Monday, September 12, 2022

Liturgy of the Hours in Tamil - தமிழ் திருப்புகழ் மாலை

புனித யோவான் கிறிசோஸ்தோம் - ஆயர் (நினைவு)

பொதுக்காலம் 24ஆம் வாரம் - செவ்வாய்



காலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

யோவா னேஉம் அருமையை
திருமுடி யாகச் சூட்டிப் புகழ்வர்;
தரைவாழ் தமியருக் கோர்நல் லாயனாய்
அருள்கொடை வள்ளலாய் அன்புடன் திகழ்ந்தீர்.

பொன்மொழி யோவான் எனும் பெயர் பெற்றீர்
விண் மழை மாரிபோல் மறையுரை பொழிவீர்;
கன்மனம் உருகிட நன்மனம் உரம்பெற,
வன்மனம் இளகிட சொல்நயம் பெற்றீர்.

அனைத்தும் ஆயினீர் அனைவர்க்கும் பவுலைப்போல்;
மனத்துள் மாசிலன், விண்ணின் கண்ணாடியாய்
நினைத்தது சொன்னது செய்தது எல்லாம்
மனிதனாம் இயேசுவின் வாழ்வினைக் காட்டவே.

அரசனின் கொடிய ஆணை, தண்டனையால்
உரம்நிறை உளத்தில் அஞ்சவே இல்லை;
துரத்தப் பட்டீர் அகதியாய், இதனால்
மறைச்சாட்சியர் என மாபெயர் பெற்றீர்.

இன்றெமக் காகப் பரிந்துரைத் திடுவீர்;
உம்தயை எமக்கு உதவிட வாரீர்;
என்றும் உம் முடன்யாம் இறைவன் திருமுன்
இன்னிசை பாடி இன்புற வேண்டுவீர். ஆமென்


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன். மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்.

நீதியுள்ள ஆட்சியாளரின் அறிக்கை

திபா 101

“நீங்கள் என் மீது அன்பு கொணடிருந்தால் என் கட்டளைகளக் கடைப்பிடிப்பீர்கள்” (யோவா 14:15).

பேரன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்;
ஆண்டவரே, உமக்கே நான் புகழ் சாற்றிடுவேன்.
மாசற்ற வழியில் நடப்பதில் நான் கருத்தாயிருக்கின்றேன்.
எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்?

தூய உள்ளத்தோடு என் இல்லத்தில்
நான் வாழ்ந்திடுவேன்.
இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன்.
நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்;
அன்னவர் என்னுடன் சேரார்.
வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலையில் இருக்கும்;
தீதான எதையும் நான் ஏற்கமாட்டேன்.

தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்பவர்களை
நான் ஒழிப்பேன்;
கண்களில் இறுமாப்பும்
உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை
நான் பொறுத்துக்கொள்ளேன்;

நம்பிக்கைக்குரியோரை நாட்டில் கண்டுபிடித்து
என்னோடு வாழச் செய்வேன்;
நேரிய வழியில் நடப்போரை
எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்

வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை.
பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை.
நாட்டில் இருக்கும் பொல்லார் அனைவரையும்
நாள்தோறும் அழிப்பேன்;
தீங்கிழைப்போரை ஆண்டவரின் நகரினின்று
நான் ஒழிப்பேன்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன். மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்.


மு. மொ. 2: ஆண்டவரே, எங்களிடமிருந்து உம் இரக்கத்தை எடுத்துவிடாதீர்.

தீச்சூளையில் அசாரியாவின் பாடல்

சிறுபாடல்
தானி (இ) 1: 4-6, 12-18

“உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்” (திப 3:19).

எங்களுக்குச் செய்துள்ள அனைத்திலும் நீர் நீதியுள்ளவர்.
உம் செயல்கள் யாவும் நேர்மையானவை;
உம் வழிகள் செவ்வையானவை;
உம் தீர்ப்புகள் அனை த்தும் உண்மையானவை.

