Sunday, November 27, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-11-2022)

 

திருவருகைக்காலம் முதல் வாரம் - திங்கள்



முதல் வாசகம்

நாட்டில் விளையும் நற்கனிகள் இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 4: 2-6

ஆண்டவர் வரும் நாளில் அவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும். அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும் ‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் ‛புனிதர்’ எனப்படுவர்.

என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார். சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும். அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1
‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4
ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

6
எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7
உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி

8
“உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9
நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 80: 3

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11

அக்காலத்தில்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.” என்றார்

ஆண்டவரின் அருள்வாக்கு.


வியப்புக்குரிய நம்பிக்கை என்னிடம் உள்ளதா? 

நம்பிக்கை" என்பது அறிவிற்கு அப்பால் ஏற்படும் உளம் சார்ந்த வெளிப்பாடு.இந்த நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது. எத்தனை முறை நாம் நம்பிக்கையைப் பற்றி சிந்தித்தாலும் நம்பிக்கையின் பொருளை ஒருவராலும் சரியாக முழுமையாக வரையறுக்க இயலாது. ஏனெனில் நம்பிக்கை என்பது கண்களுக்கு புலப்படுவது அல்ல. உள்ளத்தால் உணர்ந்து செயல்படுத்தக் கூடியது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முன்னே நகர்வதற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைவது நம்பிக்கை எனலாம்.


திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தின் திங்கள் கிழமையன்று நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அழைப்பு இறைவனை எதிர்கொள்ள இறை  நம்பிக்கையில் வளரவேண்டும் என்பதே.அதுவும் இறைவனே வியக்கத்தக்க வகையில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற மேலான அழைப்பு நமக்குத் தரப்பட்டுள்ளது. திருவருகைக் காலத்தின் சாராம்சமே விழிப்பாகவும் ஆயத்தமாகவும் மானிட மகனை எதிர்கொள்ளக் காத்திருத்தலே. இந்த காத்திருப்பில் நம்பிக்கை இல்லாது போனால் அந்தக் காத்திருப்புக்கு அர்த்தம் இல்லாது போய்விடுமன்றோ.

இன்றைய நற்செய்தியானது நாம் வியக்கத்தக்க இறைநம்பிக்கையில் வளர "நூற்றுவர் தலைவனை "நமக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் தந்துள்ளது. அவரின் நம்பிக்கையை இயேசு வியக்க காரணம் என்ன? நீர் என் இல்லத்திற்கு வரவேண்டாம். ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் எனறு நூற்றுவர் தலைவன் கூறியதா? அல்லது யாவே இறைவன் மீது நம்பிக்கை கொள்ளாத புற இனத்தார் அந்த இறைவனையே போதிக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு உதவி கேட்ட செயலா?

இவற்றையும் தாண்டிய ஒரு அருங்குணம் நூற்றுவர் தலைவனிடம் உள்ளது. நான் வருகிறேன் என்று இயேசு சொன்ன போதும் தன் தகுதியற்ற நிலையை இயேசுவிடம் கூறினார் அந்த நூற்றுவர் தலைவன். இதிலென்ன வியப்பு இருக்கிறது என நாம் யோசிக்கலாம். தன் தகுதியற்ற நிலையை வெளிப்படையாய்க் கூறிய பின்னரும் இயேசு தன் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நூற்றுவர் தலைவனின் துணிச்சலான உறுதியான  நம்பிக்கையே இயேசுவை வியப்புக்குள்ளாக்கியது.

ஆண்டவரே என் உள்ளத்தில் நீர் வர நான் தகுதியற்றவன் என ஒவ்வொருமுறையும் திருப்பலியில் நாம் அறிக்கையிட்டு, நம் நிலையை உணர்ந்தவர்களாய் இயேசு நம்மை நிராகரிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நாம் அவரை உட்கொள்கிறோமே! நம்மையும் பார்த்து இயேசு நிச்சயம் வியப்பாரன்றோ! இதை நாம் என்றாவது உணர்ந்ததுண்டா?

அன்புக்குரியவர்களே வியக்கத்தக்க நம்பிக்கை இதுதான். தகுதியற்ற நமக்கும் இயேசு தன் மனதைத் திறப்பார் என்ற உறுதியான நம்பிக்கையோடு நாம் அவரை அணுகினால் நமக்கு அவர் எல்லாம் செய்வார். ஆண்டவர் பிறப்புக்காய் ஆயத்தம் செய்யும் நாம் தகுதியற்ற நம் நிலையை தாழ்ச்சியோடு அவரிடம் கூறி அவரை அழைத்தால் நம் உள்ளங்களில் அவர் நிச்சயம் பிறப்பார். அதனால் நம் வாழ்வு மாறும்.இத்தகைய நம்பிக்கையில் நாம் வளர முயலுவோமா?


 இறைவேண்டல் 

அன்பு இறைவா நாள்தோறும் நாங்கள் நீரே வியக்கும் அளவுக்கு நம்பிக்கையில் வளர துணை செய்யும் ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...