Tuesday, September 6, 2022

Liturgy of the Hours in Tamil - தமிழ் திருப்புகழ் மாலை

 

பொதுக்காலம் 23ஆம் வாரம் - புதன்



காலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

இரவும் இருளும் கார்முகில் கூட்டமும்
தரையில் குழப்பமும் தவறும் கேடும்,
அகல்க, வானம் ஒளிரும் நேரம்
மகிழ்வை அளிக்க வருகிறார் இயேசு.

உலகை மூடிய காரிருள் கலைந்தது
பலவகை நிறங்களைக் கதிரவன் அளித்தது.
மனத்துள் மண்டிய இருளும் அகன்றது,
அனைத்தும் நடந்தது ஆண்டவர் செயலே!

உமையே சிக்கெனப் பற்றுவாம் கிறிஸ்துவே,
உம்மைப் பணிந்து கண்ணீர் உகுத்து,
நன்மனத் துடன் வேண்டு கிறோமே;
எம்உள உணர்வை ஆட்கொள் வீரே!

எமது குறைகள் கவலைகள் எல்லாம்
உமது ஒளியால் ஒழிந்து விடுக;
உமக்கும் தந்தை யுடன் ஆவி யாருக்கும்
சமமாய் மாட்சி என்றும் ஆகுக. ஆமென்!


திருப்பாடல்கள்

மு. மொ. 1: ஆண்டவரே, உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும். ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

வேதனையில் ஏழையின் இறைவேண்டல்

திபா 86

‘நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரை நாம் போற்றுவோம். கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்.’ (2 கொரி 1:3-4)

ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்;
ஏனெனில் நான் எளியவனும் வறியவனும் ஆவேன்.
என் உயிரைக் காத்தருளும்;
ஏனெனில், உம்மீது நான் பற்றுடையவன்;
உம் அடியானைக் காத்தருளும்;

நீரே என் கடவுள்!
உம்மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்;
ஏனெனில் நாள் முழுவதும் உம்மை நோக்கி
மன்றாடுகிறேன்.
உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;
என் தலைவரே! உம்மை நோக்கி
என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

ஏனெனில், என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்;
உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
பேரன்பு காட்டுபவர்.
ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்;
உம் உதவியை நாடும் என் கூக்குரலைக் கேட்டருளும்.

என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுவேன்;
நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.
என் தலைவரே! தெய்வங்களுள்
உமக்கு நிகரானவர் எவருமிலர்.
உம் செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில.

என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும்
உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்;
உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.
ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்;
வியத்தகு செயல்கள் புரிபவர்;
நீர் ஒருவரே கடவுள்!

ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு
உமது வழியை எனக்குக் கற்பியும்.
உமது பெயருக்கு அஞ்சுமாறு
என் நெஞ்சை ஒருமுகப்படுத்தும்.

என் தலைவரே! என் கடவுளே!
என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்;
என்றென்றும் உமது பெயரை மாட்சிப்படுத்துவேன்.
ஏனெனில் நீர் என்மீது காட்டிய அன்பு மிகப்பெரிது!
ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்!

இறைவா! செருக்குற்றோர்
எனக்கெதிராய் எழுந்துள்ளனர்;
கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப்
பார்க்கின்றது;
அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை.

என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்;
அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்;
பேரன்பும் சொல்லுறுதியும் பொரிதும் கொண்டவர்.
என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்.

உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;
உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.
உம் நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை
எனக்குக் காட்டியருளும்;
அதைக் கண்டு என் எதிரிகள் நாணுவார்கள்;
ஏனெனில் ஆண்டவராகிய நீர்தாமே
எனக்குத் துணைசெய்து ஆறுதல் அளித்துள்ளீர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்தில் இருந்ததுபோல் இப்பொழுதும், எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும். ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.


மு. மொ. 2: நீதிநெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர் பேறுபெற்றவர்.

