Thursday, September 8, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (9-09-2022)

 

பொதுக்காலம் 23ஆம் வாரம் - வெள்ளி



முதல் வாசகம்


எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-27

சகோதரர் சகோதரிகளே,

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.

வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவன் ஆனேன். எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்குபெற வேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப் போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப் போலக் குத்துச்சண்டை இடமாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 84: 2. 3. 4-5. 11 (பல்லவி: 1)

பல்லவி: படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!

2
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. - பல்லவி

3
படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. - பல்லவி

4
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
5
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. - பல்லவி

11
கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 17: 17b, 17a

அல்லேலூயா, அல்லேலூயா! உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42

அக்காலத்தில்

இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.

நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்?

வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------


"யார் வழிகாட்ட தான் முடியும் "

 "ஒவ்வொரு மனிதரும் தாங்கள் குறை உள்ளவர்களாக இருப்பதால், தங்களிடம் இருக்கிற குறைகளைப் பிறர்மேல் ஏற்றிப் பார்க்கின்றனர். இதனை இவர்கள் ஏற்றிப் பேசுதல்  என்று அழைக்கின்றனர். நம்மிடம் குறை இருப்பதால், பிறரிடம் அந்தக் குறை இருக்கலாம் என்று நாம் எளிதில் எண்ணி விடுகிறோம். பொய் பேசும் பழக்கம் உள்ள ஒருவர் பிறர் பேசுகின்ற உண்மையையும் பொய்யாகவே எடுத்துக்கொள்கிறார். தனது குறையைப் பிறர்மீது ஏற்றிப் பார்க்கிறார்" என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்ற உளவியல் அறிஞர்கள் சொல்கின்றனர். மனிதர்களாய் பிறந்த  ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்த குறையை நிறையாக மாற்றுவது அவரவர் கையில்தான் இருக்கின்றது.


நம்முடைய வாழ்க்கையில் அடுத்தவரைப் பற்றி தீர்ப்பு இடும்போது மகிழ்ச்சியோடு தீர்ப்பிடுகிறோம்.  ஆனால் நம்முடைய குற்றங்களை யாராவது சுட்டிக்காட்டினால் நாம்  ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றோம். இது எதை சுட்டிக் காட்டுகிறது என்றால் இந்த உலகத்தில் யாரையும் தீர்ப்பிட நமக்கு தகுதி இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது. கடவுள் ஒருவர் மட்டுமே நம்மை தீர்ப்பிட தகுதி உள்ளவர். மற்றவர்கள் நம்மை தீர்ப்பிடவோ அல்லது நாம் பிறரை தீர்ப்பிடவோ தகுதி இல்லை. 


ஆனால் இன்றைய உலகில்  நம்மில் பெரும்பாலானோர் பிறருடைய குற்றங்களை கண்டு விமர்சனம் செய்கின்றோம். இது முற்றிலும் தவறானது என்பதை இன்றைய நற்செய்தியின் வழியாக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அழைப்பு விடுக்கிறார். "அடுத்தவரைப் பற்றி தீர்ப்பிடும்போது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றல்ல,  நீ எப்படிப்பட்டவன் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டுகிறாய் " என்று வேன் டயர் என்ற அறிஞர் கூறியுள்ளார்.


இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றும் தங்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு என்றும் பெருமை பாராட்டிக் கொண்டனர். அதிலும் குறிப்பாக பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் சதுசேயர்கள் மற்றவர்களின் குற்றங்களை கண்டு குறை காண்பவர்களாக இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். இப்படிப்பட்ட குறைகாணும்  மனநிலையைக் கண்ட இயேசு  அவர்களை பார்வையற்றவர்கள் என அழைக்கின்றார். இதற்கு முக்கிய காரணம் மறைநூலில் அவர்கள் புலமை பெற்றிருந்தாலும் அவர்களின் வாழ்க்கையில் புலமை பெறவில்லை. எனவேதான் இயேசு ஒரு முறை "இவர்கள் சொல்வதை செய்யுங்கள், ஆனால் செய்வதை செய்யாதீர்கள் "எனக் கூறியுள்ளார். உண்மையான முதிர்ச்சியடைந்த மனிதன் என்பவர் பிறரை குற்றம் காண்பவராக இருக்கமாட்டார். மாறாக, பிறரின் நிறைகளைக் கண்டு குறைகளைக் களைய வழிகாட்டுவார். இப்படிப்பட்ட முதிர்ச்சி நிறைந்த மனநிலையைப் பெறுவது தான் இயேசுவின் உண்மையான மனநிலை. "நான் நற்செய்தி அறிவிக்கா விடில் ஐயோ எனக்கு கேடு "என்று முதல் வாசகத்தில் கூறிய பவுலடியார் பல்வேறு துன்பங்களும் இடையூறுகளும் தனது நற்செய்திப் பணியில் வந்தபோதிலும் அதிலுள்ள குறைகளை பார்க்காமல் நிறைகளை கண்டு மிகச்சிறந்த இறைப் பணியை செய்தார்.


எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே யாரையும் குறை சொல்லாமல் அவர்களின் நிறைகளைக் கண்டு பாராட்டுவோம்.மனிதன் குறை உள்ளவன் என்பதை ஏற்றுக்கொண்டு நிறைவுள்ள பாதைக்கு நம் வாழ்வை பயணிக்க தொடங்குவோம்.  அப்பொழுது எவ்வளவு இடையூறுகளும் துன்பங்களும் வந்தாலும் நம் வாழ்விலே இலக்கு நோக்கி பயணிக்க முடியும். கடவுள் மட்டுமே நம் குற்றங்களைத் தீர்ப்பிட தகுதி உள்ளவர். நீதித்தலைவர்கள் வழியாக கடவுள் வழிநடத்தியது குற்றங்களை காண்பதற்காக அல்ல ; மீட்கும் நிறைந்த வாழ்வுக்கு வழி காட்டவே. எனவே கடவுள் மட்டுமே நம்மை வழிகாட்ட முடியும் என்ற சிந்தனையில் குறை காணும் மனநிலையை அகற்றிவிட்டு பிறரின் நிறைகளைக் கண்டு நேர்மறை சிந்தனையோடு பயணிக்கத் தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள நிறைவுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்விலேயே பல நேரங்களில் பிறரின் குறைகளை காண்பவராகக் வாழ்ந்து வந்துள்ளோம் .இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கின்றோம். பிறரின் நிறைகளைக் கண்டு அவர்களைப் பாராட்டி அவர்களின் குறைகளைக் களைய உழைக்கும் நல்ல இறை ஊழியர்களாக மாற வழிக்காட்டியருளும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...