Monday, October 31, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (01-11-2022)

 

புனிதர் அனைவர்



பெருவிழா

முதல் வாசகம்

பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14

கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, “எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார். முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.

இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.

அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். “ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்” என்று பாடினார்கள்.

மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார். நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன்.

அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6)

பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி
5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-3

சகோதரர் சகோதரிகளே,

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


மனிதமே புனிதம்!


இன்று நம் தாய் திருஅவையானது எல்லாப் புனிதர்களுடைய பெருவிழாவைக் கொண்டாடுகிறது. இப்புனிதர்கள் அனைவரும் கடவுளின் திருவுளப்படி வாழ்ந்தவர்கள். இயேசுவை தம்மில் வெளிக்காட்டியவர்கள். நம்மைப் போல மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் தாம். பலவீனர்கள் தாம். ஆயினும் தம் பலவீனங்களையெல்லாம் கடவுள் அருளிய பலத்தால் வென்றவர்கள். நற்செய்திக்குச் சான்று பகர்ந்தவர்கள். உலகிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர்கள். அனைத்தையும் தாண்டி நல்ல மனிதர்களாய் வாழ்ந்தவர்கள். ஆம் நல்ல மனிதர்களாக நாம் வாழ முயல்வதே உண்மையான புனிதத்துவம் தான்.


கடவுள் இவ்வுலகைப் படைத்த போது ஒளி உண்டாகுக, நீர் உண்டாகுக என அனைத்தையும் தன் வார்த்தையால் படைத்தார். ஆனால் மனிதனைப் படைக்க நேரம் எடுத்து தன் உடலுழைப்பைக் கொடுத்து தன் உயிர்மூச்சைக் கொடுத்து உருவாக்கினார். அதுவும் தன் உருவிலும் தன் சாயலிலும் படைத்தார் என தொடக்கநூலில் நாம் வாசிக்கிறோம் அல்லவா. புனிதத்தின் உச்சமே கடவுள்தான் எனில் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட நாமும் அப்புனிதத்தை நம்மிலே கொண்டுள்ளோம் என்பதை உணரவே இவ்விழா நம்மை அழைக்கிறது.

அப்புனிதத்தை நம்முடைய அன்றாட மனித வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்துப் புனிதர்களும் நமக்கு வழங்கும் செய்தி.


ஒரு பழைய திரைப்படப் பாடல் வரிகள் இவ்வாறாக அமைகின்றன. " பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் " என்பதே அவ்வரிகள். ஆம் நம் அடுத்திருப்போரின் துன்பத்தில் அவர்களுக்காக நாம் சிந்தும் ஒருதுளி கண்ணீர்கூட நம் மனிதத்தையும் அதில் அடங்கியுள்ள புனிதத்தையும் எடுத்துரைக்கிறது. 


இன்றைய நற்செய்தி வாசகம் நாம் எவ்வாறு மனிதர்களாய் வாழ வேண்டும் என்பதற்கான வரையறையை நமக்குத் தருகின்றது.

இந்நற்செய்திப் பகுதியை ஆங்கிலத்தில் " Beattitudes " எனக் கூறுவர். அப்படியேன்றால்   பேரின்பம் அல்லது பாக்கியம் என்பது பொருள். அதாவது பேறுபெற்ற நிலையை நாம் அடைவதற்கு நாம் கொண்டிருக்க வேண்டிய மனநிலை என நாம் எடுத்துக்கொள்ளலாம். எளிய மனம், நீதி, துயரங்களை ஏற்றுக்கொள்ளுதல், கனிவு, இரக்கம், அமைதி, தூய்மை போன்ற பண்புகள் நம்மை பேறுபெற்ற நிலைக்கு அழைத்துச் செல்கின்றன என இயேசு தம் போதனையில் கூறியுள்ளார். இவை அனைத்தையும் நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கும் போது, நாமும் நல்மனிதர்களாகிறோம். அதனால் புனிதர்களாகிறோம்.

நாம் விழா கொண்டாடுகிற புனிதர்கள் அனைவருமே மனிதத்தைப் போற்றினார்கள். ஏழைகளுக்கு உதவினார். சமூகத்தில் ஓரங்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தவர் அன்னை தெரசா.தம்மை அண்டிவந்த அனைவருக்கும் ஆன்ம வழிகாட்டியாக இருந்தார் புனித பியோ.தொழுநோயாளிகளுக்காக தன் வாழ்வை அர்பணித்தார் புனித தமியான். தன்னிடம் உள்ளதை இல்லாதவரோடு பகிர்ந்து அனைவரையும் சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்டார் புனித அசிசியார். நீதிக்காக பாடுபட்டார் புனித மார்டின் தி போரஸ். இன்னும் கணக்கில் அடங்காதப் புனிதர்கள் நமக்கு முன் மனிதத்தைப் போற்றி வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். நம்மோடு பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். நாமும்  இப்புனிதர்களைப் போல மனிதத்தைப் போற்றி பேறுபெற்றவர்களாக மாற முயற்சிப்போம். நல்மனிதர்களாய் வாழ்ந்து புனிதத்தை நோக்கிப் பயணிக்க நம் புனிதர்கள் வழியாக இறைவனை வேண்டுவோம்.


