Tuesday, September 13, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (14-09-2022)

 

திருச்சிலுவையின் மகிமை

விழா

முதல் வாசகம்



கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில்

ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் ‘செங்கடல் சாலை’ வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர்.

உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர்.

அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)

பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.

1
என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள்.
2
நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். - பல்லவி

34
அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.
35
கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். - பல்லவி

36
ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.
37
அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. - பல்லவி

38
அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. - பல்லவி

இரண்டாம் வாசகம்


இயேசு தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

சகோதரர் சகோதரிகளே,

கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.

 யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


செப்டம்பர் – 14

திருச்சிலுவை மகிமைப் பெருவிழா

உற்றுப்பாரு... உருமாறு...

யோவான் 3:13-17

இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள் என எல்லா 'கலாச்சாரங்களிலும்' ஏதோ ஒரு வகையில் மக்கள் மரத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றனர். செலவில்லாத மரண தண்டனை சிலுவைத் தண்டனை. ஆகையால் தான் உரோமையர்கள் இதைக் கைக்கொள்கின்றனர். எதற்காக அழியப்போகும் கைதிகள் மேல் பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும் சிலுவை மரணத் தண்டனையில் யாரும் அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதும் இல்லை.

இயேசுவின் காலத்தில் சிலுவைச் சாவு பல்வேறு வகைகளில் நிகழ்த்தப்பட்டது. வழக்கமாக மரண தண்டனை பெறுவோர் கொல்லப்பட்ட சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டனர். சிலுவையில் ஒருசிலர் அறையப்பட்டதாகவும், மற்றும் சிலர் கட்டப்பட்டதாகவும் ஜோசப் பிலேவுயுஸ் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அவமானமாக கருதப்பட்ட சிலுவை அன்பர் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதால் சிறப்பானது. பரிசுத்தரால் பரிசுத்தமாக்கப்பட்டது. திருச்சிலுவை மரமாக மாட்சிப் பெற்றது.

சிலுவையை பார்க்கும் நம் ஒவ்வொருவருடனும் அது பேசுவதற்கு தவறுவதில்லை. நீங்கள் சிலுவையை பார்ப்பது உண்டா? இப்போது பாருங்கள் அது உங்களோடு பேசுகிறது.

1. மனிதா வெறுமையாக்கு உன்னை:

கடவுள் தன்மையை தன் பிறப்பில் இழக்கின்ற இயேசு, தன் மனிதத்தன்மையை சிலுவையில் இழக்கின்றார். முந்தையதை விட அதிக வலி தருவதாக இது இருந்திருக்கும். 'இது எனக்கு! இன்னும் எனக்கு!' என்று அனைத்தையும் சேர்த்துக்கொண்டே போகும் நம் நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுதான் இயேசுவின் வெறுமை. 'இது உனக்கு! இன்னும் உனக்கு!' என்று மாற்றுச்சிந்தனையைத் தருவதுதான் சிலுவை. இதை இன்றே செய்ய வேண்டும்.

2. மனிதா துணிச்சலாக்கு உன்னை

என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்! என்று துணிந்ததால் தான் இயேசுவால் சிலுவையை அரவணைக்க முடிகின்றது. நம் வாழ்வை நாம் முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் குறைந்து வரும் துணிச்சல். 'அதெல்லாம் நமக்கெதுக்குப்பா!' என்று ஒதுங்கும் மனநிலை வாழ்க்கையை நம்மால் முழுமையால் வாழ முடியாமல் செய்து விடுகிறது. துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு பொருட்டல்ல என்பதை உணர்ந்தவர்தான் இயேசு. அதை இன்று நாமும் செய்ய வேண்டும்.

3. மனிதா நலமாக்கு உன்னை

நாம் சிலுவை அடையாளம் வரைந்து நம் நலத்தை காக்க வேண்டும். நெற்றி, தலை, வாய், நாக்கு என உடல் உடறுப்புக்களில் சிலுவை அடையாளம் வரைந்து நம்மை நலமாக்க வேண்டும். நாள்தோறும் நாம் இடும் சிலுவை அடையாளம் நம்மை நலமாக்கும்.

ரெட்கிராஸ், ஆஸ்பத்திரி என நாம் திரும்பும் பக்கமெல்லாம் சிலுவை நிற்கின்றது. சிலுவை என்றால் நலம் எனவும், உயிர்ப் பாதுகாப்பு எனவும் அர்த்தப்படுத்தப்படுகின்றது. சிலுவையால் அலங்காரம் செய்வதாலும் திருச்சிலுவைக்குக் கிடைக்காத பெருமை நாம் நலம் காப்பதிலும், உயிர் காப்பதிலும் தான் கிடைக்கிறது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மனதில் கேட்க…

1. நான் சிலுவையை உற்றுப்பார்த்து அதிலிருந்து பாடம் கற்றது உண்டா?

2. சிலுவை துன்பத்தின் சின்னம் அல்ல துணிச்சலின் சின்னம். நான் துணியலாமா?

மனதில் பதிக்க…

சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை" (1கொரி 1:17)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா


 ♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...