பொதுக்காலம் 22ஆம் வாரம் - வெள்ளி
முதல் வாசகம்
உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன். எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39
அக்காலத்தில்
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.
அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.
அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
---------------------
“தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே”
நிகழ்வு
திருத்தந்தை இருபத்து மூன்றாம் யோவான், வெனிஸ் நகரில் ஆயராக இருந்தபொழுது நடந்த நிகழ்வு இது. இவர் இருந்த வெனிஸ் மறைமாவட்டத்தில் ஒரு பங்குப்பணியாளர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என்ற செய்தி இவருக்குத் தெரிய வந்தது. உடனே இவர் தனது செயலரிடம், “வாருங்கள்! நாம் இருவரும் அந்தப் பங்குப் பணியாளரைப் பார்த்துவிட்டு வருவோம்” என்று சொல்லிவிட்டு, அவரைப் பார்ப்பதற்கு இருவரும் கிளம்பிப் போனார்கள்
இருவரும், குறிப்பிட்ட அந்தப் பங்குப் பணியாளரின் பங்கு எல்கையில் நுழைகையில் ஒரு பெரிய விடுதி இருப்பதைக் கண்டார்கள். அந்த விடுதிக்கு முன்பாக பங்குப் பணியாளரின் ஊர்தியானது நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆயர், தன் செயலரிடம், “பங்குப்பணியாளர் இங்குதான் இருக்கின்றார். அவரை அழைத்து வாருங்கள்” என்றார். செயலரும் ஆயரின் சொல்லுக்குப் பணிந்து, விடுதிக்குள் சென்று, பங்குப் பணியாளரைத் தேடித் பார்த்தார். அவர் ஒரு மூலையில் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தார். உடனே ஆயரின் செயலர் அவரிடம் சென்று, “ஆயர் உங்களை அழைத்து வரச் சொன்னார்” என்றார். அவரோ விழுந்தடிக்கொண்டு ஆயரிடம் ஓடி வந்தார்.
ஆயர் அந்தப் பங்குப் பணியாளரிடம், “வண்டியைப் பங்கு இல்லத்திற்கு ஓட்டுங்கள்” என்று சொல்ல, அவரும் வண்டியைப் பங்கு இல்லத்திற்கு ஓட்டிக்கொண்டு சென்றார். போகிற வழியில் பங்குப் பணியாளர், ‘ஆயர் என்னைத் தேடி வந்திருக்கின்றார்... அவர் வந்த நேரம் பார்த்து, நான் குடித்துக் கொண்டிருந்திருக்கின்றேன்... இன்றைக்கு எனக்கு என்ன ஆகப் போகிறதோ...?’ என்று பதற்றத்தோடு சென்றார். அவரைத் தொடர்ந்து ஆயரும் அவருடைய செயலரும் தங்களது வண்டியில் சென்றார்கள்.
பங்குப் பணியாளர் பங்கு இல்லத்தை அடைந்ததும், ஆயர் பங்குப் பணியாளரிடம், “இப்பொழுது நான் உங்களிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளவேண்டும்” என்றார். இதைக்கேட்டு அதிர்ந்தவராய் பங்குப் பணியாளர் ஆயரிடம், “ஆயரே! நீங்களா என்னிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளப் போகிறீர்கள்...?” என்றார். “ஆமாம், நான்தான் உங்களிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளப் போகிறேன்” என்றார். பின்னர் அந்தப் பங்குப் பணியாளர் ஆயருக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்க, ஆயர் அவருக்கு நன்றிசொல்லிவிட்டுத் தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பினார்.
வரும் வழியில், நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஆயரின் செயலர் அவரிடம், “ஆயர்ப் பெருந்தகையே! குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, பலருக்கு துன்மாதிரியாக இருக்கும் அந்தப் பங்குப் பணியாளரை நீங்கள் கண்டிப்பீர்கள் என்று நினைத்தேன். நீங்களோ அவரிடம் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டுவிட்டு வந்திருக்கின்றீர்களே!” என்றார். அதற்கு ஆயர் தன் செயலரிடம், “அவர் குடிகாரர்... பாவி என்று தீர்ப்பிடுவதற்கு நான் யார்...? கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இல்லாதபொழுது, நான் அவரைத் தீர்ப்பிடுவது சரியாகுமா...? மேலும் நான் அவரிடம் ஒப்புரம் அருளடையாளம் மேற்கொண்டிருப்பதால், அவர் ‘ஆயரே என்னிடம் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டுவிட்டுப் போயிருக்கின்றார் என்றால், நான் எப்படி இருக்கவேண்டும்...?’ என்று தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பார்” என்றார்.
