேன்;
பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்.

மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவேன்;
அவற்றின் புல்பூண்டுகளை உலர்ந்து போகச் செய்வேன்;
கறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்;
ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன்.

பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில்
நடத்திச் செல்வேன்;
அவர்கள் பழகாத சாலைகளில் வழிநடத்துவேன்;
அவர்கள்முன் இருளை ஒளியாக்குவேன்;
கரடுமுரடான இடங்களைச் சமதளமாக்குவேன்;
இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன;
நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : உலகின் எல்லைகளிலிருந்து ஆண்டவரின் புகழை எடுத்துச் சொல்லுங்கள்.


மு. மொ. 3: ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே, ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்.

மகத்தான செயல்களைச் செய்கிற இறைவனுக்குப் புகழ்

திபா 135: 1-12

“நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி மரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர். தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள், எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மையிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி” (1 பேது 2:9).

ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்;
ஆண்டவரின் ஊழியரே! அவரைப் போற்றுங்கள்!
ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே!
நம் கடவுளின் கோவில் முற்றங்களில் உள்ளவர்களே!
ஆண்டவரைப் புகழுங்கள்!

ஆண்டவரைப் புகழுங்கள்;
ஏனெனில் அவர் நல்லவர்.
அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் இனியவர்.

யாக்கோபை ஆண்டவர்
தமக்கென்று தேர்ந்துகொண்டார்;
இஸ்ரயேலைத் தனிச்சொத்தாகத் தெரிந்தெடுத்தார்.
ஆண்டவர் மேன்மைமிக்கவர் என்பதை அறிவேன்;
நம் தலைவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர்
என்பதும் எனக்குத் தெரியும்.

விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும்
அனைத்து ஆழ்பகுதிகளிலும்
தாம் விரும்பும் யாவற்றையும் ஆண்டவர் செய்கின்றார்.
பூவுலகின் கடையெல்லைகளிலிருந்து.
மேகங்களை அவர் எழச் செய்கின்றார்
மழை பெய்யும்படி மின்னலை உண்டாக்குகின்றார்;
காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து
வெளிவரச் செய்கின்றார்.

எகிப்தியரின் தலைப்பேறுகளை அவர் தாக்கினார்;
மனிதர், கால்நடைகளின் தலைப்பேறுகளை
அவர் அழித்தார்.
எகிப்து நாடே! உன் நடுவில் பார்வோனையும்
அவனுடைய எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு,
அடையாளங்களையும் அருஞ்செயல்களையும்
அவர் நிகழச்செய்தார்.

பல்வேறு இனத்தவரை அவர் தாக்கினார்;
வலிமை வாய்ந்த மன்னர்களை அவர் கொன்றார்.
எமோரியரின் மன்னனாகிய சீகோனையும்
பாசானின் மன்னனாகிய ஓகையும்
கானானின் எல்லா அரசுகளையும் அழித்தார்;
அவர்கள் நாட்டைத் தம் மக்களாகிய
இஸ்ரயேலருக்கு உரிமைச் சொத்தாக,
சொந்த உடைமையாகக் கொடுத்தார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே, ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்.


அருள்வாக்கு

யூதித் 8: 25-26

நம் கடவுனாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்; ஏனெனில், நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல நம்மையும் சோதிக்கிறார். அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்பதையும், யாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை வட மெசப்பொத்தாமியாவில் மேய்த்துக்கொண்டிருந்த போது அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் கண்ணிப்பாருங்கள்.


சிறு மறுமொழி

முதல்:நேர்மையாளர்களே ஆண்டவரில் அகமகிழுங்கள். ஏனெனில் நேரிய உள்ளத்தோர் அவரை புகழ்வது தகுமே.
எல்:நேர்மையாளர்களே ஆண்டவரில் அகமகிழுங்கள். ஏனெனில் நேரிய உள்ளத்தோர் அவரை புகழ்வது தகுமே.
முதல்:அவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்.
எல்:நேர்மையாளர்களே ஆண்டவரில் அகமகிழுங்கள். ஏனெனில் நேரிய உள்ளத்தோர் அவரை புகழ்வது தகுமே.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:நேர்மையாளர்களே ஆண்டவரில் அகமகிழுங்கள். ஏனெனில் நேரிய உள்ளத்தோர் அவரை புகழ்வது தகுமே.

செக்கரியாவின் பாடல்

மு. மொ. : ஆண்டவர் போற்றப்படுவாராக! ஏனெனில், அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

லூக் 1: 68-79

மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.

இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.

தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவர் போற்றப்படுவாராக! ஏனெனில், அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.


மன்றாட்டுகள்

எல்லாம் வல்ல தந்தையே, விண்ணகம் உமது மேன்மையைக் கொள்ள இயலாது. இருப்பினும் உம் மகன் வழியாக நாங்கள் சொல்லக் கற்றுக் கொண்டதாவது:

எல்: தந்தையே, உமது ஆட்சி வருக.

உமது பிள்ளைகளாகிய நாங்கள் உம்மைப் புகழ்கிறோம் — எல்லா மக்களின் உள்ளங்களிலும் உம் திருப்பெயர் தூயதென போற்றப்படுவதாக.

இன்று நாங்கள் விண்ணகத்தின்மீது கொண்ட நம்பிக்கையை வாழ உதவியருளும் – இவ்வுலகில் உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களைத் தயார் செய்தருளும்.

நீர் எங்கள் குற்றங்களை மன்னிக்கிறீர் – அதுபோல இந்நாளில் நாங்கள் பிறருடைய குற்றங்களை மன்னிக்கும் மனத்திடனைத் தாரும்.

தந்தையே, எங்கள் சோதனைகளில் எங்களோடு இருந்தருளும் — நாங்கள் உம்மைவிட்டுப் பிரிய விடாதேயும்


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

கடவுளாகிய ஆண்டவரே, பூமியை கைக்கொண்டு அதனைப் பயிரிடுமாறு மனிதரிடம் அதனை ஒப்படைத்தீர்; அவர்களுடைய நன்மைக்காகக் கதிரவனையும் ஒளிரச் செய்தீர். உமது மாட்சிக்காகவும் எங்களை அடுத்திருப்போரின் நலன்களுக்காகவும் நாங்கள் நம்பிக்கையுடன் பணிபுரிய எங்களுக்கு இன்று உமதருளைத் தந்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

பொதுக்காலம் 24ஆம் வாரம் - திங்கள்

நண்பகல் இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

வல்ல அரசரே, உண்மைக் கடவுளே,
எல்லாக் காலச் சுழற்சியை அமைத்தீர்,
தண்ணொளியைக் காலைப் பொழுதிற்(கு) தந்தீர்,
நண்பகல் வேளையில் வெப்பம் தந்தீர்.

பற்றி எரியும் பகைமையை அணைப்பீர்,
குற்றங் குறைகளின் வெப்பம் தணிப்பீர்,
உமது காவலை உடலுக்கு அளிப்பீர்,
எமக்கு உள்ள அமைதியை அருள்வீர்.

தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே,
தந்தைக்கு இணையான ஒரேதிருப் புதல்வரே,
ஆறுதல் அளிக்கும் தூயநல் ஆவியாரே,
ஆண்டாண்டு காலம் புகழ்பெற்(று) ஆள்வீர்,ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவரே, உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்.

இறைவனின் வாக்காகிய திருச்சட்டத்தைத் தியானித்தல்

திபா 119: 129-136

அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ.13:10)

உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை;
ஆகவே நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது;
அது அறிவிலிகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகின்றது.

வாயை ‘ஆ’ வெனத் திறக்கின்றேன்;
பெருமூச்சு விடுகின்றேன்;
உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன்.
நீர் என் பக்கம் திரும்பி எனக்கும் இரங்கும்;
உம்மீது பற்றுக்கொண்டோருக்கு நீர் வழங்கும் நீதிப்படி
எனக்கு இரங்கும்.

உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்!
தீயது எதுவும் என்னை மேற்கொள்ளவிடாதேயும்!
மனிதரின் கொடுமையினின்று என்னை விடுவியும்!
உம் நியமங்களை நான் கடைப்பிடிப்பேன்.

உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச்செய்யும்!
உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.
உமது திருச்சட்டத்தைப் பலர் கடைப்பிடிக்காததை
நான் காண்கையில்,
எண் கண்களினின்று அருவியாய் கண்ணீர் வழிகின்றது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்.


மு. மொ. 2: நீதி வழங்குபவரும் ஆட்சி புரிபவரும் ஒருவரே உனக்கு அடுத்திருப்பவருக்கு நீதி வழங்க நீ யார்?

ஊழல் மிகுந்த அதிகாரத்திற்கு எதிராக

திபா 82

குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம் (1கொரி 4:5)

தெய்வீக சபையில் கடவுள் எழுந்தருளியிருக்கின்றார்;
தெய்வங்களிடையே அவர் நீதித்தீர்ப்பு வழங்குகின்றார்.

