Saturday, January 21, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (22-01-2023)

 

பொதுக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு (இறைவாக்கு ஞாயிறு)



முதல் வாசகம்

பிற இனத்தார் வாழும் கலிலேயாவில் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 1-4

முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச் செய்வார்.

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.

மிதியான் நாட்டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-13, 17

சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்.

என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’ என்றோ ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ ‘நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ, ‘நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ சொல்லிக்கொள்கிறீர்களாம்.

கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்? திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தல் ஆகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார்; எசாயா இறைவாக்கு இவ்வாறு நிறைவேறியது.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-23

அக்காலத்தில்

யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:

‘‘செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.”

அதுமுதல் இயேசு, ‘‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ‘‘என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார்; எசாயா இறைவாக்கு இவ்வாறு நிறைவேறியது.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-17

அக்காலத்தில்

யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:

‘‘செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.”

அதுமுதல் இயேசு, ‘‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கடவுளே நம் வாழ்வின் ஒளி! 


இன்று என்னுடைய கைபேசியில் வந்த இந்த குறுந்தகவல் என் மனதைத் தொட்டது. "ஒரு ரூபாய் எழுதுகோல் பலருக்கு அறிவொளி ஊட்டுகிறது. ஒரு லட்சம் கைபேசி பலருடைய கண்பார்வையை கெடுக்கிறது " என்பதே அப்பதிவு. கைப்பேசியால் பலர் கண்ணொளியை மட்டுமல்ல அறிவொளியையும் இழக்கின்றனர் என்ற சிந்தனையைத் தருவதாக இச்செய்தி அமைந்துள்ளது. கண்ணொளியும் அறிவொளியும் ஒரு மனிதனுக்கு மிக அவசியம். இந்த செய்திக்கும் நற்செய்தி பகுதிக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக நான் உணர்கிறேன். கண் பார்வை என்பது நம் வாழ்வுக்கு முக்கியம். விவிலியத்தில் கண்தான் உடலுக்கு விளக்கு எனக் கூறப்பட்டுள்ளது. உடலுக்கு ஒளி தேவை. உலகிற்கு ஒளி தேவை. அவ்வாறே நம் ஆன்ம வாழ்வுக்கு ஒளி என்பது மிக மிக அவசியம். அந்த ஒளி கடவுளைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது.


இன்றைய முதல் வாசகத்தில் காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டனர் என மொழியப்பட்டுள்ளது. இதே வார்த்தைகளை மத்தேயு நற்செய்தியாளரும் நற்செய்தியில் உறுதிப்படுத்துகிறார். காரிருள் என்ற வார்த்தை மனிதனின் பாவ வாழ்வைக் குறிக்கிறது. போரொளி என்ற வார்த்தை கடவுளின் இரக்கத்தைக் குறிக்கிறது. ஆம் காரிருளில் வாழ்ந்த மக்கள் கடவுளின் இரக்கம் என்ற பேரொளியைக் கண்டு மீட்படைகின்றனர் என்ற ஆழமான சிந்தனையை இவ்வாசகங்கள் நமக்குத் தருகின்றன. 


என்னதான் நம்மைச் சூழ்ந்து ஒளி இருந்தாலும் நம் கண்கள் மூடி இருந்தால் நாம் இருளில் தான் இருப்போம். அதேபோல கடவுள் நமக்கு ஒளியாய் இருந்தாலும் நாம் மனம் திறந்தால்தான் அவருடைய ஒளி நம் உள்ளங்களை நிரப்பும். அதற்கான ஒரு அரைகூவலாகவும் இந்நற்செய்தி அமைகிறது.  ‘‘மனம் மாறுங்கள், ஏனெனில்  விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று இயேசு பறைசாற்றினார் என நாம் வாசிக்கிறோம். இவ்வார்த்தைகள் கடவுள் என்னும்  ஆன்ம ஒளி நம் உள்ளங்களை நிரப்ப  மனம்மாற்றம் என்னும் திறவுகோல் தேவைப் படுவதை உணர்த்துகிறதல்லவா.


அன்புக்குரியவர்களே!  இன்றைய பதிலுரைப்பாடலிலே ஆண்டவரே என் ஒளி ,அவரே என் மீட்பு என நாம் தியானிக்கிறோம். அவரை  நம் ஒளியாக மீட்பாக நாம் அனுபவிக்க வேண்டுமெனில் நம் மனதை அவரிடம் திருப்பி அவருடைய ஒளி நம்முள்ளங்களில் பாய்ந்தோட அனுமதிக்க வேண்டும். அப்போது பாவம், பலவீனம், அடிமைத்தனம், உலக இயல்பு எனும் காரிருளில் வாழ்கின்ற நம் இதயங்களும் நிச்சயம் பேரொளியைக் காணும் என்பதில் ஐயமில்லை. சிந்திப்போம். மனம்மாறுவோம்.


 இறைவேண்டல் 

பேரொளியாம் இறைவா எம் உள்ளத்தின் காரிருளை உம் ஒளியால் அகற்றுவீராக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...