ஆண்டவர் நீதியுடன் ஆள்வார்

சிறுபாடல்
எசா 33: 13-16

ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது. (திப 2:39)

தொலையில் உள்ளோரே,
நான் செய்வதைக் கேளுங்கள்;
அருகில் உள்ளோரே,
என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்.

சீயோன் வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்;
இறைப்பற்றில்லாரைத் திகில் ஆட்கொள்கின்றது.
சுட்டெரிக்கும் நெருப்பில் நம்மில் எவர் தங்குவார்?
என்றென்றும் பற்றியெரியும் தழலில்
நம்மில் எவர் இருப்பார்?

நீதி நெறியில் நடப்பவர்,
நேர்மையானவற்றைப் போசுபவர்,
கொடுமை செய்து பெற்ற வருவாயை வெறுப்பவர்.
கையூட்டு வாங்கக் கை நீட்டாதவர்,
இரத்தப் பழிச் செய்திகளைச்
செவிகொடுத்துக் கேளாதவர்,
தீயவற்றைக் கண்கொண்டு காணாதவர்;

அவர்களே உன்னதங்களில் வாழ்வர்;
கற்பாறைக் கோட்டைகள்
அவர்களது காவல் அரண் ஆகும்;
அவர்களுக்கு உணவு வழங்கப்படும்;
தண்ணீர் தரப்படுவதும் உறுதி.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : நீதிநெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர் பேறுபெற்றவர்.


மு. மொ. 3: ஆண்டவராகிய அரசரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.

ஆண்டவர் வெற்றி வீரர், நீதியுள்ள நடுவர்

திபா 98

இத்திருப்பாடல் ஆண்டவர் முதல் வருகையையும் மக்கள் இனங்கள் அவரிடம் கொள்ளும் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது’ (புனித அத்தனாசியார்).

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கையும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண்முன்னே
தம் நீதியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட
தமது பேரன்பையும் உறுதிமொழியையும்
அவர் நினைவுகூர்ந்தார்.

உலகெங்குமுள அனைவரும்
நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
உலகெங்கும் வாழ்வோரே!
அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;
யாழினை மீட்டி இனிய குரவில்
அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
ஆண்டவராகிய அரசரின் முன்னே
எக்கானம் முழங்கிக் கொம்பினை ஊதி
ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.

கடலும் அதில் நிறைந்தவையும்
உகும் அதில் உறைவோரும் முழங்குவராக!
ஆறுகளே! கைகொட்டுங்கள்;
மலைகளே! ஒன்றுகூடிப் பாடுங்கள்;

ஆண்டவர் திருமுன் மகிழ்ந்து பாடுங்கள்;
ஏனெனில் அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்;
பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்;
மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவராகிய அரசரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.


அருள்வாக்கு

யோபு 1: 21, 2: 10ஆ

“என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் வான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்: ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?”.


சிறு மறுமொழி

முதல்:கடவுளே, என் உள்ளத்தை உம் திருவுளத்திற்கு ஏற்ப பணியச் செய்தருளும்.
எல்:கடவுளே, என் உள்ளத்தை உம் திருவுளத்திற்கு ஏற்ப பணியச் செய்தருளும்.
முதல்:உம் வார்த்தையால் எனக்கு வாழ்வளித்தருளும்.
எல்:கடவுளே, என் உள்ளத்தை உம் திருவுளத்திற்கு ஏற்ப பணியச் செய்தருளும்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:கடவுளே, என் உள்ளத்தை உம் திருவுளத்திற்கு ஏற்ப பணியச் செய்தருளும்.

செக்கரியாவின் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். உமது தூய உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும்.

லூக் 1: 68-79

மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.

இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.

தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். உமது தூய உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும்.


மன்றாட்டுகள்

கடவுள் அன்பாயிருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவில், கடவுள் நம்மை எவ்வாறு அன்பு செய்தார் என்று காண்கிறோம். அவருடைய அன்பின்மீது நாம் கொண்ட நம்பிக்கையைப் புதுப்பிப்போம்.

