Tuesday, December 13, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (16-12-2022)

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - வெள்ளி



முதல் வாசகம்

என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 56: 1-3, 6-8

ஆண்டவர் கூறுவது:

நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். இவ்வாறு செய்யும் மனிதர் பேறுபெற்றவர்; ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக்கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர். ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிற இனத்தவர், ‘தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி’ என்று சொல்லாதிருக்கட்டும்; அவ்வாறே அண்ணகனும், ‘நான் வெறும் பட்ட மரம்’ என்று கூறாதிருக்கட்டும்.

ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக் கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்.

சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை ஒருங்கே சேர்க்கும் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது: அவர்களுள் ஏற்கெனவே கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடு ஏனையோரையும் சேர்த்துக்கொள்வேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 3)

பல்லவி: மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!

1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

6
நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே எழுந்தருளி வாரும், எம்மைச் சந்தித்துச் சமாதானம் தாரும்; புனிதம் நிறை உள்ளத்தோடு உம் திருமுன் மகிழ்வோமாக. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-36

அக்காலத்தில்

இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: “யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.

யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.



 கடவுள் உலகனைத்தையும் அன்பு செய்கிறார் !


சில வருடங்களுக்கு முன்பு நமது கிறிஸ்தவ நிறுவனங்களில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளிலும் இந்தப் பாடலுக்கு நடனமாடினார்கள். அப்பாடலின் வரிகள் இவ்வாறாக அமையும். "சாமி பொதுவான சாமி. இயேசு சாமி பொதுவான சாமி "

இப்பாடலின் வரிகள் முதலில் கேட்பதற்கு ஏதோ கிராமிய நடையில் வேடிக்கையாக இருப்பது போல தோன்றும். ஆனால் இவ்வரிகள் எவ்வளவு பெரிய உண்மையை உலகிற்கு உணர்த்துகிறது தெரியுமா? தந்தையாம் கடவுளும் அவரின் ஒட்டுமொத்த சாயலாக உலகில் வந்துதித்த இயேசுவும் பாரபட்சமின்றி எல்லா மனிதரையும் அன்பு செய்பவர்கள் என்ற கருத்தை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.


இன்றைய முதல் வாசகமும் இதே கருத்தைதான் நமக்குச் சொல்கிறது. தன்னை நோக்கி வருபவர்கள், தன்னிடம் செபிப்பவர்கள், தூய மனதோடு கடவுளோடு தங்களை இணைத்துக்கொண்டு அவருக்கு பலிசெலுத்துபவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை மகிழச்செய்வதாகவும் ,அவர்களை தன் திருமலையில் கூட்டிச்சேர்ப்பதாகவும் கடவுள் இறைவாக்கினர் எசாயா மூலமாக வாக்களிக்கிறார்.

பிற இனத்தாரை பாவிகள் என்றும் கடவுளுக்கு உகந்தோர் அல்ல என்றும் எண்ணிக்கொண்டிவர்களுக்கு கடவுள் தான் அனைவருக்கும் பொதுவானவர் என்று "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ " என்ற வார்த்தைகளால் உறுதிப்படுத்தியுள்ளார்.


இன்றைய நற்செய்தியில் இயேசுவும் தான் தந்தையால் அனுப்பப்பட்டவர் என்பதற்கு தன்னுடைய செயல்களே சான்று என்கிறார். ஆம் தந்தையைப் போலவே இயேசுவும் அனைவருக்கும் பொதுவானவராகவே விளங்கினார். அனைவரையும் அரவணைத்தார். மனந்திரும்பி வந்த பாவிகளை ஏற்றுக்கொண்டார். நம்பிக்கை கொண்ட பிற இனத்தாரைப் பாராட்டினார்.பெண்களை தனக்கு சீடர்களாக வைத்துக்கொண்டார். விண்ணசிற்கு முன்னுதாரணமாய் சிறுவர்களைக் காட்டினார். "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் "என்று இனம், மதம், குலம், மொழி போன்ற எல்லைகளைத் தாண்டி தன்னன்பை பகிர அனைவருக்கும் பகிர சீடர்களுக்குக் கட்டையிட்டார். இவ்வாறு தந்தைதான் தன்னை அனுப்பினார் என்பதை இயேசு உறுதிசெய்தார்.


தந்தை கடவுளைப்போலவும் இயேசுவைப் போலவும் நாமும் அனைவருக்கும் பொதுவானவர்களாக பாரபட்சமில்லா அன்பை பொழிபவர்களாக மாற முயற்சிசெய்ய வேண்டும். இச்செயலே நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு சான்று பகரும். அனைவரையும் அன்பு செய்யும் கடவுளைப்போல நாமும் அனைவரோடும் அன்பைப் பகிர்வோம். ஏற்றுக்கொள்வோம். அவருக்கு சான்று பகர்வோம்.


 இறைவேண்டல்

அன்பே இறைவா! நீர் அனைவரையும் ஏற்றுக்கொண்டு பொதுவானவராய் இருப்பது போல நாங்களும் மாற உதவிபுரியும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...