Saturday, November 26, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-11-2022)

 

திருவருகைக்காலம் முதல் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து ‘புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1
‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4
ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

6
எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7
உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி

8
“உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9
நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி

இரண்டாம் வாசகம்

நமது மீட்பு மிக அண்மையில் உள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-14

சகோதரர் சகோதரிகளே,

இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.

இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாயிருங்கள்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 37-44

அக்காலத்தில்

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


 விழிப்பாயிருங்கள்!


திருவருகைக்காலம் என்பது 'Advent' என்னும் இலத்தீன் மொழிப் பெயர்ப்பிலிருந்து "வருகை" எனப் பொருள் பெறுகின்றது. திருவருகைக்காலம் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்க காலம் ஆகும். இன்றைய நாளில் திருவழிபாட்டில் புத்தாண்டை கொண்டாடுகிறோம். எனவே இன்றைய நாள் நம்முடைய ஆன்மீக வாழ்வை புதுப்பித்து விழிப்போடு வாழ அழைப்பு விடுக்கின்றது. திருவருகைக்காலம் இரண்டு வகையான இயல்பைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக ஆண்டவர் இயேசுவினுடைய பிறப்பு பெருவிழாவைத் தகுதியான உள்ளத்தோடு கொண்டாட அழைப்பு விடுக்கின்றது. இரண்டாவதாக ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்தி அவருக்கு உகந்த பிள்ளைகளாக வாழ அழைப்பு விடுக்கின்றது.


நம்முடைய அன்றாட வாழ்வில் விழிப்பாய் இருந்து ஆயத்தப்படுத்துதல் என்பதைச் சிந்திக்கின்ற பொழுது பல நேரங்களில் நாம் விழிப்போடு இல்லாததால்தான் வாழ்வில் பல துன்பங்களையும் தோல்விகளையும் சந்திக்கின்றோம் என்பதை உணர முடிகிறது. எனவேதான்  ஆண்டவர் இயேசு இன்றைய நாளிலே ''விழிப்பாயிருங்கள். ஏனெனில்  ஆண்டவர் 

எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' என்று இன்றைய நற்செய்தியில் விழிப்போடு இருத்தலின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.   நம்மைப் படைத்த கடவுள் நாம்  தூயோர்களாக வாழ்ந்து மீட்பின் கனிகளைச் சுவைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அதற்கு அடிப்படையாக இருப்பது விழிப்போடு நம்மையே ஆயத்தப்படுத்துவதாகும். தாய்த்திருஅவையால் இதற்காகக் கொடுக்கப்பட்ட உன்னதமான காலம்தான் இந்த திருவருகைக்காலம்.


திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ''விழிப்பாயிருங்கள்'' என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ''விழிப்பு'' என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ''விழிப்பாயிருத்தலோடு'' நெருங்கிப் பிணைந்ததாகும்.அதுமட்டுமல்லாது  திருடன் வருவதாகக் கேள்விப்பட்ட பின் அவனிடமிருந்து தன் உடைமைகளைக் காப்பாற்றி கொள்ள ஒரு வீட்டு உரிமையாளர் எவ்வளவு விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருப்பாரோ அந்த அளவுக்கு நாம் கண்ணும் கருத்துமாக இருந்து நம் ஆன்ம வீட்டைக் காத்துக்கொண்டு ஆண்டவரை எதிர்கொள்ள வேண்டும்.


விழிப்பாக இருத்தல் என்பது எந்த நேரத்திலும் மனம் தளராது, எதிர்பார்ப்புடன் வாழ்தலே ஆகும்.  நம்முடைய அன்றாட வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் இடையூறுகள் வந்தாலும் தடைகள் வந்தாலும் நாம் நம் ஆண்டவர் இயேசு விட்டுச்சென்ற நற்செய்தி மதிப்பீடுகளின் படி வாழ்ந்து இறையாட்சிக்கு சான்று பகர்ந்து நம்மையே ஆயத்தப்படுத்தும் பொழுது மண்ணுலகில் நாம் துன்பப்பட்டாலும் விண்ணுலகில் மிகுந்த கைமாறு பெற்று புனிதரின் கூட்டத்தில் இணைந்து கடவுளை நேருக்கு நேராக கண்டு நிறைவான வாழ்வு பெற முடியும். இத்தகைய நிலையை அடைந்து மீட்பின் கனியை சுவைக்க கடவுள் கொடுத்த வாய்ப்புதான் இந்த உலக வாழ்வு.  இந்த உலக வாழ்வு ஒரு நிலையற்ற வாழ்வு. இந்த நிலையற்ற வாழ்விலே நாம் இவ்வுலகம் சார்ந்த பணம் பட்டம் பதவி ஜாதி இன வேறுபாடு போன்றவற்றிற்கு மதிப்பளிக்காமல் இறையாட்சியின் மதிப்பீடான மனிதத்திற்கும் மனித நேயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நாம் மீட்பின் கனியைச் சுவைக்க முடியும். இதன் வழியாக கடவுளுக்கு உகந்த வகையிலேயே வாழ்ந்து விழிப்போடு நம்மையே ஆயத்தப்படுத்த முடியும். 