எல் : ஆண்டவராகிய இயேசுவே, நீர் எம்மை அன்பு செய்து, எமக்காக உம்மையே கையளித்தீர்.

இக்காலை நேரத்தில் நீர் எங்களுக்கு வாழ்வையும் ஒளியையும் வழங்கியுள்ளீர் — இத்தகைய மேலான கொடைகளுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

நீர் ஒருவரே வருங்காலத்தின் தலைவர் – என்ன நடக்கப்போகிறதோ என்னும் அச்சத்தினின்றும் நம்பிக்கையின்மையினின்றும் எங்களைக் காத்தருளும்.

தனக்கென எதையும் தேடும் பேராசை அன்பிற்கு இல்லை — இன்று எங்கள் தன்னலத்தை அகற்ற எங்கள் உள்ளத்தைத் திடப்படுத்தும்.

எம்மிடம் உமதன்பு அனைத்துத் தடைகளையும் மேற்கொள்ளச் செய்யும் — எங்களுடைய நம்பிக்கை எதிர்நோக்கு, பொறுமையில் எவ்வித வரம்பும் இன்றி வளரச் செய்தருளும்.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவராகிய கடவுளே! உமது ஞானத்தில் எங்களைப் படைத்து, உம் பராமரிப்பால் எங்களை ஆண்டு நடத்துகிறீர். உமது தூய ஒளியால் எங்கள் இதயத்தின் உள் ஆழத்தை ஊடுருவியருளும்; அதனால் எங்கள் வாழ்வு எப்போதும் உமக்கு உண்மையுள்ள பணியாக அமைவதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

நண்பகல் இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

வல்ல அரசரே, உண்மைக் கடவுளே,
எல்லாக் காலச் சுழற்சியை அமைத்தீர்,
தண்ணொளியைக் காலைப் பொழுதிற்(கு) தந்தீர்,
நண்பகல் வேளையில் வெப்பம் தந்தீர்.

பற்றி எரியும் பகைமையை அணைப்பீர்,
குற்றங் குறைகளின் வெப்பம் தணிப்பீர்,
உமது காவலை உடலுக்கு அளிப்பீர்,
எமக்கு உள்ள அமைதியை அருள்வீர்.

தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே,
தந்தைக்கு இணையான ஒரேதிருப் புதல்வரே,
ஆறுதல் அளிக்கும் தூயநல் ஆவியாரே,
ஆண்டாண்டு காலம் புகழ்பெற்(று) ஆள்வீர்,ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் என்கிறார் ஆண்டவர்.

திருச்சட்டத்தின் இறைவாக்கை தியானித்தல்

திபா 119: 105-112

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை'. (யோவா 15:12).

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!
என் பாதைக்கு ஒளியும் அதுவே!
நீதியான உம் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதாக
நான் ஆணையிட்டு உறுதிமொழி தந்துள்ளேன்.

ஆண்டவரே! நான் மிக மிகத் துன்புறத்தப்படுகின்றேன்;
உம் வாக்குறுதியின்படி
என்னை உயிரோடு வைத்தருளும்.
நான் மனமுவந்து வாயார
உம்மைப் புகழ்வதை ஆண்டவரே!
தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்;
உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும்.

நான் என்னுயிரை எப்போதும்
என் கையில் வைத்துள்ளேன்;
ஆயினும் உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
தீயோர் எனக்குக் கண்ணி வைத்தனர்;
ஆனால் உம் நியமங்களினின்று நான் பிறழவில்லை.

உம் ஒழுங்குமுறைகளே என்றும் என் உரிமைச் சொத்து;
அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.
உம் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் என் உள்ளம்.
இடைவிடாது இறுதிவரை நாட்டம் கொண்டிருக்கும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் என்கிறார் ஆண்டவர்.


மு. மொ. 2: நான் சிறுமையுற்றவன், ஏழை; இறைவா, எனக்குத் துணைபுரியும்.

