Thursday, December 1, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (02-12-2022)

 

திருவருகைக்காலம் முதல் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்

ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.

ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31

அக்காலத்தில்

இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


ஆண்டவரே நம் ஒளி! அவரால் நம் கண்கள் ஒளி பெறட்டும்! 

திருவருகைக் காலத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் நாம். இந்த நாட்களில் நமக்குத் தரப்படும் வாசகங்கள் நம்மை உண்மையான மனமாற்றத்திலும் ஆழமான நம்பிக்கையிலும்  இறைவார்த்தையில் வேரூன்றிய வாழ்விலும் வளர நமக்கு அழைப்பு விடுக்கின்றன. இவ்வழைப்புகளுக்கு செவிமடுத்து நாம் வாழ முயலும் போதுதான் இத்திருவருகைக் காலம் அர்த்தமுள்ளதாய் அமையும். 

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா மூலம் இஸ்ரயேல் மக்கள் ஏற்ற காலத்தில் கடவுளால் அடையப்போகும் நன்மைகளைப் பட்டியலிடுகிறார். பார்வையற்றோர் பார்வை பெறுவர், கேட்க இயலாதோர் கேட்பர் ; வறண்ட நிலம் கனி தரும்; ஒடுக்கப்பட்டோர் ஆண்டவரில் மகிழ்வர்; தீய நாட்டம் கொண்டோர் அழிவர் ; ..என்று அவ்வார்த்தைகள் கூறுகின்றன. ஆண்டவரின் வருகை இருளான இவ்வுலகத்தை ஒளிபெறச்செய்கின்றது என்ற கருத்து இங்கே ஆழமாகக் கூறப்படுகிறது. 

இன்றைய பதிலுரைப் பாடலும் ஆண்டவரே நமக்கு ஒளியும் மீட்புமாய் இருக்கிறார். நமக்கு செவிசாய்ப்பவராக இருக்கிறார் என்பதையும் விளக்குகிறது.

இதனடிப்படையில் நற்செய்தி வாசகத்திலும் பார்வையற்ற இருவர் இயேசுவை நாடிச் சென்று அவருடைய இரக்கத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய இருளான வாழ்க்கையானது இயேசுவின் வருகையால் ஒளிபெற்றது. நம்பிக்கை அவர்களின் புறக்கண்களுக்கு மட்டுமல்லாது அகக் கண்களுக்கும் ஒளிதந்தது. அந்த ஒளியைப் பெற்றவர்களாய் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் நாடெங்கும் பரப்பினர். ஆம் ஆண்டவரால் நாம் ஒளிபெறும் போது மீட்பை அறிவிப்பவர்களாக மாறுகிறோம்.

நமது வாழ்வை நாம் சிந்திப்போம். இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறும் வண்ணம் நம் வாழ்வு அமைகிறதா?  ஆண்டவரால் நம் கண்கள் ஒளிபெற்றுள்ளதா?


 இறைவேண்டல்

 வல்லமையான இறைவா!  நீரே எங்கள் அன்றாட வாழ்வில் ஒளியாகவும் வழியாகவும் இருந்து வழிநடத்தும்படியாக வேண்டுகிறோம். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...