எவ்வளவு காலம் நீங்கள் அநீதித் தீர்ப்பு வழங்குவீர்கள்?
எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள்?
எளியோருக்கும் திக்கற்றவருக்கும் நீதி வழங்குங்கள்;
சிறுமையுற்றோர் ஏழையருக்கு நியாயம் வழங்குங்கள்!
எளியோருக்கும் வறியோருக்கும் விடுதலை அளியுங்கள்!
பொல்லாரின் பிடியினின்று அவர்களை விடுவியுங்கள்!

உங்களுக்கு அறிவுமில்லை, உணர்வுமில்லை;
நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்;
பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே அசைந்துவிட்டன.
நீங்கள் தெய்வங்கள்;
நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.
ஆயினும் நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்.
பிறதலைவர்கள் போலவே வீழ்வீர்கள் என்றேன்.

இறைவா, உலகில் எழுந்தருளும்,
அதில் நீதியை நிலைநாட்டும்;
ஏனெனில் எல்லா நாட்டினரும் உமக்கே சொந்தம்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : நீதி வழங்குபவரும் ஆட்சி புரிபவரும் ஒருவரே உனக்கு அடுத்திருப்பவருக்கு நீதி வழங்க நீ யார்?


மு. மொ. 3: நான் மன்றாடினேன். ஆண்டவர் எனக்குச் செவிசாய்த்தார்.

அமைதிக்காக ஏக்கம்

திபா 120

துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்: இறைவேண்டலில் நிலைத்திருங்கள். (உரோ 12.12ஆ)

இன்னலுற்ற வேளையில்
ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்;
அவரும் எனக்குச் செவி சாய்த்தார்.
ஆண்டவரே! பொய்பேசும் வாயினின்று
என்னை விடுவித்தருளும்;
வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.

வஞ்சகம் பேசும் நாவே! உனக்கு என்ன கிடைக்கும்?
அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
வீரனின் கூரிய அம்புகளும்
தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்!

ஐயோ! நான் மேசேக்கில் அன்னியனாய் வாழ்ந்தேன்;
கேதாரில் கூடாரங்களில் நான் தங்க நேர்ந்தது!
சமாதானத்தைக் குலைப்பாரோடு,
நெடுநாள் நான் வாழ வேண்டியதாயிற்று.
நான் சமாதானத்தை நாடுவேன்;
அதைப் பற்றியே பேசுவேன்;
ஆனால் அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : நான் மன்றாடினேன். ஆண்டவர் எனக்குச் செவிசாய்த்தார்.


அருள்வாக்கு

சாஞா 15: 1, 3

எங்கள் கடவுளே, நீர் பரிவும் உண்மையும் பொறுமையும் உள்ளவர்: அனைத்தையும் இரக்கத்துடன் ஆண்டு வருகின்றீர். உம்மை அறிதலே நிறைவான நீதி; உமது ஆற்றலை அறிதலே இறவாமைக்கு ஆணிவேர்.


முதல்:ஆண்டவரே, நீரே அன்பும் இரக்கமும் உள்ள கடவுள்.
எல்:நீர் பொறுமையும் பரிவும் உண்மையும் மிக்கவர்.

இறுதி மன்றாட்டு

திராட்சைத் தோட்டத்தின் ஆண்டவரும் தலைவருமான கடவுளே, நாங்கள் செய்யவேண்டிய அலுவலையும், அதற்குரிய நியாயமான ஊதியத்தையும் கொடுக்கின்றவர் நீர். எங்களது அன்றாட வாழ்வின் சுமையை நாங்கள் தாங்கிக் கொண்டு முறைப்பாடின்றி அனைத்திலும் உமது திருவுளத்தை ஏற்றுக் கொள்ள எங்களுக்கு உதவியருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


பொதுக்காலம் 24ஆம் வாரம் - திங்கள்

மாலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

ஒளியின் ஊற்றே, எம்வேண்டல் ஏற்று,
அழிவின் காரணம் பாவம் போக்கி,
எழில் உள்ளம்பெற உமதான் வந்தோம்.

உழைக்கும் நேரம் முடிவுற உமது
அழைப்பினை ஏற்றுப் புகழினைப் பாட,
விழிப்புடன் திருமுன் விருப்புடன் வந்தோம்.

இந்நான் புரிந்த குற்றம் அனைத்தும்
முன்னாள் எமக்கு மீட்பைக் கொணர்ந்த
மன்னன் கிறிஸ்து மாய்த்திடு வாரே.