ஆயர் தன்னுடைய செயலரிடம் சொன்னதுபோன்றே குடிக்கு அடிமையான அந்தப் பங்குப் பணியாளர் தனது வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, ஒருசிலர் மாதங்களிலேயே குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையானார்.
ஆம். திருத்தத்தை இருபத்து மூன்றாம் யோவான் ஆயராக இருந்தபொழுது, குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருந்த பங்குப் பணியாளரைத் தீர்ப்பிடவில்லை; மாறாக அவரை வேறொரு வழியில் நல்வழிக்குக் கொண்டு வந்தார். இன்றைய முதல் வாசகத்தில் பவுல் யாரும் யாரையும் தீர்ப்பளிக்கக்கூடாது. ஏனெனில் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பாப்போம்.
தீர்ப்பு வழங்குபவர் மனிதர் அல்ல; ஆண்டவர்
கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர், கிறிஸ்துவின் ஊழியர்களாக இருந்து, கடவுளின் மறை உண்மையை அறிவித்த பவுல், அப்பொல்லோ, கேபா ஆகியோரைத் தீர்ப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், புனித பவுல் இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளை எழுதுகின்றார்.
“என்னைப் பற்றி மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால், அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன்” என்று சொல்லும் புனித பவுல், “எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே” என்கின்றார். ஆண்டவருக்குத்தான் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருப்பதால், யாருக்கும் யாரையும் தீர்ப்பளிப்பதற்கு அதிகாரம் கிடையாது. இந்த உண்மையைத்தான் பவுல் கொரிந்து நகரில் இருந்த மக்களிடம் எடுத்துச் சொல்கின்றார். கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருக்கின்றபொழுது, நாம் அடுத்தவரை எந்தவோர் ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பிடுவது தகுமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்’ (மத் 7: 1) என்பார் இயேசு. ஆகையால், நாம் யாரையும் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், அடுத்தவரிடம் இருக்கும் நல்ல பண்புகளைக் கண்டு, அவற்றைப் பாராட்டக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
-----------------
லூக்கா 5: 33-39
“பரிசேயர்களின் பழைய சட்டமும், இயேசுவின் புதிய சட்டமும்”
நிகழ்வு
ஒரு நகரில் ஜான், பெர்னார்டு என்ற இரண்டு மனநல மருத்துவர்கள் இருந்தார்கள்; இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் இருவரும் ஜானுக்குச் சொந்தமான மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஜான், தன் நண்பன் பெர்னார்டைப் பார்த்து, “மனிதர்களில் பலர் செம்மறியாட்டுக் கூட்டம் போன்றவர்கள். ஒருவர் ஒரு செயலைச் செய்தால், அதை மற்றவர் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்வார்” என்றார்.
“அப்படியா?!” என்று கேட்ட பெர்னார்டிடம், “ஆமாம், நீ வேண்டுமானால் பார்” என்று சொல்லிவிட்டு, “அடுத்த நோயாளர் என்னுடைய அறைக்குள் வருவதற்கு முன்பாக நீ என்னுடைய காலைத் தொட்டு வணங்கி, ஒரு நூறு உரூபாய் நோட்டை காலடியில் வைத்துவிட்டுப் போ, அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்” என்றார். பெர்னார்டும் தன் நண்பர் தன்னிடம் சொன்னதுபோன்று, அடுத்த நோயாளர், ஜானின் அறைக்குள் நுழைவதற்கு முன்பாக, அவருடைய காலைத் தொட்டு வணங்கி, நூறு உரூபாயை வைத்துவிட்டுப் போனார்.
