Wednesday, September 21, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (22-09-2022)

 

பொதுக்காலம் 25ஆம் வாரம் - வியாழன்



முதல் வாசகம்

ஞாயிறு தோன்றுகின்றது; மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2-11

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? ஒரு தலைமுறை மறைகின்றது; மறு தலைமுறை தோன்றுகின்றது; உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது. . ஞாயி-று தோன்றுகின்றது; . ஞாயி-றும் மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது; பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது.

எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன; எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை; மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன.

அனைத்தும் சலிப்பையே தருகின்றன; அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை; எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை.

முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்; முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. ஏதேனும் ஒன்றைப் பற்றி, ‘இதோ, இது புதியது’ என்று சொல்லக் கூடுமா? இல்லை. அது ஏற்கெனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே! முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை; அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப் போவதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
4
ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

5
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6
அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி

12
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13
ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

அக்காலத்தில்

நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், “இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர். வேறு சிலர், “எலியா தோன்றியிருக்கிறார்” என்றனர். மற்றும் சிலர், “முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்” என்றனர்.

ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


“உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்”

இயேசுவால் தொடப்பட்ட இளைஞர்:


மிகச் சிறந்த நீச்சல் வீரன் அவன்; ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அவனுக்குக் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த நண்பன் ஒருவன் இருந்தான். அந்த நண்பன் கிறிஸ்துவைப் பற்றி அடிக்கடி அவனிடம் சொல்லி வந்தான். வழக்கமாக மதத்தைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ யார் பேச்சை எடுத்தாலும், அவர்களது வாயை அடைத்துவிடும் அவன், தன் நண்பன் கிறிஸ்துவைப் பற்றிப் பேசியபோது மட்டும் பொறுமையாகக் கேட்டான்.

ஒருநாள் அவன் தேசிய அளவில் நடைபெறவிருந்த நீச்சல் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஒரு நீச்சல் குளத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தான். அது இரவு நேரம். அவன் தன்னுடைய பயிற்சியை முடித்துவிட்டு, நீச்சல் குளத்தை விட்டு வெளியே வந்து, தன் இரு கைகளையும் விரித்து வைத்தான். அவ்வாறு செய்யும்போது அவன் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தான். அப்போது விளக்கொளியில் அவனுக்கு பின்னால் இருந்த அவனுடைய நிழல் சிலுவை போன்று இருந்தது கண்டு அவன், இயேசு அவரது பேரன்பினால் தன்னை ஆட்கொண்டதாய் உணர்ந்தான். இதற்குப் பின் வந்த நாள்களில் அவன் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழத் தொடங்கினான்.

ஆம், இறை நம்பிக்கை இல்லாத இளைஞன் இயேசுவின் பேரன்பினால் ஆட்கொள்ளப்பட்ட பிறகு புதிய மனிதனாக வாழத் தொடங்கினான். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் மோசே, “காலைதோறும் உமது பேரன்பினால் எங்களுக்கு நிறைவளியும்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஒரு மனிதனுக்கு உண்மையான மகிழ்ச்சியை தருவது அவன் சேர்த்து வைக்கும் செல்வமா? நிச்சயமாக இல்லை. ஏனெனில், மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது (லூக் 12: 15) என்று இயேசு மிகத் தெளிவாகக் கூறுகின்றார். செல்வம்தான் ஒரு மனிதனுக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரவில்லை. அதிகாரமாவது ஒரு மனிதனுக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருமா? என்றால், அதுவும் இல்லை. ஏனெனில் அதிகாரத்தில் இருக்கும் பலர் எப்போது தங்கள் அதிகாரம், அல்லது பதவி தங்களை விட்டுப் போகுமோ? என்ற ஒருவிதமான அச்சத்திலேயே இருக்கின்றார்கள். இப்படி நிலையற்றதாய், நிம்மதியற்றதாய் இருக்கின்றது மனித வாழ்க்கை.

இதையே இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 90 இல் ஆண்டவரின் அடியாரான மோசே, “மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கிறீர். மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள் என்கிறீர்” என்கிறார். இப்படி ஒன்றுமே இல்லாத மனித வாழ்விற்குக் கடவுளின் பேரன்புதான் அர்த்தத்தைத் தரும் என்கிற பொருளில் அவர், “காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்” என்கிறார்.

திருப்பாடல்கள் 39, 49 ஐ ஒத்துப்போகும் திருப்பாடல் 90 கடவுளின் பேரன்புதான் மனித வாழ்விற்கு ஓர் அர்த்தத்தைத் தரும் என்கிற உண்மையாய் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. எனவே, நமக்கு நிறைவாழ்வளிக்கும் ஆண்டவரை நாடித் தேடுவோம்.

சிந்தனைக்கு:

 நிலையற்ற இந்த வாழ்க்கையில் நிலையானதை நாடித் தேடுவோம்.

 உலக செல்வத்தை முறையாகப் பயன்படுத்தி ஒப்பற்ற செல்வமாம் இயேசுவை அடைவோம்.

 ஆண்டவரிடம் சரணடைவோம்; அவரே நமது ஆற்றலின் ஊற்று.