இறைவா எனக்குத் துணைபுரிய விரையும்

திபா 70

“ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோம்” (மத் 8:25)

இறைவா! என்னை விடுவித்தருளும்;
ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்!
என் உயிரைப் பறிக்கத் தேடுவோர்
வெட்கமும் குழப்பமும் அடையட்டும்!

எனக்குத் தீங்கு வருவதில் மகிழ்வுறுவோர்
தலைகுனிந்து பின்னடையட்டும்!
என்னைப் பார்த்து, ‘ஆ! ஆ!’ என்போர்
தாம் அடையும் தோல்வியினால் கலக்கமுறட்டும்.

உம்மைத் தேடுவோர் அனைவரும்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்!
நீர் அருளும் மீட்பில் நாட்டங் கொள்வோர்
‘கடவுள் எத்துணைப் பெரியவர்’ என்று
எப்போதும் சொல்லட்டும்!

நானோ சிறுமையுற்றவன், எளியவன்;
இறைவா! என்னிடம் விரைந்துவாரும்;
நீரே என் துணைவர்; என் மீட்பர்;
என் ஆண்டவரே! காலந்தாழ்த்தாதேயும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : நான் சிறுமையுற்றவன், ஏழை; இறைவா, எனக்குத் துணைபுரியும்.


மு. மொ. 3: கடவுள் வெளித்தோற்றத்தின் படி தீர்ப்பு வழங்க மாட்டார்; மாறாக, நீதியிலும் நேர்மையிலும் ஆட்சி செய்வார்.

அனைத்தையும் ஆளுபவர் ஆண்டவரே

திபா 75

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். (லூக் 1:52)

உம்மைப் புகழ்கின்றோம் இறைவா!
உம்மைப் புகழ்ந்து போற்றுகின்றோம்.
உமது பெயரை ஏத்துகின்றோம்;
உம் வியத்தகு செயல்களை எடுத்துரைக்கின்றோம்.

“நான் தகுந்த வேளையைத் தேர்ந்துகொண்டு,
நீதியோடு தீர்ப்பு வழங்குவேன்.
உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும்
நிலைகுலைந்து போகலாம்;
நானோ உலகின் தூண்களை
உறுதியாக நிற்கச் செய்வேன்.

தற்பெருமை கொள்வோரை நோக்கி,
‘வீண் பெருமை கொள்ள வேண்டாம்’ எனவும்
பொல்லாரை நோக்கி,
‘உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்;
உங்கள் ஆற்றலைச் சிறிதளவும்
காட்டிக்கொள்ள வேண்டாம்;
தலையை ஆட்டி இறுமாப்புடன் பேச வேண்டாம்’;
எனவும் சொல்வேன்”.

கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ,
பாலைவெளியிலிருந்தோ, மலைகளிலிருந்தோ
உங்களுக்கு உயர்வு வராது.
ஆனால் கடவுளிடமிருந்து தீர்ப்பு வரும்;
அவரே ஒருவரைத் தாழ்த்துகின்றார்;
இன்னொருவரை உயர்த்துகின்றார்.

மதிமயக்கும் மருந்து கலந்த
திராட்சை மது பொங்கி வழியும் ஒரு பாத்திரம்
ஆண்டவர் கையில் இருக்கின்றது;
அதிலிருந்து அவர் மதுவை ஊற்றுவார்;
உலகிலுள்ள பொல்லார் யாவரும் அதை முற்றிலும்
உறிஞ்சிக் குடித்துவிடுவர்.

நானோ எந்நாளும் மகிழ்ந்திருப்பேன்;
யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்;
பொல்லாரை அவர் வலிமை இழக்கச் செய்வார்;
நேர்மையாளரின் ஆற்றலோ உயர்வு பெறும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கடவுள் வெளித்தோற்றத்தின் படி தீர்ப்பு வழங்க மாட்டார்; மாறாக, நீதியிலும் நேர்மையிலும் ஆட்சி செய்வார்.


அருள்வாக்கு

1 கொரி 13: 8-9, 13

இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரை குறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.


முதல்:ஆண்டவரே, உமது அன்பு எம்மீது இருப்பதாக.
எல்:நாங்கள் உம்மில் முழு நம்பிக்கை வைக்கிறோம்.