பெர்னார்டு அங்கிருந்து போன பிறகு உள்ளே வந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர், மருத்துவர் ஜானிடம் தங்களுடைய பிரச்சனை எடுத்துச் சொல்ல, அவர் அவர்களிடம் அவர்களுடைய பிரச்சனைகள் தீர்வதற்கான வழிகளைச் சொல்லி முடித்ததும், அவர்கள் அவரிடமிருந்து விடைபெறும்பொழுது, அவருடைய காலைத் தொட்டு வணங்கி, ஒரு நூறு உரூபாய் நோட்டை அவரது காலடியில் வைத்தார்கள். இதைப் பார்த்துவிட்டு மருத்துவர் ஜான் அவர்களிடம், “நீங்கள் ஏன் என் காலைத் தொட்டு வணங்கி, நூறு உரூபாயை வைத்தீர்கள்...?” என்று கேட்க, அவர்கள் அவரிடம், “எங்களுக்கு முன்பாக உங்களைப் பார்க்க வந்தவர் இப்படிச் செய்தார். அதைப் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் இப்படிச் செய்தோம்” என்றார்கள்.
பின்னர் அவர் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, தன் நண்பர் பெர்னார்டுவை உள்ளே அழைத்தார். “நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே இருந்தாய்...! இதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம். மனிதர்கள் எப்படிச் செம்மறியாட்டுக் கூட்டம் போன்று, ஒருவர் செய்த செயலை எந்தவொரு கேள்வியும் கேட்காமல், சாத்திர சம்பிரதாதம் என்று அப்படியே செய்கின்றார்கள் என்று” என்றார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், மனிதர்களாகிய நாம் எப்படி பழக்கவழக்கம், சாத்திர சம்பிரதாயம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் செய்ததை எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவதாக இருகின்றது. நற்செய்தியில் நோன்பு பற்றிய கேள்வி எழுகின்றபொழுது, இயேசு, “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து, அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பரிசேயர்களின் பழைய சட்டம்
நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “யோவானுடைய சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே” என்கின்றார்கள். இக்கேள்விக்கு இயேசு தந்த பதிலைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், இஸ்ரயேலில் எப்பொழுதெல்லாம் மக்கள் நோன்பிருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஆண்டுக்கொரு முறை பாவப் பரிகார நாளில் மக்கள் நோன்பிருக்க வேண்டும் என்பது மோசேயின் சட்டம் (லேவி 16: 29) ஒருசில முக்கியமான காரணங்களுக்காகவும் மக்கள் நோன்பிருந்தார்கள் (நீத 20: 26; 1அர 21: 27); ஆனால், பரிசேயர்களோ மக்களுக்கு முன்பாகத் தாங்கள் நல்லவர்கள் என்பதைக் காட்டுவதற்காக, வாரம் இருமுறை நோன்பிருந்தார்கள் (லூக் 18: 12); இதைப் பார்த்து யோவானின் சீடர்களும் அடிக்கடி நோன்பிருந்தார்கள். யோவானின் சீடர்கள் மெசியாவின் வருகைக்காக நோன்பிருந்தார்கள்; அவர்கள் மெசியா வந்துகூட தெரியாமல் நோன்பிருந்துதான் இதில் உள்ள நகைமுரண். இப்படித்தான் இருந்தது, பரிசேயர் செய்துவந்த நோன்பு. இதில் இறையன்புக்கோ, பிறரன்புக்கோ எந்தவோர் இடமுமில்லை.
இயேசுவின் புதிய சட்டம்
தாங்கள் நல்லவர்கள் என்பதைக் காட்டுவதற்காக நோன்பு மேற்கொள்ளப்பொழுது, இயேசு, “மணமகன் மணவிருந்தினரோடு இருக்கும்பொழுது, அவர்கள் நோன்பிருப்பதில்லை” என்றும், “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஓட்டுப் போட்டுவதில்லை” என்றும் சொல்லி, தான் அன்பு என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்றேன், அதைப் பழி, பாவம் என்பதை வலியுறுத்தும் பழைய சட்டத்தோடு ஒப்பிடவேண்டாம் என்று குறிப்பிடுகின்றார்.
