Saturday, November 19, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (20-11-2022)

 

இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்

பெருவிழா

முதல் வாசகம்



இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-3

அந்நாள்களில்

இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.”

இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1
“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4
ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

இரண்டாம் வாசகம்



தந்தையாம் கடவுள் நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-20

சகோதரர் சகோதரிகளே,

தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.

அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன.

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 11: 10

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 35-43

அக்காலத்தில்

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்” என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்று எள்ளி நகையாடினர். “இவன் யூதரின் அரசன்” என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று” என்று அவரைப் பழித்துரைத்தான்.

ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.

பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான்.

அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கிறிஸ்துவின் ஆட்சியில் வாழத் தயாரா! 


இன்று நாம் திருஅவையோடு இணைந்து கிறிஸ்து அரசரின் விழாவைக் கொண்டாடுகிறோம்.

 திருத்தந்தை 11ம் பயஸ், 1925ல் குவாஸ் ப்ரைமாஸ் (முதலாவது) என்ற சுற்றுமடல் வழியாக கிறிஸ்து அரசர் பெருவிழாவை நிறுவினார். அப்போது இவ்விழா, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அரசர்'  என்ற பெயரில், அக்டோபர் கடைசி ஞாயிறன்று சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டது. 1960ல் திருத்தந்தை 23ம் யோவான், இதை முதல் வகுப்பு விழாவாக மாற்றினார்.

1960ல் திருத்தந்தை 6ம் பவுல், தனது மோட்டு ப்ரொப்ரியோ (அவரது தூண்டுதலால்) என்ற சுற்றுமடல் வழியாக இவ்விழாவின் பெயரை, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்'  என்று மாற்றினார். மேலும், அவர் இவ்விழாவை திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று பெருவிழாவாக கொண்டாடுமாறு ஆணையிட்டார்.


அதனடிப்படையில்

கிறிஸ்து இயேசு அனைத்துலகின் அரசர் என்ற நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் நாம் இந்த விழாவைக் கொண்டாடுகிறோம்.

அரசன் என்றால் அதிகாரம், பெருமை, செல்வச் செழிப்பில் வாழ்வு, பணிவிடை புரிய பலர் என்ற வரைபடத்தை மாற்றி அமைத்து பணிவு, தாழ்ச்சி, எளிமை, பணிபுரிதல் போன்றவைதான் அனைவரின் மனங்களையும் ஆட்சி செய்யும் என்ற சிந்தனையைத் தந்தவர்தான் இயேசு. 


இன்றைய நற்செய்தியில் யூதர்களும் இயேசுவை சிலுவையில் அறைந்த காவலர்களும் அவரை "அரசன் என்று சொன்னாயே; உன்னையே உன்னால் காப்பாற்ற இயலவில்லையே " என எள்ளி நகையாடினர். அவர்கள் நகையாடிக் கூறியது ஒரு விதத்தில் உண்மையாகத் தோன்றலாம். அரசனுக்கான அறியணையும் மணிமுடியும் அங்கு இல்லை. அறியணைக்குப் பதிலாக சிலுவையும் மணிமுடிக்கு பதிலாக முள்முடியும் தான் இருந்தன. சாமரம் வீசும் பணியாளர்களுக்கு பதில் சவுக்கையால் அடித்தவர்கள்தான் அங்கு இருந்தனர். புகழ்பாடலுக்கு பதில் வசைமொழிகளும் இனிய மது ரசத்திற்கு பதில் கசப்புக் காடியும் தான் இருந்தன. பின் எவ்வாறு அவர் அரசராக முடியும்? 


ஆனால் அந்த நிலையிலும் கூட

 இயேசுவிடம் கள்வன் "நீர் ஆட்சியுரிமை பெறும் போது என்னை நினைவு கூறும் " என மன்றாடிக் கேட்டுக்கொண்டான் என நாம் வாசிக்கிறோம்.சுற்றி இருந்த அத்தனை பேரும் இயேசுவை ஏளனம் செய்த போது அந்தக் கள்வனால் மட்டும் இயேசுவை எவ்வாறு அரசனாக அறிய முடிந்தது? 

ஏனென்றால் அவன் இயேசுவை கனிவை, அன்பை, இரக்கத்தை, பணிவை, மன்னிக்கும் மனதை கண்டுகொண்டான். இயேசுவின் இத்தகைய அருங்குணங்கள் கள்வனின் மனதை ஆட்கொண்டன. இயேசுவும் அக்கள்வனின் மனதை அறிந்து "இன்று நீ என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் " என உறுதியளித்தார். 


இன்றைய விழா நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அக்கள்வனைப் போல இயேசுவின் அருங்குணங்களால் நம் இதயங்கள் ஆட்கொள்ளப்பட அனுமதிக்க வேண்டும் என்பதே. இயேசு நம் இதயங்களை ஆட்கொண்டாலே போதும் தன் வாழ்நாளின்  இறுதி நேரத்தில் கூட மனமாறி இயேசுவின் ஆட்சி உரிமையில் மட்டுமல்ல அவருடைய மனதிலும் இடம்பிடித்த அக்கள்வனைப்போல நாமும் இயேசுவின் ஆட்சி உரிமையிலும் அவருடைய மனதிலும் நீங்கா இடம் பெற முடியும்.  இயேசுவின் அருங்குணங்களால் ஆட்கொள்ளப்பட்ட நாமும் அக்குணங்களை நம்மோடு வாழும் பிறருக்கு பிரதிபலித்து அவர்களையும் இயேசுவின் ஆட்சியுரிமைக்குரிய மக்களாக மாற்ற முயல்வது இறையாட்சியின் மக்களாகிய நமக்கு கொடுக்கப்பட்ட கடமை. இம்மனநிலை நம்மிடம் இருந்தால் மட்டுமே கிறிஸ்து அரசரின் விழாவைக் கொண்டாடுவது நமக்கு பொருத்தமானதாக இருக்கும். நாமும் அவரின் அரசின் மக்களாக வாழ முடியும். தயாரா?


 இறைவேண்டல் 

எங்கள் அரசரே இயேசுவே! உமது ஆட்சியுரிமையில் எம்மை நினைவுகூரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...