Saturday, September 3, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (4-09-2022)

 

பொதுக்காலம் 23ஆம் வாரம் - ஞாயிறு

முதல் வாசகம்



ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9: 13-18

“கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண்கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.

மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்? நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக் கொண்டனர்; ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
4
ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி
5
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6
அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி
12
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13
ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி
14
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! - பல்லவி

இரண்டாம் வாசகம்



இனி அவனை நீர் அடிமையாக அல்ல, உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்.

திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9b-10, 12-17

அன்பிற்குரியவரே,

கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்! எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 135

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

உங்களுள் தம் உடைமை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33

அக்காலத்தில்

பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.

உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!

வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebookhttps://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...