Wednesday, September 28, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (29-09-2022)

 

தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள்

விழா

முதல் வாசகம்



பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 12: 7-12a

விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது; அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை. இதன் பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 138: 1-2a. 2b-3. 4-5 (பல்லவி: 1c)

பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

1
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a
உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். - பல்லவி

2b
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3
நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். - பல்லவி

4
ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.
5
ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 103: 21

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.

 யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

அக்காலத்தில்

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மறையுரைச் சிந்தனை

புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், முதன்மை வானதூதர்கள் - செப்டம்பர் 29


“Angels” என்ற புத்தகத்தில் சொல்லப்படக்கூடிய நிகழ்ச்சி இது. 1998 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்துவந்த ஜெஸ்சி, சாரா மற்றும் மரியா என்ற மூன்று இளம்பெண்களும் விடுமுறைதினம் ஒன்றில் தங்களுக்கு முன்பு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஒருவரைச் சந்திக்க வாகனத்தில் அதிகாலையிலே புறப்பட்டனர்.

போகிற வழியில் கல்லறை ஒன்று இருந்தது. அதிலே சில தினங்களுக்கு முன்புதான் ஜெஸ்சியின் சகோதரன் இறந்து அடக்கம் செய்யப்பட்டிருந்தான். மற்ற இருவரையும் காரிலே இருக்கச் சொல்லிவிட்டு, ஜெஸ்சி மட்டும் கல்லறைக்குச் சென்று, தன் சகோதரன் கல்லறை முன்பாக நின்று ஜெபித்துவிட்டுத் திரும்பினாள். அவள் காரில் ஏறியதும் மீண்டும் அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஆனால் பயணம் தொடங்கிய சிறிது நேரத்திற்குள் கார் ஒரு சிறுகுழியில் இறங்கிவிட்டது. வண்டியை எவ்வளவோ முன்னும், பின்னும் தள்ளிப்பார்த்தும், அவர்களால் வண்டியை வெளியே கொண்டுவர முடியவில்லை. அடர்ந்த காடுவேறு அது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். மூன்று பேருமே, “யாராவது இங்கே இருந்தால் எங்களுக்கு உதவுங்கள்” என்று சத்தமாகக் கத்திப் பார்த்தார்கள்.

அப்போது ஒரு மனிதர் வெண்ணிற ஆடையில் அங்கு வந்தார். அவரிடத்தில் தங்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்ல அவர் ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று சொல்லிவிட்டு, கார் சாவியை வாங்கிகொண்டு, உள்ளே ஏறி, வண்டியை ஒரு அழுத்து அழுத்தினார். அடுத்த நொடியில் வாகனம் வெளியே வந்தது. அவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. எவ்வளவு நேரம் முயன்றும் முடியாததை, இவர் ஒரே நொடியில் செய்துவிட்டாரே என்று அவருக்கு நன்றி சொன்னார்கள். அவரும் பதிலுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமாய் மறைந்துபோனார். அவர் எந்த வழியில் போனார் என்ற காலடித் தடம்கூட இல்லாதது கண்டு, அவர்கள் இன்னும் மலைத்துபோய், வானதூதர் ஒருவர் தான் நம்மைக் காப்பாற்றி இருக்கிறார் என்று நம்பி, தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

இன்று திருச்சபையானது விண்ணக அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், ரஃபேல் ஆகியோரின் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. தூதர்கள் நமக்கு எப்போதும் இறைவனின் திருமுன் நின்றுகொண்டு நமக்காக பரிந்துபேசுபவர்கள்; நமக்கு என்றும் துணையாய் இருப்பவர்கள்; துன்பத்திலிருந்து காப்பவர்கள். மேலும் கடவுள் படைத்தவைகளில் சிறந்தவை எனப் போற்றப்படுவோர் வானதூதரும், மனிதரும் மட்டும்தான்.