எங்கள் மீதும் எங்கள் மூதாதையரின் திருநகரான
எருசலேம்மீதும் நீர் வருவித்துள்ள அனைத்திலும்
நேர்மையான தீர்ப்புகளை வழங்கியுள்ளீர்;
எங்கள் பாவங்களை முன்னிட்டே இவற்றையெல்லாம்
உண்மையோடும் நீதியோடும்
எங்களுக்கு வரச்செய்துள்ளீர்.
உம்மைவிட்டு விலகிச் சென்றதால்;
நாங்கள் பாவம் செய்தோம்;
நெறி தவறினோம்;
எல்லாவற்றிலும் பாவம் செய்தோம்;

உமது பெயரை முன்னிட்டு
எங்களை என்றும் கைவிட்டுவிடாதீர்;
உமது உடன்படிக்கையை முறித்து விடாதீர்.
உம் அன்பர் ஆபிரகாமை முன்னிட்டும்,
உம் ஊழியர் ஈசாக்கை முன்னிட்டும்,
உம் தூயவர் இஸ்ரயேலை முன்னிட்டும்,
உம் இரக்கம் எங்களைவிட்டு நீங்கச் செய்யாதீர்.

விண்மீன்களைப் போலவும்
கடற்கரை மணலைப் போலவும்
அவர்களின் வழிமரபினரைப் பெருகச் செய்வதாக
நீர்அவர்களுக்கு உறுதி அளித்தீர்
ஆண்டவரே, எங்கள் பாவங்களால்
மற்ற மக்களினங்களைவிட
நாங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டோம்;
உலகெங்கும் இன்று தாழ்வடைந்தோம்.

இப்பொழுது எங்களுக்கு மன்னர் இல்லை,
இறைவாக்கினர் இல்லை, தலைவர் இல்லை;
எரிபலி இல்லை, எந்தப் பலியும் இல்லை;
காணிக்கைப்பொருளோ தூபமோ இல்லை;
உம் திருமுன் பலியிட்டு,
உம் இரக்கத்தைப் பெற இடமே இல்லை.

ஆயினும், செம்மறிக்கடாக்கள்,
காளைகளால் அமைந்த எரிபலி போலும்
பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக் குட்டிகளாலான
பவிபோலும் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும்
கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக.

அவ்வாறே எமது பலி இன்று உம் திருமுன் அமைவதாக;
நாங்கள் முழுமையாக உம்மைப் பின்பற்றுவோமாக;
ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர்
வெட்கத்திற்கு ஆட்படமாட்டார்.

இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன்
உம்மைப் பின்பற்றுகிறோம்;
உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, எங்களிடமிருந்து உம் இரக்கத்தை எடுத்துவிடாதீர்.


மு. மொ. 3: கடவுளே, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்.

வெற்றிக்கும் அமைதிக்கும் மன்றாட்டு

திபா 144: 1-10

“எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலி 4:13).

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே!
போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே!

என் கற்பாறையும் கோட்டையும் அவரே!
என் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே!
என் கேடயமும் புகலிடமும் அவரே!
மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே!

ஆண்டவரே! மனிதரைப்பற்றி நீர் அக்கறைகொள்ள
அவர்கள் யார்?
மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்?
மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவார்;
அவர்களின் வாழ்நாள்கள்
மறையும் நிழலுக்கு நிகரானவை.

ஆண்டவரே! உம் வான்வெளியைத் தாழ்த்தி இறங்கி வாரும்;
மலைகளைத் தொடும்; அவை புகை கக்கும்
மின்னலை மின்னச் செய்து, எதிரிகளைச் சிதறடியும்;
உம் அம்புகளை எய்து, அவர்களைக் கலங்கடியும்.

வானின்று உமது கையை நீட்டி
எனக்கு விடுதலை வழங்கும்;
பெரு வெள்ளம்போல் எழும் வேற்றினத்தார்
கையினின்று என்னை விடுவித்தருளும்.
அவர்களது வாய் பேசுவது பொய்!
அவர்களது வலக்கையோ வஞ்சமிகு வலக்கை!

இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்;
பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.
அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே!
உம் ஊழியர் தாவீதைக்
கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கடவுளே, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்.


அருள்வாக்கு

எபி 13: 7-9அ


சிறு மறுமொழி

முதல்:
எல்:
முதல்:
எல்:
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:

செக்கரியாவின் பாடல்

மு. மொ. :

லூக் 1: 68-79

மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.

இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.

தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. :


மன்றாட்டுகள்


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

உம்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு உறுதியளிக்கும் ஆண்டவராகிய கடவுளே! புனிதரான யோவான் கிறிசோஸ்தோம் வியத்தகு சொல்வன்மையாலும் துன்பம் தாங்கும் மனத் திடத்தா லும் திருச்சபையில் சிறந்து விளங்க வேண்டுமென் று திருவுளமானீர்; அவருடைய போதனையால் நாங்கள் வளம் பெறவும் அவரது தளராப் பொறுமையின் எடுத்துக்காட்டால் ஊக்கம் பெறவும் அருள்புரிவீராக,

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

புனித யோவான் கிறிசோஸ்தோம் - ஆயர் (நினைவு)

நண்பகல் இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

வல்ல அரசரே, உண்மைக் கடவுளே,
எல்லாக் காலச் சுழற்சியை அமைத்தீர்,
தண்ணொளியைக் காலைப் பொழுதிற்(கு) தந்தீர்,
நண்பகல் வேளையில் வெப்பம் தந்தீர்.

