Tuesday, July 27, 2021

St.James Feast - புனித யாக்கோபு – திருத்தூதர்

 பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

புனித யாக்கோபு – திருத்தூதர்


வருகைப் பல்லவி     மத் 4:18, 21 

இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடக்கும்போது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர் அவர்களை அழைத்தார்.


அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.

ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.

ஆமென்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருத்தூதர்களுள் முதல் மறைச்சாட்சியாகச் செந்நீர் சிந்தும் பேற்றினைப் புனித யாக்கோபுக்கு அளித்தீNர் உமது திரு அவை அவருடைய நம்பிக்கை அறிக்கையினால் வலிமை பெறவும் அவருடைய பாதுகாவலால் தொடர்ந்து உதவி பெறவும் அருள்புரிவீராக உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்



முதல் வாசகம்


இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15


சகோதரர் சகோதரிகளே, கடவுளின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது. நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்துபோவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடு இருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது. “நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். இவை அனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல் திபா 126: 1- 2யடி. 2உன-3. 4-5. 6 

பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.


1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.

2யடி அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது.℟ 

2உன “ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.   ℟ 

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். ℟ 

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்;

அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள்.  ℟ 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்.

† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 20-28


அக்காலத்தில், செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். “உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார். அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள், “எங்களால் இயலும்” என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல் மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங்கொண்டனர். இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்

5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்


அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

ஆண்டவரே, உம் திருமகனின் மீட்பு அளிக்கும் பாடுகளாகிய திருமுழுக்கினால் எம்மைக் கழுவியருளும்; உமது திருவுளப்படி திருத்தூதர்களுள் முதன்முதலாகக் கிறிஸ்துவின் துன்பக் கிண்ணத்தில் பருகிய புனித யாக்கோபின் விழாவில் உமக்கு உகந்த பலியை நாங்கள் ஒப்புக்கொடுப்போமாக எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே


ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


என்றுமுள்ள ஆயரே, உமது மந்தையை நீர் கைவிட்டுவிடாமல் உம் புனித திருத்தூதர் வழியாக என்றும் கண்காணித்து வருகின்றீர்; அதனால் அதனை ஆள்வதற்கு உம் திருமகனின் பதிலாளிகளாகவும் மந்தையை வழிநடத்தும் முதன்மை ஆயர்களாகவும் நீர் அவர்களை நியமித்தீர்.


ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்

அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும் வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:


எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!


அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.


அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.


அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே


அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்


அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.


அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி      திபா 102:2 

ஆண்டவரின் கிண்ணத்தில் அவர்கள் குடித்தார்கள், நண்பர்கள் ஆனார்கள்


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதரான புனித யாக்கோபின் விழாவிலே உமது திருவிருந்தில் பேரின்பத்துடன் நாங்கள் பங்குபெற்றுள்ளோம்; அவருடைய பரிந்துரைகளால் நாங்கள் உமது உதவியைப் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்


நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக


அ.ப: திருத்தூதர்களின் அடித்தளத்தில் உங்களை உறுதியாய் நிற்கச் செய்த இறைவன்,

புனித யாக்கோபு எனும் புனிதத் திருத்தூதர்களின் மாட்சி உள்ள பரிந்துரையின் பயனாக உங்களுக்கு ஆசி அளிப்பாராக.

பதில்: ஆமென்.


அ.ப: திருத்தூதர்களின் போதனையாலும் எடுத்துக்காட்டாலும் உறுதிபெற உங்களுக்கு அருளிய இறைவன், அவர்களுடைய பாதுகாவலால் அனைவர் முன்னிலையிலும் நீங்கள் உண்மைக்குச் சாட்சிகளாய்த் திகழச் செய்வாராக.

பதில்: ஆமென்.


அ.ப: திருத்தூதர்களுடைய போதனையால் நம்பிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட நீங்கள்

அவர்களுடைய பரிந்துரையால் நிலையான விண்ணக வாழ்வின் உரிமைப் பேற்றினைப் பெறத் தகுதி பெறுவீர்களாக.

பதில்: ஆமென்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


Monday, July 26, 2021

17th Ordinary Ween Monday - பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள்

 பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள் 



Download pdf 

முதல் வாசகம்

இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 15-24, 30-34


அந்நாள்களில், மோசே திரும்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். முன், பின் இரு புறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும் அவர் கையில் இருந்தன. அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே. அந்நேரத்தில் மக்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்ட யோசுவா மோசேயை நோக்கி, “இது பாளையத்திலிருந்து எழும் போர் முழக்கம்” என்றார். அதற்கு மோசே, “இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. களியாட்டம்தான் எனக்குக் கேட்கிறது” என்றார். பாளையத்தை அவர் நெருங்கி வந்தபோது கன்றுக்குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம் மூண்டது. அவர் தம் கையிலிருந்து பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார். அவர்கள் செய்து வைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக் குடிக்கச் செய்தார். பின்னர் மோசே ஆரோனை நோக்கி, “இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள் மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்துவிட்டீரே!” என்று கேட்டார். அதற்கு ஆரோன், “என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே! அவர்கள் என்னை நோக்கி, ‘எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்து கொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை’ என்றனர். நானும் அவர்களிடம் ‘பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்’ என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில் போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது” என்றார். மறுநாள் மோசே மக்களை நோக்கி, “நீங்கள் பெரும் பாவம் செய்து விட்டீர்கள்; இப்போது நான் மலைமேல் ஏறி ஆண்டவரிடம் செல்லப் போகிறேன். அங்கே ஒருவேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்ய இயலும்” என்றார். அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, ‘ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள். இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்” என்றார். ஆண்டவரோ மோசேயிடம், “எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கி விடுவேன். நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 


பதிலுரைப் பாடல்     திபா 106: 19-20. 21-22. 23 

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! அல்லது: அல்லேலூயா.


19 இஸ்ரயேலர் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;

20 தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்;  ℟

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;

22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர்.      ℟

23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார்.℟


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35


அக்காலத்தில், இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்." அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


Friday, July 23, 2021

17th Ordinary Week Sunday - பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு



Download pdf 

திருப்பலி முன்னுரை: 

இறையேசுவில் பிரியமானவர்களே,

இறை இயேசுவில் அன்பிற்கினியவர்களே! இன்று ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும்  வரவேற்கிறேன். இன்றைய இறைவழிபாட்டின் வாசங்கள் அனைத்துமே அன்பின் உச்சத்தை எடுத்துரைக்கின்றது. அதாவது, அன்பின் உச்சமானது பகிர்தலில் அடங்கியுள்ளது.  இப்பகிர்வானது உளமாறவும், முழுநிறைவான தாகவும் அமைய வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வழியாக இயேசு நமக்கு கற்பிக்கிறார். "பகிர்வானது  நமது உள்ளத்திலிருந்து நமக்கு அடுத்திருப்பவரின் வாழ்வின் முழு நிறைவை நோக்கியதாக அமைய வேண்டும்". மேலும், இத்தகைய பகிர்வினை நாம் நமது குடும்பத்திலும்,

நமக்கு அடுத்திருப்பவரிடத்திலும், நமது  சமூகத்திலும் உளமார வும் முழுமையான நிறைவை நோக்கியும் நாம் செய்கிறோமா? என்று நம்மையே நாம் சற்று அலசிப் பார்ப்போம்.  மேலும், பகிர்தலில் தான் வாழ்வு அடங்கியுள்ளது என்பதனை உணர்ந்தவர்களாய்,அதற்கான வரம் வேண்டி இக்கல்வாரி பலியில் தொடர்ந்து இறைவனிடம் மன்றாடுவோம்.


வருகைப் பல்லவி   திபா 67:6-7,36 

கடவுள் தமது தூயகத்தில் உறைகின்றார்: தமது இல்லத்தில் மக்கள் ஒன்று பட்டு வாழச் செய் கின்ற கடவுளே அவர்களுக்கு வலிமையையும் மனத்திடத்தையும் அளிப்பார்.


அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

ஆண்டவரே, ஈசோப் புல்லினால்

என்மேல் தெளிப்பீர்

நானும் தூய்மையாவேன்.

நீரே என்னைக் கழுவ

நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன்.


இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப

என்மேல் இரக்கம் கொள்வீர்.

தந்தையும் மகனும் தூய ஆவியாரும்

மாட்சியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.

தொடக்கத்தில் இருந்தது போல

இன்றும் என்றும் என்றென்றும் – ஆமென்.

(அல்லது)

பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.

ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.

ஆமென்.


திருக்குழும மன்றாட்டு

உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான இறைவா, உம்மால் அன்றி ஆற்றல் வாய்ந்ததும் புனிதமானதும் எதுவும் இல்லை; எங்கள் மீது உமது இரக்கத்தை மேன்மேலும் பொழிவதால் உம்மை எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு நிலையானவற்றை நாங்கள் இப்போதே பற்றிக்கொள்ள நிலையற்ற இன்றைய நன்மைகளைப் பயன்படுத்தச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


முதல் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய முதல் வாசகம் அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது ஆண்டவர் பகிர்தலை பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் உணவு உண்டனர் என்பதை கூறும் இவ்வாசகத்திற்கு நம்பிக்கையோடு செவிமடுப்போம்


முதல் வாசகம்

இம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4:42-44


அந்நாள்களில், பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, “மக்களுக்கு உண்ணக் கொடு” என்றார். அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் ‘உண்ட பின்னும் மீதி இருக்கும்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்  திபா 145: 10-11. 15-16. 17-18 

பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.


10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். ℟ 

15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன் தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.

16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். ℟ 

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.

18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.      ℟ 

  

இரண்டாம் வாசக முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே

இன்றைய இரண்டாம் வாசகம் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது நாம் நமது அழைப்புக்கு ஏற்ப வாழ்வு வாழவேண்டும் என்பதை தூய பவுல் எடுத்துரைக்கிறார். ஒரே எதிர்நோக்கோடு வாழ அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்


இரண்டாம் வாசகம்


ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; ஆண்டவரும் ஒருவNர் திருமுழுக்கும் ஒன்றே.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6


சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

அனைவரும் வயிறார உண்டனர்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15


அக்காலத்தில், இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறு மொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார். இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


மறையுரை:

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடன் உழைப்பார்களே! 

இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து ஆண்டின் பொதுக்காலம் 17-ம் ஞாயிறை சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம.; இன்றைய இறை சிந்தனையாக நாம் எவ்வாறு இறைபணியில் பகிர்வில் இயேசுவோடு உடன் உழைப்பார்களாக மாற முடியும் என்று வாசகங்கள் அழைப்பு விடுக்கிறது. 

ஒருமுறை ஒரு சிறுவன் ஒரு சிறிய உண்டியல் பெட்டியை தூக்கிக் கொண்டு வீடு வீடாய் சென்று எங்கள் ஆலயத்தை கட்டுவதற்கு ஏதாவது நன்கொடை கொடுங்கள் என்று கேட்டான.; ஒரு வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த பெண்மணி அந்த சிறுவனின் முயற்சியை கண்டு வியந்து போனாள.; ‘தம்பி இந்த கட்டிட பணிக்கு பொறுப்பாளரா?’ என்று அந்தப் பெண்மணி வினவினாள். அந்த சிறுவனோ ‘நான் இல்லை கடவுள் தான் இதற்கு பொறுப்பு’ என்று பதில் மொழி கூறினான். ‘அப்படியானால் நீ யார’; என்று கேட்டாள் அந்தப் பெண்மணி. அந்த சிறுவனோ, ‘நான் கடவுளின் வேலைக்கு உடன் உழைப்பாளர’.; என்று பதில் கூறினான் 

ஆம் அன்பிற்குரியவர்களே! இந்த நிகழ்வில் வரும் சிறுவனை போல் நாமும் இறைபணியில் உடன் உழைப்பார்களாக வாழ முற்பட வேண்டும்


இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது. அப்பம் பகிர்ந்து உண்ணும் நிகழ்ச்சி பற்றி எல்லா நற்செய்தியாளர்கள் பேசுகின்றனர். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில், அப்பம் பகிர்தலும,; எலிசா வாழ்வில் இடம்பெறும் அப்பம் பகிர்தலுக்கும் இடையே ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் பகிர்தலில் இறைவனின் உடன் உழைப்பாழர் திகழ்வதை நாம் காண்கிறோம். பாலைநிலத்தில் மன்னாவை பொழிந்த இறைவனுக்கு இந்த அப்பம் பலுகுதல் மிக எளிதான ஒன்று. தன்னுடைய அற்புத வல்லமை கரத்தினால் மக்களுக்கு உணவு கொடுத்திருக்க முடியும.; ஆனால் இறைவன் தன் பகிர்தலை எலிசா இறைவாக்கினர் வழியாகவும், பாகால் சாலிசாவைச் சார்ந்த மனிதர் வழியாகவும் நிகழ்வதை பார்க்கிறோம்.

கண்டிப்பாக அந்த மனிதர் இந்த வல்ல செயல்கள் நடைபெறும் என்று நம்பி இருக்க மாட்டார.; ஆனால் ஆண்டவர் குறையுள்ளதையும் பயன்படுத்தி நிறைவாய் பகிர்ந்து கொடுக்கிறார்.  மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் மக்கள் அனைவரும் உண்ட பிறகு மீதியாய் இருந்தது என்று 2அரசர்கள் 4: 44 வாசிக்கிறோம்

இன்றைய நற்செய்தி வாசகமானது (யோவான் 6:1 – 15)இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிப்பதை பார்க்கிறோம.; கடவுள் மனிதருக்கு உணவளித்து வாழவைக்கிறார். அவர் தரும் மூன்று வகையான உணவுகள் முறையே, 

1. உடல் உணவு (யோவான்6: 1-15)

2. இறைவார்த்தை உணவு (யோவான்6:35-50)

3. நற்கருணை உணவு (யோவான்6:51-58) 

முதல் பகுதியான அப்பம் பகிர்தல் நிகழ்வு பற்றி யோவான் எழுதிய போது, அன்றைய நற்கருணை வழிபாடு சொற்களை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டும.; இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வு பற்றி யோவான் வெளிப்படையாகப் பேசவில்லை. எனினும் இங்கு அதன் பிரதிபலிப்பை தெளிவாக காணலாம்.

 யோவான் நற்செய்தியாளர் இரண்டு முக்கியமான காரியங்களை இந்த பகிர்தலில் குறிப்பிடுகிறார் 

1. இயேசுவின் பரிவிரக்கம் 

2. சிறுவனின் பகிரும்; விருப்பம்


இயேசுவின் பரிவிரக்கம் 

ஒரு பழமொழி இவ்வாறு சொல்கிறது ‘இரக்கத்தின் ஆன்மா உலகை தன்னுடைய அன்பு என்னும் குறியீட்டால் அறிகிறது’. இயேசு தன் மக்களை அன்பின் லென்ஸினால் உற்று நோக்குகிறார்ஈ பரிவு கொள்கிறார். மாற்கு 5:21-43 இயேசு யாயீடைய மகளை உயிர்ப்பித்த பிறகு, அவருடைய பெற்றோரிடம் சிறுமிக்கு உணவு கொடுக்க சொல்கிறார். இயேசுவுக்கு தெரிந்திருக்கும் அந்த மகள் பசியாய் இருக்கிறாள் என்று. ஆயரில்லா ஆடுகளை பார்த்த இயேசு, நல்ல ஆயனாய் இருந்து உணவு கொடுக்க விரும்பினார.; 

அந்த மக்கள் கூட்டம் பசியாய் திரும்பி செல்வதை இயேசு விரும்பவில்லை. இயேசுவின் பரிவுமிக்க முகத்திற்கு இன்னும் மெருகூட்டும் விதமாய் அந்த சிறுவன் முன் வருகிறான.; சிறுவனின் விருப்பம் 

இயேசு நினைத்திருந்தால,; எதுவுமே இல்லாமல் ஒரே வார்த்தையால் உலகத்தைப் படைத்தது போல் உணவை கொடுத்திருக்க முடியும். ஆனால் இறை திட்டமானது பிறரையும் பங்கெடுக்க வைப்பது. உடன் உழைப்பாளாராய் வாழ அழைப்பது. இயேசுவைப் பிலிப்பிடம,; ‘நீங்களே உணவு கொடுங்கள’; என்றார். ஆனால் பிலிப்பு தன்னுடைய அறிவு கணக்கை மட்டும் நம்பி எப்படி இவ்வளவு பேருக்கு உணவு கொடுக்க முடியும் என்றார். ஏனென்றால் அவரிடம் தேவையான உணவு வாங்க போதுமான பணமில்லை. 

அடுத்ததாக அந்திரேயா, இயேசுவிடம் இங்கே ஒரு சிறுவன் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்திருக்கிறார் என்றார். ஆனால் இயேசு இதை பலுகிப்பெருகச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையினால் சொல்லவில்லை. அறிவுபூர்வமான கணக்குகள், திறமைகள் இயேசுவின் அற்புதத்திற்கு முன்பாக தவிடுபொடியானது. இறுதியாக அந்த சிறுவன் முன் வந்து தன்னிடம் இருப்பதை இயேசுவுக்கு கொடுக்கிறான். ஒருவேளை இயேசுவின் இந்த பகிர்வில் நானும் ஒரு கருவியாய், உடன் உழைப்பாளராய் இருக்க மாட்டேனா என்று அவர் நினைத்திருக்கலாம.; 

இயேசு சிறுவனின் குறைவான அப்பத்தையும், மீன்களையும் நிறைவுள்ளதாய் மாற்றி அனைவரையும் தன்னுடைய பந்தியில் அமரச் செய்கிறார். 

1 கொரிந்தியர் 3: 9 புனித பவுலடியார் சொல்கிறார், “நாம் அனைவரும் கடவுளின் உடன் உழைப்பாளர்கள்” 

கடவுள் நம்மை இதற்காகவே படைத்து தேர்ந்தெடுத்து உயர்த்துகிறார். சுhதாரணமாக இருக்கக்கூடிய நம் ஒவ்வொருவரையும் அவருடைய பகிர்வின் பணியிலே ஈடுபட அழைக்கிறார். 

கேரளாவில் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட போது நிறைய பேர் உணவு பொட்டலங்கள் உடை மற்றும் பொருட்கள் கொடுத்து உதவி செய்தார்கள். ஒரு சிறுவன் தான் படிக்கின்ற சமயத்திலே தனக்குத் தின்பத்திற்காக தரும் காசை சேர்த்து ஒரு உண்டியல் வைத்திருந்தான். இந்த நிகழ்வை கேட்டவுடன் நானும் ஏதாவது என் பங்கிற்கு கொடுப்பேன் என்று சொல்லி அதை அப்படியே கேரள மாநில முதல்வரிடம் ஒப்படைத்தான். 

பிரியமானவர்களே! இன்று நம்மிடம் எது இருந்தாலும் சரி பணமோ, பொருளோ, திறமையோ, படிப்போ, எல்லாவற்றையும் பிறரோடு பகிர்ந்து இயேசுவின் பணியில் உடன் உழைப்பாளர்களாக மாறுவோம.; சின்னஞ்சிறிய என் சகோதர சகோதரிகளுக்கு எல்லாம் செய்ததை எனக்கே செய்தீர்கள் என்று விவிலியம் சொல்கிறது. நாமும் இறைவனின் பங்காளர்களாக, உறவினர்கயாக, உடன் உழைப்பாளர்களாக வாழும் வரத்தை வேண்டி அதற்காக முயற்சி எடுப்போம் 

இறையாசீர் என்றும் உங்களோடு இருப்பதாக!


நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்


5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உலகெல்லாம் சென்று படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்று கூறி நற்செய்திப் பணி செய்ய நீர் தேர்ந்தெடுத்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும் உமது வல்லமையோடு திருச்சபை செழித்து வளர உழைக்கும் அருள் தர வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


2. நற்செயல்களின் மூலம் மக்களை தம்மோடு அணைத்தவரே எம் இறைவா! இந்நாட்டை ஆளும் தலைவர்கள் ஏதேச்சாரப் போக்கு மற்றும் அதிகார போக்கைக் கைவிட்டு தனக்குரிய கடமைகளை தவறாமல் செய்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


3. இறைவாக்கு உரைக்க அழைப்பவரே எம் இறைவா மறைப்போதக நாடுகளில் நற்செய்திப் பணி செய்து வரும் எம் சகோதர சகோதரிகளை பாதுகாத்து வழிநடத்தவும் இளைஞர் இளம்பெண்கள் அதிகமாக இறை பணியில் ஆர்வம் கொண்டு தேவ அழைத்தலை உணர்ந்து கொள்ளும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


4. இரக்கத்தின் இறைவா எம் பகுதி வாழ் மக்களை ஆசீர்வதியும் மக்களின் வாழ்வு ஏற்றம் பெறவும் குடும்பத் தேவைகள் இறைவனால் சந்திக்கப்படவும் பொருளாதாரம் மேம்படவும் நாங்கள் சந்திக்கும் மனிதர்கள் வழியாக உமது திருவுளம் அறிந்து செயல்படவும் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் அன்பு செய்யவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.


அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

ஆண்டவரே, நீர்தாமே வாரி வழங்கிய கொடைகளிலிருந்து நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் உமது அருளின் ஆற்றலால் செயல்படும் இப்புனிதமிக்க மறைநிகழ்வுகள் இவ்வுலகில் எங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தி நிலையான பேரின்பத்துக்கு இட்டுச் செல்வனவாக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே


ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர். அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர். அவர் தூய ஆவியால் உடலெடுத்து, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி, புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத் தம் கைகளை விரித்துப் பாடுபட்டார். இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து,

நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து

ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!


அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.


அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.


அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே


அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்


அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.


அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி      திபா 102:2 

என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!


அல்லது


மத் 5:7-8 இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்; தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்;

ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய பாடுகளின் நிலையான நினைவாகிய இத்திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு சொல்லற்கரிய அன்பினால் அவரே எங்களுக்கு அளித்துள்ள இக்கொடை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்வீராக எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்


நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


இந்த வார புனிதர் ஜூலை 29

புனித மார்த்தா 

பிறப்பு : பெத்தானியா

இவர் மரியா, லாசர் இவர்களின் உடன்பிறந்தவர். இவர் ஆண்டவரின் மேல் அளவுகடந்த அன்பும், பாசமும் கொண்டவர். இதனால் ஆண்டவரை தன் வீட்டிற்கு வரவழைத்து, அவருக்கு பணிவிடையும் புரிந்தார். இலாசர் இறந்த வேளையில், ஆண்டவர் இயேசு அங்கு இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். இதையறிந்த இயேசு விரைந்து மார்த்தாவின் இல்லத்தை அடைந்தார். அப்போது மார்த்தா ஆண்டவரிடம் "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்", என்று முறையிட்டார். ஆண்டவர் ஒருவரே மெசியா, இறைமகன் என்பதை முழுமையாக நம்பினார். இயேசு மார்த்தாவின் நம்பிக்கையை பார்த்து, அவர் தன் சகோதரனின் இறப்பினால் அடைந்த துயரைக்கண்டு மன்றாட்டை ஏற்று, சகோதரர் இலாசரை உயிர்த்தெழ செய்தார். 

செபம்:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம் திருமகன் இயேசு, புனித மார்த்தாவின் வீட்டில் விருந்தினராக தங்கியிருக்கத் திருவுளமானார். அவருடைய வேண்டுதலால் நாங்கள் எங்கள் சகோதர, சகோதரிகளில் கிறிஸ்துவைக் கண்டு, அவர்களுக்கு உண்மையுடன் பணிபுரியவும், உமது விண்ணக வீட்டில் எங்களை கொண்டுவந்து சேர்க்கவும் அருள்புரிவீராக. இவற்றையெல்லாம் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


கிறிஸ்துவின் ஆன்மாவே

கிறிஸ்துவின் ஆன்மாவே,

என்னைப் புனிதமாக்கும்.

கிறிஸ்துவின் திரு உடலே,

என்னை மீட்டருளும்.

கிறிஸ்துவின் திருஇரத்தமே,

எனக்கு எழுச்சியூட்டும்.

கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே

என்னைக் கழுவிடுமே.


கிறிஸ்துவின் பாடுகளே

என்னைத் தேற்றிடுமே

ஓ ! நல்ல இயேசுவே

எனக்குச் செவிசாயும்

உம் திருக்காயங்களுள்

என்னை மறைத்தருளும்

உம்மிடமிருந்து என்னைப்

பிரிய விடாதேயும்


தீயப் பகைவரிடமிருந்து

என்னைக் காத்தருளும்

எனது இறப்பின் வேளையில்

என்னை அழைத்தருளும்

உம்மிடம் வர எனக்குக்

கட்டளையிட்டருளும்

புனிதர்களோடு எக்காலமும்

உம்மைப் புகழச் செய்யும் -ஆமென்


16th Ordinary Week Saturday - பொதுக்காலம் 16ஆம் வாரம் - சனி

 பொதுக்காலம் 16ஆம் வாரம் - சனி 



Download pdf 

முதல் வாசகம்


ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8


அந்நாள்களில், மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று விடையளித்தனர். மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டை எடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்” என்றனர். அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, “இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 



பதிலுரைப் பாடல் திபா 50: 1-2. 5-6. 14-15 

பல்லவி: கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்.


1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.

2 எழிலின் நிறைவாம் சீயோனினின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள்.  ℟

5 ‘பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.’

6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்!℟

14 கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.

15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள்.   ℟


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யாக் 1: 21டி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-30


அக்காலத்தில், இயேசு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக் கூடும். அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று கூறுவேன்’ என்றார்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


Thursday, July 22, 2021

16th Ordinary Week Friday - பொதுக்காலம் 16ஆம் வாரம் - வெள்ளி

 

பொதுக்காலம் 16ஆம் வாரம் - வெள்ளி



Download pdf 

முதல் வாசகம்


மோசே வழியாகத் திருச்சட்டம் அருளப்படுகிறது.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-17


கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப் பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப் பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்கு உரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 



பதிலுரைப் பாடல்    திபா 19: 8. 9. 10. 11 

பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.   ℟

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. ℟

10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. ℟

11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு.  ℟


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23


அக்காலத்தில், இயேசு தம் சீடருக்குக் கூறியது: “விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.”

அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 


Wednesday, July 21, 2021

St.Mary Magdalene - புனித மகதலா மரியா

புனித மகதலா மரியா

 


Download pdf 

வருகைப் பல்லவி யோவா 20:17     

ஆண்டவர் மகதலா மரியாவிடம் கூறியது : நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தை யும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளு மானவரிடம் ஏறிச் செல்கிறேன் என்று சொல்."


அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக


பாவத்துயர்ச் செயல்

அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

(சிறிது நேரம் அமைதி)

எல்.: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்.: ஆமென்


உன்னதங்களிலே (பாடல்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.

ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.

ஆமென்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, பாஸ்கா மகிழ்ச்சியை அறிவிக்கும் பணியை 'உம் ஒரே திருமகன் முதன் முதல் மகதலா மரியாவிடம் ஒப்படைத்தார்; அதனால் அவருடைய எடுத்துக்காட்டாலும் வேண்டலாலும் கிறிஸ்து வாழ்கின்றார் என நாங்கள் எடுத்துரைக்கவும் உமது மாட்சியில் அவர் ஆட்சி செய்கின்றார் எனக் கண்டு மகிழவும் எங்களுக்கு அருள் புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் உம்மை மன்றாடுகின்றோம். இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


முதல் வாசகம்

கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 3: 1-4ய


தலைவியின் கூற்று: இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்! “எழுந்திடுவேன்; நகரத்தில் சுற்றிவருவேன்; தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்” தேடினேன்; தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்! ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்; நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். “என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன். அவர்களை விட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


அல்லது


மனித முறைப்படி இப்போது கிறிஸ்துவை மதிப்பிடுவதில்லை.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-17


சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார். ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல் திபா 63: 1. 2-3. 4-5. 7-8 

பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.


1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. ℟ 

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.

3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. ℟ 

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.

5 அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்.℟ 

7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.

8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. ℟ 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியில் என்ன கண்டாய் நீ, மரியே, எமக்கு உரைப்பாயே. உயிரோடுள்ள கிறிஸ்துவின் கல்லறை தன்னைக் கண்டேனே; உயிர்த்த ஆண்டவரின் ஒப்பற்ற மாட்சியும் கண்டேனே. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1, 11-18


வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்ல இருக்கிறேன்’ எனச் சொல்” என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்

நம்பிக்கை அறிக்கை

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை, மகன், தூய ஆவியராய்

ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.


2. தூய ஆவியின் வல்லமையால்

இறைமகன் நமக்காய் மனிதரானார்

கன்னி மரியிடம் பிறந்தவராம்

இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்


3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.


4. விண்ணகம் வாழும் தந்தையிடம்

அரியணைக் கொண்டு இருக்கின்றார்

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய் திரும்பவும் வந்திடுவார்

5. தூய ஆவியாரை நம்புகிறேன்

பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.


6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்

புனிதர்கள் உறவை நம்புகிறேன்

உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

உறுதியுடனே நம்புகிறேன் - ஆமென்


அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.


காணிக்கை மீது மன்றாட்டு          

ஆண்டவரே, புனித மகதலா மரியா புரிந்த அன்புப் பணியை உம் ஒரே திருமகன் கனிவுடன் ஏற்றுக்கொண்டார்; அப்புனிதரின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் அளிக்கும் காணிக்கைகளை ஏற்றுக்கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.;.

எல்.: ஆமென்


நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே


எல்லாம் வல்ல தந்தையே, உம்முடைய இரக்கம் உமது ஆற்றலைவிடத் தரம் குறைந்தது அல்ல என உணர்ந்து எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக எல்லாவற்றிலும் உம்மை வாழ்த்திப் போற்றுவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


அவர் மகதலா மரியாவுக்குத் தோட்டத்தில் தோன்றி தம்மை வெளிப்படுத்தினார்; ஏனெனில் மகதலா மரியா கிறிஸ்து வாழ்ந்தபோது அவரை அன்பு செய்தார்.

சிலுவையில் அவர் இறப்பதைக் கண்டார்; கல்லறையில் கிடத்தப்பட்டிருந்த அவரைத் தேடினார்;

இறந்தோரினின்று உயிர்த்தெழுந்த அவரை முதன்முதலில் வழிபட்டார்; இவ்வாறு அவர் வழியாக புது வாழ்வுக்கான நற்செய்தி உலகின் கடையெல்லைவரை சென்றடையும் பொருட்டு கிறிஸ்து அவரைத் திருத்தூதர்கள் முன்னிலையில் திருத்தூதுப் பணிக்கு உயர்த்தினார்.


ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதர் அனைவரோடும் நாங்கள் சேர்ந்து உம்மை அறிக்கையிட்டு அக்களிப்புடன் சொல்வதாவது:


எல்.: தூயவர், தூயவர், தூயவர்.

வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஒசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஒசன்னா!


அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.


அ.ப.:இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே

தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே

எல்.: ஆமென்

அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்

எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,

மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.


அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே


அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீNர் எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்.: ஆமென்


அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக

அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்

எல்.: உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)

உலகின் பாவம் போக்கும் இறைவனின்

செம்மறியே, எமக்கு அமைதி அருளும்.


அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.


திருவிருந்துப் பல்லவி 2கொரி 5:14-15   

கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித மகதலா மரியா சும் போதகராகிய கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தார், நாங்கள் பெற்றுக்கொண்ட உம் மறைபொருள்கள் எங்களிலும் உமது அன்பு நிலைகொண்டிருக்கச் செய்வனவாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


நிறைவுச் சடங்கு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி


இன்றைய புனிதர்

புனித மகதலா மரியா 

இவர் கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர். இயேசுவின் சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இயேசு பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை மரியா அவரோடு உடனிருந்தார். உயிர்த்த இயேசுவை முதன்முதலில் கண்டவர். இவரிடமிருந்துதான் இயேசு ஏழு பேய்களை ஓட்டினார். தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் ஆண்டவரின் பாதங்களை கழுவிய மரியா இவர்தான். இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஆண்டவரின் கல்லறை, வெறுமனே இருப்பதை முதன்முதலில் பார்த்து, இயேசுவின் சீடர்களிடம் அறிவித்தவரும் இவரேதான். இயேசுவை காணவில்லையே என்று ஆதங்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுது, இயேசுவை பற்றிக்கொண்டவர் இவர். 


மரியா ஓர் பெரும்பாவி என்று மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டபோது, தன் நிலையை உணர்ந்து அழுது, ஓடிச்சென்று இயேசுவிடம் சென்றார். தன் பாவங்களின் பரிகாரமாய் செய்த செயலினால் இயேசுவின் ஆழ்மனதில் இடம்பிடித்தார். அன்னை மரியாளுக்குபிறகு, இயேசுவின் அருகில் எப்போதும் அவருக்காக வாழ்ந்தவர். “என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறும் அளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசுவைப்பற்றி கொள்வதில் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை திகழ்கிறார். 

செபம்:

அதிசயம் செய்பவரே எம் இறைவா! பாஸ்கா மகிழ்ச்சியின் முதல் நற்செய்தியை நீர் மரியா மகதலாவிற்கு தந்து எம்மை மகிழ்ச்சிபடுத்தினீர். நாங்களும் மரியாவைப்போல இயேசுவைப்பற்றி கொண்டு, உம் நற்செய்தியை இவ்வுலகில் பரப்ப, தேவையான திடம் தந்து காத்திடுமாறு உம்மை மன்றாடுகின்றோம்.


Tuesday, July 20, 2021

16th Ordinary Week Wednesday - பொதுக்காலம் 16ஆம் வாரம் - புதன்

பொதுக்காலம் 16ஆம் வாரம் - புதன்


 

Download pdf 

முதல் வாசகம்

நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 1-5, 9-15


அந்நாள்களில், இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கு இடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது. இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர். அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன். ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார். மோசே ஆரோனிடம், “நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி: ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்; ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்” என்றார். அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள். அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது. ஆண்டவர் மோசேயை நோக்கி, “இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார். மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப் படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப் படலம் மறைந்தபோது பாலை நிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’ என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி 


பதிலுரைப் பாடல்            திபா 78: 18-19. 23-24. 25-26. 27-28 

பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.


18 தம் விருப்பம்போல் உணவு கேட்டு, வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தனர்.

19 அவர்கள் கடவுளுக்கு எதிராக இவ்வாறு பேசினார்கள்: ‘பாலை நிலத்தில் விருந்தளிக்க இறைவனால் இயலுமா?’ என்றனர்.   ℟

23 ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்.

24 அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.   ℟

25 வான தூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்புவார்.

26 அவர் விண்ணுலகினின்று கீழ்க் காற்றை இறங்கிவரச் செய்தார்; தம் ஆற்றலினால் தென்காற்றை அழைத்துவந்தார்.   ℟

27 அவர் இறைச்சியைத் துகள்துகளென அவர்கள்மீது பொழிந்தார்; இறகுதிகழ் பறவைகளைக் கடற்கரை மணலென வரவழைத்தார்.

28 அவற்றை அவர்தம் பாளையத்தின் நடுவிலும் கூடாரத்தைச் சுற்றிலும் விழச்செய்தார்.   ℟


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9


அக்காலத்தில், இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந் திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற் கரையில் நின்று கொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன் ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ் 

   


Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...