Friday, September 16, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (17-09-2022)

 

பொதுக்காலம் 24ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்



அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 35-37, 42-49

சகோதரர் சகோதரிகளே,

“இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?” என ஒருவர் கேட்கலாம். அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.

இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும். அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது. மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர் பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டு என்றால், ஆவிக்குரிய உடலும் உண்டு. மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார்.

தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.

எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 56: 9. 10-11. 12-13 (பல்லவி: 13b)

பல்லவி: உமது முன்னிலையில் நான் நடக்க, என் அடிகள் சறுக்காமல் காத்தீர் அன்றோ!

9
நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன். - பல்லவி

10
கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன்.
11
கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? - பல்லவி

12
கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.
13
ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15

அக்காலத்தில்

பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார்.

இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.’

இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள். முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


“கடவுள் என் பக்கம் இருக்கின்றார்”

பொதுக் காலத்தின் இருபத்து நான்காம் வாரம் சனிக்கிழமை

திருப்பாடல் 56: 9, 10-11, 12-13 (13b)

“கடவுள் என் பக்கம் இருக்கின்றார்”


கடவுளின் உடனிருப்பை உணர்ந்த கவி:


பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த மிகப்பெரிய கவி வில்லியம் கெளபர் (William Cowper). தன்னுடைய முப்பத்து இரண்டாவது வயதில் ஒருசில காரணங்களால் வாழ்க்கையே வெறுத்துப்போன இவர், ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளத் துணிந்தார். ஆனால், கடைசி நேரத்தில் இவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார்.

இன்னொரு நாள் கீழே ஒரு பெரிய கத்தியை வைத்து, அதன்மேல் குதித்துத் தற்கொலை செய்யத் துணிந்தார். அவ்வாறு இவர் கத்தியில் குதித்தபோது, கத்தி உடைந்து இவர் பிழைத்துக் கொண்டார். மற்றொருநாள் இவர் தூக்கில் தொங்கி இறக்க முடிவு செய்தபோது, தூக்குக் கயிறு அறுந்து பிழைத்துக் கொண்டார். இப்படியே இவர் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தபோதெல்லாம், ஏதோவோர் ஆற்றல் இவரை இறக்க விடாமல் தடுத்தது.

ஒருநாள் இவர் தற்செயலாகத் திருவிவிலியத்தைத் திறந்து பார்த்தபோது, “கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா?எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?” (உரோ 8: 35) என்ற இறைவார்த்தையைக் கண்டார். அப்போது இவருக்கு, ‘இயேசு என்னை இந்த அளவுக்கு அன்பு செய்யும்போது நான் எதற்குத் தற்கொலை செய்து கொள்ளவேண்டும்?’ என்று தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை அடியோடு விட்டார்.

ஆம், மிகப்பெரிய ஆங்கிலக் கவியான வில்லியம் கெளபர் ஆண்டவர் தன்னோடு இருக்கின்றார், அவர் தன்னை மிகுதியாக அன்பு செய்கின்றார் என்பதை உணர்ந்தவராய், புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, ஆண்டவர் தன் பக்கம் இருப்பதாய் உணர்ந்தவராய், “கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஒருவருடைய வளர்ச்சியைக் கண்டு அவரைப் பாராட்டுவதற்குப் பதில், அவர்மீது பொறாமை கொள்ளும் மனிதர்கள்தான் நம் நடுவில் ஏராளம்.

தாவீது போரிடச் சென்ற இடங்களிலெல்லாம் வெற்றி அடைந்ததைக் கண்டு, சவுல் அவரைப் பாராட்டி ஏற்றுக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவர் தாவீதின்மீது பொறாமைக் கொண்டு, அவரைக் கொல்வதற்காகத் துரத்திச் செல்கின்றார். அப்போது தாவீது காத்து மன்னன் ஆக்கிசிடம் அகப்படுகின்றார் (1சாமு 21: 10-15). அப்போது தாவீது ஆண்டவர் தன்னை ஆக்கிசிடமிருந்து மீட்டருளுமாறு பாடுகின்ற பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 56.

தாவீது எதிரிகளின் கையில் அகப்பட்டிருந்தாலும், ஆண்டவர் தன் பக்கம் இருந்து, தன்னை மீட்டருள்வார் என்பதை உறுதியாய் நம்பினார். அதனால்தான் அவர், “கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்” என்று பாடிவிட்டு, “கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்” என்கிறார்.

தாவீது ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கை மிகவும் அசாதரணமானது. அந்த நம்பிக்கையே அவருக்குத் திடமளித்தது; ஆபத்துகளிலிருந்து நாமும் தாவீதைப் போன்று ஆண்டவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 நம்பிக்கை என்பது இருளில் தெரியும் ஒளி.

 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விடவும் ஆண்டவரிடம் தஞ்சம் புகுவது நலம்.

 ஆண்டவர் தன் அடியார்களை ஆபத்துகளிலிருந்து காக்கின்றார்.

இறைவாக்கு:

‘கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?” (உரோ 8:31) என்பார் புனித பவுல். எனவே, நாம் தாவீதைப் போன்று, பவுலைப் போன்று ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


“விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்போம்”

பொதுக் காலத்தின் இருபத்து நான்காம் வாரம் சனிக்கிழமை

I 1 கொரிந்தியர் 15: 35-37, 42-49
II லூக்கா 8: 4-15

“விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்போம்”


பழங்காலத்து நாணயம்:


சிறுவன் ஒருவன் சாலையோரமாக நடந்து போய்க்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு பழங்காலத்து நாணயத்தைக் கண்டெடுத்தான். அதை அவன் தண்ணீர் விட்டுக் கழுவிப் பார்த்தும், அதில் பொறிக்கப்பட்டிருந்த உருவம் சரியாகத் தெரியவில்லை.

அப்போதுதான் அவனுக்கு, வேதியியல் பாட வகுப்பில் அவனுடைய ஆசிரியர் ‘நைட்ரிக் அமிலத்தை ஒரு பொருளில் ஊற்றினால் அதிலுள்ள துருவெல்லாம் நீங்கிவிடும்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அவன் தன் ஆசிரியர் சொன்னது போன்று செய்ய, துருவேறியிருந்த நாணயத்திலிருந்து துரு விலகவே அதில் பொறிக்கப்பட்டிருந்த, முன்பு அந்த நாட்டை ஆட்சி செய்த அரசியின் உருவம் தெளிவாய்த் தெரிந்தது. அதை அவன் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தில் கொடுக்க அவனுக்கு அங்கிருந்தவர்கள் நிறையப் பணம் தந்தார்கள்.

ஆம், துருவேறிய நாணயத்திலிருந்து துருவை நீக்கியவுடன் எப்படி அதிலிருந்த அரசியின் உருவம் தெளிவாய்த் தெரிந்ததோ, அப்படி நாம் நம்மிடம் இருக்கும் மண்ணைச் சார்ந்தவரின் சாயலை அப்புறப்படுத்திவிட்டு, விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருந்தால் மிகுந்த பலன் தருவோம். இதை இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

கொரிந்து நகரில் இருந்த ஒருசிலர் உயிர்த்தெழுதலை மறுத்து வந்த சூழலில், பவுல் அவர்களுக்கு விளக்கம் அளிக்கும்போது, மனித இயல்புகொண்ட உடல், ஆவிக்குரிய உடல் என்று இரு வகையான உடல்களைப் பற்றிப் பேசுகின்றார்.

மனித இயல்பு கொண்ட உடலைக் கொண்டிருந்தவர் ஆதாம். இவர் கடவுளின் சாயலைத் தாங்கியிருந்தாலும் (தொநூ 1:26), கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்காததால் இறந்தார். ஆனால், புதிய ஆதாமாகிய இயேசு ஆவிக்குரிய உடலைக் கொண்டு பாவத்தை வென்றெடுத்து உயிர்த்தெழுந்தார். அவரைப் போன்று பாவத்தை வென்று, நாம் கடவுளின் சாயலைக் கொண்டிருக்கவேண்டும் என்பதுதான் பவுல் முதல் வாசகத்தின் வழியாக நமக்கு விடுக்கும் அழைப்பாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் இயேசு விதைப்பவர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இந்த உவமையின் வழியாக இயேசு, ஒருவர் மனித இயல்பைக் கொண்டவராய் வாழாமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டவராய்க் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் மிகுந்த பலன் தரலாம் அப்போது அவர் கடவுளின் சாயலைக் கொண்டிருக்கலாம் என்கிறார்.

ஆம், கடவுள் தனது வாழ்வளிக்கும் வாக்கினைக் கொடையாகத் தந்திருக்கின்றார். இதன்படி நாம் வாழ்கின்றபோது மிகுந்த பலன் தருவோம்; கடவுளின் சாயலையும் கொண்டிருப்போம் என்பது உறுதி

சிந்தனைக்கு:

 கீழ்ப்படியாமை அழிவுக்கு இட்டுச் செல்லும்; கீழ்ப்படிதல் வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

 கடவுளின் சாயலைக் கொண்டிருக்கும் நாம், அதை ஒருபோதும் நம்முடைய பாவத்தால் இழப்பது நல்லதன்று.

 கடவுள் நாம் மிகுந்த கனி தரவேண்டும் என்றே விரும்புகின்றார்.

இறைவாக்கு:

‘உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5:16) என்பார் இயேசு. எனவே, நாம் கடவுளின் சாயலைக் கொண்டவர்களாய், அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து, மிகுந்த கனிதந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


புனித ராபர்ட் பெல்லார்மின் - ஆயர், மறைவல்லுநர்

வி.நினைவு
முதல் வாசகம்

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக ஞானத்தின்மீது அன்புகொண்டேன்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-10, 15-16

அக்காலத்தில் சாலமோன் மன்றாடியது:

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்புகொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.

கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும், நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும், கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி, ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே. நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம். அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 9b)

பல்லவி: ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை நீதியானவை.

7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

10
பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அதிகாரத்தோடு அவர்களுக்கு இயேசு கற்பித்தார்.

 மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...