தந்தை, மைந்தன், தூய ஆவியாரும்
எந்தை இறையாய் எல்லாக் காலமும்
அந்தமில் லாப்புகழ் மாட்சி பெறுக. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு, அல்லேலூயா.

பாஸ்கா கீதம்

திபா 136: 1-9

“ஆண்டவருடைய அருஞ்செயல்களைச் சொல்வது அவரைப் புகழ்வதாகும்” (கசியோதோரஸ்).

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்,
ஏனெனில் அவர் நல்லவர்.
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
தலைவர்களின் தலைவருக்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

அரும்பெரும் செயல்களைப் புரிபவர் அவர் ஒருவரே!
அவருக்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு,
தம் மதி நுட்பத்தால் வான்வெளியை உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

ஒளிப்பிழம்புகளை உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்.
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
பகலை ஆள்வதெற்கெனப் பகலவனை உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது போரன்பு.
இரவை ஆள்வதற்கென நிலாவையும் விண்மீன்களையும்
உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு, அல்லேலூயா.


மு. மொ. 2: எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுளே, உமது செயல்கள் எத்துணை பெரியன, வியப்புக்குரியன.

திபா 136: 10-26

எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை
வெளிக்கொணர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
வலிய கையாலும் ஓங்கிய புயத்தாலும்
அதைச் செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு
அதன் நடுவே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு
பார்வோனையும் அவன் படைகளையும்
செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

பாலை நிலத்தில் தம் மக்களை வழி நடத்தியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு
மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
வலிமைமிகு மன்னர்களைக் கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

எமோரியரின் மன்னன் சீகோனைக் கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
பாசானின் மன்னன் ஓகைக் கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு
உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

தம் அடியாராகிய இஸ்ரயேலர்க்கு அதை
உரிமைச்சொத்தாக ஈந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு கூர்ந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு
உடல் கொண்ட அனைத்திற்கும் உணவூட்டுபவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
விண்ணுலகின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுளே, உமது செயல்கள் எத்துணை பெரியன, வியப்புக்குரியன.


மு. மொ. 3: கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்க்கக் கடவுள் திட்டமிட்டார்.

கடவுளே நம் மீட்பர்

சிறுபாடல்
எபே 1: 3-10

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும்
கடவுளுமானவர் போற்றி
அவர் விண்ணகம் சார்ந்த
ஆவியாருக்குரிய ஆசி அனைத்தையும்
கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.

நாம் தூயோராகவும் மாசற்றோராகவும்
தம் திருமுன் விளங்கும்படி
உலகம் தோன்றுவதற்கு முன்பே
கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம்
தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக்கொள்ள
அன்பினால் முன்குறித்து வைத்தார்.
இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம்.

இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக
நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால்
அவரது புகழைப் பாடுகிறோம்
கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப
நமக்கு மீட்பு அளித்துள்ளார்;
இம்மீட்பால் குற்றங்களிலிருந்து
நாம் மன்னிப்புப் பெறுகிறோம்.

அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து,
அனைத்து ஞானத்தையும்
அறிவுத் திறனையும் தந்துள்ளார்.
அவர் தமது திருவுளத்தின் மறை பொருளை
நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இது கிறிஸ்து வழியாகக்
கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம்.
கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை
அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில்
ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே
அம்மறைபொருள்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்க்கக் கடவுள் திட்டமிட்டார்.


அருள்வாக்கு

1 தெச 3: 12-13

உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும் பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக.
எல்:ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக.
முதல்:தூபம்போல் அது உம் திருமுன் எழுவதாக
எல்:ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக.

கன்னிமரியாவின் பாடல்

மு. மொ. : என் கடவுளே, என் உள்ளம் உமது மேன்மையை என்றென்றும் பறைசாற்றட்டும்.

லூக் 1: 47-55

என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.

ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக்
கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள்
எக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : என் கடவுளே, என் உள்ளம் உமது மேன்மையை என்றென்றும் பறைசாற்றட்டும்.


மன்றாட்டுகள்

தம்மீது நம்பிக்கை வைப்பவர்களை ஒருபோதும் கைவிடாத கடவுளிடம் இறைஞ்சி மன்றாடுவோம்.

எல்: ஆண்டவரே, உமது இரக்கத்தினால் எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

திருச்சபையின்மீது உமது ஆவியைப் பொழிந்தருளும் — மனிதரெல்லாம் உமது பரிவன்பின் பெருமையை அவளில் கண்டுகொள்வார்களாக.

