Sunday, November 20, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (21-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - திங்கள்

முதல் வாசகம்



கிறிஸ்துவின் பெயரையும் அவருடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்தனர்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 1-5

யோவான் என்னும் நான் சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர். பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசை போலும் ஒலித்தது.

அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் கற்பைக் காத்துக் கொண்டவர்கள்.

ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக் குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள். அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6a)

பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடை யவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 24: 42a, 44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4

அக்காலத்தில்

இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

அவர், “இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கொடுப்பதில் இன்பமா!


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மறைமாவட்டத்தில் சிறைப்பணி செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பங்கிற்கு நிதி பெற்றுக்கொள்வதற்காகச் சென்றிருந்தேன். என்னோடு ஒரு சில அருள்சகோதரிகளும் தன்னார்வத் தொண்டர்களும் வந்திருந்தனர். நாங்கள் பெரும்பாலும் சிறைப்பணிக்காக எடுக்கப்படும் காணிக்கையை ஆலயத்தின் வெளிப்புறம் நின்றுதான்  எடுப்போம். அப்பொழுது யாசகம் வாங்கிக்கொண்டிருந்த சகோதர சகோதரிகள் அனைவரும் எங்களை கோபத்தோடு பார்த்தனர். ஏனென்றால் மக்கள் அனைவரும் சிறைப்பணிக்காக தாராளமாக நாங்கள் வைத்திருந்த  காணிக்கை வாளியில் தங்களது நன்கொடைகளை செலுத்தினார்கள். எனவே மக்கள் அனைவரும் யாசகம் வாங்கிக்கொண்டிருந்த சகோதர சகோதரிகளுக்கு போதிய உதவி செய்யவில்லை. இதுதான் அவர்களின் கோபத்திற்கு காரணம்.  


இந்தச் சூழலில் எங்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்த யாசகம் வாங்கிக்கொண்டிருந்த  ஏழைக்கைம்பெண் ஒருவர்  எங்கள் அருகில் வந்தார். அவர் எங்கள் தன்னார்வத் தொண்டர்களில் ஒருவரை பார்த்து "எதற்காக இவ்வாறு பணம்  பெறுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த  தன்னார்வத் தொண்டர் "நாங்கள் சிறைப்பணிக்காக காணிக்கை எடுக்கிறோம். இதில் பெற்றுக் கொள்கின்ற பணத்தை நாங்கள் சிறையில் வாடும் சிறைவாசிகளுக்காகவும் அவர்களின் குழந்தைகளின் படிப்பிற்காகவும் நாங்கள் பயன்படுத்துகிறோம்" என்று பகிர்ந்து கொண்டார். உடனே யாசகம் வாங்கக்கூடிய அந்த ஏழைக் கைம்பெண் தன் சேலையில் முடித்து வைத்திருந்த ஐம்பது ரூபாய் பணத்தை வாளியில் காணிக்கையாக போட்டு "இதையும் அவர்களுக்காக பயன்படுத்துங்கள்" எனக் கூறினார். இந்த நிகழ்வு என்னோடு வந்திருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த உண்மை நிகழ்வு மிகச் சிறந்த அனுபவத்தைத் தருவதாக அமைந்தது. இந்த உண்மை நிகழ்வை தியானிக்கும் போதெல்லாம் எனக்கு லூக்கா நற்செய்தியில் வருகின்ற ஏழைக் கைம்பெண்ணின்  காணிக்கை தான் நினைவுக்கு வரும்.


எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியம் அல்ல; மாறாக, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம். நம் ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் கைம்பெண்கள் இச்சமூகத்தால் மிகவும் ஒடுக்கப்பட்டார்கள். கணவனை இழந்து ஒரு பெண் வாழ்வது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான ஒன்றாகும். ஆண்டவர் இயேசு இந்த மனநிலையை மாற்ற வேண்டுமெனத் திருவுளம் கொண்டார். எனவேதான் காணிக்கைப் பெட்டிக்கு முன்பாக அமர்ந்தார். செல்வர்கள் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போடுவதைக் கண்டார். அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். ஆனால் இந்த ஏழைக்கைம்பெண் தன்னிடமிருந்த அனைத்தையும் காணிக்கையாக போட்டார். இதற்கு முக்கிய காரணம் ஏழைக் கைம்பெண்ணின் தியாகவுள்ளமாகும். எவ்வளவு துன்பப்பட்டாலும் கடவுளுக்கு கொடுக்க வேண்டும் என்ற  நல்ல மனநிலை அந்த ஏழைக் கைம்பெண்ணுக்கு இருந்தது. அவர் சார்ந்த சமூகம் எவ்வளவு தன்னை நசுக்கினாலும் ஓரங்கட்டினாலும் மனத்துணிவோடு உழைத்து கடவுளுக்குத் தான் செலுத்தவேண்டிய காணிக்கையைச் செலுத்தினார்.


