Tuesday, December 27, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (06-01-2023)

 

சனவரி 6



முதல் வாசகம்

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13

அன்பார்ந்தவர்களே,

இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.

மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.

கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.

இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12a)

பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

அல்லது: அல்லேலூயா.

12
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி

14
அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. - பல்லவி

19
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 9: 7

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது, தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.” அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீயே என் அன்பார்ந்த மகன், உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

அக்காலத்தில்

யோவான், “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறை சாற்றினார்.

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 கடவுள் எனக்கு சான்று பகர்வாரா!


நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த அனுபவம் இது. தேர்வுகள் முடிவடைந்தது. மதிப்பெண்கள் கொடுத்தாயிற்று. அந்த முறை ரேங்க அட்டையில் கையெழுத்திட பெற்றோர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனக் கூறப்பட்டது. அத்தோடு பெற்றோர்கள் ஆசிரியரைத் தனியாக சந்தித்துப் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. எனது தந்தை பள்ளிக்கு வந்திருந்தார். அத்தேர்வில் நான் வகுப்பில் இரண்டாவது ரேங்க் எடுத்திருந்தேன். என் தந்தை ஆசிரியரை அணுகி என்னுடைய தந்தை என்று சொன்ன உடனேயே ஆசிரியர் மிகுந்த முக மலர்ச்சியுடன் என்னைப் பாராட்டிப் பேசினார். என்னுடைய படிப்பும் நடத்தையும் மிக நன்றாக இருப்பதாக எனக்கு நற்சான்று அளித்தார். என்னையும் அழைத்து என் தந்தைமுன் வாழ்த்தினார். எனக்கும் மகிழ்ச்சி .என் தந்தைக்கும் மகிழ்ச்சி.


பொதுவாக நம்மைப் பற்றி யாரேனும் நற்சான்று தரும் போது நாம் அனைவருமே மகிழ்வோம். வேலைத்தேடி செல்லும் போது நம்மால் முடிந்த அளவுக்கு சான்றிதழ்களைச் சேர்த்து வைத்துக்கொள்வோம். அந்தச் சான்றிதழ்கள் நம்மைப் பற்றி பேசும் அல்லவா. ஆக பிறரிடம் நற்சான்றும் பாராட்டும் பெறுவது அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான். 


இன்றைய வாசகங்கள் கடவுள் நம்மைக் குறித்து என்ன சான்று தரப்போகிறார் என நம்மை ஆன்ம சோதனை செய்ய அழைக்கின்றன. முதல் வாசகத்தில் தூய ஆவியாரும் நீரும் இரத்தமும் இயேசுவுக்கு சான்று பகர்கின்றன என்று புனித யோவான் கூறுவதை வாசிக்கிறோம். அவை தரும் நன்சான்று என்ன? இயேசு கடவுளிடமிருந்து வந்தவர் என்பதும் அவரிடமே கடவுள் அருளும் நிலைவாழ்வு உள்ளது என்பதுமே.

நற்செய்தி வாசகத்தில் இயேசு திருமுழுக்கு பெற்றபிறகு என் அன்பார்ந்த மகன் இவரே என கடவுளே நேரடியாக சான்றளிக்கிறார் என்பதை வாசிக்கிறோம். 


நாமும் திருமுழுக்கினால் இறைவனின் பிள்ளைகள் என்ற உரிமையைப் பெற்றுள்ளோம்.இன்று நம்மைக் குறித்து நம் விண்ணகத் தந்தையின் சான்று என்ன? இயேசுவைப் போல தந்தையின் திருஉளம் ஏற்று அன்பான தந்தையாம் அவரைப் பிரதிலித்து நேர்மையோடும் துணிச்சலோடும் வாழ்ந்தால் நமக்கும் நன்சான்று கிடைக்கும். கடவுளே நேரடியாக சான்றளிப்பதில்லை. மாறாக நம்முடைய பணிவாழ்வும் அதனால் பிறர் பெறும் நன்மைகளும் சவால்களை சமாளித்து முன்னேறுவதும் நமக்கு சான்றாக அமையும். இறுதியில் நாம் பெறும் நிலைவாழ்வு நற்சான்றின் உச்சகட்டமாய் அமையும்.கடவுளிடமிருந்து

நன்சான்று பெறப்போகிறோமா? சிந்தித்து வாழ்வோம்.


 இறைவேண்டல்

அன்பு இறைவா! இயேசுவுக்கு நீர் நற்சான்று அளித்ததுபோல உமது பிள்ளைகளாகிய எங்களுக்கும் நீர் நற்சான்று அளிக்கும் வண்ணம் நாங்கள் வாழ்வோமாக! ஆமென்

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...