உமது திருச்சபையின் குருக்களோடும் பணியாளர்களோடும் தங்கியருளும் — பிறருக்குத் தாங்கள் போதிப்பதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கச் செய்தருளும்.

ஒருவரை ஒருவர் நாங்கள் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளக் கற்றுத்தாரும் — எங்களிடமிருக்கும் பிறரைப் பற்றிய தவறான எண்ணம், பயம் இவற்றிலிருந்து உமது திருமுன்னிலையால் எங்களை விடுவித்தருளும்.

தம்பதியர் ஒருவர் ஒருவரைப் புரிந்து கொள்ளவும் அன்பில் நிலைத்திருக்கவும் அருள்புரியும் – அவர்கள் வாழ்க்கையில் எதிர்ப்படும் சிக்கல்கள் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை ஆழப்படுத்தத் துணைபுரிவனவாக.

இறந்துபோன எம் சகோதரர் சகோதரிகளுடைய பாவங்களை நீர் மன்னித்தருளும் — உம் புனிதர்களின் தோழமையில் அவர்கள் புதுவாழ்வின் மகிழ்வை அடைவார்களாக.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவராகிய இயேசுவே, மாலை நேரமாகிறது; எம்மோடு தங்கும். எங்களுக்கு வழித்துணையாயிரும். உமது பரிவன்பினால் எம் உள்ளங்களில் அன்பை மூட்டி நம்பிக்கை உயர்வடையச் செய்தருளும். இதனால் நாங்கள் சகோதரர் சகோதரிகளோடு ஒன்றித்து மறைநூல்களிலும் அப்பம் பிடுவதிலும் உம்மைக் கண்டுகொள்வோமாக. தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

பொதுக்காலம் 24ஆம் வாரம் - திங்கள்

இரவு இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா,
காரிருள் புகஉம் கழலினைத் தொழுதோம்;
பேரருள் புரிந்து எம்மீது) இரங்கிக்
கோரிடும் எம்மைக் காத்தருள் வீரே.

கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக,
நினைவிலாத் துயிலிலும் உமமையே உணர்க;
நனிசேர் புதுநாள் புலரும் போதும்
இனியவும் புகழை இசைத்தேத் திடுக.

இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக
அன்பனல் எமக்குள் கனன்றிடச் செய்க
துன்பமும் துயரமும் தரும்கார் இருளை
உன்பெரும் ஒளியில் சுடர்போக் கிடுக.

இறைவா, எல்லாம் வல்ல தந்தாய்
மகன்வழி யாய்எமக் கிவை அருள்வாய்
ஒருபொருள் தந்தை மகன் தூய ஆவியார்
தரைதனில் ஆட்சியும் மாட்சியும் பெறுக. ஆமென்.

அல்லது

கிறிஸ்துவே ஒளியும் பகலும் நீரே
இரவின் இருளை ஈந்தீர் எனினும்
மறுமையில் நீரே ஒளியென விளங்க
தரையிலும் பேரொளி விளக்கா வீரே.

தூயவரே, ஆண்டவரே, துயிலுறு இரவிதில்
நேயமாய் எம்மைக் காத்திட வேண்டுவோம்;
எமதிளைப் பாற்றி உம்மிலே ஆகுக.
அமைதி மிகுந்த இரவினைத் தருக.

உடலின் கண்கள் உறங்கி மூடினும்
உளத்தின் கண்கள் விழித்துமை நோக்குக
உம்மை அன்பு செய்தோம் எனவே
எம்மை ஆற்ற லுடன்காத் தருள்க.

காவல் நீரே கருணைக்கண் ணோக்கிப்
பேயின் சோதனை நின்றெமைக் காப்பீர்;
செந்நீர் சிந்தி மீட்டவும் மக்களை
இன்னல் நீக்கிக் காத்தருள் வீரே.

எம்மை அன்பு செய்யும் கிறிஸ்துவே.
உம்முடன் தந்தையும் ஆவி யாரும்
இம்மையில் மறுமையில் இடையறா தென்றும்
உண்மை மாட்சியும் புகழும் பெறுக. ஆமென்.

அல்லது

போயது பொழுது புகுந்தது இரவு;
தூயரே உமது பொன்னடி தொழுவோம்;
நேயமாய் எல்லா ஏதமும் நீக்கி,
நேயரெமை ஆண்டு காத்தருள் வீரே.

கனவுகள் துயில்வழி காணுதல் வேண்டாம்
கனவிருள் பூதமும் கண்ணுறல் வேண்டாம்
சினமுறு பகைவர் முரணெலாம் வெல்வாய்
ஈனமும் உடலில் சேர்ந்திடாதருள்வாய்.

