Monday, November 28, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (29-11-2022)

 

திருவருகைக்காலம் முதல் வாரம் - செவ்வாய்



முதல் வாசகம்

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10

ஆண்டவருக்குரிய நாளில்

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு — இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.

கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை.

அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக் கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.

அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 7-8. 12-13. 17 (பல்லவி: 7)

பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதியும் சமாதானமும் தழைத்தோங்கும்.

1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! - பல்லவி

7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

12
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13
வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். - பல்லவி

17
அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ! நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு தூய ஆவியால் பேருவகையடைகிறார்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 21-24

அக்காலத்தில்

இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார். “என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


"குழந்தை மனநிலை தேவையா!" 


''தந்தையே,...ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, 

குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்'' (லூக்கா 10:21) என்ற இறைவசனம் குழந்தைகளின் மேன்மையை போற்றுவதாக இருக்கின்றது.  குழந்தையுள்ளம் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் வழிகாட்டுதலையும்  பெறமுடியும். ஏனெனில் குழந்தையுள்ளம் கொண்டவர்கள் மட்டுமே திறந்த உள்ளத்தோடு இருப்பார்.  கடவுளை நாம் திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆழமான சிந்தனையை இந்த திருவருகை காலமும் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்குத் தருகிறது.  "தந்தையே உம்மை புகழ்கிறேன் " என இயேசு உளமாற பாடியது தந்தையாம் கடவுள் தம் சீடர் வழியாகச் செய்த நன்மைகளுக்கு நன்றியாக இருக்கின்றது.  சீடர்களின் மனநிலை குழந்தையின் மனநிலைக்கு ஒப்பிடப்படுகின்றது. ஒரு குழந்தை எவ்வாறு தன் தாய் தந்தையரை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு அவர்களை சார்ந்து இருக்கின்றதோ அதேபோல  சீடர்களும் இயேசுவை முழுவதுமாக சார்ந்திருந்தனர். அவருடைய இறையாட்சிப் பணிக்கு பக்கத் துணையாக இருந்தனர். இந்தப் பின்னணியில்தான் இயேசு தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஞானத்தை நினைத்து தன் தந்தைக்குபப் புகழ் பாடினார். 


கடவுளின் ஆட்சி நெருங்கி வருகிறது என்ற நற்செய்தியை இயேசு கூறினார்.  அவர் கூறுவதைச் சிலர் ஏற்றனர்; பலர் ஏற்க மறுத்தனர். இயேசுவின் சொல்லைக் கேட்டு அதில் உண்மையுள்ளது என உணர்ந்து ஏற்றவர்கள் யார் என ஆய்வு செய்த இயேசு திறந்த உள்ளமுடைய அம்மனிதர்களை  ''குழந்தைகள்'' என அழைத்துள்ளார். சீடர்கள் இயேசுவின் போதனையை மற்றவர்களை காட்டிலும் திறந்த மனநிலையோடு ஏற்றுக் கொண்டனர். எனவேதான் எப்பொழுதும் அவரோடு பயணிக்க முடிந்தது. இயேசுவின் பிறப்புப் பெருவிழாவையும் இரண்டாம் வருகையையும் எதிர்நோக்கி இருக்கும்  நாம் குழந்தைக்குரிய மனநிலையில் திறந்த மனதோடு இயேசுவை ஏற்றுக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். ஒரு குழந்தை எவ்வாறு தன் தாய் தந்தையரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து அவர்களிடமிருந்து பல்வேறு உண்மைகளை அறிய ஆவல் கொள்கின்றதோ, அதேபோல நம்முடைய சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் கடவுளிடம் முழுமையாக ஒப்படைத்து மீட்பு என்னும் ஞானத்தை பெற்றுக் கொள்ளும் பொழுது நிலைவாழ்வு  வாழ முடியும். இத்தகைய வாழ்வை வழங்கத் தான் கடவுளாகிய ஆண்டவர் இயேசு ஒரு மனிதராக இவ்வுலகில் பிறந்தார்.


ஒரு தாய் தன் குழந்தைக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து அக்குழந்தையை அறியாமையிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு கொடுக்கிறார். அதேபோல கடவுள் தான் தேர்ந்தெடுத்த இனமாகிய இஸ்ரயேல் மக்களுக்கு அவரை அறிந்து கொள்ளவும் மீட்பின் கனியை சுவைக்கவும் பல்வேறு இறைவாக்கினர்கள்,அரசர்கள், நீதித்தலைவர்கள்   வழியாக வாய்ப்பு கொடுத்த போதிலும் அவர்கள் வாய்ப்பை பயன்படுத்தாமல் பல நேரங்களில் அடிமைத்தனத்திற்கு உள்ளாகினர். எனவேதான் தன் ஒரே மகனை இந்த மண்ணுலகிற்கு ஒரு குழந்தையாக பிறக்க வைத்து நம்மை மீட்பதற்காக கடவுள் திருவுளம் கொண்டார். அதிலும் குறிப்பாக குழந்தை உள்ளம் படைத்த சீடர்களுக்கு தம்மையே வெளிப்படுத்தினார். எனவே தான் ஆண்டவர் இயேசு தன் தந்தையை நோக்கிப்  புகழ் பாடினார். அதன்பிறகு சீடர்களை உற்சாகப்படுத்தும் விதமாக "நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' எனக் கூறினார். சீடர்களுக்கு கொடுத்த வாய்ப்பைப் போல இஸ்ரயேல் மக்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களோ கடவுளைத் திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் வாழ்வை சுயநலப்போக்கோடும்   நம்பிக்கையற்றத் தன்மையோடும்  வாழ்ந்து வந்தனர். சீடர்களுக்கு நம்பிக்கையற்ற தன்மையும் சுயநல போக்கும் ஒரு பக்கத்தில் இருந்தாலும் அதிலேயே அவர்கள் வீழ்ந்து கிடைக்காமல் ஒரு கட்டத்தில் இயேசுவை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொண்டனர். அதன் பயனாக இயேசுவின் வழியாக மீட்பின் உண்மைகளை உணர்ந்து கொண்டனர். எனவேதான் இயேசு சீடர்களை கொடுத்துவைத்தவர்கள் என பாராட்டுகிறார்.


