Saturday, January 14, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (15-01-2023)

பொதுக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

உலகம் முழுதும் மீட்பு அடைய, உன்னை ஒளியாக ஏற்படுத்தினோம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 3. 5-6

ஆண்டவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்’ என்றார்.

யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்:

அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 40: 1,3ab. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a-8a)

பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.

1
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
3ab
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். - பல்லவி

6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7a
எனவே, ‘இதோ வருகின்றேன்.’ - பல்லவி

7b
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி

9
என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் இயேசுவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும்,

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 14a, 12b

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ கடவுளின் செம்மறி! இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34

இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


எனது மதிப்பை நான் அறிவேனா? 


ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்க மாவட்ட ஆட்சியர் ஒருவர் வந்திருந்தார். அவர் வரும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அக்கூட்டத்தில் உள்ள ஒருவர் மட்டும் ஏதோ ஒரு முக்கியமான விஷயமாக யாருடனோ தொலைப்பேசியி பேசிக்கொண்டிருந்ததால் மாவட்ட ஆட்சியர் வருவதை கவனிக்கவில்லை. அப்போது அவருடைய உதவியாளர் அம்மனிதரிடம் மாவட்ட ஆட்சியர் வருவதைக்கூட மதிக்காமல் பேசிக்கொண்டிருக்கிறீரே என அதட்டினார். அதைக் கவனித்த ஆட்சியர் உதவியாளரிடம் "அவர் என்ன வேலையில் இருந்தாரோ? எதற்காக அவரை அதட்டுகிறீர்?  எனச் சொல்லிவிட்டு புன்னகையுடன் கடந்து சென்றார். அங்கு அம்மனதரின் மனதில் பெருமதிப்பு பெற்றார்.


அன்புக்குரியவர்களே அனைவரும் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். பிறர் நம்மை உயர்வாக மதிக்கவில்லை என்றால் மனம் வருந்துகிறோம். ஆனால் நம்முடைய மதிப்பை என்றாவது நாம் உணர்ந்துள்ளோமா? எவரொருவர் தன் மதிப்பை அறிந்துள்ளாரோ அவர் பிறர் தரும் மதிப்புக்காக ஏங்குவதில்லை. அவரே தன் வாழ்நாளின் குறிக்கோளை அறிந்தவராகவும் இருக்கிறார்.


இன்றைய முதல் வாசகத்தில் "ஆண்டவருடைய பார்வையில் நான் விலையேறப்பெற்றவன்" என்ற வார்த்தையை நாம் தியானிக்கிறோம். எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள் இவை. எத்துணை மகிழ்ச்சி தரும் வார்த்தைகள் இவை. நம்மையும் நாம் காணும் அனைத்தையும் படைத்த கடவுள் முன் நாம் விலையேறப்பெற்றவர்கள் என்ற ஒரு ஆழ்ந்த உணர்வு நம்மில் இருந்தாலே போதும். நாம் ஒருபோதும் நம்மை குறைவாக எண்ண மாட்டோம். நாம் வாழ்க்கையைக் குறித்து கலங்க மாட்டோம். பிறர் தரும் மதிப்பிற்காக ஏங்கமாட்டோம்.


அதே வேளையில் நாம் நமது மதிப்பை மாண்பை உணர்ந்தவர்களாக இருந்தால் நாம் கேட்கமலேயே பிறர் நம் நன்மதிப்பிற்கு சான்று பகர்வர்.அதைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம். இயேசுவை மிகவும் மதிப்பிற்குரியவராக உயர்த்தி பேசி சான்று பகர்கிறார் திருமுழுக்கு யோவான். ஏனெனில் இயேசு தன்னுடைய மாண்பை தனக்கு கடவுளால் அளிக்கப்பட்ட மதிப்பை உள்ளூர உணர்ந்தவராக இருந்தார்.


அன்புக்குரியவர்களே இன்று கடவுள் நமக்கு தரும் அழைப்பு யாதெனில், அவர்முன் நாம் எல்லாருமே விலையேறப்பெற்றவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து அந்த மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதே. எனவே இன்று நம்மைப் பற்றி நாமே கொண்டுள்ள தேவையற்ற மதிப்பு குறைவான எதிர்மறை எண்ணங்களைக் களைந்து இறைமாண்போடு வாழ முயலுவோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா! எங்களை மாண்போடும் மதிப்போடும் படைத்து நடத்துபவரே உமது மு ன் நாங்கள் விலையேறப்பெற்றவர்கள் என்பதை உணர்ந்து வாழ அருள்புரியும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...