இறைவாக்கு:

‘ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைதுள்ளது’ (திபா 33:5) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நம்மைத் தமது பேரன்பால் ஆட்கொண்டிருக்கும் ஆண்டவரிடம் நம்மை முற்றிலுமாக ஒப்படைத்து, அவருக்கு உகந்த வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


குற்ற உணர்விலிருந்து வெளியே வா

உறுத்துவது கோலிக்குண்டு அல்ல, குற்ற உணர்வு:


அமலும் ஜோவும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் அவர்கள் இருவருக்குள்ளும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அமல் தன்னிடமுள்ள மிட்டாய்களை ஜோவிடமும், ஜோ தன்னிடமுள்ள கோலிக்குண்டுகளை அமலிடமும் கொடுப்பதுதான் அந்த ஒப்பந்தம்.

ஒப்பந்தப்படி அமல் தன்னிடமிருந்த மிட்டாய்களை எல்லாம் ஜோவிடம் கொடுத்தான். பதிலுக்கு ஜோ தன்னிடமிருந்த கோலிக்குண்டுகளை அமலிடம் கொடுக்கவேண்டும். ஆனால், அவன் தன்னிடமிருந்த எல்லாக் கோலிக்குண்டுகளையும் அமலிடம் கொடுக்காமல், அதில் நான்கு கோலிக்குண்டுகளைத் தன்னுடைய கால் சட்டைப் பையில் மறைத்து வைத்துக்கொண்டு, மீதத்தை அவனுக்குக் கொடுத்தான்.

அன்றிரவு ஜோ தூக்கம் வராமல், படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான். அதைப் பார்த்துவிட்டு அவனுக்குப் பக்கத்தில் படுத்திருந்த ஜோவின் அக்கா அவனிடம், காரணத்தைக் கேட்டபோது, அன்று காலையில் நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னான். அப்போது அவனுடைய அக்கா, “உன்னைத் தூங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருப்பது கோலிக்குண்டு அல்ல, உன்னுடைய குற்ற உணர்ச்சி” என்றாள். இதனால் மறுநாள் காலையில் ஜோ தான் மறைத்து வைத்திருந்த நான்கு கோலிக்குண்டுகளை அமலிடம் கொடுத்தான். அன்றிரவு அவன் நிம்மதியாகத் தூங்கினான்.

ஆம், ஜோ தன் நண்பன் அமலுக்குக் கொடுக்க வேண்டிய கோலிக்குண்டுகளைக் கொடுக்காததால், குற்ற உணர்ச்சியினால் நிம்ம்மதியாகத் தூங்க முடியவில்லை. இன்றைய நற்செய்தியில் ஏரோது இயேசுவின் பெயரைக் கேட்டதும் குற்ற உணர்ச்சியினால் தவிக்கின்றான். அவனுடைய அந்தக் குற்ற உணர்சிக்குக் காரணம் என்ன, குற்ற உணர்ச்சியிலிருந்து எவ்வாறு நாம் வெளிவருவது என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஏரோது தன் சகோதரன் பிலிப்பின் மனைவி ஏரோதியாவோடு வாழ்ந்து வந்தான். இதைத் தவறு என்று சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான். அதனால் அவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களை இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கச் சொல்லியிருந்தால், மக்கள், ‘இறந்த யோவான் உயிருடன் எழுப்பட்டார்” என்று பேசிக் கொள்கின்றார்கள். இதை அறிய வரும் ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று அவனைக் காண வழி தேடுகின்றான்.

ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஏரோது மக்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கவேண்டும். அவன் அவ்வாறு இல்லாததால் திருமுழுக்கு யோவான் அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார் .அதை முன்னிட்டாவது அவன் தன் தவற்றைத் திருத்தியிருக்கலாம்; அவனோ தன் தவற்றைத் திருத்திக் கொள்ளாமல், திருமுழுக்கு யோவானைக் கொன்று போட்டு மேலும் தவறு செய்கின்றான். அதன்பிறகு இயேசுவைப் பற்றிக் கேள்விப்படும் அவன் அவரிடம் சென்று , சக்கேயுவைப் போன்று தன் பாவத்தை அறிக்கையிட்டு மனம்மாறினானா? என்றால் அதுவும் இல்லை. இப்படி அவன் தவறைத் திருத்திக் கொள்ளாமல், குற்ற உணர்ச்சியோடு வாழ்கின்றான்.

சபை உரையாளர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், “வீண், முற்றிலும் வீண்” என்கிறார். சாலமோன் அரசரால், அவருடைய வாழ்வின் இறுதிக் காலகட்டத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் சபை உரையாளர் நூல், அவருடைய வாழ்வில் ஏற்பட்ட வெறுமையை உணர்த்துகின்றது. ஆம், கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை வாழாமல், அதற்கு முற்றிலும் எதிரான வாழ்க்கை வாழ்ந்தால் எல்லாமே வீண்தான். எனவே, நாம் பாவத்தை விட்டுவிட்டுக் கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 பாவம் ஒரு நச்சுக் கிருமி, அது ஒருவரின் ஆன்மாவை முற்றிலும் அழித்து விடும்.

 பாவத்தை அறிக்கையிட்டுவிட்டு, புதியதொரு வாழ்க்கை வாழ்வதுதான் கடவுளுக்கு உகந்தது.

 திருஅவை ஒப்புரவு அருளடையாளம் என்ற உயர்ந்த ஓர் அருளடையாளத்தைத் தந்திருக்கின்றது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் குற்ற உணர்ச்சியால் வேதனைப்பட வேண்டிய தேவையில்லை.

இறைவாக்கு:

‘நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்’ (மத் 3:8) என்பார் திருமுழுக்கு யோவான். எனவே, நாம் தவறு செய்ய நேர்ந்தாலும் அதை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, பாவ மன்னிப்புப் பெற்று, புதியதொரு வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...