Monday, December 26, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-12-2022)

 

புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர்

விழா

முதல் வாசகம்

நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-4

சகோதரர் சகோதரிகளே,

தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டு உணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ‘நிலைவாழ்வு’ பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 97: 1-2. 5-6. 11-12 (பல்லவி: 12a)

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

1
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
2
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி

5
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
6
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. - பல்லவி

11
நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
12
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மற்ற சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8

வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்.

இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு


இயேசு எனும் அன்பின் நற்செய்தியை உலகெங்கும் பரப்புவோம்! 


கிறிஸ்து பிறப்பின் காலத்தில் இருக்கும் நாம் இன்று திருத்தூதரான யோவானின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவர் செபதேயுவின் மகன். இயேசுவின் சீடரான பெரிய யாக்கோபுவின் சகோதரர் . இவர்கள் இருவரையும்  "இடியின் மக்கள் " என விவிலியம் கூறுகிறது. இவர் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராய் இருந்தவர். அவருடைய வழிகாட்டுதலின் படி இயேசுவின் சீடராக மாறி அவரைப் பின்தொடர்ந்தார். திருத்தூதர்கள் அனைவரிலும் இவரே இளையவர். இயேசுவின் வாழ்வில் நடந்த தோற்றமாற்றம் போன்ற சில முக்கிய நிகழ்வுகளை நேரிடையாகக் கண்டவர். இயேசுவால் மிகவும் அன்பு செய்யப்பட்டவர் என விவிலியம் கூறுகிறது. இறுதி இரவு உணவு வேளையில் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த சீடர் இவர். கல்வாரி பயணத்தின் இறுதி வரை இயேசுவைப் பின்தொடர்ந்தவர். இயேசுவின் தாய் மரியைவை தன் தாயாக ஏற்று கவனித்து வந்தவர். 


இவர் இயேசுவின் வாழ்வை நற்செய்தியாக நமக்கெல்லாம் கொடுத்துள்ளார் என திருஅவையின் பாரம்பரியம் கற்பிக்கிறது. மேலும் இவர் தூய ஆவியால் தூண்டப்பட்டு மிகவும் ஆழமான இறையியல் கருத்துக்களை நற்செய்தி, திருமுகம் மற்றும் திருவெளிப்பாடு நூல்கள் வழி  நமக்குத் தந்துள்ளார் எனக் கூறினால் அது மிகையாகாது. இயேசு என்ற அன்பின் நற்செய்தியை அகிலமெங்கும் பரப்புவதில் இவருடைய பங்கு அளப்பெரியது.


இன்றைய முதல் வாசகத்தில் "நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்" என்ற புனித யோவானின் வார்த்தைகள் மூலம் அவர் தன் வாழ்வில் கண்டுணர்ந்த, கேள்வியுற்ற,  அனுபவித்து மகிழ்ந்த நற்செய்தியாம் இயேசுவை, அவருடைய ஆழமான அன்பை பிறரோடு பகிர்ந்து கொள்வதில் எவ்வளவு ஈடுபாட்டோடும், ஆர்வத்தோடும் இருந்துள்ளார் என்பதை நம்மால் உணரமுடிகிறது.


 ஆம் இன்று நாம் கொண்டாடும் புனித யோவானின் விழா கிறிஸ்துவை ஆழமாக அறிந்து அவரைப் பிறருக்கு பறைசாற்றவே நம்மை அழைக்கின்றது. ஏனெனில்  ஆழமாக அனுபவித்த ஒன்றை பற்றி பேசாமல் நம்மால் இருக்க முடியாது. அவ்வாழ்ந்த அனுபவம் கிறிஸ்துவின் அன்பால் கிடைத்ததென்றால் நிச்சயமாக நம்மால் அமைதியாக இருக்கவே முடியாது. இன்றைய காலங்களில் எத்தனையோ செபக் கூட்டங்கள் மற்றும் வழிபாடுகளில் பலர் இயேசுவால் அடைந்த நன்மைகளையும் குணம் அடைந்த அனுபவங்களையும் சாட்சியாக துணிச்சலோடு எடுத்துரைக்கிறார்கள். பலர் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி நற்செய்தி அறிவிக்கிறார்கள். நம்மில் எத்தனை பேருக்கு இத்துணிச்சலும் ஆர்வமும் இருக்கிறது என சிந்திப்போம். கண்டதையெல்லாம் பேசுவதை விடுத்து இயேசுவிடம் நாம் கண்டுணர்ந்த தெய்வீக அனுபவங்களை அறிவிக்க தயாராவோம்.


 இறைவேண்டல்

அன்பான இறைவா! திருத்தூதரான நற்செய்தியாளர் புனித யோவான் திருவிழாவில்  நற்செய்தி அறிவிக்க நம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் நல்ல மனநிலையை தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...