முதல்வரே தந்தாய் அருள் புரி வீரே
புதல்வரே கிறிஸ்துவே அருள்புரி வீரே
கதிரொளி வெல்லும் ஆவி யாரே
பதம் பணிந்து போற்றிடு வோமே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: என் தலைவராகிய கடவுளே, நீர் விரைவில் சினமுறாதவர்; பேரன்பு கொண்டவர்.

வேதனையில் ஏழையின் இறைவேண்டல்

திபா 86

‘நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரை நாம் போற்றுவோம். கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்.’ (2 கொரி 1:3-4)

ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்;
ஏனெனில் நான் எளியவனும் வறியவனும் ஆவேன்.
என் உயிரைக் காத்தருளும்;
ஏனெனில், உம்மீது நான் பற்றுடையவன்;
உம் அடியானைக் காத்தருளும்;

நீரே என் கடவுள்!
உம்மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்;
ஏனெனில் நாள் முழுவதும் உம்மை நோக்கி
மன்றாடுகிறேன்.
உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;
என் தலைவரே! உம்மை நோக்கி
என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

ஏனெனில், என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்;
உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
பேரன்பு காட்டுபவர்.
ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்;
உம் உதவியை நாடும் என் கூக்குரலைக் கேட்டருளும்.

என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுவேன்;
நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.
என் தலைவரே! தெய்வங்களுள்
உமக்கு நிகரானவர் எவருமிலர்.
உம் செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில.

என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும்
உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்;
உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.
ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்;
வியத்தகு செயல்கள் புரிபவர்;
நீர் ஒருவரே கடவுள்!

ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு
உமது வழியை எனக்குக் கற்பியும்.
உமது பெயருக்கு அஞ்சுமாறு
என் நெஞ்சை ஒருமுகப்படுத்தும்.

என் தலைவரே! என் கடவுளே!
என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்;
என்றென்றும் உமது பெயரை மாட்சிப்படுத்துவேன்.
ஏனெனில் நீர் என்மீது காட்டிய அன்பு மிகப்பெரிது!
ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்!

இறைவா! செருக்குற்றோர்
எனக்கெதிராய் எழுந்துள்ளனர்;
கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப்
பார்க்கின்றது;
அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை.

என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்;
அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்;
பேரன்பும் சொல்லுறுதியும் பொரிதும் கொண்டவர்.
என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்.

உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;
உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.
உம் நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை
எனக்குக் காட்டியருளும்;
அதைக் கண்டு என் எதிரிகள் நாணுவார்கள்;
ஏனெனில் ஆண்டவராகிய நீர்தாமே
எனக்குத் துணைசெய்து ஆறுதல் அளித்துள்ளீர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்தில் இருந்ததுபோல் இப்பொழுதும், எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : என் தலைவராகிய கடவுளே, நீர் விரைவில் சினமுறாதவர்; பேரன்பு கொண்டவர்.


அருள்வாக்கு

1 தெச 5: 9-10

கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார்.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.

சிமியோன் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.

லூக் 2: 29-32

கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.

இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி;
இதுவே உம் மக்களாகிய இஸ்ரையேலுக்குப் பெருமை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவரே, நலமளிக்கும் இளைளப்பாற்றியை எங்கள் உடலுக்குத் தந்தருளும்; எங்களுடைய இன்றைய உழைப்பு நிலைவாழ்வில் என்றுமுள்ள மாட்சிக்கு விதையாக அமைவதாக, எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


ஆசியுரை

ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.


தூய மரியாவுக்குப் பாடல்

வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க.

தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுமைக் கூவி அழைத்தோம்.

கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.

அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.

உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.

கருணையின் உருவே தாய்மையின் கனிவே
இனிமையின் அன்னை மரியா போற்றி! ஆமென்.

அல்லது

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே
விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே
தண் கடல் மீதொளிர் விண்மீன் நீரே

வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை
ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்.

இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர்
ஈன்ற பின்னரும் கன்னியாய் நின்றீர்

வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர்
ஈனப் பாவிகள் எமக்கு இரங்குவீர். ஆமென்.

அல்லது

வானகம் ஆளும் அரசியே வாழ்க
வானவர் அனைவரின் தலைவியே வாழ்க
எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி
உதயம் ஆகிய வாயிலே வாழ்க.

மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.
ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.
எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி
பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல். ஆமென்

அல்லது

கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்

இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.




♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️



No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...