Monday, December 5, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (06-12-2022)

 

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - செவ்வாய்



முதல் வாசகம்

இறைவன் தம் மக்களைத் தேற்றுகிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11

“ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

“உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்; “எதை நான் உரக்கக் கூற வேண்டும்?” என்றேன். மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.

சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2. 3,10. 11-12. 13 (பல்லவி: எசா 40: 10a)

பல்லவி: இதோ நம் கடவுள் ஆற்றலுடன் வருகின்றார்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். - பல்லவி

3
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
10
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ‘ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.’ - பல்லவி

11
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12
வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி

13
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; இதோ அவர் நம்மை மீட்க வரவிருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


தேற்றிடும் கடவுளிடம் திரும்பிச் செல்வோம்! 


ஆறுதலும் தேறுதலும் ஒரு மனிதனுக்கு வாழ்வில் மிக மிக அவசியமானது. துன்ப துயர நேரத்தில் நம்மைத் தேற்றிட நம் மனப்புண்களை ஆற்றிட யாராவது முன்வந்தால் அவர்களை நம் வாழ்நாளின் இறுதி வரை மிகப்பெரிய இடத்தில் வைத்திருப்போம் அல்லவா. மனிதர்களின் ஆற்றுப்படுத்துதலுக்கு இத்தகைய பலனும் மதிப்பும் உண்டெனில் இறைவன் நம்மைத் தேற்றும் போது நாம் அடையும் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை எனலாம். இதை நாம் உணர்கிறோமா?  அல்லது அவரிடமிருந்து விலகிச் செல்கிறோமா?

இன்றைய இரு வாசகங்களும் நமக்கு நம்மைத் தேற்றிடும் இறைவனின் பாசத்தையும் அவர் நம்மைத் தேடித் தேடி அன்பு செய்கிறார் என்ற உறுதியையும் தருவனவாக இருக்கின்றன. முதல் வாசகத்தில்   பாவங்களை எல்லாம் மன்னித்து தன் மக்களுக்கு ஆறுதல் வழங்கும் இறைவனை நாம் காண்கிறோம். "இதோ உன் கடவுள் " என பிறர் முன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய சொல்கிறார் இறைவன். இதன் பொருள் என்ன? எப்போதும் எல்லா காலத்திலும் தன் மக்களைத் தேற்றிடும் தெய்வமாக அவர் உடனிருக்கிறார் என்பதே அதன் பொருள்.

இன்றைய நற்செய்தியிலும் தன்னிடமுள்ள நூறு ஆடுகளில்  வழி தவறிச் சென்ற ஆட்டினை தேடிச் சென்று மீட்டு மகிழ்ந்து களிகூறும் நல்ல ஆயனுக்கு விண்ணகத்தந்தை ஒப்பிடப்படுகிறார். தன் மக்களுள் ஒருவரும் நெறி தவறக் கூடாது என்று என்னும் நம் தந்தை அவ்வாறு நெறிதவறினாலும் கூட அவராகவே அன்போடு தேடி வந்து மன்னித்து தேற்றுகிறார் . என்னே நம் தந்தையின் அன்பு!

நாம் கொண்டாடப் போகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மைப் பொருளை இப்பகுதி ஆழமாகக் கூறுகிறது. ஆம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலிருந்து நெறிதவறி தொலைந்து போன ஆட்டைப் போன்று வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைத் தேடி வந்த விண்ணக இறைவனின் மண்ணக அவதார விழா இது. இத்தகைய கடவுளின் தேறுதலையும் ஆறுதலையும் இன்னும் அதிகமாக உணர நாம் செய்ய வேண்டியது என்ன ? . அவரிடம் திரும்பிச் செல்வது தானே. நாம் திரும்பிச் செல்ல நினைத்த மறுகணத்தில் அவர் நம்மை கண்டடைந்து விடுவாரன்றோ! இதை உணர்வோம். அவரிடமே திரும்புவோம்.


 இறைவேண்டல் 

தேற்றிடும் தெய்வமே!எம்மைத் தேடிவந்து மீட்டருளும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, December 4, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (05-12-2022)

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - திங்கள்


முதல் வாசகம்

கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-10

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக்குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்.

அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழி வரும் பேதையரும் வழி தவறிச் செல்லார். அங்கே சிங்கம் இராது; அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை; மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: எசா 35: 4d)

பல்லவி: இதோ நம் இறைவன் வந்து நம்மை விடுவிப்பார்.