விவிலியத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை வானதூதர்களின் பணிகளை பல இடங்களில் நாம் காணலாம். இன்றைய நாளில் சிறப்பாக இறைவன் திருமுன் நின்று பணிபுரியும் ஏழு வானதூதர்களில் முதன்மையான மூன்று தூதர்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக மிக்கேல் அதிதூதர்: மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளுக்கு நிகர் யார்?'' என்பது பொருள். இறைவனுக்கு எதிராக சிந்தித்த லூசிபரையும், அவன் தோழர்களையும் அதிதூதர் மிக்கேல் நல்லதூதர்களை தன்னோடு இணைத்துக்கொண்டு அவர்களை நரகத்தில் வீழ்த்தினார். அதனால் அவர் தலைமை தூதர் ஆனார். இவரைக் குறித்து தானியேல் நூலிலும், திருவெளிப்பாடு நூலிலும் படிக்கின்றோம். இவரே நம் திருத்தந்தையின் (போப்பாண்டவர்) காவல் தூதரும், நற்கருணையின் பாதுகாவலரும் ஆவார்.

இரண்டாவதாக கபிரியேல் அதிதூதர்: கபிரியேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளின் ஆற்றல்'' என்பது பொருள். ஆறுதல் தரும் செய்திகளை விண்ணிலிருந்து மண்ணகத்திற்கு கொண்டுவருபவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை சக்கரியாவுக்கும், இறைமகன் இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளுக்கும் அறிவித்தவர். அதனால் இவர் நற்செய்தியின் தூதர் எனவும் அழைக்கப்படுகிறார்.

மூன்றாவதாக ரஃபேல் அதிதூதர்: ரஃபேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுள் குணமளிக்கிறார்'' என்பது பொருள். இவரே நோயாளிகளுக்கும், பயணிகளுக்குமான பாதுகாவலராக இருக்கிறார். இவரைக் குறித்து தோபித்து நூல் முழுமைக்கும் வாசிக்கின்றோம். பெரிய தோபித்துவுக்கு பார்வை கிடைக்கவும், அவருடைய மகனுக்கு வழித்துணையாக இருந்து நல்ல மனைவி கிடைக்கக் காரணமாக இருந்தவர் இவரே.

ஆதலால் இறைவனின் திருமுன் நின்று அவருக்குப் பணிபுரிந்தும், நமக்கும் தீமையை வெல்வதற்கான ஆற்றலையும், ஆறுதல் செய்தியையும், குணத்தையும் தரும் இத்தூதர்களைப் போன்று நாமும் இறைவனுக்கு மட்டுமே பணிபுரிந்து வாழ்வோம். இறையருள் பெறுவோம்.

“நீர் செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார். (திபா 91:11).

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


மறையுரைச் சிந்தனை

புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், முதன்மை வானதூதர்கள் - செப்டம்பர் 29


கி.பி.404 ஆண்டு சிபான்றோ நாட்டு மக்கள் பக்கத்து நாட்டவரிடமிருந்து பல்வேறு விதமான அச்சுறுத்தல்களைச் சந்தித்தார்கள். எப்போது வேண்டுமானாலும் தங்கள் நாட்டின்மீது பக்கத்து நாட்டவரால் போர்மூளும் என்றதொரு நிலை ஏற்பட்டது. இதனால் சிபான்றோ நாட்டு மக்கள் தங்கள் ஆயரை அணுகி, தூய மிக்கேல் அதிதூதரிடம் தங்களுக்காக மன்றாடும்படி கேட்டுக்கொண்டார்கள். அதன்படி ஆயரும் சிபான்றோ மக்களுக்காக தூய மிக்கேல் அதிதூதரிடம் பரிந்துபேசினார்.