இறுதி மன்றாட்டு

ஆற்றலும் அன்பும் மிக்க கடவுளே, நாங்கள் தொடங்கியுள்ள பணியைக் கனிவுடன் கண்ணோக்கி இந்த நண்பகல் வேளையில் எமக்குள் உமது அருளைப் புதுப்பித்தருளும்; எங்கள் பணியின் குறைகளை நீக்கி, அதை உமது திருவுளத்திற்கு ஏற்றபடி நிறைவடையச் செய்தருளும், உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்

மாலைப் புகழ்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

விண்ணகக் கடவுளே, தூய்மை மிகுந்தோய்,
விண்மீன் ஆதவன் அனைத்தும் படைத்தோய்
நான்காம் நாளில் நாளும் திங்களும்
ஆண்டும் முறையாய் சுழன்றிடச் செய்தோய்.

படைத்த வண்ண ஒளியால் உலகம்
அடைந்த எழிலும் சிறப்பும் என்னே!
கோல முடனே குவலயம் அமைத்தீர்;
காலங் களையும் கருத்துடன் கணித்தீர்.

மனித இதயத்தை ஒளியால் நிரப்பும்,
மனத்தின் அழுக்கை அருளால் போக்கும்.
பாவத் தளையைப் பரிவுடன் அவிழ்ப்பீர்.
பாவப் பளுவைப் பாங்காய் அகற்றுவீர்.

நேயரெம் வேண்டல் ஏற்பீர், தந்தாய்,
உயர் நிலை வீற்றிருக்கும் உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியருடன்
இச்செகம் என்றும் ஆளுகவே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

கடவுளில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும்

திபா 126

‘நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைடய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’. (2கொரி 1:7)

சீயோனின் அடிமை நிலையை
ஆண்டவர் மாற்றினபோது,
ஏதோ கனவு கண்டவர் போல நாம் இருந்தோம்.
அப்பொழுது நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.
களிப்பின் ஆரவாரம் நம் நாவில் எழுந்தது ;

“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்”
என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
ஆண்டவர் நமக்கு
அரும்பெரும் செயல்கள் புரிந்துள்ளார்;
அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.

ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடைகளை
நீரோடைகளாக வான்மழை மாற்றுவதுபோல,
எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
கண்ணீரோடு விதைப்பவர்கள்
அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

விதை எடுத்துச் செல்லும்போது
அழுகையோடு செல்கின்றார்கள்;
அரிகளைச் சுமந்து வரும்போது
அக்களிப்போடு வருவார்கள்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.


மு. மொ. 2: ஆண்டவரே நமக்கு ஒரு வீட்டைக் கட்டுவார், அவரே நம் நகரைக் காப்பார்.

வெற்றி ஆண்டவரின் ஆசியை சார்ந்தது

திபா 127

‘நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்’ (1கொரி 3:9).

ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில்,
கட்டுவோரின் உழைப்பு வீணாகும்;
ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில்
காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.

வைகறையில் விழித்தெழுந்து
நள்ளிரவில் ஓய்வெடுக்கும் வரை
மானிடர் தம் உணவுக்காக
வருந்தி உழைப்பது வீணே!
உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை
அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்.

பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்;
மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.
இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர்
வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்.

அவற்றால் தம் அம்பறாத்தூணியை நிரப்பிய வீரர்
நற்பேறு பெற்றோர்;
நீதிமன்றத்தில் எதிரிகளோடு வழக்காடும் போது
அவர் இகழ்ச்சியடையமாட்டார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே நமக்கு ஒரு வீட்டைக் கட்டுவார், அவரே நம் நகரைக் காப்பார்.


மு. மொ. 3: கிறிஸ்து படைப்பனைத்திலும் தலைப்பேறு அவர் எல்லாப் படைப்புகளுக்கும் மேலானவர்.

