Thursday, January 26, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-01-2023)

 

பொதுக்காலம் 3ஆம் வாரம் - சனி



முதல் வாசகம்

கடவுளைத் தன் சிற்பியும், கட்டுபவருமாகக் கொண்ட நகரை ஆபிரகாம் எதிர்நோக்கியிருந்தார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-19

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, “அவர்களுடைய கடவுள்” என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.

ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

லூக் 1: 69-70. 71-73. 74-75 (பல்லவி: 68 காண்க)

பல்லவி: தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம்.

69
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
70
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். - பல்லவி

71
நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
72
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
73
தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். - பல்லவி

74
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
75
விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ‘‘அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.

அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், ‘‘போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ‘‘இரையாதே, அமைதியாயிரு” என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.

பின் அவர் அவர்களை நோக்கி, ‘‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ‘‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 ஆபிரகாமை போன்ற நம்பிக்கை என்னிடம் உள்ளதா?


ஒருமுறை நான் தியானம் செய்து கொண்டிருந்த போது வழிநடத்திய தந்தை திருப்பலி மறையுரையின் போது ஒரு கேள்வியைக் கேட்டார். " கடவுள் நம்பிக்கை என்பது என்ன?" என்பதே அக்கேள்வி. அப்போது நான் கூறிய பதில் இன்றும் என் நம்பிக்கைக்கு உரமாய் அமைவதாக நான் எண்ணுகிறேன்.நான் கூறிய பதில் இதுதான். "நான் எனக்கு எது நல்லது அன்பதை அறிவேன்.ஆனால் கடவுள் எது எனக்கு சிறந்தது என்பதை அறிவார் என்ற உறுதியான எண்ணமே நம்பிக்கை. " இன்றும் இந்நிகழ்வை நான் திருப்பிப் பார்க்கும் போது என் நம்பிக்கைக்கு பலம் சேர்ப்பதாக நான் உணர்கிறேன். 


இன்றைய இருவாசகங்களுமே நம்பிக்கையை மையப்படுத்தியதாக இருக்கிறது. முதல் வாசகத்தில் ஆபிரகாமின் நம்பிக்கை மிக அற்புதமாக எடுத்தியம்பப் படுகிறது. ஆபிரகாம் கடவுள் தனக்கு சிறந்ததைத் தருவார் என்று உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையில்தான் முன்பின் தெரியாத இடத்திற்கு சென்றார். இயற்கைக்கு அப்பாற்பட்ட முதிர்வயதில் பெறும் பிள்ளை பேற்றை எதிர்நோக்கி காத்திருந்தார். தன் சந்ததியைப் பெருக்கப்போகும் ஒரே மகனைக் கூட கடவுள் கேட்டார் என்பதற்காக பலியிடத் துணிந்தார். ஆபிரகாமின் நிலையில் நாம் இருந்தால் நமது செயல்பாடுகள் என்னவாக இருந்திருக்கும்? சிந்திக்க வேண்டியது நம் கடமை.


நற்செய்தி வாசகத்தில் நடுக்கடலில் தத்தளித்த சீடர்கள் தங்களோடு இயேசு இருந்த போதும் நம்பிக்கை குன்றி இருந்தார்கள். இயேசு செய்த வல்ல செயல்களைக் கண்கூடாகக் கண்ட போதும் அவர்களால் நம்ப இயலவில்லை என்றதாலேயே இயேசு அவர்களைக் கடிந்து கொள்கிறார். 


நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்ற ஐயமற்றநிலை என்கிறது முதல் வாசகம். இங்கே ஐயம் என்பது பயமல்ல. சந்தேகம். அதாவது கடவுள் எனக்கு சிறந்ததை மட்டுமே தருவார் என்ற சந்தேகமற்ற மன உறுதி. ஆபிரகாம் இந்நம்பிக்கையைப் பெற்றிருந்தார். அவரை பின்பற்றி நாமும் நம்பிக்கையில் வளர முயற்சிப்போம்.


 இறைவேண்டல்

அன்பு இறைவா ஆபிரகாமைப் போன்ற நம்பிக்கையில் நாங்களும் வளர அருள்புரிவீராக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...