Tuesday, December 13, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (15-12-2022)

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - வியாழன்



முதல் வாசகம்

கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோல் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 1-10

பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப் பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர். உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு; உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு; உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டிவிடு; உன் முளைகளை உறுதிப்படுத்து. வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்; உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக்கொள்வர்; பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.

அஞ்சாதே, நீ அவமானத்திற்கு உள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்; உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்; உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்க மாட்டாய். ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என அவர் அழைக்கப்படுகின்றார்.

ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவிபோலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.

பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றும் உள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.

எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்கமாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்;

1
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி

4
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி

10
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11a
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b
என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 4, 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவான் ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்யும் தூதர்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30

யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு, இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப் பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த ஒரு மனிதரையா? பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரச மாளிகைகளில் அல்லவா இருக்கின்றனர்! பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

‘இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என இவரைப் பற்றித்தான் மறைநூலில் எழுதப்பட்டுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானை விடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றனர். ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


திருவருகை காலம்-மூன்றாம் வாரம் வியாழன்

மு.வா: எசா: 54:1-10

ப.பா: திபா: 30:1, 3, 4-5, 10-12

ந.வா: லூக்: 7:24-30


 ஆயத்தம் செய்யுங்கள்


ஒருமுறை எனது ஊரில் வயல் பகுதிகளில் காற்று வாங்குவதற்காக நடந்து கொண்டிருந்தேன். ஒரு வயலை நெருங்கிய பொழுது அங்கு ஆட்டு மந்தைகள் கிடையில் போடப்பட்டிருப்பதைக் கண்டேன். வயலின் உரிமையாளர் அந்த வயலிலுள்ள தேவையற்ற களைகளையெல்லாம் வெட்டி குவித்துக் கொண்டிருந்தார். மேடு தாழ்வு பகுதிகளை சரி செய்து வந்தார். அப்பொழுது அவரிடம் நான் "விவசாயத்தை தொடங்குவதற்கு தான் நாட்கள் இருக்கின்றனவே, இப்பொழுதே ஏன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சற்று ஓய்வெடுங்கள் " என்று கூறினேன். அதற்கு அவர் "நான் எந்த அளவுக்கு இந்த மண்ணை ஆயத்தப்படுத்துகிறனோ, அந்த அளவுக்கு விளைச்சல் நிறைவாக கிடைக்கும் "என்று கூறினார்.


ஆயத்தம் என்பது நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். படிக்கின்ற மாணவர்கள் தேர்விற்காக தங்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.அப்பொழுது தான் தேர்வில் வெற்றி பெற முடியும். ஓட்டுநர் பணி செய்கின்ற ஓட்டுநர்கள் தங்களுடைய பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக வாகனத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் எந்த தடையுமின்றி பயணத்தை வெற்றியாய் முடிக்க முடியும். கடலுக்குள் மீன் பிடிக்க செல்பவர்கள் தங்களின் வலைகளை ஆயத்தப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் மீன்களைப் பிடிக்க அது உதவும் கருவியாக இருக்கும். மழைநீரை சேகரிக்க ஏரி, குளங்கள், கண்மாய்களை ஆயத்தப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும். இவ்வாறாக ஆயத்தம் என்ற வார்த்தைக்கு உதாரணங்களை நம்முடைய வாழ்வோடு ஒப்பிட்டு வகைப்படுத்த முடியும்.


திருவருகைக் காலம் ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகவும் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுவதற்காகவும் நம்மையே ஆயத்தப்படுத்த கொடுக்கப்பட்ட ஒப்பற்ற காலம். இந்த காலத்தில் நம்மையே முழுமையாக ஆயத்தப்படுத்த முயற்சி செய்வோம். இந்த உலகம் சார்ந்த காரியங்களுக்கே அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து ஆயத்தப்படுத்தக் கூடிய நாம், நம்மை மீட்க நம்மை நோக்கி வரும் ஆண்டவர் வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்த வேண்டாமா?


நாம் கடவுளின் வருகைக்காக நம்முடைய உள்ளத்தையும் வாழ்வையும் ஆன்மாவையும் ஆயத்தப்படுத்தும் பொழுது நாம் கடவுளால் வாழ்த்த பெறுவோம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் திருமுழுக்கு யோவானை ஆண்டவர் இயேசு பாராட்டியது. "மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை.ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே" என ஆண்டவர் இயேசு கூறியுள்ளார். எனவே திருமுழுக்கு யோவானைப் போல நம்மையும் பிறரையும் ஆண்டவருடைய வருகைக்காக தாழ்ச்சியான இறை நம்பிக்கையோடு ஆயத்தப்படுத்த முயற்சி செய்வோம். அப்பொழுது ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையும் நாம் கொண்டாடும் இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவும் பொருள் நிறைந்ததாகவும் ஆசிர்வாதமானதாகவும் அருள் நிறைந்ததாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நம்மையே ஆயத்தப்படுத்த முயற்சி செய்வோம்.


அன்றாட கிறிஸ்துவ வாழ்க்கையில் இறைவனின் அருளின் உச்சமாக இருக்கக்கூடிய திருப்பலியில் முழுமையாகப் பங்கெடுப்போம். இறைவனின் அருளைப் பெற அருள்சாதனமாக இருக்கக்கூடிய அருள் சாதனங்களையும் முழுமையான முறையிலே பெற்று இறைவனின் அருளைத் தொடர்ந்து பெற நாமும் பிறரும் முயற்சி செய்வோம். கத்தோலிக்க திரு அவையில் இருக்கக்கூடிய பக்தி முயற்சிகளை சிறப்பாக கடைப்பிடித்து இறைவனின் அருளைப் பெற பயணமாவோம். இப்படிப்பட்ட முன்னெடுப்புகளை நாம் செய்ய முன் வரும் பொழுது நிச்சயமாக கடவுளுடைய அருளும் ஆசிரும் இரக்கமும் நிறைவாக நமக்கு கிடைக்கும். இத்தகைய வழிகளையெல்லாம் பின்பற்றி ஆண்டவரின் வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்த முடியும். அதற்கு தடையாயுள்ள நம் பலவீனங்களையெல்லாம் தூக்கி எறிந்து இறைவனின் அருளுக்காய் தொடர்ந்து மன்றாடுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! உம் திருமகன் இயேசுவை எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ள நீரே எங்கள் வாழ்வை புது படைப்பாய் மாற்றியருளும். முழுமையாக எங்களையும் பிறரையும் ஆயத்தப்படுத்தி உம் வருகைக்காக திருமுழுக்கு யோவானைப் போல சான்று பகர அருளைத் தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...