கிறிஸ்து படைப்புக்கெல்லாம் தலைப்பேறானவர், இறந்தோரினின்று பிறந்த தலைப்பேறானவர்.

சிறுபாடல்
கொலோ 1: 12-20

தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
அவர் இறைமக்களுக்கான
ஒளிமயமான உரிமைப் பேற்றில் பங்கு பெற
உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்.

அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத்
தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார்.
அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய
மீட்பைப் பெறுகிறோம்.

அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்
படைப்பனைத்திலும் தலைப்பேறு.
ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை,
கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர்,
ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர்,
ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்

அனைத்தும் அவர் வழியாய்
அவருக்காகப் படைக்கப்பட்டன.
அனைத்துக்கும் முந்தியவர் அவரே;
அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.

திருச்சபையாகிய உடலுக்குத்
தலையும் தொடக்கமும் அவரே.
எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு
இறந்து உயிர்த்தெழுவோருள்
அவர் தலைப்பேறு ஆனார்.

தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக்
கடவுள் திருவுளம் கொண்டார்.
சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால்
அமைதியை நிலை நாட்டவும்
விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும்
அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும்
கடவுள் திருவுளம் கொண்டார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கிறிஸ்து படைப்பனைத்திலும் தலைப்பேறு அவர் எல்லாப் படைப்புகளுக்கும் மேலானவர்.


அருள்வாக்கு

எபே 3: 20-21

நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாகத் தலைமுறை தலை முறையாக என் றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உமது இரக்கத்தை எனக்குக் காட்டி என்னை மீட்டருளும்.
எல்:ஆண்டவரே, உமது இரக்கத்தை எனக்குக் காட்டி என்னை மீட்டருளும்.
முதல்:பாவிகளோடு என்னையும் தள்ளிவிடாதேயும்.
எல்:ஆண்டவரே, உமது இரக்கத்தை எனக்குக் காட்டி என்னை மீட்டருளும்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உமது இரக்கத்தை எனக்குக் காட்டி என்னை மீட்டருளும்.

கன்னிமரியாவின் பாடல்

மு. மொ. : வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்; தூயவரென்பதே அவரது பெயர்.

லூக் 1: 47-55

என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.

ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக்
கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள்
எக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்; தூயவரென்பதே அவரது பெயர்.


மன்றாட்டுகள்

மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கைக் கொண்டிருப்பினும், என்னிடம் அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை; இதை மனத்தில் கொண்டு மன்றாடுவோம்.

எல்: ஆண்டவரே, உம் அன்பை எமக்கு அளித்தருளும்.

ஆண்டவரே, நாங்கள் உம்மை நோக்கி உருவாகி வளரும்போது எமக்கு ஆதரவாயிரும் — எங்கள் உழைப்பால் எங்கள் நம்பிக்கையை வளரச் செய்யும்.

நாங்கள் மனஉறுதியின்மையால் அல்லலுறுகிறோம் நிலையற்றவைகளினால் மன அழுத்தம் கொள்கிறோம் — நாங்கள் நம்பிக்கையோடு உம்மை நோக்கிப் பயணம் செய்ய இவற்றிலிருந்து எங்கள் உள்ளங்களை விடுவித்தருளும்.

அன்பு தீங்கு நினையாது, தீவினையில் மகிழ்வுறாது — நாங்கள் உண்மையில் மகிழவும் பிறருக்கு நீர் வழங்கும் கொடைகளைக் கண்டுகளிக்கவும் எங்களுக்கு உதவியருளும்.

பயணம் செய்யும் திருச்சபையை திருத்தூதர்களுடைய நம்பிக்கையில் உறுதிப்படுத்தும் நாங்கள் எங்கள் கொடைகளைப் பிறரோடு பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஊக்கமூட்ட உதவியருளும்.

உம் அமைதியில் இறந்தார் அனைவரையும் நம்பிக்கையை நிறைவு செய்வதும் எதிர்நோக்குக்குப் பதில் அளிப்பதுமான மெய்யுணர்வுக்குக் கொண்டு வந்தருளும் — அவர்களுக்கு உமது அன்பின் நிறைவையும் அளித்தருளும்.


ஆண்டவரின் இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவரே, உமது மக்கள் உம் திருமுன் எழுப்பும் கூக்குரல் கேட்டு, நீர் அவர்களுடைய பாவங்களை மன்னித்தருளும். இவ்வாறு அவர்கள் உமது அருளால் உம் பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் ஆவார்களாக. அவர்களை உமது அருள்கரத்தால் பாதுகாத்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


முதல்:ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்:ஆமென்


இரவு இறைவேண்டல்

முதல்:இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்:ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.

பாடல்

பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா,
காரிருள் புகஉம் கழலினைத் தொழுதோம்;
பேரருள் புரிந்து எம்மீது) இரங்கிக்
கோரிடும் எம்மைக் காத்தருள் வீரே.

கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக,
நினைவிலாத் துயிலிலும் உமமையே உணர்க;
நனிசேர் புதுநாள் புலரும் போதும்
இனியவும் புகழை இசைத்தேத் திடுக.

இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக
அன்பனல் எமக்குள் கனன்றிடச் செய்க
துன்பமும் துயரமும் தரும்கார் இருளை
உன்பெரும் ஒளியில் சுடர்போக் கிடுக.

இறைவா, எல்லாம் வல்ல தந்தாய்
மகன்வழி யாய்எமக் கிவை அருள்வாய்
ஒருபொருள் தந்தை மகன் தூய ஆவியார்
தரைதனில் ஆட்சியும் மாட்சியும் பெறுக. ஆமென்.

அல்லது

கிறிஸ்துவே ஒளியும் பகலும் நீரே
இரவின் இருளை ஈந்தீர் எனினும்
மறுமையில் நீரே ஒளியென விளங்க
தரையிலும் பேரொளி விளக்கா வீரே.

தூயவரே, ஆண்டவரே, துயிலுறு இரவிதில்
நேயமாய் எம்மைக் காத்திட வேண்டுவோம்;
எமதிளைப் பாற்றி உம்மிலே ஆகுக.
அமைதி மிகுந்த இரவினைத் தருக.

உடலின் கண்கள் உறங்கி மூடினும்
உளத்தின் கண்கள் விழித்துமை நோக்குக
உம்மை அன்பு செய்தோம் எனவே
எம்மை ஆற்ற லுடன்காத் தருள்க.

காவல் நீரே கருணைக்கண் ணோக்கிப்
பேயின் சோதனை நின்றெமைக் காப்பீர்;
செந்நீர் சிந்தி மீட்டவும் மக்களை
இன்னல் நீக்கிக் காத்தருள் வீரே.

எம்மை அன்பு செய்யும் கிறிஸ்துவே.
உம்முடன் தந்தையும் ஆவி யாரும்
இம்மையில் மறுமையில் இடையறா தென்றும்
உண்மை மாட்சியும் புகழும் பெறுக. ஆமென்.

அல்லது

போயது பொழுது புகுந்தது இரவு;
தூயரே உமது பொன்னடி தொழுவோம்;
நேயமாய் எல்லா ஏதமும் நீக்கி,
நேயரெமை ஆண்டு காத்தருள் வீரே.

கனவுகள் துயில்வழி காணுதல் வேண்டாம்
கனவிருள் பூதமும் கண்ணுறல் வேண்டாம்
சினமுறு பகைவர் முரணெலாம் வெல்வாய்
ஈனமும் உடலில் சேர்ந்திடாதருள்வாய்.

முதல்வரே தந்தாய் அருள் புரி வீரே
புதல்வரே கிறிஸ்துவே அருள்புரி வீரே
கதிரொளி வெல்லும் ஆவி யாரே
பதம் பணிந்து போற்றிடு வோமே. ஆமென்.


திருப்பாடல்கள்

மு. மொ. 1: கடவுளே! என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாகவும் அடைக்கலமாகவும் இருந்தருளும்.