அடுத்தநாள் காலை எதிரி நாட்டவர் சிபான்றோ நாட்டு மக்கள்மீது போர்தொடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக வானத்திலிருந்து இடியும், மின்னலும், பெரு மழையும் விழுந்தது. இதனைச் சற்றும் எதிர்பார்த்திராத எதிரிநாட்டுப் படையினர் பின்வாங்கத் தொடங்கினார்கள். இதனால் சிபான்றோ நாட்டின்மீது போர்மூளும் அபாய நிலையானது நின்றுபோனது.

மக்கள் அனைவரும் தூய மிக்கேல் அதிதூதர் வழியாக கடவுள் தங்களுக்குச் செய்த நன்மைகளுக்கு நன்றிபண் பாடினார்கள். இன்றைக்கும் கூட சிபான்றோ மக்கள் கடவுளிடமிருந்து தூய மிக்கேல் அதிதூதர் வழியாக பல்வேறு நன்மைகளைப் பெற்று வருகிறார்கள்.

இன்று திருச்சபையானது அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியல் மற்றும் இரபேல் ஆகியோரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. தொடக்கத்தில் இந்த மூன்று முதன்மைத் தூதர்களின் விழா வேறு வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தது. தூய மிக்கேல் அதிதூதரின் விழா செப்டம்பர் 29 ஆம் தேதி அன்றும், தூய கபிரியல் அதிதூதரின் விழா மார்ச் 24 ஆம் தேதியிலும் தூய இரபேல் அதிதூதரின் விழா அக்டோபர் 21 ஆம் தேதியிலும் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ரோம் நகரில் அனைத்துப் புனிதர்களுக்குமான ஆலயம் கட்டப்பட்ட பிறகு மூன்று அதிதூதர்களின் விழாக்களும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலை ஏற்பட்டது.

இந்த மூன்று அதிதூதர்களின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இறைவார்த்தை நமக்குத் தரும் செய்தி என்னவென்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தூதர்கள் என்றால் அவர்கள் கடவுளின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கடவுளின் பணியை சீராகச் செய்யக்கூடியவர்கள் (திருப்பாடல் 103:20). அந்த வகையில் பார்க்கும்போது தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகிய மூன்று முதன்மைத் தூதர்களும் இறைவார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அவர் சொன்ன பணியைச் சிறப்பாக செய்தார்கள்.

தூய மிக்கேல் அதிதூதரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இவர் இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும், திருத்தூதரான தூய யூதா புத்தகத்திலும், திருவெளிப்பாடு நூலிலும் அதிகமாக இடம்பெறுகிறார். திருவெளிப்பாடு நூலில் விண்ணகத்தில் கடவுளின் தூதர்களுக்கும், அவருக்கு எதிரானவர்களுக்கும் எதிராகக் கலகம் ஏற்படும்போது இவர்தான் கடவுளின் தூதர்படைக்குத் தலைமை தாங்கி, எதிரிகளிடமிருந்து வெற்றியைப் பெற்றுத் தருகின்றார். “ஆண்டவருக்கு நிகர் யார்?” என்ற தன்னுடைய பெயருக்கு ஏற்ப தூய மிக்கேல் அதிதூதர் கடவுளின் பெயரை விளங்கச் செய்பவராக இருக்கின்றார்; பகைவர்களிடமிருந்தும், தீய ஆவிகளிடமிருந்தும் நம்மை மீட்பவராக இருக்கின்றார்.

இன்றைக்கும்கூட நமது வீட்டு வாசலில் தூய மிக்கேல் அதிதூதரின் படத்தைத்தான் வைத்திருக்கிறோம். காரணம் அவர் நம்மைத் தீய ஆவிகளிடமிருந்து விடுக்கின்றார் என்பதனால்தான். இவர் திருத்தந்தையின் பாதுகாவல் தூதர் என்றும் அறியப்படுகின்றார்.

அடுத்ததாக தூய கபிரியேல் அதிதூரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இவர் “ஆண்டவரின் செய்தியை எடுத்துரைக்கக் கூடியவராக” இருக்கின்றார். திருமுழுக்கு யோவானின் பிறப்பை சக்கரியாவிடமும், ஆண்டவர் இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளிடமும் இவர்தான் எடுத்துரைத்தார். இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் இவர் இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலைச் செய்தியை அறிவித்ததாக நாம் வாசிக்கின்றோம் (தானி 8:16).