பற்றி எரியும் பகைமையை அணைப்பீர்,
குற்றங் குறைகளின் வெப்பம் தணிப்பீர்,
உமது காவலை உடலுக்கு அளிப்பீர்,
எமக்கு உள்ள அமைதியை அருள்வீர்.

தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே,
தந்தைக்கு இணையான ஒரேதிருப் புதல்வரே,
ஆறுதல் அளிக்கும் தூயநல் ஆவியாரே,
ஆண்டாண்டு காலம் புகழ்பெற்(று) ஆள்வீர்,
ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: கடவுளின் திருவுளைத்தை நீ அறிந்திருப்பதால் அதன்படி நட; நீயும் பேறுபெற்றவனாவாய்.

திபா 119: 137-144

ஆண்டவரே! நீர் நீதி உள்ளவர்;
உம் நீதித்தீர்ப்புகள் நேர்மையானவை.
நீர் தந்த ஒழுங்குமுறைகள் நீதியானவை;
அவை முற்றிலும் நம்பத்தக்கவை.

என் பகைவர் உம் வார்த்தைகளை மறந்துவிட்டதால்,
அவற்றின்மீது நான் கொண்டுள்ள தணியாத ஆர்வம்
என்னை எரித்துவிடுகின்றது.
உம் வாக்குறுதி முற்றிலும் சரியென
மெய்ப்பிக்கப்பட்டுள்ளது;
உம் ஊழியன் அதன்மீது பற்றுக்கொண்டுள்ளான்.

அடியேன் யான் சிறியவன்!
இழிவுக்கு உள்ளானவன்;
ஆனால் உம் நியமங்களை மறக்காதவன்.
உமது நீதி என்றுமுள நீதி;
உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.

இன்னலும் கவலையும் என்னைப் பற்றிக்கொண்டன;
எனினும் உம் கட்டளைகள் என்னை மகிழ்விக்கின்றன.
உம் ஒழுங்குமுறைகள் எக்காலமும் நீதியுள்ளவை;
நான் வாழுமாறு எனக்கு நுண்ணறிவு புகட்டுவீராக!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கடவுளின் திருவுளைத்தை நீ அறிந்திருப்பதால் அதன்படி நட; நீயும் பேறுபெற்றவனாவாய்.


மு. மொ. 2: ஆண்டவரே, என் வேண்டுதல் உம்மிடம் வரக்கடவது.

கடுமையாய் நோயுற்றவனின் மன்றாட்டு

திபா 88: 1-7

“இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது” (லூக் 22:53)

ஆண்டவரே! என் மீட்பின் இறைவா!
பகலில் நான் கதறுகிறேன்;
இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.
என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!
என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்!

ஏனெனில் என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது;
என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.
படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக
நானும் கணிக்கப்படுகின்றேன்;
வலுவற்ற மனிதர்போல் ஆனேன்.

இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்;
கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்;
அவர்களை நீர் ஒருபோதும் நினைப்பதில்லை;
அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள்.

ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்.
காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டுவிட்டீர்.
உமது சினம் என்னை அழுத்துகின்றது;
உம் அலைகள் அனைத்தாலும் என்னை மூழ்கடிக்கின்றீர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, என் வேண்டுதல் உம்மிடம் வரக்கடவது.


மு. மொ. 3: ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: உம் திருமுகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்.

திபா 88: 8-18

எனக்கு அறிமுகமானவர்களை
என்னைவிட்டு விலகச் செய்தீர்;
அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்;
நான் வெளியேற இயலாவண்ணம் அடைபட்டுள்ளேன்.
துயரத்தினால் என் கண் மங்கிப்போயிற்று;
ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்;
உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன்.

இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்?
கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ?
கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா?
பாதாளத்தில் உமது சொல்லுறுதி அறிவிக்கப்படுமா?
இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா?
மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா?
ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;
காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.

ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்?
என்னிடமிருந்து உமது முகத்தை ஏன் மறைக்கின்றீர்?
இளமைமுதல் நான்
துன்புற்று மடியும் நிலையில் உள்ளேன்;
உம்மால் வந்த பெருந்திகிலால் தளர்ந்துபோனேன்.

