Saturday, December 10, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (11-12-2022)

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-6a, 10

அந்நாள்களில்

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப் படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப் படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்;

ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8. 9-10 (பல்லவி: எசா 35:4)

பல்லவி: ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.

அல்லது: அல்லேலூயா.

7
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். - பல்லவி

8
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். - பல்லவி

9
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
10
சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! - பல்லவி

இரண்டாம் வாசகம்

உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-10

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடு இருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது.

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 61: 1ac

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 2-11

அக்காலத்தில்

யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு மறுமொழியாக, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார்.

அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரச மாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரைவிட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

‘இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு 


 ஆண்டவரில் மகிழ்ச்சியும் மனஉறுதியும் நம்மை விடுவிக்கும்! 


கான்சர் என்ற உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருந்தார். அவரை யார் பார்த்தாலும் நோயாளி என்று சொல்ல மாட்டார்கள். காரணம் அவர் எப்போதும் முக மலர்ச்சியுடன் இருப்பார்.  அவரோடு பேசுகிற பழகுகிற எல்லோருக்கும் மகிழ்ச்சியான வார்த்தைகளையே கூறுவார்.அவர் இறக்கப் போகிறார் மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை. யாரையும் கவலைப்பட விட்டதும் இல்லை. கடவுள் நம்பிக்கையும் மனஉறுதியும் சரியான மருத்துவ முறைகளும் அத்தோடு அவர் மனதில் இருந்த மகிழ்ச்சியும் அவரை நோயினின்று முற்றிலும் விடுபடச் செய்தன என்பதே உண்மை. மன உறுதியோடு கூடிய மகிழ்ச்சி அரிய பெரிய காரியங்களை நடத்தும் என்பதற்கு இப்பெண்மணியின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணம்.


திருவருகைக் காலத்தின் மூன்றாம் வாரம் மகிழ்ச்சியின் வாரம் என அழைக்கப்படுகிறது.ஆண்டவர் வந்து தம் மக்களை மீட்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி மட்டற்றது. அது இவ்வுலக மகிழ்ச்சியைப் போன்று நிலையற்றதாகவும் நொடிப்பொழுதில் மறைவதாகவும் இருக்காது. அத்தகைய மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமெனில் ஆண்டவர் நம்மை மீட்க நாம் அனுமதிக்க வேண்டும் என்ற சிந்தனையை இன்றைய வாசகங்கள் நமக்குத் தருகின்றன.


இன்றைய முதல் வாசகமே தொடங்கும் போதே "பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும் " என்கிறது. பாலை நிலம் என்பது வறண்ட பூமி. வளமில்லாத பூமி. அப்பூமி எப்போது மகிழும்?  அதன் வறட்சி நீங்கும் போதும் வளமடையும் போதும் அல்லவா! 

 எசாயா இறைவாக்கினர் அடிமைத்தனத்தில் துவண்ட இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய மீட்பரை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில்  மக்களின் தளர்ந்து போன உள்ளங்களை உறுதிப்படுத்தும் வகையில் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுகிறார். மீட்பர் வந்து அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்  போது ஏற்படும் அருஞ்செயல்களை எண்ணி எதிர்நோக்குடன் கூடிய மகிழ்ச்சியோடு வாழ அழைப்பு விடுக்கின்றார்.


நம்முடைய வாழ்க்கையும் இத்தகையது தான். பல சமயங்களில் வறட்சியையே சந்திக்கிறது.போராட்டங்களும், பாவங்களும்,  நோய்நொடிகளும், தேவைகளும் நம்மை நெருக்கும்  சூழ்நிலையில் எவ்வாறு நாம் மகிழ முடியும்? ஆனால் இத்தகைய சூழலில்தான் நமக்கு மனஉறுதியும் நம்பிக்கையும் அவசியமாகிறது. எத்தகைய மனஉறுதி? ஆண்டவர் நிச்சயம் என்னை விடுவிப்பார் என்ற மனஉறுதி.

இன்றைய இரண்டாம் வாசகம் ஆண்டவரின் வருகை நமக்கு அருகாமையில் உள்ளது என்ற நம்பிக்கைகொண்டவர்களாய்  நாம் மன  உறுதியோடு இருக்க வேண்டுமென்ற சிந்தனையை இன்னும் ஆழப்படுத்துகிறது. 


மேலும் இயேசு தம்மை அணுகி வந்த யோவானின் சீடர்களிடம் மெசியாவின் காலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அருஞ்செயல்கள் நிறைவேறுவதையும் மக்கள் அவற்றால் மகிழ்வதையும் சுட்டிக்காட்டி சந்தேகத்தோடு வந்தவர்களை மகிழ்ச்சியோடும் மனஉறுதியோடும் வாழப் பணிக்கிறார்.


அன்புக்குரியவர்களே, நிச்சயம் நம் வாழ்விலும் மீட்பு உண்டு.  ஆண்டவரை எத்தகைய சூழ்நிலையிலும் மகிழ்ச்சியோடும் மனஉறுதியோடும் நாம் ஏற்றுக்கொண்டால்!  இதை உணர்வோம். மனஉறுதியோடும் மகிழ்ச்சியோடும் தொடர்ந்து பயணிப்போம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா! உம்மிலே மகிழ்பவர்களாக உம்மிலே உறுதி கொண்டவர்களாக நாங்கள் வாழத் துணை செய்யும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...