நான் ஒரு முறை இல்ல சந்திப்புக்கு சென்றபோது ஒரு குடும்பத்தினரோடு பேசிக்கொண்டிருந்தேன். அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை இருந்தது. நான் பெரியவர்களோடு பேசிக்கொண்டிருந்த பொழுது அக்குழந்தை என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. நான் அந்தக் குழந்தையை முதலில் கவனிக்கவில்லை. பேசிக்கொண்டிருந்த பொழுது அக்குழந்தையை உற்றுக் கவனித்து பார்த்தேன். அப்போது அக்குழந்தை நான் செய்வது போல செய்ய முயற்சி செய்தது. நான் கரம் விரித்து செபம் செய்த பொழுது அக்குழந்தையும் கரம் விரித்தது. இது ஒரு சாதாரண  நிகழ்வாக இருக்கலாம். ஆனால் இத்தகைய குழந்தை மனம் நமக்கு வேண்டும். திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை குழந்தைகளுக்குத் தான் இருக்கின்றது. அங்கே ஆணவம், அகங்காரம், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மனநிலை போன்றவை இருக்காது. புதியவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற திறந்த மனநிலை மட்டும்தான் இருக்கும். இத்தகைய மனநிலையைத் தான் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கொண்டிருக்க அழைக்கப்படுகிறோம்.


திருவருகைக் காலத்தில் ஆண்டவர் இயேசுவின் பிறப்புப் பெருவிழாவையும்   ஆண்டவரின் இரண்டாம் வருகையையும் எதிர்பார்த்திருக்கும் நாம் குழந்தைக்குரிய மனநிலையில் திறந்த உள்ளத்தோடு வரவிருக்கும் இறைவனை தகுதியான உள்ளத்தோடு ஏற்றுக் கொள்வோம். இறைவன் நம் உள்ளத்திற்கு வரும்பொழுது நம்முடைய உள்ளமும் உடலும் நிறைவான ஆசீர்வாதத்தை பெறும். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், சதுசேயர்கள் போன்றவர்கள்   மறைநூலின் விளக்கங்கள் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்ற மமதையில் வாழ்ந்தனர். தங்களை ஞானிகளாக கருதினர். ஆனால் இயேசு என்னும் மெசியா அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்த போதும் அவர்களின் திறந்த மனநிலை இல்லாத பண்பினால் இயேசு என்னும் மீட்பரை அடையாளம் காணமுடியாமல் போயினர். அவர்கள் தங்களுக்கு மட்டும்தான் மறைநூல் அறிவு இருக்கின்றது என்ற மனநிலையில் வாழ்ந்ததால் பழைய ஏற்பாட்டின் நிறைவாய் வந்த இயேசு கிறிஸ்துவை அடையாளம் காணமுடியாமல்  வாய்ப்பினை தவற விட்டனர்.


"அறிவை நாம் கட்டுப்படுத்தவில்லையென்றால் அறிவு நம்மை கட்டுப்படுத்தும் " என ராபின் ஷர்மா கூறியுள்ளார். அறிவா ? இறைஞானமா? என ஆய்வு செய்யும் பொழுது இறைஞானமே இயேசு என்னும் மீட்பரை முழுவதுமாக உணர வைக்கின்றது. அறிவு  ஒரு சில நேரங்களில் நம்பிக்கையற்ற தன்மைக்கு வழிகாட்டுகின்றது. எனவே இறை ஞானத்தை பெற்று மீட்பின் கனியைச் சுவைக்க நாம் திறந்து மனநிலையோடு இறைவனை ஏற்றுக் கொண்டு நல்லுறவு கொள்ள வேண்டும். அத்தகைய வாழ்வை வாழத்தான் ஆண்டவர் இயேசு இன்றைய நாளிலே நம்மை வலியுறுத்துகிறார். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் அறிவார்ந்த சிந்தனைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இறை ஞானத்தை பெற்றுக் கொள்ளும் திறந்த மனநிலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்த நேரத்தை விட்டுவிடுவோம். குழந்தைக்குரிய மனநிலையில் இறைவனிடம் நம்மையே முழுவதுமாக ஒப்படைத்து அவரின் வழிகாட்டுதலில் வாழ்ந்து இறை மீட்பை எந்நாளும் சுவைத்திட தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல் :

குழந்தை உள்ளத்தை அன்பு செய்யும் இறைவா! நாங்கள் எங்களுடைய அன்றாட வாழ்வில் கள்ளங்கபடமற்ற தன்மையோடும் திறந்த மனநிலையோடும் வாழ்ந்து உம்மை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள அருள்தாரும். அதன் வழியாக இறை ஞானத்தைப் பெற்று மீட்பின் கனியை  எந்நாளும் சுவைத்திடவும்  உம்  வருகைக்கு எங்களையே ஆயத்தப்படுத்தவும்  தேவையான அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...