உமது வெஞ்சினம் என்னை மூழ்கடிக்கின்றது;
உம் அச்சந்தரும் தாக்குதல்கள் என்னை அழிக்கின்றன.
அவை நாள் முழுவதும் வெள்ளப்பெருக்கென
என்னைச் சூழ்ந்து கொண்டன;
அவை எப்பக்கமும் என்னை வளைத்துக்கொண்டன.
என் அன்பரையும் தோழரையும்
என்னைவிட்டு அகற்றினீர்; இருளே என் நண்பன்!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: உம் திருமுகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்.


அருள்வாக்கு

இச 30: 11, 14

இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்கு புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது. உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.


முதல்:ஆண்டவரே, என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு.
எல்:நான் செல்லவேண்டிய பாதையை அது எனக்குக் காட்டுகிறது

இறுதி மன்றாட்டு

எல்லாம் வல்ல கடவுளே, அனைத்து மாந்தரின் மீட்பைப் பற்றிய உமது திட்டத்தை நீர் பேதுருவுக்கு வெளிப்படுத்தினீர்; எங்கள் பணிகள் உமக்கு ஏற்றனவாய் இருக்கவும் உமது அருளால் அப்பணி உமது மீட்பின் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றவும் செய்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


புனித யோவான் கிறிசோஸ்தோம் - ஆயர் (நினைவு)

மாலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

காலத்தை அமைத்து ஆள்பவரே,
வேலைசெய் யப்பகலில் ஒளிதந்தீர்.
இரவை இளைப்பாறும் காலமாய்
இருகூ றாக்கினீர் நாள் அதனை.

தூயதாய் உள்ளத்தை ஆக்கிடுவீர்
தீயவை இதயத்தைத் தாக்கிப்
புண்படுத் தாமல் அன்புடனே
கண்மணி போல்எமைக் காத்திடுவீர்.

உணர்ச்சிப் பெருக்கால் உடைந்தஉளத்தை
தணித்ததனை உறுதிப் படுத்துவீர்.
தந்தையும் மைந்தனும் ஆவியருடன்
எந்தக் காலமும் புகழ்பெறுக. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: எருசலேமே, நான் உன்னை மறந்தால், என் வலக்கை சூம்பிப்போவதாக.

பாபிலோன் ஆற்றங்கரையிலிருந்து புலம்பல்

திபா 137: 1-6

‘உடலுக்குரிய இந்த அடிமைத்தனமானது ஆன்மீகத்தின் அடிமைத்தனத்திற்கு அடையாளமாயிருக்கிறது’ (புனித இலாரியார்).

பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து
நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
அங்கிருந்த அலரிச் செடிகள் மீது
எங்கள் யாழ்களை மாட்டிவைத்தோம்.

எங்களை அங்குச் சிறையிட்டோர்
நாங்கள் பாடும்படி கேட்டனர்;
எங்களைக் கடத்திச் சென்றோர்
நாங்கள் மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர்.
சீயோனின் பாடல்களில் ஒன்றை
எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள் என்றனர்.

ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை
அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
எருசலேமே நான் உன்னை மறப்பேனாகில்
என் வலக்கை சூம்பிப்போவதாக!
நான் உன்னை நினையாதிருந்தால்,
எனது மகிழ்ச்சியின் மகுடமாக
நான் எருசலேமைக் கருதாவிடில்,
என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொள்வதாக!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : எருசலேமே, நான் உன்னை மறந்தால், என் வலக்கை சூம்பிப்போவதாக.


மு. மொ. 2: என் கடவுளே, தெய்வங்கள் முன்னிலையில் நான் உம்மைப் புகழ்வேன்.

நன்றிப் பாடல்

திபா 138

மக்களினத்தார் அதன் ஒளியில் நடப்பர்: மண்ணுலக அரசர்கள் தங்களுக்குப் பெருமை சேர்ப்பவற்றையெல்லாம் அங்குக்கொண்டு செல்வார்கள் (திவெ 21: 24).

ஆண்டவரே! என் முழுமனத்துடன்
உமக்கு நன்றி செலுத்துவேன்;
தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி
உம்மைத் தாள்பணிவேன்;

உம் பேரன்பையும் வாக்குப்பிறழாமையையும் முன்னிட்டு
உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
ஏனெனில் அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும்
உம் சொல்லையும் நீர் மேன்மையுறச் செய்துள்ளீர்.
நான் மன்றாடிய நாளில் நீர் எனக்குச் செவிசாய்த்தீர்;
என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.

ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப்
பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு
உம்மைப் போற்றுவர்.
ஆண்டவரே! உம் வழிகளை
அவர்கள் புகழந்து பாடுவார்கள்;
ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்
எனினும் நலிந்தோரை நீர் கண்ணோக்குகின்றீர்
ஆனால், செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே
அறிந்துகொள்கின்றீர்.

துன்பத்தின் நடுவில் நான் நடந்தாலும்,
என் உயிரை நீர் காக்கின்றீர்;
என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக
உமது கையை நீட்டுகின்றீர்;
உமது வலக்கையால் என்னக் காப்பாற்றுகின்றீர்.

நீர் வாக்களித்த அனைத்தையும்
எனக்கெனச் செய்து முடிப்பீர்;
ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு;
உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : என் கடவுளே, தெய்வங்கள் முன்னிலையில் நான் உம்மைப் புகழ்வேன்.


மு. மொ. 3: கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி மாட்சியும் மாண்பும் பெறத் தகுதி பெற்றது.

மீட்படைந்தோரின் பாடல்

சிறுபாடல்
திவெ 4: 11; 5: 9, 10, 12

எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே,
மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற
நீர் தகுதி பெற்றவர்;
ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே.
உமது திருவுளப்படியே அவை உண்டாயின,
படைக்கப்பட்டன.

“ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை
உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே.
நீர் கொல்லப்பட்டீர்;
உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம்
ஆகிய அனைத்தினின்றும் மக்களைக்
கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக் கொண்டீர்.

ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும்
அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர்
அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்.”
கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும்
ஞானமும் ஆற்றலும், மாண்பும் பெருமையும்
புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி மாட்சியும் மாண்பும் பெறத் தகுதி பெற்றது.


அருள்வாக்கு

1 பேது 5: 1-4

கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும் வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும்போது அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக் கொள்வீர்கள்.


சிறு மறுமொழி

முதல்:
எல்:
முதல்:
எல்:
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:

கன்னிமரியாவின் பாடல்

மு. மொ. :

லூக் 1: 47-55

என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.

ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக்
கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள்
எக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. :


மன்றாட்டுகள்


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

புனித யோவான் கிறிசோஸ்தோம் - ஆயர் (நினைவு)

இரவு இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா,
காரிருள் புகஉம் கழலினைத் தொழுதோம்;
பேரருள் புரிந்து எம்மீது) இரங்கிக்
கோரிடும் எம்மைக் காத்தருள் வீரே.

கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக,
நினைவிலாத் துயிலிலும் உமமையே உணர்க;
நனிசேர் புதுநாள் புலரும் போதும்
இனியவும் புகழை இசைத்தேத் திடுக.

இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக
அன்பனல் எமக்குள் கனன்றிடச் செய்க
துன்பமும் துயரமும் தரும்கார் இருளை
உன்பெரும் ஒளியில் சுடர்போக் கிடுக.

இறைவா, எல்லாம் வல்ல தந்தாய்
மகன்வழி யாய்எமக் கிவை அருள்வாய்
ஒருபொருள் தந்தை மகன் தூய ஆவியார்
தரைதனில் ஆட்சியும் மாட்சியும் பெறுக. ஆமென்.

அல்லது

கிறிஸ்துவே ஒளியும் பகலும் நீரே
இரவின் இருளை ஈந்தீர் எனினும்
மறுமையில் நீரே ஒளியென விளங்க
தரையிலும் பேரொளி விளக்கா வீரே.

தூயவரே, ஆண்டவரே, துயிலுறு இரவிதில்
நேயமாய் எம்மைக் காத்திட வேண்டுவோம்;
எமதிளைப் பாற்றி உம்மிலே ஆகுக.
அமைதி மிகுந்த இரவினைத் தருக.

உடலின் கண்கள் உறங்கி மூடினும்
உளத்தின் கண்கள் விழித்துமை நோக்குக
உம்மை அன்பு செய்தோம் எனவே
எம்மை ஆற்ற லுடன்காத் தருள்க.

காவல் நீரே கருணைக்கண் ணோக்கிப்
பேயின் சோதனை நின்றெமைக் காப்பீர்;
செந்நீர் சிந்தி மீட்டவும் மக்களை
இன்னல் நீக்கிக் காத்தருள் வீரே.