பல விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் இரண்டு காசுகள் என்பது இரண்டு நாள் வருமானம் ஆகும். இந்த இரண்டு நாள் வருமானத்தை அவர் காணிக்கையாகக் கொடுக்கிறார் என்றால் அது கடவுள் மீது அவர் கொண்ட அன்பையும் நல்லுறவையும் சுட்டிக்காட்டுகின்றது. எருசலேம் ஆலயத்தில் இரண்டு காசுகளுக்குக்  குறைவாக காணிக்கை செலுத்தக்கூடாது என்ற சட்டம்  இருந்ததாகவும் கூறப்படுகின்றது. எனவேதான் ஏழைக் கைம்பெண்  இரண்டு நாள் உழைத்து சம்பாதித்த இரண்டு காசுகளைக் கடவுளுக்காகக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க முன்வருகிறார். தனக்கு இருந்தாலும்  இல்லாவிட்டாலும் கடவுளுக்குக் கொடுக்கவேண்டும் என்ற ஆழமான இறைநம்பிக்கை அந்த ஏழைக்கைம்பெண்ணுக்கு இருந்ததால் தான் அவரால் தான் வைத்திருந்த அனைத்தையுமே கொடுக்க முடிந்தது. இத்தகைய மனநிலை தான் நம் ஆண்டவர் இயேசுவின் மனநிலை. ஆண்டவர் இயேசு நாம் அனைவரும் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக தன்னையே முழுவதுமாக நமக்காக கையளித்தார். எனவேதான் இயேசு இந்த நிகழ்வை பார்த்ததும் அவரை பாராட்டி உலக மக்கள் அனைவருக்குமே அப்பெண்ணை ஒரு வாழ்வியல் முன்னுதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.


கடவுள் மீது   அதிக நம்பிக்கை வைப்பவர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற மன நிலையில் இருப்பர். உதாரணமாக ஆபிரகாம் நம்பிக்கையின் தந்தை என அழைக்கப்படுகிறார். தன்னுடைய ஒரே மகனையே கடவுள் பலியாகக் கேட்டபோது ஒரு தந்தையாக அவர் மனம் வருந்தினாலும் கடவுள்  தன் மகனை பலியாகக்  கேட்டுவிட்டார் என்ற நம்பிக்கையோடு அவரை பலிகொடுக்கத் துணிந்தார். எனவே கடவுள் அவருடைய வழிமரபைக் கடற்கரை மணலை போலவும் விண்மீன்களைப் போலவும் பெருகச் செய்தார். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை வைக்காதவர்கள் கடவுளுக்கும் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்ற மனநிலை இல்லாதவர்களாக வாழ்ந்தனர். அதற்கு உதாரணம் ஏழை லாசரைக் கண்டுகொள்ளாத பணக்காரன் (லூக்: 16:19-31), தன் செல்வத்தில் நம்பிக்கை வைத்த பணக்காரன் (லூக்: 12:16-21), தன் செல்வத்தை பகிர மறுத்த பணக்கார இளைஞன் (லூக்: 18:18-27) ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.


எனவே நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுள் மீது ஆழமான நம்பிக்கை வைக்கின்ற பொழுது கடவுளுக்கும் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்ற மனநிலை நம்மிலே நிச்சயமாக உருவாகும். எனவேதான் "இதைப்பற்றில்லாதோரின் காணிக்கைகளை உன்னத இறைவன் விரும்புவதில்லை ; ஏராளமான பலி செலுத்தியதற்காக  அவர் ஒருவருடைய பாவங்களை மன்னிப்பதில்லை" (சீஞா: 34:19) என சீராக்கின் ஞானநூலில் வாசிக்கிறோம். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நம்பிக்கை உள்ள மனிதர்களாக வாழ்ந்து கடவுளுக்காக எதையும் இழக்க ஏழைக்கைம்பெண்ணைப்போல தயாராக இருக்கும் பொழுது நிச்சயமாக கடவுள் நம் வாழ்வை அங்கீகரிப்பார். நம் அன்றாட வாழ்விலே ஏழைக் கைம்பெண்ணைப் போல எவ்வளவு துன்பப்பட்டாலும் புறக்கணிக்கப்பட்டாலும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டாலும், கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு அனைத்தையும் இழக்க தயாராக இருக்கும் பொழுது நிச்சயம் கடவுள் நம் வாழ்வை ஆசீர்வதிப்பார். நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வோம். கடவுளுக்கு கொடுக்க வேண்டியவற்றை கடவுளுக்கு கொடுப்போம். நம்மோடு வாழக்கூடிய மனிதர்களுக்கு கொடுக்க வேண்டியவற்றை மனிதர்களுக்கு கொடுப்போம். அப்படி வாழ்வது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியம் அல்ல; மாறாக, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம். எனவே இறை நம்பிக்கையோடு பிறருக்கும் கடவுளுக்கும் கொடுக்கின்ற பொழுது, நிச்சயமாக கடவுளின் அருளையும் ஆசியையும் நிறைவாகப் பெறமுடியும். கொடுப்பதில் இன்பம் காண கொடுக்கும் மனநிலை வேண்டி தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் எங்களுக்கு எவ்வளவோ  நன்மைகளை வழங்கியுள்ளீர். நாங்கள் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு கைமாறாக உமக்கும் பிறருக்கும் மனமாரக் கொடுக்கும் மனநிலையைத் தாரும். எவ்வளவு கொடுக்கிறோம் என்ற நிலையைத் தாண்டி எத்தகைய மனநிலையில் கொடுக்கிறோம் என்ற மனநிலையில் இருப்பதை நிறைவாய் கொடுக்க நல்ல மனதை தாரும். அதற்குத் தேவையான அருளையும் ஆற்றலையும் தர வேண்டுமாய் வேண்டுகிறோம். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...