ஆம், ஆண்டவர் இயேசு ‘சட்டம்’ என்ற பழையதைத் தூக்கி எறிந்துவிட்டு, அன்பு என்ற புதியதைக் கொண்டுவந்திருக்கின்றார். ஆகையால், நாம் சாத்திர சம்பிரதாயங்கள், மரபுகள் என்ற பழமையைப் பற்றிக்கொண்டிருக்காமல், அன்பு என்ற புதிய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ (உரோ 13: 10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் பழைமைவாதத்தைப் பற்றிக்கொண்டிருக்காமல், அன்பைப் பற்றிக்கொண்டு அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
-------------------------
கடவுளிடமிருந்து பாராட்டு பெறுவோமா?
மனிதர்களிய நாம் பெரும்பாலும் தன்னைத்தானே ஆராய்ந்து பார்த்து மதிப்பிடுகிறோமோ இல்லையோ,
அடுத்திருப்பவருக்கு மதிப்பெண் வழங்க எப்போதும் தயார் நிலையில் இருக்கிறோம். ஆனால் மற்றவருக்கு தீர்ப்பு வழங்கும் போது நம்முடைய மதிப்பைத்தான் அது சுட்டிக்காட்டுகிறது என்பதை மறந்து விடுகிறோம். ஒருவர் மற்றவரை பாராட்டினாலோ அல்லது குறைகூறினாலோ அவர் அந்த செயலின் மூலம் தன் பண்புநலன்களையே பிரதிபலிக்கிறார் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆம் "நீ சரி, நீ தவறு " என்று நம்முடைய ஆள்காட்டி விரல் பிறரை நோக்கி நீளும் போதெல்லாம் மற்ற நான்கு விரல்களும் நம்மையல்லவா நோக்கி இருக்கின்றன!
மற்ற்வர்களை தீர்ப்பிடும் குணம் ஒருபுறமிருக்க ,அவர்களிடமிருந்து நன்மதிப்பு பெற வேண்டும் என்ற ஆவலும் நம்மில் அதிகம். பலமுறை பிறர் காணவேண்டும் பிறர் நம்மை பாராட்ட வேண்டும் என்ற ஆசையின் அடிப்படையிலேயே நம் செயல்கள் அமைகின்றன. எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துவிட்டால் சோர்ந்து விடுகிறோம். வாழ்க்கை ஒரு சுழற்சி. நாம் அளித்த தீர்ப்புகள் நம்மை வந்தடைந்தேதீரும். எனவே தான் நம் ஆண்டவர் "தீர்ப்பிடாதே நீ தீர்ப்பிடப்படுவாய்" என்று போதித்தார்.
இன்றைய முதல் வாசகம் புனித பவுல் தன்னுடைய நற்செய்திப்பணியின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து பணிசெய்பவராக இருக்கிறார் என்பதை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கடவுளிடமிருந்து மட்டுமே நன்மதிப்பையும் பாராட்டையும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் உடையவராய் அவர் இருந்தார். அதனால் தான் எனக்கு எதிராக யார் தீர்ப்பளித்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன் என தைரியமாகக் கூறுகிறார். அவரும் அவரைத் தீர்பிடவில்லை.மாறாக கடவுள் மட்டுமே தன்னைத் தீர்ப்பிட முழுத்தகுதியும் உரிமையும் உடையவர் என்பதில் உறுதியாய் இருந்தார்.
நம்முடைய மனநிலையை இன்று ஆய்வு செய்வோம். பிறர் பாராட்டைப்பெற விரும்பி பல்வேறு காரியங்களை செய்யும் நமக்கு நம்மைப் படைத்த கடவுளின் கண்கள் நம்மை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. நமது நற்செயல்களைப் பாராட்ட காத்துக்கொண்டிருக்கின்றன என்ற உள்ளுணர்வு
இருக்கின்றதா?