எம்மை அன்பு செய்யும் கிறிஸ்துவே.
உம்முடன் தந்தையும் ஆவி யாரும்
இம்மையில் மறுமையில் இடையறா தென்றும்
உண்மை மாட்சியும் புகழும் பெறுக. ஆமென்.

அல்லது

போயது பொழுது புகுந்தது இரவு;
தூயரே உமது பொன்னடி தொழுவோம்;
நேயமாய் எல்லா ஏதமும் நீக்கி,
நேயரெமை ஆண்டு காத்தருள் வீரே.

கனவுகள் துயில்வழி காணுதல் வேண்டாம்
கனவிருள் பூதமும் கண்ணுறல் வேண்டாம்
சினமுறு பகைவர் முரணெலாம் வெல்வாய்
ஈனமும் உடலில் சேர்ந்திடாதருள்வாய்.

முதல்வரே தந்தாய் அருள் புரி வீரே
புதல்வரே கிறிஸ்துவே அருள்புரி வீரே
கதிரொளி வெல்லும் ஆவி யாரே
பதம் பணிந்து போற்றிடு வோமே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும். ஏனெனில், நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.

வறட்சி நிலையில் இறைவேண்டல்

திபா 143: 1-11

“திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்” (கலா 2:16அ).

ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்;
நீர் நம்பிக்கைக்குரியவராய் இருப்பதால்,
உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும்
மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.
தண்டனைத் தீர்ப்புக்கு உம் அடியானை இழுக்காதேயும்;
ஏனெனில் உயிர் வாழ்வோர் எவரும்
உமது திருமுன் நீதிமான் இல்லை.

எதிரி என்னைத் துரத்தினான்;
என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்;
என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல் என்னை
இருட்டில் கிடக்கச் செய்தான்.
எனவே என்னுள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று;
என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.
பண்டைய நாள்களை நான் நினைத்துக் கொள்கின்றேன்;

உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச்
சிந்தனை செய்கின்றேன்;
உம் கைவினைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்;
வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பதுபோல்
என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது.

ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்;
ஏனெனில் என் உள்ளம் உடைந்துவிட்டது;
என்னிடமிருந்து உம் முகத்தை
மறைத்துக்கொள்ளாதேயும்;
இல்லையெனில் படுகுழி செல்வோருள்
ஒருவராகி விடுவேன்.

உமது பேரன்பை வைகறையில்
நான் கண்டடையச் செய்யும்
ஏனெனில் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்;
நான் நடக்க வேண்டிய அந்த வழியை
எனக்குக் காட்டியருளும்;
ஏனெனில், உம்மை நோக்கி
என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

ஆண்டவரே! என் எதிரிகளிடமிருந்து
என்னை விடுவித்தருளும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.
உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில் நீரே என் கடவுள்; உமது நலமிகு ஆவி
என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக!

ஆண்டவரே! உமது பெயரின் பொருட்டு
என் உயிரைக் காத்தருளும்!
உமது நீதியின் பொருட்டு
என்னை நெருக்கடியினின்று விடுவித்தருளும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும். ஏனெனில், நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.


அருள்வாக்கு

1 பேது 5: 8-9அ

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.

சிமியோன் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.

லூக் 2: 29-32

கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.

இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி;
இதுவே உம் மக்களாகிய இஸ்ரையேலுக்குப் பெருமை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தால் இவ்விரவின் இருளை விரட்டியருளும். உமது பணியாளர்கள் அமைதியில் உறங்கவும் உமது திருப்பெயரில் மகிழ்வுடன் விழித்தெழுந்து புதிய நாளின் ஒளியைக் காணவும் கருணை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


ஆசியுரை

ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.


தூய மரியாவுக்குப் பாடல்

வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க.

தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுமைக் கூவி அழைத்தோம்.

கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.

அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.

உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.

கருணையின் உருவே தாய்மையின் கனிவே
இனிமையின் அன்னை மரியா போற்றி! ஆமென்.

அல்லது

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே
விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே
தண் கடல் மீதொளிர் விண்மீன் நீரே

வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை
ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்.

இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர்
ஈன்ற பின்னரும் கன்னியாய் நின்றீர்

வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர்
ஈனப் பாவிகள் எமக்கு இரங்குவீர். ஆமென்.

அல்லது

வானகம் ஆளும் அரசியே வாழ்க
வானவர் அனைவரின் தலைவியே வாழ்க
எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி
உதயம் ஆகிய வாயிலே வாழ்க.

மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.
ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.
எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி
பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல். ஆமென்

அல்லது

கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்

இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.



 ♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...