Friday, September 16, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (18-09-2022)

பொதுக்காலம் 25ஆம் வாரம் – ஞாயிறு 18 09 2022



திருப்பலி முன்னுரை

இதயத்தில் நேர்மையையும் நம்பிக்கையையும் கொண்டு நல்ல கண்காணிப்பாளராக வாழ இன்றைய பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது.

 அகிலத்தைப் படைத்து அனைத்தையும் ஆளுங்கள், மகிழ்ந்திருங்கள் என்றார் இறைவன். இறைவன் தந்த பொறுப்பு அதை இனிதே நிறைவேற்றும் கடமை நமக்குள் நன்றாக இருக்கும் போதுதான் நாம் கண்காணிப்பாளராக முடியும். இறைவன் தந்த இயற்கையை வதைக்காது இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில், நாட்டில் நிலவும் அநீதி, உண்மையின்மை, வஞ்சகத்தன்மை ஆகியவைப் பற்றி எண்ணி உள்ளம் குமுறுகிறார் ஆமோஸ் இறைவாக்கினர். அன்று மட்டுமல்ல இன்றும் தான். உள்ளவனுக்கு ஒரு நீதி, இல்லாதவனுக்கு ஒரு நீதி என்று நீதிமன்றம் நீதியை விற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் நாம் இறைமக்களாக செய்ய வேண்டியது என்ன? அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம்.

இன்றைய நற்செய்தியில், முன்மதியோடு செயல்பட்ட வீட்டு பொறுப்பாளரை நமக்கு உவமை மூலம் கூறுகிறார் இயேசுகிறிஸ்து. நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டதை பாராட்டுவதற்காக அல்ல, மாறாக அழிந்து போகக்கூடிய செல்வத்தை சரியாகப் பயன்படுத்தி, கடன்பட்டவர்களின் அன்பையும் ஆதரவையும் தேடிக்கொண்டதற்காக.

செல்வம் எங்கும் ஆட்சி செலுத்தும் ஒரு பொருள். சிறியவற்றில் நம்பிக்கையாய் செயல்படும்போதுதான் பெரிய அளவு நம்மில் ஒப்படைக்கப்படும். இன்றைய சமூகத்தில் செல்வம், பணம் என கோடிகளில் புரளும் கேடிகள் கூட்டம் ஒருபுறமிருக்க பசியில் வாடும் மக்களும் பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தைகளும் மறுபுறம் என்பதுதான் உண்மை நிலை. இந்நிலை நீக்கப்படவேண்டும். இதற்கு நாம் நம்முடைய பங்களிப்பைத் தர வேண்டும். இந்த சிந்தனைகளை மனதில் கொண்டு இப்பலியில் இணைவோம்.


மன்றாட்டுக்கள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


1. நல்ல கண்காணிப்பாளராக வாழ அழைப்பவரே எம் இறைவா!

எம் திருஅவையை வழிநடத்தும் எம் திருஅவைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள் நேர்மையோடும் இறை உண்மையோடும் எளிய வாழ்க்கை வாழ்ந்து மக்களை இறைவழிநடத்தும் நேர்மையான கண்காணிப்பாளராகத் திகழும் வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.


2. நேர்மையையும் நீதியையும் விரும்புகின்ற எம் இறைவா!

எம் நாட்டை ஆளும் தலைவர்கள் நேர்மையோடு ஆட்சி செய்யவும் தொழில்நுட்பம் என்கின்ற போர்வையில் எளிய மக்களை வாட்டி வதைக்காமல், பொருளாதார சிக்கலில் விழிபிதுங்கி நிற்கும் எம் நாட்டில் நிதிநிலை சீராகவும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த சிறந்த ஞானத்தையும் தர வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.


3. அழியாத செல்வத்தை தேடிக் கொள்ள அழைப்பவரே எம் இறைவா!

நாங்கள் எங்களது வாழ்விற்குத் தேவையான செல்வத்தை நேரிய வழியில் பெறவும், சேர்த்த செல்வத்தை முறையாகச் செலவிட்டு, தேவையிலுள்ளவர்களுக்கு உதவவும், பொறுப்பான உள்ளத்தைத் தர  வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.