இன்றைய நற்செய்தி வாசகமும் இதை ஒட்டிய சிந்தனையைத்தான் நமக்கு அளிக்கிறது. பிறர் பாராட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நல்லவராய் வாழவது போல காண்பிக்க நமக்குப் பொறுத்தமில்லாத அல்லது நம்மிடமில்லாத பண்புகள் நம்மிடம் உள்ளது போலக் காட்டிக்கொள்வது பழைய ஆடையில் புதிய துணியால் ஒட்டு போடுவதற்கு சமம் என்கிறார் நம் ஆண்டவர் இயேசு.இயேசு வாழ்ந்த காலத்தில் யாருடைய பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை. யாருடைய தீர்ப்பையும் சட்டை செய்யவில்லை. அவருடைய நோக்கமெல்லாம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றது மட்டுமே. எனவே தான் "என் அன்பார்ந்த மகன் இவரே" என்று தந்தையும் பாராட்டினார்.
இயேசுவை முழுமையாக பின்பற்றி கடவுளுக்கும் மனிதருக்கும் முன் தூய்மையான உள்நோக்கத்தோடு வாழ்ந்த எல்லாருமே பிறரால் வசை கூறப்பட்டார்கள். தீர்பிடப்பட்டார்கள். ஆனால் அவர்களுடைய. உண்மையான உள்நோக்கத்தை அறிந்த கடவுள் அவர்களை உயர்த்தினார். திருத்தூதர்கள், மறைசாட்சிகள்,புனிதர்கள் அனைவருடைய வாழ்க்கை வரலாறுகளும் இதையே உறுதிசெய்கின்றன.இயேசுவை பெருந்தீனீக்காரன் என்று சொன்ன அதே நாவுகள் அவருடைய சீடர்களையும் உண்கிறார்கள் குடிக்கிறார்கள் என்று வசைபாடியதை நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.
எடுத்துக்காட்டாக நம் கண்முன் வாழ்ந்த அன்னை தெரசா, அவர் பணிவாழ்வின் தொடக்கத்தில் எல்லாராலும் பாராட்டப்படவில்லை. குறை கூறப்பட்டார். தீர்ப்பிடப்பட்டார். அவருடைய பணியையின் உண்மையான நோக்கத்தை அறியாதவர்கள் அவர் மதம் மாற்றுகிறார் என்று பொய்குற்றம் சாட்டினார்கள். ஏன் உதவி கேட்க ஏந்திய கைகளில் காரி உமிழ்ந்தார்கள். அவை எதுவும் அவரை அசைக்கவில்லை. இறுதியில் அவருடைய உள்நோக்கத்தை கண்ட இறைவன் அதை உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கினார். மனிதர் மட்டுமா பாராட்டினர். கடவுளும் பாராட்டி அவரை புனித நிலைக்கு உயர்த்திவிட்டார்.
எனவே நாமும் பிறர் பாராட்ட வேண்டும் பிறர் தவறாக தீர்ப்பிடக்கூடாது என்ற மனநிலையையோடு வாழும் வாழ்வை மாற்றுவோம். நம் உள்நோக்கங்கள் கடவுளுக்கு மறைவாயில்லை என்பதை உணர்வோம். இயல்பாக வாழ்வோம். பிறரையும் தீர்ப்பிடாதிருப்போம். கடவுளின் பாராட்டைப்பெறுவோம்.அதற்கான இறையருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
உள்ளத்தின் நோக்கத்தை ஆராய்ந்து அறியும் இறைவா!
உலகினரின் பாராட்டைப் பெறவும் அவர்களின் குறைப்பேச்சுக்களை பெறாதிருக்கவுமே நாங்கள் பல காரியங்களை செய்கிறோம்.எங்கள் உண்மையான இயல்பை மறைத்து, பொய்யாக வாழ்கிறோம். எங்களை மன்னியும். உம்முடைய கண்கள் எப்போதும் எங்களைக் காண்கின்றன என்ற உணர்வை எங்களுக்குத் தாரும். அதன்படி வாழ்ந்து உமது பாராட்டை பெறுமளவிற்கு நாங்கள் நன்மையைச் செய்ய தேவையான அருள்வரங்களை எம்மீது பொழிந்தருளும் ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
---------------------------
“யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம்”
புனித நிக்கோலாசும் மூன்று பெண்களும்:
ஆர்ஸ் நகரில் புனித ஜான் மரிய வியான்னி பங்குப் பணியாளராக இருந்தபோது அங்கிருந்த ஒருசிலர் மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசி, அவர்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இதை அறிந்த ஜான் மரிய வியான்னி மிகவும் வருந்தினார்.
இதையடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில், மறையுரையின்போது, அவர், ஆயரான புனித நிக்கோலாசின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் சொன்னார். புனித நிக்கோலாஸ் ஆயராக இருந்த இடத்தில் ஏழை ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள். அவர் தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளையும் வரதட்சணை கொடுத்துக் கட்டிக் கொடுக்க மிகவும் சிரமப்பட்டார். இதை அறிந்த ஆயர் நிக்கோலாஸ் ஒருநாள் நள்ளிரவில் மூன்று தங்கப் பந்துகளை எடுத்துக்கொண்டு, அந்த ஏழையின் வீட்டில் இருந்த சன்னல் வழியாக வீசிவிட்டு வந்துவிட்டார்.
மறுநாள் காலையில், மூன்று தங்கப் பந்துகள் தன்னுடைய வீட்டிற்குள் கிடப்பதைப் பார்த்த அந்த ஏழை மிகவும் மகிழ்ந்து, அவற்றைக் கொண்டு தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளின் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு, ஜான் மரிய வியான்னி மறையுரையைக் கேட்டுக் கொண்டிருந்த இறைமக்களிடம், “புனித நிக்கோலாஸ், அந்த ஏழையின் வீட்டிற்கு நள்ளிரவில் எதற்காகப் போனார் என்பது தெரியவில்லை என்றால், அவரைப் பற்றி மக்கள் தவறாகத்தான் நினைக்கக்கூடும். அதைப் போன்றுதான் ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அவரைப் பற்றிப் தீர்ப்பிடுவது முறையில்லை” என்று சொல்லி முடித்தார். இதனால் ஆர்ஸ் நகரில் மற்றவரைப் தீர்ப்பிடும் போக்கு படிப்படியாகக் குறைந்தது.
ஒருவரைப் பற்றித் தீர்ப்பிடுவதற்கு நமக்கு எந்தவிதத்திலும் தகுதியில்லை. அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கொரிந்து நகர் மக்கள் நடுவில் நற்செய்திப் பணியாற்றிய பவுல், அவர்கள்முன் தன்னைப் பெரியவராகக் காட்டிக்கொள்ளவில்லை; பெரியவராகவும் அழைக்கப்பட விரும்பவில்லை. சாதாரண ஒரு கடவுளின் ஊழியராகவே அவர் அழைக்கப்பட விரும்பினார். அதே நேரத்தில் அவர் மக்கள் நீதிமன்றம் தன்னைப் பற்றித் தீர்ப்பளித்தால் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை என்றும், தான் யாரையும் தீர்ப்பிடப்போவதில்லை என்றும், ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம் என்றும் கூறுகின்றார்.
பவுல் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதால்! நற்செய்தியில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடம், யோவானின் சீடரும் பரிசேயர்களின் சீடரும் நோன்பிருக்க, உம்முடைய சீடர் உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றார்களே! என்கிறார்கள்.
யூதர்கள் ஆண்டுக்கொருமுறை பாவக் கழுவாய் நாளில் நோன்பிருந்தார்கள் (இச 16: 29-31) இன்னும் ஒருசில தேவைகளுக்காக அவர்கள் நோன்பிருந்தார்கள். ஆனால், அது கட்டாயம் இல்லை. மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும், இயேசுவின் சீடர்கள் நோன்பிருக்கவில்லை என்று அவரிடம் சொல்வது, அவர்களைக் கட்டாயப்படுத்தவது போன்று இருக்கின்றது, அல்லது அவர்கள் நோன்பிருக்காததால் சீடர்களே அல்ல என்று தீர்ப்பிடுவது போன்று இருக்கின்றது. இதனால் இயேசு அவர்களுக்குச் சரியான விளக்கம் தந்து அவர்களை வாயடைக்கின்றார்.
பக்தி முயற்சிகளை மேற்கொள்வது அவரவர் விருப்பம். அப்படி இருக்கையில், அதைச் செய்யாதவர்களை மிகப்பெரிய பாவிகள் போன்று தீர்ப்பிடுவது குற்றம். இந்த உண்மையை உணர்ந்து, கடவுளை நாம் உண்மையாய் வழிபடுவோம், யாரையும் தீர்ப்பிடாதிருப்போம்.