இவ்வாறு அதிதூதரான தூய கபிரியேல் கடவுளின் செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கக்கூடியவராக விளங்குகின்றார். இறைவனின் அன்புமக்களாகிய நாம் நம்மோடு வாழும் மக்களுக்கு நல்ல செய்தியை எடுத்துரைக்கின்றவர்களாக இருக்கின்றோமா என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நிறைவாக வரும் தூய இரபேல் அதிதூதரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இவர் ‘கடவுள் குணப்படுத்துகிறார்” என்ற தன்னுடைய பெயருக்கு ஏற்ப விளங்குகின்றார். குறிப்பாக வர் தோபித்து நூலில் அதிகமாக இடம்பெறுகின்றார். தொபியாசுக்கு வழிதுனையாகவும்ம், அவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணிடமிருந்து தீய ஆவியை ஓட்டுவதற்குக் காரணமாகவும், இன்னும் சிறப்பாக தோபித்து மீண்டுமாகப் பார்வை பெறுவதற்கும் காரணமாக விளங்குகின்றார்.

புதிய ஏற்பாட்டில் வரும் பெத்சாய்தா குளத்தை கலக்கி, அதில் இறங்கும் மக்களுக்கு குனம்தரும் தூதர் இவர்தான் என்று சொல்லப்படுகின்றார். இவ்வாறு தூய இரபேல் கடவுள் அளிக்கும் நலவாழ்வை, சுகத்தை எல்லா மக்களுக்கும் அளிக்கக்கூடியவராக விளங்குகின்றார்.

ஆகவே அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் நாமும் கடவுளுக்குக் கீழ்படிந்து வாழ்வோம். அதேநேரத்தில் தீமையை எதிர்த்துப் போராடுவோம், மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்போம், உடல் உள்ள நோயால் வருந்தும் மக்களுக்கு மருந்தாய் விளங்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், முதன்மை வானதூதர்கள் - செப்டம்பர் 29

நம் அதிதூதர்கள்



'வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' (காண். யோவான் 1:47-51)

(செப்டம்பர் 29) அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின்திருநாளைக் கொண்டாடுகிறோம்.

• தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல்,
• மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல்,
• நலம் நல்கும் இரபேல்
என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர் நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில்.

தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள்.

கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.

நிறைய நாள்கள் நாம் கடவுளையும், புனிதர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். நாளை ஒருநாள் இந்த அதிதூதர்களை சிறப்பாக நினைத்துப் பார்க்கலாமே.

என்னைப் பொறுத்தவரையில் நம் குடும்பங்களில் அல்லது நம் நண்பர்கள் வட்டத்தில் இறந்த நம் முன்னோர்களும் காவல்தூதர்களே. இவர்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். நாம் நம் அறையில் தனியாக இருந்தாலும், நெடுந்தூரம் பயணம் செய்தாலும் இவர்கள் அருகில் இருக்கிறார்கள்.

ஆக, அதிதூதர்கள் தரும் முதல் செய்தி 'உடனிருப்பு.'
நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.

இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.

இன்று பல நேரங்களில் நமக்கு எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தனிமை கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும். நான் தனிமையாக இருக்கிறேன் என புலம்புவதை விட்டு, அடுத்தவரும் அப்படித்தானே நினைத்துக் கொண்டிருப்பார் என அவரின் அருகில் சென்றால் நாமும் அதிதூதர்களே.

'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).

தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார்.

'நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்' என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.

ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி 'கடவுளின் உடனிருப்பை' நமக்கு உறுதி செய்கிறது.

இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே.

இதை திருநாள் நிறைவுசெய்வதாக. இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

- அருள்திரு. யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்டம்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...