4. விண்ணக கதவுகளைத் திறந்து எம்மை ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!

 வற்றிப்போய் இருக்கின்ற நீர்நிலைகளும் பயனற்று கிடக்கின்ற வயல்வெளிகளும் வளம் பெற தேவையான மழையைத் தரவும், குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைவாக கிடைக்கப் பெறவும், தொழில் வளர்ச்சி அடைந்து பொருளாதாரம் சிறக்கவும், வேலைவாய்ப்பு பெற்று மனித ஆற்றல் பயன்படுத்தப்படவும், திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உம் அருளால் பெற்று நிறைவோடு வாழ வரமருள  வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.


நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.


பொதுக்காலம் 25ஆம் வாரம் – ஞாயிறு 18 09 2022


முதல் வாசகம்

வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாமா?


இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-7

“வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: ‘நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்’ என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?"

ஆண்டவர் யாக்கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: “அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.”


ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 113: 1-2. 4-6. 7-8 (பல்லவி: 1,7காண்க)

பல்லவி: ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள். அல்லது: அல்லேலூயா.


1 ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.

2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! - பல்லவி

4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி.

5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?

6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். - பல்லவி

7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்;

8 உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். - பல்லவி


இரண்டாம் வாசகம்

எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.


திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8


அன்பிற்குரியவர்களே,

அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப் பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்.

ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார். இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல.

எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9


அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.


✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-13


அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப் போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.

மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.

நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.”


ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.


✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 10-13

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.

நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.”


ஆண்டவரின் அருள்வாக்கு.


பொதுக்காலம் 25ஆம் வாரம் – ஞாயிறு 18 09 2022


அழிந்துபோகும் செல்வமும் ஒப்பற்ற செல்வமும்


மாணிக்கக் கல்லைவிட உயர்ந்தது எது?

காட்டிலேயே தங்கி, நோன்பிருந்து, இறைவனிடம் வேண்டி வந்த துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் ஆற்றில் குளித்துவிட்டுத் திரும்பி வருகையில்  மாணிக்கக் கல் ஒன்றைக் கண்டார். அதைத் தன் கையோடு எடுத்துகொண்ட அவர் தான் இருந்த குடிசையில் வைத்திருந்தார். 

ஒருநாள் அவரைக் காண வந்த மனிதர் ஒருவர் அவரிடம் மாணிக்கக் கல் இருப்பதைப் பார்த்துவிட்டு, அதைத் தனக்குத் தர முடியுமா? என்று கேட்டார். துறவியும் மறுப்பேதும் சொல்லாமல், மாணிக்கக் கல்லை எடுத்து, அவரிடம் கொடுத்தார். ‘விலையுயர்ந்த மாணிக்கக் கல்லைக் கேட்டதும், அதை அப்படியே இவர் கொடுத்துவிட்டாரே! மாணிக்கக் கல்லின் அருமை தெரியாத சுத்தப் பைத்திரக்காரராக இருக்கிறாரே இவர்!’ என்று நினைத்துக்கொண்டு  அந்த மனிதர் அதைத் தன் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போய்ப் பத்திரமாக வைத்திருந்தார் . 

என்றைக்கு அவருடைய வீட்டிற்கு மாணிக்கக் கல் வந்ததோ, அன்றைக்கே அவருடைய  நிம்மதி பறிபோனது. ‘இந்த மாணிக்கக் கல் உனக்கு எப்படிக் கிடைத்தது? என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நான் என்ன  மறுமொழி கூறுவது? மாணிக்கக் கல் என்னிடம் இருப்பதை அறிந்து, அதை என்னிடமிருந்து எடுக்கின்ற சாக்கில் யாராவது என்னுடைய உயிரைப் பறித்துவிட்டால் என்ன செய்வது?’ என்று பலவாறு அவர் யோசித்து, உடல் மெலிந்தார். 

