Wednesday, November 30, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (01-12-2022)

 

திருவருகைக்காலம் முதல் வாரம் - வியாழன்


முதல் வாசகம்

மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6

நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.

ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 118: 1,8-9. 19-21. 25-27a (பல்லவி: 26a)

பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.

அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
8
மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
9
உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! - பல்லவி

19
நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20
ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். - பல்லவி

25
ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!
26
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27a
ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 55: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


இறைவார்த்தையால் அடித்தளத்தை வலிமையாக்குவோம்! 


இறைவார்த்தை உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது. உயிரளிக்கக் கூடியது. எல்லாக் கால சூழ்நிலைக்கும் எல்லாத் தலைமுறைக்கும் பொருந்தக் கூடியது இறைவார்த்தையாகும். நம் வாழ்வின் எத்தகைய பிரச்சினையின் போதும், எத்தகைய குழப்பமான சூழ்நிலைகளிலும், துன்ப துயர நோய்களின் காலங்களிலும் கூட இறைவார்த்தையை புரட்டிப் பார்த்தால் நமக்கான சரியான தீர்வு கிடைக்கும் என்பது எவராலும் மறுக்கப்படாது.


 திருவருகைக் காலத்தின் இன்றைய நாள் நற்செய்தி இறைவார்த்தை நம் வாழ்விற்கு உணவு உடை உறைவிடம் போல அடிப்படைத் தேவையாக இருக்கிறது என்ற சிந்தனையைத் தருகிறது. ஆம் உணவு உடை உறைவிடம் நமக்கு எப்போதும் தேவையானவை. அவ்வப்போது மட்டும் நாம் அவற்றை நாடுவதில்லை. அது போலத்தான் இறைவார்த்தை நமக்கு எப்போதும் அவசியமானது. நம் வாழ்வுக்கு ஆதாரமானது. ஆனால் நாம் இறைவார்த்தையைத் தேடுவதும் நாடுவதும் அவ்வப்போதுதான்  என்னும் நிலை வருந்துதற்குரியது. இதனால்தான் நம் வாழ்வு வலிமை இழக்கிறது.


வீடுகட்டும் போது அஸ்திவாரத்தை நாம் வலிமையாக அமைப்பதுண்டு. வீட்டின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உயரத்திற்கும் ஏற்றாற்போல அடித்தளத்தின் ஆழம் அமைவது அவசியம். அடித்தளம் அமைப்பதற்கு நாம் பயன்படுத்துகின்ற மணல், கற்கள், சிமெண்ட் போன்றவற்றை நாம் தரமானதாகத் தேடித் தேடி வாங்குவதும் உண்டு. ஏன்?  நம்முடைய வீடு பலமானதாக, வலுவுள்ளதாக, எளிதில் இடிந்து விழக்கூடியதாக இருக்கக் கூடாது என்பதற்காக அன்றோ.


அதுபோலத்தான். நம் ஆன்ம வீட்டைக் கட்டிக்காக்க அடித்தளம் இறைவார்த்தையாக அமைய வேண்டும். பலமான ஆன்மா பலமான உடலையும் மனதையும் உருவாக்கும்.பலமான உடலும் மனமும் ஆன்மாவும் நல்வாழ்வு வாழ உதவும். துன்பமோ, சோதனைகளோ நம்மை அசைக்காது. அதுதான் இறைவார்த்தையின் வலிமை. 


கிறிஸ்து பிறப்பு விழா என்பது இறைவார்த்தை மனுவுருவெடுத்த விழா. அந்த இறைவார்த்தையை நம் உள்ளத்தில் இருத்தி அது காட்டும் வழியில் நாம் வாழ்ந்தால் ....நம் வாழ்வு வளமானதாக வலிமையானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இறைவார்த்தையை நாடுவோம்.  அவற்றின் படி நடப்போம். நம் வாழ்வின் அடித்தளம் வலிமையாகட்டும். இறைவார்த்தையின்  ஒளியிலும் வழியிலும்  வாழ்ந்து சாட்சியத்தின் பிள்ளைகளாக வாழ்ந்திட வரம் வேண்டுவோம்.  


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! இறைவார்த்தையின் வழியிலும் ஒளியிலும் எந்நாளும் வாழ்ந்திட  தேவையான அருளை தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...