Wednesday, September 7, 2022

Liturgy of the Hours in Tamil - தமிழ் திருப்புகழ் மாலை

தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை)

காலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

உலகின் புனித முதல்வியே வாழி,
உயர்வான் புகழும் அரசியே வாழி,
அலை கடல்தனின் ஒளிர்மீன் வாழி,
அனைவரின் அன்னையாம் கன்னியே வாழி.

இனிமை மகளாய் வந்துதித்தாயே,
இறையருள் நிறை கன்னியாய் ஒளிர்வாயே,
தனிமலர் இறைமகன் கிறிஸ்து இயேசுவைத்
தரணியிற் கொணரத் தகுந்தவள் ஆனாய்.

ஆண்டுகள் தோறும் கொண்டாடு கின்றோம்
அரியஉன் பிறப்பின் திருவி ழாவை;
மாண்புடன் உலகில் நீ ஒளிர்வாயே,
மாந்தருள் சிறந்த இனத்துதித்தாயே.

உலகில் வாழும் நாங்களெல்லோரும்,
உயர்வான் உன்னுடன் உறைபவ ரானோம்;
அலகிட முடியா வகையினில் எம்மை
ஆண்டவ னோடுற வாகிடச் செய்வாய்.

மூவொரு இறைவா, உமக்கென்றென்றும்
முடிவிலா மாட்சியும் புகழும் ஆகுக;
மேவிடும் உம் உயர் அருளால் அல்லவோ
மேதகு திருச்சபைக்கு அவளன்னை ஆயினாள்.
ஆமென்.

திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆபிரகாமின் வித்திலிருந்தும் யூதாவின் குலத்திலிருந்தும் தாவீதின் அடிமரத்திலிருந்தும் எழுந்தவருமாகிய மாட்சிமிக்க கன்னிமரியா பிறந்த நாள் இதுவே.

இறைவேட்கை

திபா 63: 1-8

இருளின் செயல்களை விட்டுவிட்டவன் இறைவனுக்காகக் காத்திருப்பானாக.

கடவுளே! நீரே என் இறைவன்!
உம்மையே நான் நாடுகின்றேன்;
நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல
என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது;
என் உடல் உமக்காக ஏங்குகின்றது.

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து
உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
ஏனெனில் உமது பேரன்பு உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.

என் வாழ்க்கை முழுவதும்
இவ்வாறே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல்
என் உயிர் நிறைவடையும்;
மகிழ்ச்சிமிகு இதழ்களால் என் வாய் உம்மைப் போற்றும்.

நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்;
இரா விழிப்புகளில் உம்மைப்பற்றியே
ஆழ்ந்து சிந்திப்பேன்.
ஏனெனில் எனக்கு நீர் துணையாய் இருக்கின்றீர்;
உம் இறக்கைகளின் நிழலில்
நான் மகிழ்ந்து பாடுகின்றேன்.
உம்மை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்;
உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆபிரகாமின் வித்திலிருந்தும் யூதாவின் குலத்திலிருந்தும் தாவீதின் அடிமரத்திலிருந்தும் எழுந்தவருமாகிய மாட்சிமிக்க கன்னிமரியா பிறந்த நாள் இதுவே.

மு. மொ. 2: தூய கன்னிமரியா பிறந்தபொழுது உலகனைத்தும் ஒளியால் நிறைந்தது; இத்தகைய பேறுபெற்றக் கன்னியைப் பெற்றெடுத்த அடிமரம் புனிதமும் ஆசியும் பெற்றதுவே.

படைப்பனைத்தின் பாடல்

சிறுபாடல்
தானி (இ) 1: 34-65

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

வானத்திற்குமேல் உள்ள நீர்த்திரளே,
ஆண்டவரை வாழ்த்து;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் ஆற்றல்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

மழையே, பனியே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
காற்றுவகைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நடுக்கும் குளிரே, கடும் வெயிலே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

பனித்திவலைகளே, பனிமழையே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
பனிக்கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
உறைபனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக;
மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நிலத்தில் தளிர்ப்பவையே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
வானத்துப் பறவைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

காட்டு விலங்குகளே, கால்நடைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

நீதிமான்களே, நீங்கள் அனைவரும்
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்
அனனியா, அசரியா, மிசாவேல்
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

தந்தை மகன் தூய ஆவியாரைப் புகழுங்கள்
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப்பெறுவீராக;
என்றென்றும் நீர் பாடல் பெறவும்,
மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.

மு. மொ. : தூய கன்னிமரியா பிறந்தபொழுது உலகனைத்தும் ஒளியால் நிறைந்தது; இத்தகைய பேறுபெற்றக் கன்னியைப் பெற்றெடுத்த அடிமரம் புனிதமும் ஆசியும் பெற்றதுவே.

மு. மொ. 3: தூய கன்னிமரியாவின் பிறப்பை அகமகிழ்வுடன் நாம் கொண்டாடுவோம்; அவரே நமக்காக ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்துரைப்பார்.

புனிதரின் மகிழ்ச்சிப்பா

திபா 149

இறைவனின் புதிய மக்களாம் திருச்சபையின் உறுப்பினர் தம் அரசராம் கிறிஸ்துவில் அகமகிழ்வர். (ஹெசிகியூஸ்)

புதியதொரு பாடலை ஆண்டவருக்குப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில்
அவரது புகழைப் பாடுங்கள்.
தம்மைப் படைத்தவரைக் குறித்து
இஸ்ரயேலர் மகிழ்வராக!
தம் அரசரை முன்னிட்டுச்
சீயோனின் மக்கள் களிகூர்வார்களாக!

நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து
அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!

ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு மீட்பளித்து
மேன்மைப்படுத்துவார்.

அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக!
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
அவர்களின் வாயில் இறைபுகழ் இருக்கட்டும்;
அவர்களின் கையில் இருபுறமும்
கூர்மையான வாள் இருக்கட்டும்.

அவர்கள் வேற்றினத்தாரிடம்
பழிதீர்த்துக் கொள்வார்கள்;
மக்களினங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;

வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;
உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.
முன்குறித்து வைத்த தீர்ப்பை
அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;

இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர்
அனைவருக்கும் உரித்தானது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : தூய கன்னிமரியாவின் பிறப்பை அகமகிழ்வுடன் நாம் கொண்டாடுவோம்; அவரே நமக்காக ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்துரைப்பார்.

அருள்வாக்கு

எசா 61: 10

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன்போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள்போலும் விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நோர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.

சிறு மறுமொழி

முதல்:மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார்.
எல்:மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார்.
முதல்:தம் சொந்த உறைவிடத்திலேயே ஆண்டவர் அவரைக் குடியிருக்கச் செய்தார்.
எல்:மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:மரியா பிறக்கும் முன்பே ஆண்டவர் அவரைத் தேர்ந்துகொண்டார்.

செக்கரியாவின் பாடல்

மு. மொ. : கடவுளின் கன்னித்தாயே, உம் பிறப்பு உலகனைத்திற்கும் மகிழ்ச்சியை அறிவித்தது. ஏனெனில் உம்மிடமிருந்தே நீதியின் கதிரவன், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து உதயமானார்; இவரே சாபத்தை ஒழித்து ஆசியைக் கொணர்ந்தார்; சாவை அழித்து எமக்கு நிலைவாழ்வை அளித்தார்.

லூக் 1: 68-79

மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.

இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.

தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கடவுளின் கன்னித்தாயே, உம் பிறப்பு உலகனைத்திற்கும் மகிழ்ச்சியை அறிவித்தது. ஏனெனில் உம்மிடமிருந்தே நீதியின் கதிரவன், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து உதயமானார்; இவரே சாபத்தை ஒழித்து ஆசியைக் கொணர்ந்தார்; சாவை அழித்து எமக்கு நிலைவாழ்வை அளித்தார்.

மன்றாட்டுகள்

கன்னிமரியாவின் வழியாகப் பிறக்கத் திருவுளமான நமக்கு விடுதலை அளிப்பவரின் பெருமையை நாம் பறைசாற்றுவோமாக; நம் வேண்டுதல்களை அவர் கேட்டருள்வார் என்ற நம்பிக்கையோடு மன்றாடுவோம்.

எல்: ஆண்டவரே, உமது அன்னை எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக.

நீதியின் கதிரவனே! அமல உற்பவியான கன்னிமரியாவில் உமது நாளை உதயமாகச் செய்தீர் — உமது திருமுன்னிலையின் பேரொளியில் நாங்கள் நடக்க உதவியருளும்.

என்றும் வாழும் வார்த்தையே! மரியாவின் உயிருள்ள சதையில் நீர் ஓர் உறைவிடத்தை இப்புவியில் கண்டுகொண்டீர் — பாவக் கறையிலிருந்து விடுதலை பெற்ற எங்கள் உள்ளங்களில் என்றும் தங்கியருளும்.

எங்களுக்கு விடுதலை அளிப்பவரான கிறிஸ்துவே! நீர் இறக்கும்போது அருகில் உம் தாயும் இருக்கவேண்டும் எனத் திருவுளம் கொண்டீர் — அவரது பரிந்துரையால் நாங்களும் உமது பாடுகளில் பங்கு பெறுவதில் மகிழ்வோமாக.

அன்புநிறை விடுதலை அளிப்பவரே! சிலுவையில் நீர் தொங்கிய போது உம் தாய் மரியாவை யோவானுக்குத் தாயாகக் கொடுத்தீர் — எங்களது நல் வாழ்க்கையால் நாங்கள் அவரது பிள்ளைகள் என்பதை வெளிப்படுத்துவோமாக.

ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.

இறுதி மன்றாட்டு

ஆண்டவராம் கடவுளே! பேறுபெற்ற கன்னிமரியா உம் மகனைப் பெற்றெடுத்தபோது எங்கள் மீட்பின் நாள் உதயமானது. அவருடைய பிறப்பு நாளைக் கொண்டாடும் எங்களுக்கு உமது அருளையும் அமைதியையும் வழங்குவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

நண்பகல் இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

வல்ல அரசரே, உண்மைக் கடவுளே,
எல்லாக் காலச் சுழற்சியை அமைத்தீர்,
தண்ணொளியைக் காலைப் பொழுதிற்(கு) தந்தீர்,
நண்பகல் வேளையில் வெப்பம் தந்தீர்.

பற்றி எரியும் பகைமையை அணைப்பீர்,
குற்றங் குறைகளின் வெப்பம் தணிப்பீர்,
உமது காவலை உடலுக்கு அளிப்பீர்,
எமக்கு உள்ள அமைதியை அருள்வீர்.

தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே,
தந்தைக்கு இணையான ஒரேதிருப் புதல்வரே,
ஆறுதல் அளிக்கும் தூயநல் ஆவியாரே,
ஆண்டாண்டு காலம் புகழ்பெற்(று) ஆள்வீர்,
ஆமென்.

திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவது நலம். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு, அல்லேலூயா.

மீட்படைந்தோரின் பாடல்

திபா 118: 1-9

‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தன்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ (திப 4:11)

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என
இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என
ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என
ஆண்டவருக்கு அஞ்சுவோர் சாற்றுவார்களாக!

நெருக்கடி வேளையில்
நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்;
அவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.
ஆண்டவர் என் பக்கம் இருக்க
நான் ஏன் அஞ்ச வேண்டும்?

மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய இயலும்?
எனக்குத் துணை செய்யும் ஆண்டவர்
என் பக்கம் உள்ளார்;
என் பகைவர்க்கு நேர்வதை
நான் கண்ணாரக் காண்பேன்.

மனிதர்மீது நம்பிக்கை வைப்பதவிட,
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பதைவிட,
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவது நலம். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு, அல்லேலூயா.

மு. மொ. 2: ஆண்டவர் என் ஆற்றல். என் பாடல், அல்லேலூயா.

திபா 118: 10-18

வேற்றினத்தார் அனைவரும்
என்னைச் சூழ்ந்துகொண்டனர்;
ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.

எப்பக்கமும் அவர்கள் என்னை
வளைத்துக்கொண்டார்கள்;
ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.
தேனீக்களைப்போல்
அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்;
நெருப்பிலிட்ட முட்களைப்போல்
அவர்கள் சாம்பலானார்கள்;
ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி
வீழ்த்த முயன்றார்கள்;
ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்;
என் மீட்பும் அவரே.
நேர்மையாளரின் கூடாரங்களில்
மீட்பின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது;

ஆண்டவரது வலக்கை
வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;
ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச்
செயலாற்றியுள்ளது.
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;
ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;
கண்டித்தார். ஆண்டவர் என்னைக் கண்டித்தார்;
ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவர் என் ஆற்றல். என் பாடல், அல்லேலூயா.

மு. மொ. 3: ஆண்டவரே, நீர் என் மன்றாட்டைக் கேட்டதால், நான் உம்மைப் புகழ்வேன், அல்லேலூயா.

திபா 118: 19-29

நேர்மையாளர் செல்லும் வாயில்களை
எனக்குத் திறந்துவிடுங்கள்;
உள்ளே நுழைந்து ஆண்டவருக்கு நான்
நன்றி செலுத்துவேன்.
ஆண்டவரது வாயில் இதுவே!
இது வழியாய் நேர்மையாளரே நுழைவர்.
என் மன்றாட்டை நீர் கேட்டதால்,
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.
எனக்கு நீர் மீட்பரானதால்
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

கட்டுவோர் புறக்கணித்த கல்லே
கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!
நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே;
இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்.

ஆண்டவரே மீட்டருளும்!
ஆண்டவரே வெற்றிதாரும்!
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்!
ஆண்டவரது இல்லத்தினின்று
உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
ஆண்டவரே இறைவன்;
அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்;

கிளைகளைக் கையிலேந்தி
விழாவினைத் தொடங்குங்கள்;
பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.
என் இறைவன் நீரே!
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்;
என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நீர் என் மன்றாட்டைக் கேட்டதால், நான் உம்மைப் புகழ்வேன், அல்லேலூயா.

அருள்வாக்கு

கலா 6: 8

தம் ஊனியல்பாகிய நிலத்தில் விதைப்போர் அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வர். ஆவியாருக்குரிய வாழ்வாகிய நிலத்தில் விதைப்போர் அந்த ஆவியார் அருளும் நிலைவாழ்வை அறுவடை செய்வர்.

முதல்:ஆண்டவரே, உமது வார்த்தை என்றும் நிலைத்துள்ளது.
எல்:உமது உண்மை என்றென்றும் நீடித்திருக்கிறது.

இறுதி மன்றாட்டு

ஆண்டவராம் கடவுளே! பேறுபெற்ற கன்னிமரியா உம் மகனைப் பெற்றெடுத்தபோது எங்கள் மீட்பின் நாள் உதயமானது. அவருடைய பிறப்பு நாளைக் கொண்டாடும் எங்களுக்கு உமது அருளையும் அமைதியையும் வழங்குவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

மாலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

இறைவனின் அருள் நிறைஅன்னையே நீ
நரர் எம் இனத்தின் பெருமையும் நீ,
இருளார் அடிமைத் தளை நீங்க
பரனுடன் ஒத்துழைத் தாய், போற்றி!

மரியே அரச கன்னிகையே,
மன்னன் தாவீதின் குல மகளே,
அருமந்த மரபினும் மிக உயர்ந்தாய்,
அருள் மகன்தன் மதிப்பால் சிறந்தாய்.

பாவ விலங்குத் தளையறுப்பாய்
பரிவாய் உனையாம் வேண்டுகிறோம்;
பாவில் உன்புகழ் பாடும் எம்மைப்
பரமப் பேற்றில் சேர்த்திடுவாய்.

வானுயர் இறைவனுக்கே மாட்சி:
ஏனெனில் மரியே உன்னை அவர்
மானிட ருள் மிகச் சிறந்தவளாய்
வானருள் அனைத்தும் அளித்தாரே. ஆமென்.

திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஈசாயின் அடிமரத்திலிருந்து கன்னிமரியா பிறந்தார். உன்னதரின் ஆவியார் அவருள் வந்து தங்கினார்.

இறைவேட்கை

திபா 63: 1-8

இருளின் செயல்களை விட்டுவிட்டவன் இறைவனுக்காகக் காத்திருப்பானாக.

கடவுளே! நீரே என் இறைவன்!
உம்மையே நான் நாடுகின்றேன்;
நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல
என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது;
என் உடல் உமக்காக ஏங்குகின்றது.

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து
உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
ஏனெனில் உமது பேரன்பு உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.

என் வாழ்க்கை முழுவதும்
இவ்வாறே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல்
என் உயிர் நிறைவடையும்;
மகிழ்ச்சிமிகு இதழ்களால் என் வாய் உம்மைப் போற்றும்.

நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்;
இரா விழிப்புகளில் உம்மைப்பற்றியே
ஆழ்ந்து சிந்திப்பேன்.
ஏனெனில் எனக்கு நீர் துணையாய் இருக்கின்றீர்;
உம் இறக்கைகளின் நிழலில்
நான் மகிழ்ந்து பாடுகின்றேன்.
உம்மை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்;
உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஈசாயின் அடிமரத்திலிருந்து கன்னிமரியா பிறந்தார். உன்னதரின் ஆவியார் அவருள் வந்து தங்கினார்.

மு. மொ. 2: இன்று தூய கன்னிமரியா பிறந்த நாள். கடவுள் அவரது எழிலினைக் கண்ணாக்கினார். தாழ்நிலையில் இருந்த அவரைக் கடவுள் சந்தித்தார்.

படைப்பனைத்தின் பாடல்

சிறுபாடல்
தானி (இ) 1: 34-65

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

வானத்திற்குமேல் உள்ள நீர்த்திரளே,
ஆண்டவரை வாழ்த்து;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் ஆற்றல்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

மழையே, பனியே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
காற்றுவகைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நடுக்கும் குளிரே, கடும் வெயிலே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

பனித்திவலைகளே, பனிமழையே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
பனிக்கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
உறைபனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக;
மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நிலத்தில் தளிர்ப்பவையே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
வானத்துப் பறவைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

காட்டு விலங்குகளே, கால்நடைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப்புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

நீதிமான்களே, நீங்கள் அனைவரும்
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்
அனனியா, அசரியா, மிசாவேல்
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.

தந்தை மகன் தூய ஆவியாரைப் புகழுங்கள்
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப்பெறுவீராக;
என்றென்றும் நீர் பாடல் பெறவும்,
மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.

மு. மொ. : இன்று தூய கன்னிமரியா பிறந்த நாள். கடவுள் அவரது எழிலினைக் கண்ணாக்கினார். தாழ்நிலையில் இருந்த அவரைக் கடவுள் சந்தித்தார்.

மு. மொ. 3: கடவுளின் அன்னையாம் கன்னிமரியா தூய்மை ஆனவர்; நமது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்; அவர் ஆண்டவரிடம் நமக்காகப் பரிந்து பேசும்படி அவரது பிறப்பு நாளை நாம் கொண்டாடுகிறோம்.

புனிதரின் மகிழ்ச்சிப்பா

திபா 149

இறைவனின் புதிய மக்களாம் திருச்சபையின் உறுப்பினர் தம் அரசராம் கிறிஸ்துவில் அகமகிழ்வர். (ஹெசிகியூஸ்)

புதியதொரு பாடலை ஆண்டவருக்குப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில்
அவரது புகழைப் பாடுங்கள்.
தம்மைப் படைத்தவரைக் குறித்து
இஸ்ரயேலர் மகிழ்வராக!
தம் அரசரை முன்னிட்டுச்
சீயோனின் மக்கள் களிகூர்வார்களாக!

நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து
அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!

ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு மீட்பளித்து
மேன்மைப்படுத்துவார்.

அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக!
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
அவர்களின் வாயில் இறைபுகழ் இருக்கட்டும்;
அவர்களின் கையில் இருபுறமும்
கூர்மையான வாள் இருக்கட்டும்.

அவர்கள் வேற்றினத்தாரிடம்
பழிதீர்த்துக் கொள்வார்கள்;
மக்களினங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;

வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;
உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.
முன்குறித்து வைத்த தீர்ப்பை
அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;

இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர்
அனைவருக்கும் உரித்தானது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கடவுளின் அன்னையாம் கன்னிமரியா தூய்மை ஆனவர்; நமது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்; அவர் ஆண்டவரிடம் நமக்காகப் பரிந்து பேசும்படி அவரது பிறப்பு நாளை நாம் கொண்டாடுகிறோம்.

அருள்வாக்கு

கலா 4: 4-5

ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

சிறு மறுமொழி

முதல்:அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.
எல்:அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.
முதல்:பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே.
எல்:அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:அருள் மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.

கன்னிமரியாவின் பாடல்

மு. மொ. : மாட்சிமிகு கன்னிமரியாவின் தகுதிநிறை பிறப்பை நினைவுகூர்வோமாக. அவரது தாழ்நிலையை ஆண்டவர் கண்ணோக்கினார். அவர் கருவுற்று உலகின் மீட்பரைப் பெற்றெடுப்பார் என்பதை அவருக்கு அறிவிக்க அவரது வானதூதரை அனுப்பினார்.

லூக் 1: 47-55

என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.

ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக்
கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள்
எக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : மாட்சிமிகு கன்னிமரியாவின் தகுதிநிறை பிறப்பை நினைவுகூர்வோமாக. அவரது தாழ்நிலையை ஆண்டவர் கண்ணோக்கினார். அவர் கருவுற்று உலகின் மீட்பரைப் பெற்றெடுப்பார் என்பதை அவருக்கு அறிவிக்க அவரது வானதூதரை அனுப்பினார்.

மன்றாட்டுகள்

கன்னிமரியாவின் வழியாகப் பிறக்கத் திருவுளமான நமக்கு விடுதலை அளிப்பவரின் பெருமையை நாம் பறைசாற்றுவோமாக; நம் வேண்டுதல்களை அவர் கேட்டருள்வார் என்ற நம்பிக்கையோடு மன்றாடுவோம்.

எல்: ஆண்டவரே, உமது அன்னை எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக.

நீதியின் கதிரவனே! அமல உற்பவியான கன்னிமரியாவில் உமது நாளை உதயமாகச் செய்தீர் — உமது திருமுன்னிலையின் பேரொளியில் நாங்கள் நடக்க உதவியருளும்.

என்றும் வாழும் வார்த்தையே! மரியாவின் உயிருள்ள சதையில் நீர் ஓர் உறைவிடத்தை இப்புவியில் கண்டுகொண்டீர் — பாவக் கறையிலிருந்து விடுதலை பெற்ற எங்கள் உள்ளங்களில் என்றும் தங்கியருளும்.

எங்களுக்கு விடுதலை அளிப்பவரான கிறிஸ்துவே! நீர் இறக்கும்போது அருகில் உம் தாயும் இருக்கவேண்டும் எனத் திருவுளம் கொண்டீர் — அவரது பரிந்துரையால் நாங்களும் உமது பாடுகளில் பங்கு பெறுவதில் மகிழ்வோமாக.

அன்புநிறை விடுதலை அளிப்பவரே! சிலுவையில் நீர் தொங்கிய போது உம் தாய் மரியாவை யோவானுக்குத் தாயாகக் கொடுத்தீர் — எங்களது நல் வாழ்க்கையால் நாங்கள் அவரது பிள்ளைகள் என்பதை வெளிப்படுத்துவோமாக.

ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.

இறுதி மன்றாட்டு

ஆண்டவராம் கடவுளே! பேறுபெற்ற கன்னிமரியா உம் மகனைப் பெற்றெடுத்தபோது எங்கள் மீட்பின் நாள் உதயமானது. அவருடைய பிறப்பு நாளைக் கொண்டாடும் எங்களுக்கு உமது அருளையும் அமைதியையும் வழங்குவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

இரவு இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா,
காரிருள் புகஉம் கழலினைத் தொழுதோம்;
பேரருள் புரிந்து எம்மீது) இரங்கிக்
கோரிடும் எம்மைக் காத்தருள் வீரே.

கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக,
நினைவிலாத் துயிலிலும் உமமையே உணர்க;
நனிசேர் புதுநாள் புலரும் போதும்
இனியவும் புகழை இசைத்தேத் திடுக.

இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக
அன்பனல் எமக்குள் கனன்றிடச் செய்க
துன்பமும் துயரமும் தரும்கார் இருளை
உன்பெரும் ஒளியில் சுடர்போக் கிடுக.

இறைவா, எல்லாம் வல்ல தந்தாய்
மகன்வழி யாய்எமக் கிவை அருள்வாய்
ஒருபொருள் தந்தை மகன் தூய ஆவியார்
தரைதனில் ஆட்சியும் மாட்சியும் பெறுக. ஆமென்.

அல்லது

கிறிஸ்துவே ஒளியும் பகலும் நீரே
இரவின் இருளை ஈந்தீர் எனினும்
மறுமையில் நீரே ஒளியென விளங்க
தரையிலும் பேரொளி விளக்கா வீரே.

தூயவரே, ஆண்டவரே, துயிலுறு இரவிதில்
நேயமாய் எம்மைக் காத்திட வேண்டுவோம்;
எமதிளைப் பாற்றி உம்மிலே ஆகுக.
அமைதி மிகுந்த இரவினைத் தருக.

உடலின் கண்கள் உறங்கி மூடினும்
உளத்தின் கண்கள் விழித்துமை நோக்குக
உம்மை அன்பு செய்தோம் எனவே
எம்மை ஆற்ற லுடன்காத் தருள்க.

காவல் நீரே கருணைக்கண் ணோக்கிப்
பேயின் சோதனை நின்றெமைக் காப்பீர்;
செந்நீர் சிந்தி மீட்டவும் மக்களை
இன்னல் நீக்கிக் காத்தருள் வீரே.

எம்மை அன்பு செய்யும் கிறிஸ்துவே.
உம்முடன் தந்தையும் ஆவி யாரும்
இம்மையில் மறுமையில் இடையறா தென்றும்
உண்மை மாட்சியும் புகழும் பெறுக. ஆமென்.

அல்லது

போயது பொழுது புகுந்தது இரவு;
தூயரே உமது பொன்னடி தொழுவோம்;
நேயமாய் எல்லா ஏதமும் நீக்கி,
நேயரெமை ஆண்டு காத்தருள் வீரே.

கனவுகள் துயில்வழி காணுதல் வேண்டாம்
கனவிருள் பூதமும் கண்ணுறல் வேண்டாம்
சினமுறு பகைவர் முரணெலாம் வெல்வாய்
ஈனமும் உடலில் சேர்ந்திடாதருள்வாய்.

முதல்வரே தந்தாய் அருள் புரி வீரே
புதல்வரே கிறிஸ்துவே அருள்புரி வீரே
கதிரொளி வெல்லும் ஆவி யாரே
பதம் பணிந்து போற்றிடு வோமே. ஆமென்.

திருப்பாடல்கள்

மு. மொ. 1: இறைவா, என் உடல் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

ஆண்டவரே என் உரிமைச் சொத்து

திபா 16

கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தொழச் செய்தார். (திப 2:24)

இறைவா, என்னைக் காத்தருள்வீர்;
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
நான் ஆண்டவரிடம்
‘நீரே என் தலைவர்;
உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’
என்று சொன்னேன்.

பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்!
அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.
வேற்றுத் தெய்வங்களைத் தொழுவோர்
தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்;
அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில்
நான் கலந்துகொள்ளேன்;
அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன்.

ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து;
அவரே என் கிண்ணம்;
எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன;
உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகிறேன்;
இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப்பக்கம் உள்ளார்;
எனவே, நான் அசைவுறேன்.

என் இதயம் மகிழ்கிறது; என் உள்ளம் அக்களிக்கிறது
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறும்.
ஏனெனில் என்னைப் பாதாளத்தில் விட்டுவிடமாட்டீர்;
உம் அன்பன் நான் படுகுழியைக் காணவிடமாட்டீர்.
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது திருமுன் எனக்கு நிறை மகிழ்ச்சி உண்டு;
உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : இறைவா, என் உடல் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

அருள்வாக்கு

1 தெச 5: 23

அமைதி அருளும் கடவுள் தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது, உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக!

சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.

சிமியோன் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.

லூக் 2: 29-32

கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.

இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி;
இதுவே உம் மக்களாகிய இஸ்ரையேலுக்குப் பெருமை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.

இறுதி மன்றாட்டு

எங்கள் ஆண்டவராகிய கடவுளே! இந்நாளில் உழைப்பால் நாங்கள் மிகவே சோர்வடைந்துள்ளோம்; அமைதியான உறக்கத்தால் எங்களைப் புதுப்பித்தருளும். இவ்வாறு, உமது உதவியால் சோர்வு நீங்கிய நாங்கள் உடலாலும் உள்ளத்தாலும் உமக்குப் பணிபுரிவோமா. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

ஆசியுரை

ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.

தூய மரியாவுக்குப் பாடல்

வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க.

தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுமைக் கூவி அழைத்தோம்.

கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.

அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.

உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.

கருணையின் உருவே தாய்மையின் கனிவே
இனிமையின் அன்னை மரியா போற்றி! ஆமென்.

அல்லது

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே
விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே
தண் கடல் மீதொளிர் விண்மீன் நீரே

வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை
ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்.

இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர்
ஈன்ற பின்னரும் கன்னியாய் நின்றீர்

வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர்
ஈனப் பாவிகள் எமக்கு இரங்குவீர். ஆமென்.

அல்லது

வானகம் ஆளும் அரசியே வாழ்க
வானவர் அனைவரின் தலைவியே வாழ்க
எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி
உதயம் ஆகிய வாயிலே வாழ்க.

மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.
ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.
எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி
பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல். ஆமென்

அல்லது

கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்

இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...