‘இதற்கு மேலும் இந்த மாணிக்க கல்லை வைத்திருக்க முடியாது’ என்பதை உணர்ந்த அவர், அதைத் துறவியிடம் போய்க் கொடுத்தார். “இவ்வளவு விலையுயர்ந்த மாணிக்கக் கல்லை நான் கேட்டதும், கொடுத்துவிட்டீர்களே! அப்படியானால், இதைவிடவும் விலையுயர்ந்த ஏதோவொன்று உங்களிடம் இருக்கின்றது. அதை எனக்குக் காட்ட முடியுமா?” என்று அவர் துறவியிடம் ஏக்கத்தோடு கேட்டார். அப்போது துறவி அவரைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “மாணிக்கக் கல்லைவிட உயர்ந்தது ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்வது” என்று சொல்லிவிட்டு, ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்வதற்கான வழியை அவருக்குக் கற்றுக்கொடுத்தார். 

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற  துறவி மாணிக்கக் கல்லைவிடவும் ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்வதே பெரிதாகவும், அதுவே மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் கருதினார். பொதுக்காலத்தின் இருபத்து ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அழிந்து போகும் செல்வதற்கு அல்ல, ஒப்பற்ற செல்வமாகிய கடவுளுக்கு – இயேசுவுக்குப் – பணிவிடை புரிந்து வாழ வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம்  சிந்திப்போம்.    


நேர்மையற்ற வழியில் செல்வம்:

‘தொழில் தர்மம்’ என்ற சொல்லாடலை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். ஒருவர் தான் செய்கின்ற தொழிலுக்கு, ஆற்றும் பணிக்கு உண்மையாய், நேர்மையாய் இருக்கவேண்டும் என்பதையே ‘தொழில் தர்மம்’ என்ற இந்தச் சொல்லாடல் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் தாங்கள் செய்யும் தொழிலுக்கு உண்மையில்லாத, நேர்மையில்லாத பலரையும் அங்கிங்கெனாதபடி எங்கும் காண முடிகின்றது. இதற்கு முக்கியமான காரணம், எப்படியாவது பணம் சேர்த்துவிட வேண்டும் என்கிற ஒருவிதமான வெறிதான்!

முதல் வாசகத்தில், கள்ளத் தராசுகளைப் பயன்படுத்தியும், கோதுமைப் பதிலாக பதர்களை விற்றும், ஏழைகளை இரு வெள்ளிக்காசுக்கு வாங்கியும் அநீதமானமுறை தொழில் செய்து வந்தவர்களைக் கடவுள், இறைவாக்கினர் ஆமோஸ் வழியாகச் சாடுகின்றார். யூதர்கள் ஓய்வு நாளைப் போன்றே அமாவசையையும் முக்கியமான ஒரு நாளாகக் கருதினார்கள். அன்றைய நாளிலும் அவர்கள் எந்தவொரு வேலையும் செய்யவில்லை. அதே நேரத்தில் அவர்கள் அமாவாசைக் கொண்டாட்டத்தின்போது நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டு இலாபமீட்டினார்கள். இவ்வாறு அவர்கள் ஆண்டவரே தங்களுடைய பெருமை என வாழாமல், பணமும் செல்வமும்தான தங்கள் பெருமை என வாழ்ந்தார்கள். இதனால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிறார் ஆண்டவர்.  

நற்செய்தி வாசகத்தில் முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர் உவமையை இயேசு கூறுகின்றார். இந்த வீட்டுப் பொறுப்பாளரின் தலைவர் அவரை வேலையிலிருந்து நீக்கிவிட முடிவுசெய்தபோது, முன்மதியோடு செயல்பட்டதற்காகத் தலைவர் அவரைப் பாராட்டியது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் நேர்மையின்றி நடந்துகொண்டதை சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகப்பெரிய தவறு. இப்படி நேர்மையற்ற வழியில் செல்வம் சேர்ப்போர் ஆண்டவருக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில் பொல்லாரின் வழி அழிவையே தரும் (திபா 1:6) என்பதே இறைவார்த்தை சொல்லும் செய்தி.