 விழிப்போடு எவ்வாறு ஆயத்தப்படுத்துவது? என்பது பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமைகளை செய்வது வழியாக நான் விழிப்போடு இருக்க முடியும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கடமைகளை செய்வதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் மாணவராக  இருந்தபொழுது போதிய பணம் இல்லாததால் படிக்கக் கூட வசதி இல்லாமல் இருந்தார். ஆனால் அவற்றை தடையாக கருதாமல் எப்படியாவது படித்து வாழ்வில் முன்னேறுவேன் என்ற ஆழமான நம்பிக்கையோடு தன்னுடைய கடமைகளை முழு ஈடுபாட்டோடு செய்தார். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தினார். இதன் வழியாக மிகச் சிறந்த வெற்றியாளராக மாறினார். இதுதான் மனித வாழ்வின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றது. நம்முடைய கிறிஸ்தவ வாழ்விலும் நமக்கு கொடுக்கப்பட்ட கடமைகளில் உண்மையோடும் நேர்மையோடும் செயல்படுகின்ற பொழுது, நிச்சயமாக வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்த முடியும். 


இரண்டாவதாக நம் குறைகளை அறிந்து விழிப்போடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் நாம்,  நம்முடைய பாவங்களை ஏற்று மனம் வருந்த முயற்சி செய்வோம். தொடக்கத்தில் காயின் தான் செய்த பாவத்தை கடவுளுக்கு முன்பாக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. எனவே கடவுளின் ஆசியை இழந்தார். காயீனைப் போல இன்றைய காலக்கட்டத்தில் நம்மோடு வாழக்கூடிய எத்தனையோ மனிதர்கள் தன்னுடைய குற்றங்களை ஏற்காமல் தங்களையே நேர்மையாளராக நியாயப்படுத்தி வருகின்றனர்.நாமும் கூட பல வேளைகளில் இம்மனநிலையைப் பெற்றிருக்கிறோம். இத்தகைய நிலையை அகற்றும் பொழுது தான் நாம் கடவுளுக்கு உகந்த வகையில் நம்மை ஆயத்தப்படுத்த முடியும்.


மூன்றாவதாக கடவுளோடு இணைந்திருத்தல் வழியாக நாம் விழிப்போடு வாழ முடியும். "கிளைகள், திராட்சைச் செடியோடு இணைந்திராவிடில் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தால் அன்றி கனி தர இயலாது " (யோ: 15: 4) என்ற இறைவசனம் கடவுளோடு இணைந்திருப்பது வழியாக நாம் நம்மையே அவரின்  வருகைக்காக ஆயத்தப்படுத்த முடியும் என்ற சிந்தனையை வழங்குகின்றது.  நம்முடைய செபத்தின் வழியாகவும் தவத்தின் வழியாகவும் மனிதநேய செயல்பாடுகள் வழியாகவும் கடவுளின் உடனிருப்பை உணர்ந்து அவருக்கு வந்த பிள்ளைகளாக நாம் வாழ முடியும். எனவே திருவருகைக் காலத்தில் நம்முடைய செப வாழ்வை அதிகப்படுத்துவோம். நம்முடைய அன்பை வெளிப்படுத்தி நம்மோடு வாழக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பல செய்து அவர்களின் மகிழ்ச்சியில் பாலன் இயேசுவை கண்டு அகமகிழ முயற்சி செய்வோம்.  தவ வாழ்வின் வழியாக கடவுளின் உடனிருப்பை உணர்வோம் . இவ்வாறாக கடவுளோடு இணைந்திருப்பதன்  வழியாக கடவுளின் வருகைக்காக விழிப்போடு நம்மை ஆயத்தப்படுத்த முடியும். 


திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் இருக்கின்ற நாம், விழிப்போடு நம்மை தேடி  மீட்க வருகின்ற ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு நம்மையே ஆயத்தப்படுத்த முன்வருவோம். "கடந்தது கடந்துவிட்டது, எதிர்காலம் நமது கையில் இல்லை, நிகழ்காலம் நம்முடையது" என்ற வார்த்தைகளைப் புரிந்து கொண்டு நாம் பிறருக்குப் பலன் கொடுக்கும் வகையில் அன்போடு நன்மைகள் பல செய்வோம்.இரண்டாம் வாசகம் கூறுவது போல இயேசுவை அணிந்து கொள்வோம். அப்பொழுது நம்மை மீட்க வருகைதரும் இயேசுவின்   மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுக்க முடியும். அதற்கு நம்முடைய சிந்தனை, சொல், செயல், உடல், ஆவி அனைத்தையும் தூய்மையாக வைத்திருந்து விழிப்போடு நம்மை ஆயத்தப்படுத்துவோம். இத்தகைய மனநிலையோடு வாழும் பொழுது ஆண்டவர் இயேசுவின் வருகை எப்பொழுது வந்தாலும் நமக்கு பயம் இல்லை. வாழுகின்ற சான்று பகரக்கூடிய வாழ்வுக்கு நிச்சயமாக இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் கைமாறு உண்டு. எனவே விழிப்போடு நம்மையே கடவுளுக்கு உகந்த வகையில் ஆயத்தப்படுத்த தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல் : 


எங்களை மீட்க வந்த பாலன் இயேசுவே! எங்களுடைய மனித பலவீனத்தை நீர் அறிந்திருக்கிறீர். நாங்கள் அவற்றை வெற்றி கொண்டு உமக்கு உகந்த வகையில் எங்களையே விழிப்போடு ஆயத்தப்படுத்த தேவையான இறையருளை தாரும். உமது  வருகையின் வழியாக இந்த உலகிற்கு நீர் கொண்டு வந்த அன்பு,   நம்பிக்கை, அமைதி, மகிழ்ச்சி, மீட்பு போன்றவற்றை நாங்களும் பெற்று பிறரும் பெற்று நிறைவான மகிழ்வைப் பெற்றிடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...