Saturday, December 17, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (18-12-2022)

 

திருவருகைக்காலம் 4ஆம் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14

அந்நாள்களில்

ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார்.

அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 7c,10b)

பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.

1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

இரண்டாம் வாசகம்

தாவீதின் மரபினரான இயேசு கிறிஸ்து கடவுளின் மகன்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7

கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது:

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழிமரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக் கொண்டோம். பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 1: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ எனப் பெயரிடுவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தாவீதின் மகனான யோசேப்புக்கு மண ஒப்பந்தமான மரியாவிடமிருந்து இயேசு பிறப்பார்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்:

அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.

“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கடவுள் இவ்வுலகிற்கு தந்த அடையாளங்கள் நாமே! 


கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். திருவருகைக்காலத்தின் நான்காம் வாரத்தை தொடங்குகிறோம். இந்நாட்களில் கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகளை இறைவார்த்தையாக நாம் தியானிக்க உள்ளோம். இத்தனை நாட்களிலும் நாம் நம்மை தகுதியான விதத்தில் தயாரிக்கவில்லையென்றாலும் இந்நான்காம்  வாரத்திலாவது  கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறக்கும் வண்ணம் நம்மை தயாரிக்க முற்படுவோம். இந்த ஆர்வத்தோடு இன்றைய நாளின் இறைவார்த்தையை நாம் தியானிப்போம்.


இன்றைய முதல் வாசகத்தில் அரசன் ஆகாசிடம் கடவுளிடமிருந்து ஓர் அடையாளத்தைக் கேட்க வேண்டுமென்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். ஆகாசு அவ்வாறு கேட்க மறுத்தபோது கன்னிப்பெண் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவார். அதுவே கடவுள் அருளும் மீட்பின் அடையாளம் எனக் கூறப்பட்டது.


நற்செய்தி வாசகமும் ஆண்டவர் தாமே அளித்த இந்த மீட்பின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதை நாம் காண்கிறோம். கன்னியான மரியா இயேசுவை கருவாய் தாங்கி இவ்வுலகிற்கு கடவுள் அருளிய அடையாளத்தை காண்பித்தார். இவ்வாசகங்கள் நமது தனிப்பட்ட ஆன்மீக வாழ்வுக்குக் கூறும் கருத்து என்ன? நேற்றைய நாளில் நமது பெயர்களும் மீட்பு வரலாற்று பட்டியலில் உள்ளது என சிந்தித்தோமே. அதே போல 

நாம் ஒவ்வொருவருமே கடவுளால் கொடுக்கப்பட்ட அடையாளங்களே. 


அன்னை மரியா கன்னியான போதும் இறைவிருப்பத்தை ஏற்று மீட்பிற்காக கடவுள் கொடுத்த அடையாளமானார். கருவுற்ற தன் வருங்கால மனைவியை விலக்கிவிட எண்ணிய யோசேப்பு தூதரின் வார்த்தையை தன் கனவில் உணர்ந்து இறைவிருப்பத்தை ஏற்று கடவுள் தந்த அடையாளமாய் விளங்கினார் என்று சொன்னால் அது மிகப்பொருத்தமாக இருக்கும். இறைமகன் இயேசு "இம்மானுவேல் " அதாவது கடவுள் நம்மோடு என்பதை உறுதி செய்யும் வகையில் வாழ்ந்து "உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருக்கிறேன் " என மொழிந்து கடவுள் வாக்களித்த மீட்பின் அடையாளமானார் அன்றோ. 


இதைப்போன்றே நாமும் கடவுளால் உலகிற்கு வழங்கப்பட்ட அடையாளங்களே. திருவருகைக் காலத்தின் நான்காம் வாரத்தின் மையக்கருத்து "அன்பு". இந்த அன்பை நம் உள்ளத்தில் கொண்டு நம் சொற்களிலும் செயல்களிலும் வெளிப்படுத்தி இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றினால் நிச்சயமாக நாமும் மரியாவைப் போல, இயேசுவைப் போல, யோசேப்பை போல சிறந்த அடையாளங்களாய்த் திகழ முடியும்.


எனவே கடவுள் தரும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி கடவுளின் திருவுளத்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்ற முயற்சி செய்வோம். இயேசு தன்னுடைய அன்பை நம்மோடு  பகிர்கிறார். நாமும் அந்த அன்பை முழுமையாக பயன்படுத்தி எல்லா மக்களையும் இறைவன் பக்கம் வழிகாட்ட முன் வருவோம். நம்முடைய வாழ்க்கை நெறியின் வழியாக கிறிஸ்துவின் அடையாளங்களாக இருந்து சான்று பகர முன்வருவோம். அதற்கு தேவையான அருளை சிறப்பான விதத்தில் மன்றாடுவோம்.


 இறைவேண்டல்

அன்பான இறைவா!  நாங்கள் அனைவரும் உமது அடையாளங்களாக இருந்து உமது திட்டத்தை நிறைவேற்றக்கூடிய கருவிகளாக வாழ்ந்திட அருள் புரியும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...