Friday, January 13, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (14-01-2023)

 

பொதுக்காலம் முதல் வாரம் - சனி

முதல் வாசகம்

அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-16

சகோதரர் சகோதரிகளே,

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.

எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால், நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.

எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6: 63b)

பல்லவி: ஆண்டவரே உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

14
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17

இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர்.

இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மனஉறுதியோடு இருந்தால் மீட்பு நிச்சயம்! 

இன்று நாம் அனைவரும் திரு அவையோடு இணைந்து நம் இந்தியாவின் புனிதர், நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் தமிழ் மண்ணின் புனிதர் தேவசகாயம் அவர்களின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவர் கடந்த மே மாதம் 15 ஆம் தேதிதான் புனிதராக உயர்த்தப்பட்டார். புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட பின்பு நாம் இவருக்காக எடுக்கும் முதல் விழா இது. இவருடைய வாழ்க்கை கிறிஸ்தவர்களாகிய நமக்கெல்லாம் நம்பிக்கைக்கு உரமூட்டுவதாக அமைகிறது என்றால் அது மிகையாகாது. 


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்னும் ஊரில் இவர் பிறந்தார் .உயர்குடி இந்துக்கள் சமூகத்தில் பிறந்த அவர் அரச பதவியில் இருந்தார். அன்றைய காலத்தில் இப்பகுதி திருவாங்கூர் ஆட்சிக்கு கீழ் இருந்தது. கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து அங்கே இல்லை என்றாலும் உயர்குடி இந்துக்கள் கிறிஸ்தவர்களோடு பழகுவது தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் நீலகண்ட பிள்ளை அதாவதோ இப்போது நாம் அழைக்கும் தேவசகாயம் கிறிஸ்தவ மறையைத் தழுவினார். தேவசகாயம் என்பது லாசரஸ் என்பதன் தமிழர்த்தம்.


தேவசகாயத்தின் இச்செயல் அரச துரோகமாகக் கருதப்பட்டது. எச்சரிக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சித்தரவதை செய்யப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார். எதுவும் அவரது கிறிஸ்தவ நம்பிக்கையை அசைக்கவில்லை. இறுதியில் கிறிஸ்துவுக்காக மரண தண்டனையைத் தழுவி மறைசாட்சியானார் புனித தேவசகாயம். 

இவருடைய வாழ்க்கை நமக்கு தரும் பாடம் என்ன?


சமீபத்தில் வட இந்தியாவில் கோவில்கள் இடிக்கப்பட்ட செய்தியை நாம் கேள்விப்பட்டோம். ஏன் தென் இந்தியாவிலும் தற்பொழுது கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்கள் என்ற காரணத்திற்காக துன்புறுத்தும் செயல்கள் ஆரம்பமாகிவிட்டன. இத்தகைய சூழ்நிலை யை நாம் எதிர்கொண்டால் நமது நம்பிக்கை அசைக்கப்படுமா?  சிந்திக்க வேண்டும்.


இன்றைய நற்செய்தியில் இயேசு "என் பொருட்டு பிறர் உங்களை வெறுப்பர். மன உறுதியோடு இருப்பவரே மீட்கப்படுவர் "என்கிறார். தேவசகாயம் மன உறுதியோடு இருந்தார். இன்று புனிதரானார். நீங்களும் நானும் மனஉறுதியோடு இருந்து காக்கப்பட தயாராக இருக்கிறோமா?



 இறைவேண்டல் 

அன்பு இறைவா புனித தேவசகாயத்திடம் இருந்த மனஉறுதியை எங்களுக்குள்ளும் உருவாக்கி மீட்பு பெற அருள் புரிவீராக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...