 இறைவேண்டல் 

புனிதத்தின் உறைவிடமே இறைவா!  உம் சாயலாகப் படைக்கப்பட்ட நாங்கள் அனைவரும் இயேசுவின் போதனையை வாழ்வாக்கிய  புனிதர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நல்மனிதர்களாய் வாழ்ந்து புனிதத்தை நோக்கிப் பயணிக்க அருள்தாரும். ஆமென்

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்




† இன்றைய திருவிழா †

✠ அனைத்து புனிதர் பெருவிழா ✠
(ALL SAINTS’ DAY)


கடைபிடிக்கும் சமயம்/ சபைகள்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
மெதடிசம்
(Methadism)
மற்றும் பல கிறிஸ்தவ எதிர் திருச்சபைகள்
(Various Protestant denominations)

அனுசரிக்கும் நாள்:
மேற்கு கிறிஸ்தவம் = நவம்பர் 1
கிழக்கு கிறிஸ்தவம் = தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறு
"கல்தேயாவின் ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்" மற்றும் "கிழக்கு கத்தோலிக்கம்" தொடர்புடைய திருச்சபைகள் = “உயிர்த்தெழுதல் ஞாயிறுக்குப்” பிந்தைய முதல் வெள்ளிக்கிழமை.

இறைவனுக்காக தன் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்றவர்கள்; உலக மாந்தர்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டியாகவும் நின்றவர்கள்; தன்னலமற்று தியாக தீபங்களாக, இறைவனுக்காக தன் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்று வாழ்ந்து மறைந்தவர்களைத்தான் தூயவர்களாக அல்லது புனிதர்களாக அடையாளப்படுத்துகிறது கத்தோலிக்கத் திருச்சபை.

அனைத்து புனிதர் பெருவிழா (All Saints' Day அல்லது All Hallows Day அல்லது Solemnity/Feast of All Saints) என்பது கத்தோலிக்க திருச்சபை முதலிய பல மேற்கு கிறிஸ்தவ திருச்சபைகளில் நவம்பர் 1 அன்றும், கிழக்கு திருச்சபைகளில் தூய ஆவி பெருவிழாவுக்கு (Pentecost) அடுத்து வரும் ஞாயிறு அன்றும், "கல்தேயாவின் ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்" (Oriental Orthodox churches of Chaldea) மற்றும் "கிழக்கு கத்தோலிக்கம்" (Eastern Catholic) தொடர்புடைய திருச்சபைகள் “உயிர்த்தெழுதல் ஞாயிறுக்குப்” (Easter) பிந்தைய முதல் வெள்ளிக்கிழமையன்றும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள், எட்டாம் நூற்றாண்டில் “திருத்தந்தை மூன்றாம் கிரேகோரியின்” (Pope Gregory III (731–741) காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது. திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும், இவ்வகை அங்கீகாரம் பெறாமல், ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் திருச்சபையால் வந்திக்கப்பட்ட புனிதர்கள் அனைவரும் வேத சாட்சிகளே. வேதசாட்சிகளிலும் அனைவரது விழாக்களும் தனித்தனியாக கொண்டாடப்படுவதில்லை. வேதசாட்சிகளைத் தவிர ஏராளமான புனிதர்களும் மோட்சத்தில் புனிதர்களாக பேரின்ப பாக்கியம் அனுபவித்து வருகிறார்கள்.

இன்று நாம் மோட்சத்தில் இருக்கும் புனிதர் அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களது மகிமையையும், மாட்சிமையையும் திருச்சபை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. புனிதர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்ல, என்ன முடியாத வேறு நீதிமான்களையும் நாம் காண்கிறோம். அவர்கள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வாழ்ந்தவர்கள். அவர்கள் கடவுளைப் புகழ்கிறார்கள். கடவுளுடைய செம்மறியானவரையும் அவர்கள் வாழ்த்துகிறார்கள். இந்த நம் சகோதரர்களுடன் நாமும் கூடி மகிழ்வோம். புனிதரின் சமுதீத பிரயோசனத்தால் இவர்களுடன் நாம் தொடர்பு கொண்டிருக்கிறோம்.