மனத்துயரினிடையே நம்பிக்கை நிறைந்த மன்றாட்டு

திபா 31: 1-5

“தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (லூக் 23:46).

ஆண்டவரே, உம்மிடம் நான்
அடைக்கலம் புகுந்துள்ளேன்;
ஒருபோதும் நான் வெட்கமடைய விடாதேயும்;
உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
உம் செவிகளை என்பால் திருப்பியருளும்;
விரைவில் என்னை மீட்டருளும்;

எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்;
வலிமைமிகு கோட்டையாய் நீர் இருந்து
என்னைப் பாதுகாத்தருளும்.
ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே:
உமது பெயரின்பொருட்டு எனைக்கு வழிகாட்டி
என்னை நடத்தியருளும்.

எனக்கென அவர்கள் விரித்துள்ள வலையிலிருந்து
என்னை விடுவித்தருளும்;
ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்;
வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே,
நீர் என்னை மீட்டருளினீர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : கடவுளே! என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாகவும் அடைக்கலமாகவும் இருந்தருளும்.


மு. மொ. 2: ஆண்டவரே, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

பாதாளத்திலிருந்து உம்மை நோக்கி கூப்பிடுகிறேன்

திபா 130

“அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” (மத் 4:21).

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான்
உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;
ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள்
கவனத்துடன் கேட்கட்டும்.

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை
மனத்தில் கொண்டிருந்தால், யார்தாம் நிலைத்து
நிற்கமுடியும்?
நீரோ மன்னிப்பு அளிப்பவர்;
மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.

ஆண்டவருக்காக நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
என் நெஞ்சம் காத்திருக்கின்றது.
அவருடைய சொற்களுக்காக
நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம்,
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட,
என் நெஞ்சம் என் தலைவருக்காய்
ஆவலுடன் காத்திருக்கின்றது.

இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு;
பேரன்பு அவரிடமே உள்ளது;
மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
எல்லாத் தீவினைகளினின்றும்
இஸ்ரயேலை மீட்பவர் அவரே!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.


அருள்வாக்கு

எபே 4: 26-27

சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள்.


சிறு மறுமொழி

முதல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்:தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்:ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.

சிமியோன் பாடல்

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.

லூக் 2: 29-32

கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.

எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.

இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி;
இதுவே உம் மக்களாகிய இஸ்ரையேலுக்குப் பெருமை.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.


இறுதி மன்றாட்டு

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இதயத்தில் கனிவும் தாழ்மையும் உள்ளவரே, உம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு இனிய நுகத்தையும் இதமான சுமையையும் கொடுக்கிறீர். இந்நாளில் எங்கள் வேண்டல்களையும் உழைப்பினையும் ஏற்றுக்கொண்டு எந்நாளும் நாங்கள் விருப்புடன் உமக்கு ஊழியம் புரியத் தேவையான இளைப்பாற்றியை எமக்கருள உம்மைக் கெஞ்சிக் கேட்கிறோம். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


ஆசியுரை

ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.


தூய மரியாவுக்குப் பாடல்

வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க.

தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுமைக் கூவி அழைத்தோம்.

கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.

அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.

உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.

கருணையின் உருவே தாய்மையின் கனிவே
இனிமையின் அன்னை மரியா போற்றி! ஆமென்.

அல்லது

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே
விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே
தண் கடல் மீதொளிர் விண்மீன் நீரே

வீழ்ச்சி நின்றெழ முயன்றிடும் மக்களை
ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்.

இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர்
ஈன்ற பின்னரும் கன்னியாய் நின்றீர்

வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர்
ஈனப் பாவிகள் எமக்கு இரங்குவீர். ஆமென்.

அல்லது

வானகம் ஆளும் அரசியே வாழ்க
வானவர் அனைவரின் தலைவியே வாழ்க
எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி
உதயம் ஆகிய வாயிலே வாழ்க.

மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.
ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.
எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி
பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல். ஆமென்

அல்லது

கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்

இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz



No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...