Friday, December 30, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-12-2022)

 

கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 7ஆம் நாள் - டிசம்பர் 31






முதல் வாசகம்

நீங்கள் அனைவரும் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 18-21

குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவே என அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை.

நீங்கள் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள். நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2. 11-12. 13 (பல்லவி: 11a)

பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். - பல்லவி

11
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12
வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி

13
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 14, 12b

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வாக்கு மனிதர் ஆனார்.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 "ஒவ்வொரு ஆண்டும் இறைவனின் பரிசா!" 


மனிதவாழ்வு என்பது இறைவன் கொடுத்த ஒப்பற்ற கொடை. கொடையாக பெற்ற வாழ்வை ஒவ்வொரு நொடிப்பொழுதும் நிறைவோடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். வருடத்தின் இறுதி மாதத்தில் இருக்கின்ற நாம் இந்த ஆண்டு முழுவதும் வழிநடத்திய இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.


ஒவ்வொரு ஆண்டையும் இறைவன் உன்னதமான கொடையாகக் கொடுத்துள்ளார். ஒரு ஆண்டு என்பது 12 மாதங்கள், 52 வாரங்கள், 365 நாட்கள், 8760 மணி நேரங்கள்; 525,600 நிமிடங்கள்; 31,536,000 நொடிகளை உள்ளடக்கியது.

இவ்வாறாக நாம் இதுவரை வாழ்ந்த வருடங்களைக் கணக்கிட்டால் எத்துணை அதிசயம்.

அவ்வாறு கொடையாக பெற்ற ஒவ்வொரு  ஆண்டையும் முழுமையாக பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக நம் வாழ்விலே வெற்றியின் கனியைச் சுவைக்க முடியும்.


எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் தான் கொடையாக பெற்ற ஒவ்வொரு ஆண்டையும் சிறப்பாகப் பயன்படுத்தி மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளை இவ்வுலகிற்கு  கொடுத்தார். இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய இறையாட்சி பணியைத் தொடங்குவதற்கு முன்பாக முப்பது ஆண்டுகள் தன்னையே தயார்படுத்தினார்.  எனவே ஒவ்வொரு ஆண்டும் நமக்கு கொடுக்கப்பட்ட உன்னதமான கொடை என்பதனை உணர்ந்து அவற்றை முழுமையாக பயன்படுத்தி வாழ்விலே நிறைவு காண முயற்சி செய்வோம்.


ஒரு சாதாரண செடியில் கூட ஒவ்வொருநாளும் வளர்ச்சியிலும் அமைப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது என்றால் நம் வாழ்வில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படக்கூடிய மாற்றங்களும் அதனால் விளையும் நன்மைகளும் ஏராளமாய் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை சற்றே அலசிப்பார்த்தல் சிறந்தது.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் நற்செய்தியாளர் இயேசுவைப்பற்றி இறையியலை மிக அருமையாக எடுத்துரைத்துள்ளார்.  இயேசு வெறும் படைப்பு அல்ல, மாறாக, படைப்பு நடைபெறும்போதே இருந்தவர். படைப்பிற்கு முன்பே இருந்தவர் என்று இயேசுவைப்பற்றி வெளிப்படுத்துவது நற்செய்தியாளரின் நோக்கமாக இருக்கிறது. இயேசுவின் தொடக்கத்தை அறிவிப்பது ஒரு சவாலான ஒன்று. அதேபோல அதை விளக்குவதும் கடினமான ஒன்று. ஆனால், யோவான் நற்செய்தியாளர் மிகவும் எளிதாக, கடவுளின் மறுசாயல் தான் இயேசு என்பதை அருமையாக இந்த பகுதியில் வெளிப்படுத்துகிறார். எனவே இயேசு தான் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு கொடையாக கொடுத்துள்ளார். அவற்றை முழுமையாக பயன்படுத்த நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் நமக்கு கொடுக்கும் செய்தியை பற்றி இந்த ஆண்டின் இறுதி நாளில் சிந்திப்பது  பொருத்தமானதாகும். 


முதலாவதாக  ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய வயதைக் கூட்டுகிறது. அதாவது நம்முடைய வாழ்நாளை அதிகரிக்கிறது. இரவில் கண்மூடி காலையில் கண்விழிக்கும் பாக்கியம் பலருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் நாம் இத்தனை ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோமென்றால் அது இறைவனின் பரிவு.


இரண்டாவதாக ஆளுமை வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றது. ஆளுமை வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி, அறிவுத் தெளிச்சி , ஞானத்தோடு பெற்ற அறிவைப் பயன்படுத்தும் முறை, நேரிய நடத்தை, பண்பாடோடு பழகும் பாங்கு போன்றவற்றை  வயதிற்கு ஏற்ப பெற்றுக்கொள்வதே."ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் உண்மையான வளர்ச்சி " என்கிறது ஒரு அருமையான பாடல் வரிகள்.

ஒருவன் ஆளுமை உள்ளவனாக மாறுவது மற்றவர்கள் கையில் கிடையாது. மாறாக , அவரவர் கையில்தான் உள்ளது. ஒருவர் ஒவ்வொரு ஆண்டைத் தொடங்கும் பொழுது ஆளுமை வளர்ச்சியில் முதிர்ச்சி அடைந்துள்ளேனா? என்று தன்னை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  முதிர்ச்சி உள்ள மனிதர்களாக மாறுவதுதான் மிகச் சிறந்த வெற்றியை தரும்.


மூன்றாவதாக அனுபவப் படிப்பினைகள்.

நம் அன்றாட வாழ்வில் வருகின்ற  ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும்  பாடங்களைக் கற்று கொள்கிறோம். அனுபவமே சிறந்த ஆசிரியர் என்று நம் முன்னோர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அனுபவங்கள் நல்லவையோ கெட்டவையோ,அவை ஏதாவது ஒரு பாடத்தை நமக்கு விட்டுச் செல்கின்றன.  அவற்றைப் பயன்படுத்தும் போது நாம் முதிர்ச்சி நிறைந்தவர்களாக மாறுகிறோம். வாழ்வில் வெற்றி பெறுகிறோம்.சவால்களை துணிவுடன் சந்திக்கவும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், அணுகு முறைகளில் நேர்மறையான எண்ணத்தைக் கொண்டிருக்கவும் அனுபவங்கள் உதவுகின்றன.


நான்காவதாக உறவுப் பெருக்கம். ஆண்டுகள் உருண்டோடும் வேளையில் நம்முடைய உறவு வட்டாரம் பெருகுவதை நம்மால் மறுக்க இயலாது.நாம் சந்திக்கின்ற மனிதர்கள்,நம்மோடு பயனித்தவர்கள்,நமக்கு உதவி செய்தவர்கள்,நம் உதவியில் மகிழ்ந்தவர்கள்,

நன்னடத்தையாலும் அன்பாலும் நம்மைக் கவர்ந்தவர்கள் ,நம்மால் கவரப்பட்டவர்கள் என ஒவ்வொரு ஆண்டும் நமக்குத் தருகின்ற உறவுகள் ஏராளம். அவ்வறவுகள் நம்மால் பாதுகாக்கப்பட வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.நம் ஆண்டை மகிழ்வால் ஆறுதலால் உடனிருப்பால் நிறைவுசெய்வது உறவுகளே.


ஐந்தாவதாக ஆனமீக இறை அனுபவம். அவனின்றி அணுவும் அசையாது என்பர் நம் முன்னோர்கள்.ஒவ்வொரு ஆண்டும் இறைவன் கொடுக்கும் உன்னதமானக் கொடையாகும்.நம்முடைய நம்பிக்கையின் அடிப்படையில் நம் வாழ்வில் நடப்பன அனைத்துமே கடவுளின் திருவுளப்படிதான்."நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன" என 139 ஆம் திருப்பாடலில் 16ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறோம்.இவ்வார்த்தையின் படி நாம் கடந்து வருகின்ற ஒவ்வொரு ஆண்டும் கடவுளின் திருவுளப்படி அவர் வகுத்தத் திட்டத்தின்படி நடந்தேறுகிறது.இதற்கு முன் நாம் அலசிப்பார்த்த வயது முதிர்ச்சி,ஆளுமை வளர்ச்சி,அனுபவப் படிப்பினைகள், உறவுப் பெருக்கம் அனைத்துமே கடவுளை ஆன்மீகப்பூர்வமாக உணர நமக்கு உதவுபவையாக உள்ளன. கடவுளை ஆன்மீகப்பூர்வமாக உணரும் போது நாம் நன்றியுள்ளவர்களாக, நிறைவுள்ளவர்களாக, மகிழ்வுள்ளவர்களாக ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டிருக்கிறோம்.


ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் நம்மை நாமே அலசிப்பார்த்தோமானால் அந்த ஆண்டு நம் வாழ்வில் ஒரு தடத்தை நிச்சயமாகப்  பதித்திருக்கும். ஒரு ஆண்டு மற்றொரு ஆண்டைப் போல இருக்காது. முடிவுற்ற ஆண்டு நமக்கு மீண்டும் கிடைக்காது. எனவே வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம் ஆண்டின் முக்கியத்துவத்தையும், அது தந்த ஆசீர்வாதங்களையும் மனதார உணர்வோம். கடவுளுக்கு நன்றி கூறுவோம். அவர் தரப்போகின்ற புதிய ஆண்டையும் ஆன்மீக, அனுபவ ,ஆளுமை வளர்ச்சியுடன் நம் உறவுகளோடு தொடங்க நம்மையே தயாரிப்போம்.

புதிய ஆண்டு பிறக்கின்ற பொழுது கடவுளிடம் முழுமையாக நம்மை அர்ப்பணித்து இறைவேண்டல் செய்து கடவுளின் ஆசீரை முழுமையாகச் சுவைப்போம்.


 இறைவேண்டல் : 

வல்லமையுள்ள இறைவா! நீ எங்களுக்கு கொடுத்த இந்த ஆண்டிற்கான நன்றி செலுத்துகிறோம். இந்த ஆண்டு முழுவதும் தொற்றுநோய்களும் பல்வேறு துன்பங்களும் இடையூறுகளும் எங்களை வாடிய பொழுதும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்திய மேலான உமது அருளுக்காக நன்றி செலுத்துகிறோம். இனி வரும் ஆண்டிலும் எங்களை சிறப்பான விதத்தில் வழிநடத்தி உம்முடைய ஆசீரையும் ஆரோக்கியமான வாழ்வையும் கொடுத்திட உம்மை வேண்டுகிறோம். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...