சிந்தனைக்கு:
கடவுள் பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றார்.
ஒருவரிடம் எதையும் வலிந்து திணிப்பது தவறு.
நம்மைப் பற்றியே நமக்கு முழுமையாகத் தெரியாதபோது, மற்றவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. அதனால் பிறரைத் தீர்ப்பிடுவது குற்றம்..
இறைவாக்கு:
‘...போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருந்துங்கள்’ (பிலி 4: 8) என்பார் புனித பவுல். எனவே, நாம் அல்லதை விட்டுவிட்டு நல்லதைப் பற்றிக்கொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
-----------------------------------------------
திருப்பாடல் 37: 3-4, 5-6, 27-28, 39-40 (39a)
ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்
விவசாயியின் நேர்மை:
நாகை மாவட்டம், வேதாரணயத்திற்கு அருகில் உள்ளது பஞ்சநதிக்குளம் என்ற சிற்றூர். இவ்வூரைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி என்ற விவசாயி.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, தன் நிலத்தில் விளைந்த நெல்லை அங்குள்ள ‘நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்’ விற்பனை செய்திருக்கின்றார். அவர்களும் அதற்குரிய பணத்தை அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்திருக்கின்றனர்; ஆனால், தனக்கு வரவேண்டிய பணத்தை விடவும், 1, 30, 042 ரூபாய்க் கூடுதலாக வரவைக்கப்பட்டதை அறிந்த இவர், அப்பணத்தை நாகை மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டார்.
இச்செய்தியை அறிந்த ஒருசில செய்தியாளர்கள் இவரிடம், “எதற்காக அவ்வளவு பணத்தையும் திரும்பிக் கொடுத்தீர்கள்? நீங்களே அதை வைத்திருக்கலாமே?” என்று கேட்டதற்கு அவர் அவர்களிடம், “நாம் உழைத்த பணமே நம்மோடு ஓட்டாதபோது, அரசாங்கப் பணம் எப்படி நம்மோடு ஓட்டும். அதனால்தான் நான் அதை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என்றார்.
தனக்கு வரவேண்டியதை விடவும் கூடுதலாக வந்த பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்த தெட்சிணாமூர்த்தி என்ற அந்த விவசாயியின் நேர்மை உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
‘நல்லவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில் தீயவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்களே, இது என்ன நியதி?’ என்று நாம் பல நேரங்களில் கேள்வி கேட்டிருப்போம். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 37 இன் ஆசிரியர் தாவீதுக்கும் இந்தக் கேள்வி ஏற்பட்டது. அதனால் அவர், “தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே; பொல்லாங்கு செய்வோரைக் கண்டு, பொறாமைப்படாதே; ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்” என்கிறார்.
தீயோரைக் கொண்டு மனம் புழுங்க வேண்டாம்; அவர்கள் புல்லைப் போல் விரைவில் உணர்ந்து போவர் என்று சொல்லும் தாவீது, ஆண்டவரையே நம்பி, நல்லதையும் நேர்மையானதையும் செய். ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார் என்கிறார். அப்படியானால், மற்றவர் தீமை செய்தபோதும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களே என்பதை நினைத்து நாம் மனம் புழுங்காமல், நேர்மையானதைச் செய்ய வேண்டும். ஏனெனில், நேர்மையாளருக்கு ஆண்டவரிடமிருந்து மீட்பு வருகின்றது.
ஆகவே, நாம் நேர்மையானதைச் செய்து, கடவுள் தரும் ஆசிகளைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனைக்கு:
பொல்லார் ஆண்டவர் முன் நிலைத்திருப்பதில்லை; நேர்மையாளரே ஆண்டவர் முன் நிலைத்திருப்பர்.
நேர்மையாளருக்கு பல ஆபத்துகள் வந்திடினும், ஆண்டவர் அவர்களைக் கைவிடுவதில்லை.
கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப தக்க கைம்மாறு அளிப்பார்.
இறைவாக்கு:
‘நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்’ (திபா 1:6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் எத்தகைய இடர் வரினும் நேரிய வழியில் நடந்து, இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment