Sunday, September 18, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (19-09-2022)

 

பொதுக்காலம் 25ஆம் வாரம் - திங்கள்


முதல் வாசகம்



நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 3: 27-35

உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே. அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, ‘போய் வா, நாளைக்குத் தருகிறேன்’ என்று சொல்லாதே.

அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா? ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே. வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.

ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவு கொள்கின்றார். பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும். செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்; ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்; அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 15: 2-3a. 3bc-4. 5 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

2
மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்;
3a
தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி

3bc
தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4
நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். - பல்லவி

5
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 16-18

அக்காலத்தில்

மக்கள் கூட்டத்தை நோக்கி இயேசு கூறியது: “எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.

ஆகையால், நீங்கள் எத்தகைய மன நிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அறிவின் நோக்கம்


'எல்லாவற்றுக்கும் மேலாக, உனக்கு நீயே பொய்யுரைக்காதே! தனக்குத்தானே பொய்யுரைத்து, அந்தப் பொய்க்குச் செவிகொடுக்கும் ஒருவர் காலப்போக்கில் தனக்குள்ளே உள்ள உண்மையையும், தனக்கு வெளியே உள்ள உண்மையையும் ஆய்ந்தறிய இயலாமல்போய்விடுவார். இவ்வாறாக, தன்மேல் உள்ள மதிப்பையும் பிறர்மேல் உள்ள மதிப்பையும் இழந்துவிடுவார். மதிப்பை இழந்துவிடுவதால் அன்பு செய்வதும் அவருக்கு இயலாமல் போய்விடும்!'


'கரமசோவ் சகோதரர்கள்' (The Brothers Karamazov) என்னும் நாவலில் ரஷ்ய எழுத்தாளர் ப்யோடோர் டோஸ்டாவ்ஸ்கி, மடாதிபதி ஒருவரைச் சந்திக்க சகோதரர்கள் கூடியிருக்கும் சூழலில் எழுதுகின்றார்.


ஒருவர் தன் இயல்பு என்ன என்பதை மறந்து, பொய்யான ஓர் இயல்பைப் பற்றிக்கொண்டு வாழ்வது தவறு என்பதும், பல நேரங்களில் அறிவு என நாம் எண்ணுவது உண்மையிலிருந்து முற்றிலும் மாறுபடக் கூடியது என்பதும் இதன் பொருள் ஆகும்.


இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் இயேசு விளக்கு உவமையைக் குறிப்பிடுகின்றார். விளக்கை ஏற்றும் ஒருவர் அதைப் பாத்திரத்தால் மூடிவைத்தால், அல்லது கட்டிலின் அடியில் வைத்தால், அவர் விளக்கின் இயல்பை முழுமையாக அறியாதவராக இருக்கின்றார். அல்லது தான் பெற்ற அறிவுதான் சரி என்ற நிலையில் அப்படிச் செய்கின்றார். ஆனால், விளக்கு ஏற்றப்படுவதன் நோக்கம் விளக்குத் தண்டின்மீது வைத்து அனைவரும் ஒளி பெறுவதற்கே. இந்த உண்மையை அவர் மறந்து தன் அறிவின்படி மட்டும் செயல்பட்டால் அவர் தனக்குத்தானே பொய்யுரைப்பவராக மாறுகின்றார்.


எடுத்துக்காட்டாக, ஒர் அருள்பணியாளரின் இயல்பு அல்லது நிலை என்பது அனைவருக்கும் ஒளிதருகின்ற விளக்கு போல இருப்பது. ஆனால், அவர் தன் ஒளியைத் தனக்குத்தானே சுருக்கிக் கொண்டால், அல்லது தன் தவறான முதன்மைகள் என்னும் பாத்திரங்களால் அவற்றை மூடிக்கொண்டால், அவர் தனக்குத்தானே பொய்யுரைப்பவராக மாறுகின்றார். ஏனெனில், அவர் தன் இயல்பை மறுதலிக்கின்றார். 


தொடர்ந்து இயேசு, நம் மனநிலை குறித்துக் கவனமாக இருக்குமாறு நமக்குச் சொல்கின்றார். நீதிமொழிகள் நூலில் நாம் இதையொத்த அறிவுரை ஒன்றை வாசிக்கின்றோம்: 'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (4:23). இதயத்தில் எழும் எண்ணங்கள் பற்றி நாம் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பல நேரங்களில் நம் எண்ணங்கள் கட்டுக்கடங்காத குதிரைகள் போல இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இரவில் நாம் தூங்கும்போதும் நம் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நம் எண்ணங்கள்தாம் உண்மை என நாம் நினைக்கின்றோம். ஆனால், பல நேரங்களில் நம் எண்ணங்கள் நம்மை ஏமாற்றிவிடுகின்றன. ஆக, நம் எண்ணங்களைப் பற்றி மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். அதீத எண்ணங்கள் நம் அனுமதி இல்லாமல் பிறப்பதில்லை. நாம் அவற்றுக்குத் தீனி போட போட அவை எண்ணெய் ஊற்றப்பட்ட திரிபோல எரிய ஆரம்பிக்கின்றன. 


இறுதியாக, இயேசு, 'உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென அவர் நினைப்பது எடுத்துக்கொள்ளப்படும்' என எச்சரிக்கின்றார். இல்லாத நிலையில் இருப்பது கூடப் பிரச்சினையில்லை. மாறாக, 'தமக்கு உண்டென நினைத்துக்கொண்டு' ஒரு போலி இருத்தல் நிலையில் இருப்பதும் தனக்குத்தானே பொய்யுரைப்பதே. போலி இருத்தல் மனநிலையைக் கொண்டிருப்பவர் புதிதாக எதையும் தேடமாட்டார். ஏனெனில், தன்னிடம் எல்லாம் இருப்பதாக தன் மூளைக்குச் சொல்லிக்கொள்வார். அல்லது அவருடைய மூளை அவருக்குச் சொல்லி அவரை ஏமாற்றும்.


மொத்தத்தில், இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு நாமே உண்மையாக இருக்க நம்மை அழைக்கின்றது. நம் இயல்பு தண்டில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்கு போல எரிய வேண்டும். தண்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு தன் பாதுகாப்பற்ற தன்மையை உணர வேண்டும். பாத்திரத்தின் பாதுகாவலும், கட்டிலுக்கு அடியில் உள்ள பாதுகாவலும் தனக்குப் போதும் என நினைத்தால் அது தன் இயல்பை மறுதலிப்பதோடு, பாத்திரத்திற்கும் கட்டிலுக்கும் சேதம் விளைவித்துவிடும்.


நாம் நம்மைப் பற்றிப் பெற்றுள்ள அறிவு உண்மையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லட்டும். அறிவு என்பது வெறும் வழியே. உண்மை என்பதே இலக்கு. அந்த இலக்கே நமக்கு வாழ்வு தரக்கூடியது. 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்' என்று சொன்ன இறைமகன் இயேசு இப்பயணத்தின் வழியாகவும், வழித்துணையாகவும் நமக்குத் திகழ்வாராக!


அருள்திரு யேசு கருணாநிதி

மதுரை உயர்மறைமாவட்டம்


யாரெல்லாம் ஆண்டவரின் இல்லத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர்?

துணிவோடு உண்மை பேசுபவன்:


மலையடிவாரத்தில் ஒரு சிறிய குடிசை அமைத்து, அங்கேயே வாழ்ந்த ஒரு துறவியிடம் பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் வந்து, ஆலோசனையும் அறிவுரையும் பெற்றுச் சென்றார்கள்.

ஒருநாள் அவரிடம் ஓர் இளைஞன் வந்தான். அவன் தன் நண்பன் தன்னுடைய தவற்றை முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டான் என்ற வருத்தத்தில் இருந்தான். அதனால் அவன், “யார் உண்மையான நண்பன்?” என்றொரு கேள்வியைக் கேட்டான். துறவி அவனைச் சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்தார். பின்னர் அவர் அவனிடம், “பொய்யாகப் பேசித் திரியும் மனிதர்கள் நடுவில், உண்மையை மிகத் துணிவோடு பேசுபவனுக்குப் பெயர்தான் நண்பன்” என்றார்.

துறவியின் பதில் வந்திருந்த இளைஞனுக்குத் தன்னுடைய நண்பன் பொய்யானவன் அல்லன், அவன் உண்மையானவன் என்பதைத் தெளிவாக உணர்த்தியது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், உளமார உண்மை பேசுபவரும், இன்னும் ஒருசிலர் மட்டுமே ஆண்டவரின் இல்லத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர்கள் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

பெலிஸ்தியரிடமிருந்த உடன்படிக்கையைப் பேழையை தாவீது அரசர் எருசலேம் திருநகருக்குக் கொண்டு வந்தார் (2 சாமு 6: 12-17). இப்பின்னணியில் பாடப்பட்டதுதான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 15.

கேள்விக்குப் பதில் என்ற அடிப்படையில் இருக்கும் திருப்பாடல் 15, ஆண்டவரின் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? என்ற கேள்விக்குப் பதில் தருவதாய் இருக்கின்றது. தாவீது இப்பாடலைப் பாடியபோது எருசலேம் திருக்கோயில் கட்டி எழுப்பப்பட வில்லை. அதனால் அவர் ஆண்டவரின் கோயில் என்று சொல்வதை விடவும் ஆண்டவரின் கூடாரம் என்றே சொல்கின்றார்.

ஆண்டவரின் கூடாரத்தில் தகுதியுள்ளவர் யார் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டுத் தாவீது, மாசற்றவர், நேரியவற்றைச் செய்பவர், உளமார உண்மை பேசுபவர் என்று பன்னிரு வகையான மனிதர்களை வரிசைப்படுத்துகின்றார். இத்தகையோராய் வாழ்கின்றபோது ஒருவர் என்றும் நிலைத்திருப்பார் என்ற உண்மையையும் தாவீது எடுத்துரைக்கின்றார்.

இன்றைக்குப் பலர் உள்ளத்தில் பகைமையும் வெறுப்பையும் வைராக்கியத்தையும் தவறான எண்ணங்களையும் வைத்துக்கொண்டு ஆண்டவரின் இல்லத்திற்கு நுழைகின்றார்கள். இத்தகையோர் எழுப்புகின்ற இறைவேண்டலுக்கு இறைவன் பதில் தருவதில்லை என்று யாக்கோபு மிகத் தெளிவாகக் கூறுகின்றார் (யாக் 4:3). ஆதலால் நாம் தகுதியான உள்ளத்தோடு ஆண்டவரின் இல்லத்திற்குள் நுழைந்து, அவரது ஆசியைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:

 தூயவரின் இல்லத்திற்குள் தூய்மையாய்ச் செல்வதே முறை
 கடவுள் ஒவ்வொருவரிலும் குடிகொண்டிருக்கின்றார் என்பதால், அவர்களை மதிக்கவும் அன்பு செய்யவும் கற்றுக் கொள்ளவேண்டும்.
 உள்ளத்தில் அன்பில்லை என்றால் அங்கு ஆண்டவர் இல்லை.

இறைவாக்கு:

‘இதோ கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது’ (திவெ 21: 2) என்கிறது திருவெளிப்பாடு நூல். எனவே, கடவுள் நம் நடுவில் குடிகொண்டிருக்க, நாம் தூயோராய், மாசற்றவராய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


நன்மையைச் செய்ய மறவாதே!

முப்பது ஆண்டுகளாகப் சமூகப் பணி:


நன்மை செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருபவர் மதுரையைச் சேர்ந்த எழுபது வயது நிரம்பிய சின்னப்பிள்ளைப் பெருமாள்.

இவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ‘களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழு’ என்றோர் அமைப்பை நிறுவி, அதன்மூலம் கிராமப்புறப் பெண்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டு வருகின்றார். தவிர, இவர் கந்துவட்டி, மதுவிலக்கிற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றார். இவரது அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் நடுவில் பலவற்றையும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

இவரது இந்தப் பணிகளைப் பாராட்டி, 1999 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், தன்னைவிட வயதில் சிறியவராக இவர் இருந்தாலும், இவருடைய காலில் விழுந்து ஆசி பெற்றார். 2019 ஆம் ஆண்டு மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும், இன்னும் பல விருதுகளும் இவருக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. இவ்வளவு விருதுகளைப் பெற்ற பிறகும் இவர் கிராமப்புறப் பெண்களின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து உழைத்து வருகின்றார்.

ஆம், தான் ஒரு சாதாரண பெண்மணியாக இருந்தாலும், தன்னாலும் பலருக்கு நன்மைகளைச் செய்ய முடியும் என்று முப்பது ஆண்டுகளுக்கு மேலாகச் சமூகப் பணியைச் செய்து வரும் சின்னப்பிள்ளை பெருமாள் நமக்கெல்லாம் ஒரு சிறந்த முன்மாதிரி. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நம்மால் நன்மை செய்யக் கூடுமாயின், அதைச் செய்ய மறக்க வேண்டாம் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தீமை செய்வது மட்டுமல்ல, நன்மை செய்யாதிருப்பதும் பாவமே என்பர். இது முற்றிலும் உண்மை. நீதிமொழிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுவோர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே” என்கிறது. நாம் ஏன் நன்மை செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை இன்றைய நற்செய்தி வாசகம் தருகின்றது.

நற்செய்தியில் இயேசு, உலகிற்கு ஒளியாக இருக்கவேண்டிய நாம், நமது ஒளியை மூடி மறைத்து வைக்கக்கூடாது, மாறாக, அது எல்லாருக்கும் தெரியும் வகையில் எழுந்து ஒளி வீசவேண்டும் என்கிறார். கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் பலவாறாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். இதனால் ஒருசிலர் கிறிஸ்துவின் கொண்ட தங்கள் நம்பிக்கையை மறைத்து வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில்தான் லூக்கா நற்செய்தியாளர் இயேசு சொல்வதாய், “எவரும் விளக்கை ஏற்றி, அதை ஒரு பாத்திரத்தில் மூடுவதில்லை...” என்கிறார்.

நாம் உலகின் ஒளியாய் இருக்கும்போது, எல்லாருக்கும் நன்மை செய்ய முன்வரும்போது இயேசு சந்தித்த எதிர்ப்புகளையும் துன்பங்களையும் நாமும் எதிர்கொள்ளலாம். அத்தகைய வேளையில், நாம் மனம் தளர்ந்து போய்விடக் கூடாது. ஏனெனில், இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24:13)

சிந்தனைக்கு:

 உலகம் முடியும்வரை பிரச்சனைகள் இருந்துகொண்டுதான் இருக்கும்; ஆனால், உலகம் முடியும்வரை கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை மறக்க வேண்டாம்.

 எழுந்து ஒளிவீசுவதும் இயேசுவின் சீடர்களுக்கு அழகு.

 நன்மை செய்யாத நாள் என்றொரு நாள் நம்முடைய வாழ்வில் இருக்கக் கூடாது.

இறைவாக்கு:

‘இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்’ (திப 10:38) என்கின்றது இறைவார்த்தை. எனவே, நாம் இயேசுவை நம்முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து, எங்கும் நன்மை செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...