அனைவருக்காகவும் மன்றாடுங்கள்:

நமக்கு நெருக்கமானவர்களுக்காக மன்றாடுவோம்; அனைவருக்காகவும், அதிலும் குறிப்பாக, நமக்குத் தீமைச் செய்தவர்களுக்காக மன்றாடுவோமா? என்பது பெரிய கேள்விக்குறியே! எபேசு நகரில் அனைவருக்காகவும் மன்றாடுகின்ற ஒரு வழக்கம் இருந்தது. அந்த வழக்கத்தை ஆட்சியாளர்கள் தங்களைக் கொடுமைப்படுத்தியபோது அங்கிருந்த கிறிஸ்தவர்கள் அவர்களுக்காக மன்றாடுவதை விட்டுவிட்டார்கள். இதனால் தலத் திருஅவைக்கு ஆயராக திமொத்தேயு வழியாக இறைமக்களிடம், “அனைவருக்காகவும் மன்றாடுங்கள்” என்ற அன்புக் கட்டளையை முன்வைக்கின்றார் பவுல். 

கிறிஸ்தவர்களைப் பலவாறு சித்திரவதை செய்த, அவர்களைத் துன்புறுத்திய ஆட்சியாளர்கள், உயர்நிலையில் இருந்த மனிதர்கள் உள்ளிட்ட அனைவருக்காகவும் பவுல் ஏன் மன்றாடச் சொல்கிறார் என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கான பதிலை, “எல்லா மனிதரும் மீட்புப் பெறவும், உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்” என்ற வரிகளில் பவுல் தருகின்றார். ஆண்டவர் இயேசு எல்லாருடைய மீட்புக்காகவும் தம்மையே தந்தார். அவரை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்த கடவுளின் விருப்பம் எல்லாரும் மீட்புப் பெறவும், உண்மையை அறிந்துணர வேண்டும் என்பதே ஆகும். இப்படி ஆட்சியாளர்கள், நேர்மையற்ற வழியில் நடப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்காகவும் நாம் மன்றாடும்போது அவர்கள் முழு உண்மையை அறிந்துகொண்டு, மீட்புப் பெற வாய்ப்பிருக்கின்றது. அதனாலேயே பவுல் அனைவருக்காகவும் மன்றாடச் சொல்கின்றார். 


கடவுளுக்குப் பணிவிடை செய்வோருக்கே மீட்பு:

எல்லா மனிதரும் மீட்புப் பெறுவது கடவுளின் விருப்பமாக இருந்தாலும், அவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்குப் பணிவிடை செய்து வாழ்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. இயேசுவின் காலத்தில் இருந்த பணம் படைத்த பரிசேயர் பணம் இருந்தால் போதும் மீட்படைந்து விடலாம் என்ற எண்ணத்தோடு இருந்தார்கள். அதற்காக அவர்கள் நேர்மையற்ற முறையில் பணம் சேர்த்தார்கள் (லூக் 20:47). இந்நிலையில்தான் இயேசு ஒருவரிடம் மிகுதியான உடைமைகள் இருப்பதாலோ, பணம் இருப்பதாலோ வாழ்வோ அல்லது மீட்போ வந்துவிடாது (லூக் 12:15) என்று சொல்லிவிட்டு கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவருக்குப் பணிவிடை செய்பவராலேயே வாழ்வு, அல்லது மீட்படைய முடியும் என்கிறார்.

அதனால் நாம் அழிந்து போகும் செல்வத்திற்கு அல்ல, அழியாத செல்வமாகிய, அல்லது ஒப்பற்ற செல்வமாகிய ஆண்டவருக்குப் பணிவிடை செய்ய முன்வரவேண்டும். பவுல் ஒப்பற்ற செல்வமாகிய ஆண்டவருக்குப் பணிவிடை புரிந்தார். நாமும் ஒப்பற்ற செல்வமாகிய ஆண்டவருக்குப் பணிவிடை புரிந்து, அவர்தரும் ஆசியைப் பெறுவோம். 


சிந்தனைக்கு:

‘ஆண்டவருக்குப் பணிவிடைப் புரிவதில் நம்முடைய மனத்தைச் செலுத்தும்போது, நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்’ என்பார் ஹாரி தாமஸ் என்ற எழுத்தாளர். எனவே, நாம் உலக செல்வத்திற்கு அல்ல, ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவுக்குப் பணிவிடை புரிவோம். அனைவருக்காகவும் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.      


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...