மோட்சத்திலிருக்கும் புனிதர்களுடன் தேவபயத்துடன் வாழ்வதுடன் கடவுளது கட்டளைகளை அனுசரித்து நடக்க வேண்டும். எளிய மனத்தோராய் சாந்த குணம், வேதனைகளில் பொறுமை, நீதி, அனுதாபம், கற்பு, துன்பங்களில் சகிப்பு என்னும் புண்ணியங்களை அனுசரிக்க வேண்டும். நமது உழைப்புகளிலும் பிரச்சனைகளிலும் இயேசுவிடமே இளைப்பாறுதல் காணவேண்டும்.

"கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை'' (யோவான் 1:18). ஆனால் நம்மிடையே மனிதர்களாகப் பிறந்து புனிதர்களாக மாறியவர்களின் வழியாகத்தான் இறைவன் தமது மாட்சியை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்'' (மத்தேயு 16:24) என்ற இறைமகன் வாக்குக்கு சாட்சியாக வாழ்ந்தவர்கள் புனிதர்கள்.

இயேசுவின் சீடரான தூய இராயப்பர் (பேதுரு) தொடங்கி இந்தியாவின் முதல் புனிதையான தூய அல்போன்சம்மா வரை மேற்கண்ட இறைவார்த்தையாக வாழ்ந்து மறைந்தவர்கள்; புனிதர்களாக நம்மோடு இன்றும் வாழ்கிறார்கள்; நமக்காக செபிக்கிறார்கள்; நமக்காக பரிந்துபேசி அரும் அடையாளங்களை நமக்கு வழங்கிக் கொண்டுள்ளார்கள். தன் வாழ்நாளெல்லாம் செபத்திலேயே கழித்த தூய தெரசாள் இறப்பதற்கு முன்பு, ""என் பணி இனிமேல்தான் ஆரம்பமாகிறது'' என்று கூறி விண்ணகத்தில் உலக மக்களுக்காகப் பரிந்து பேசி செபிக்கப் போவதாக அறிவித்துச் சென்றாள்.

புனிதர்கள் "தங்களது வலிமையால் நற்பெயர் பெற்றார்கள். தங்களது அறிவுக்கூர்மையால் அறிவுரை வழங்கினார்கள்; இறை வாக்குகளை எடுத்துரைத்தார்கள். தங்கள் அறிவுரையாலும் சட்டம் பற்றிய அறிவுக் கூர்மையாலும் மக்களை நடத்தினார்கள். நற்பயிற்சியின் சொற்களில் ஞானிகளாய் இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் தங்கள் வழி மரபில் மாட்சி பெற்றார்கள். தங்கள் வாழ்நாளில் பெருமை அடைந்தார்கள். அவர்களுள் சிலர் புகழ் விளங்கும்படி தங்கள் பெயரை விட்டுச் சென்றார்கள். அவர்களின் வழி மரபு என்றும் நிலைத்தோங்கும். அவர்களின் மாட்சி அழிக்கப்படாது. அவர்களுடைய உடல்கள் அமைதியாய் அடக்கம் செய்யப்பட்டன.

அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும். மக்கள் அவர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களது புகழைச் சபையார் பறைசாற்றுவார் (சீராக் 44:1-15)'' என்ற தூய சீராக்கின் ஞான உரையைக் கண்ணோக்குகின்றபோது, நம் வாழ்வில் தீய எண்ணங்கள், உலக இச்சைகள், சிற்றின்பங்கள் போன்றவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அவர்கள் நமக்காக வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது. அவர்களின் மேன்மையை நாம் நினைக்க, சிந்திக்க வேண்டியுள்ளது.

"என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்'' (மத்தேயு 16:25) என்ற இறைமகன் இயேசுவின் வாக்குக்கு உண்மை சாட்சியாக நின்ற அன்னை மரியாள், தூய சூசையப்பர், தூய இராயப்பர், தூய அந்தோணியார், தூய செபஸ்தியார், தூய சின்னப்பர், தூய அருளப்பர், தூய தெரசாள், தூய அல்போன்சம்மால் போன்றோர்களின் பெயரைச் சொல்லி ""எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்'' என்று அவர்களிடம் செபங்கள் மூலமாக கேட்கின்றபோது, நம் தேவைகளை நிறைவேற்றவும், நம்மை பீடித்திருக்கின்ற நோய்களை, துன்பங்களை நீக்குவதற்காகவும், நமக்காக இறைவனிடம் நாள்தோறும் பரிந்து பேசுகிறார்கள்.

"விண்ணகத்தில் புனிதர்கள் தங்களிடம் இறை மக்களின் செபங்கள் வரும்போது, கிறிஸ்துவின் அரியணை முன் இந்த செபக் காணிக்கையையே தூபமாக அர்ப்பணிக்கிறார்கள்'' (திரு.வெளி:5-8).

கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காக பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது நமது கடமை. இன்றைய தினம், நவம்பர் ஒன்றாம் நாள் அனைத்து புனிதர்களின் நாள் என்பது குறிப்பிட்டத்தக்கது.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️



No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...