Saturday, December 3, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (04-12-2022)

 

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்

நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10

ஆண்டவருக்குரிய நாளில்

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.

கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை.

அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 7-8. 12-13. 17 (பல்லவி: 7a)

பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! - பல்லவி

7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

12
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13
வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். - பல்லவி

17
அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! - பல்லவி

இரண்டாம் வாசகம்

மக்கள் அனைவரையும் கிறிஸ்து மீட்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 4-9

சகோதரர் சகோதரிகளே,

முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கு ஏற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.

ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்துகொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, “பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்” என இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 4, 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-12

அக்காலத்தில்

திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்துக்கு வந்து, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.

இவரைக் குறித்தே, “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.

பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். ‘ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை’ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன், எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதி இல்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மனமாற்றத்தோடு வாழ்வின் பாதையை செம்மையாக்குவோம்! 


திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் நாம் அடி எடுத்து வைக்கிறோம். இந்த நாளின் வாசகங்கள் அனைத்தும் நாம் மனமாற்றம் பெற்ற மக்களாய் வாழ வேண்டுமென அழைப்பு விடுக்கின்றன. நம்மில் பலர்  திருவருகைக்காலம் மகிழ்வோடும் பரபரப்பாகவும் இருக்க வேண்டிய காலம் எனவும் தவக்காலம் துயரத்தோடும் ஒறுத்தல்களோடும் மாற்றங்களை உண்டாக்கும் காலமாகவும் இருக்கவேண்டும் எனவும் எண்ணுகிறோம்.

ஆனால் அது அப்படியல்ல. திருவருகைக் காலமும் மனமாற்றத்திற்கு நம்மை அழைக்கும் காலம். ஆண்டவருடைய வருகைக்காக நாம் மகிழ்வோடும் பரபரப்போடும் காத்திருந்தால் மட்டும் போதாது. அவரை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்க நமது மனங்கள் கரடு முரடாய் இருப்பது சரியானது அல்ல.

 மனமாற்றம் என்பது குறிப்பிட்ட தருணத்திலோ அல்லது நாட்களிலோ நிறைவுறுவதல்ல. மாறாக மனிதனின் வாழ்நாளின் இறுதி வரையிலும் நிகழக் கூடியது.  நிகழ வேண்டியது. மனமாற்றம் என்பது நமது அடிப்படை எண்ணத்தில் ஏற்படக் கூடிய மாற்றம்.இம்மனமாற்றம் நேர்மறையாக நல்லவையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.  மாறாக எதிர்மறையாகவும் தீயவையாகவும் இருந்தால் வாழ்வே வீணாகிவிடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் மூலம் மனமாற்றத்திற்கான அழைப்பு அன்றைய யூதர்களுக்கு வழங்கப்பட்டதை நாம் வாசிக்கிறோம். பல்வேறு வகையில் தங்கள் சொந்த நாட்டிலேயே அடிமைப்படுத்த இவர்கள் தங்களை மீட்க மெசியா வருவார் என ஆண்டாண்டு காலமாய் காத்திருந்தார்கள். ஆனால் அந்த காத்திருப்பு அர்த்தமுள்ளதாய் இல்லை. தங்களிடையே பல பிளவுகளும் அடக்குமுறைகளும் கொண்டு அவர்கள் வாழ்ந்தனர். சட்டங்களின் பேரில் ஏழைகள் அடிமைப்படுத்தப்பட்டனர். கடவுளிடம் உண்மையான அன்பும் பக்தியும் இல்லாமல் வெளிவேடக்காரர்களாய் வாழ்ந்தனர். இந்நிலை சில தலைமுறைகளாகத் தொடர்ந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக தயார் செய்ய இறைவாக்கினர்களுள் இறுதியானவராக இயேசுவின் முன்னோடியாக திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்கான அறைகூவல் விடுக்கிறார். அவருடைய வார்த்தைகள் கடினமானவையாகத்தோன்றினாலும் மக்களின் மனதில் நல்மாற்றத்தை விதைக்கக்கூடியதாக அமைந்தது. 


அன்று யூதர்களுக்கு வழங்கப்பட்ட மனமாற்றத்திற்கான அழைப்பு இன்று நமக்கும் விடுக்கப்படுகிறது. கிறிஸ்துவின் பிறப்பு விழாவிற்காக நம்மையே நாம் தயாரிக்கும் இவ்வேளையில் நமது  வாழ்வென்னும் பாதை எவ்வாறு இருக்கிறது என நாம் சிந்தித்து மனம்மாற வேண்டும். பிளவுகளும், உலகின் மாயைகளுக்கு அடிமையாகும் நிலையும், உண்மையற்ற அன்பும், பக்தி என்னும் பெயரில் வெளிவேடத்தன்மையும் நிறைந்து நமது மனங்கள் கரடுமுரடாய் இருந்தால் ஆண்டவரை நம்மால் வரவேற்க இயலுமா? எனவே மனமாறுவோம்.நம் வாழ்வை செம்மைப்படுத்துவோம். கோடரியால் வெட்டப்படும் மரங்களாய் இல்லாமல் கனிகொடுக்கும் மரங்களாவோம்.


 இறைவேண்டல் 

அன்பு ஆண்டவரே!  உண்மையான மனமாற்றம் பெற்றவர்களாய் உம்மை வரவேற்க எங்களைத் தகுதிப்படுத்தும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...