8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, மாநிலத்தின் ஆண்டவராம் அரசர் வருவார், அவரே நமது அடிமைத்தனத்தின் நுகத்தடியை அகற்றிடுவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இன்று புதுமையானவற்றைக் கண்டோம்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-26

ஒரு நாள் இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.

அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டு போக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என்று எண்ணிக்கொண்டனர்.

அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? ‘உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, அல்லது ‘எழுந்து நடக்கவும்’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன்: நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!” என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.

இதைக் கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.  


நம் நம்பிக்கையின் ஆழத்தை சோதித்தறிவோமா?

மூளைவளர்ச்சி இல்லாத பெண் பிள்ளைகள் நான்கு பேரை ஒரு அருட்சகோதரி,டெல்லியில் தேசிய அளவிலே நடைபெற இருந்த சிறப்பு ஒலிம்பிக்  ஓட்டப்போட்டிக்காக பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். அவர்கள் செல்ல வேண்டிய நாள் வந்த போது பயிற்சி அளித்த அந்த சகோதரி அவர்களுடன் செல்ல இயலாத காரணத்தால் அவர்களை மனதளவில் நன்கு தயார் செய்ய வேண்டும் என விரும்பினார். அப்போது அவர்கள் நால்வரையும் அழைத்து ஒரு கேள்வி கேட்டார். "உங்களுக்குள் இருந்து யார் ஓடப்போகிறார்?" என்பதுதான் அக்கேள்வி. அடுத்த நிமிடமே அந்நான்கு மாணவிகளுமே "இயேசப்பா" என்று பதிலளித்தனர். உடனே அந்த சகோதரி "நீங்கள் தான் பதக்கம் வெல்வீர்கள்" என்று வாழ்த்தி அனுப்பினார். அந்த நால்வருள் ஒரு மாணவி தங்கப் பதக்கம் வென்று, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற போட்டிக்குத் தகுதி பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றதாகவும் தன் பகிர்விலே கூறினார். உண்மையான நம்பிக்கை நம்மிடமிருந்து பிறருக்கும் கடந்து சென்று இயேசுவை அனுபவிக்கச் செய்யும் என தான் உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார் அச்சகோதரி.

ஆம் இன்றைய வாசகங்கள் நாம் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழத்தை  சோதித்தறிய நம்மை அழைக்கிறது. நற்செய்தி வாசகத்தில் நாம்  மனதை நெகிழச் செய்யும் நிகழ்வு ஒன்றை வாசிக்கிறோம். பிறர் நலனுக்காக நாம் நம்பிக்கையோடு செய்யும் இறைவேண்டலும் முயற்சிகளும் நிறைவான பலனைத் தருகிறது என்பதை அந்நிகழ்வு மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. 

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவரை கட்டிலோடு  சுமந்து வந்த நால்வரும் இயேசுவைப் பற்றியும் அவர் ஆற்றிய அருள் அடையாளங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பார்கள். நம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையை தங்களோடு வைத்துக் கொள்ளாமல் படுக்கையிலிருந்த தம் அயலாருக்கும் அளித்து அவரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். கூரையைப் பிரித்து அவரை கீழிறக்கினார்கள் என வாசிக்கிறோம். அப்படியென்றால் அவர்களின் ஆழமான நம்பிக்கையை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். நம்முடைய நம்பிக்கை இந்த அளவுக்கு ஆழமானதா என ஆராயவும் வேண்டும். நலம்பெற்ற மனிதரும்  இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டதால்தான் தன்னைத் தூக்கி வந்த மனிதர்களின் முயற்சிகளுக்கு இசைவு அளித்தார். அத்தோடு நின்று விடாமல் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என மொழிந்த இயேசுவின் வார்த்தைகளை நம்பி ஏற்றுக்கொண்டார். நலம் பெற்றார். 

கடவுள் மேல் உண்மையான, ஆழமான நம்பிக்கையை நாம் கொண்டிருக்கும் பொழுது அந்நம்பிக்கை நம்மோடு நின்றுவிடாது. அது மற்றவர்களின் நம்பிக்கையையும் மிகுதிப்படுத்தும். அவர்கள் வாழ்வையும் முன்னேற்றும். இத்தகைய நம்பிக்கையில் தான் நாம் திருப்பலியிலும், நம்முடைய தனிப்பட்ட இறைவேண்டலிலும் பிறருக்காக மன்றாடுகிறோம். பிறர் நோய்வாய்ப்படும் போதோ அல்லது பிரச்சனைகளில் இருக்கும் போதோ "உங்களுக்காக ஜெபிக்கிறேன்" என கூறுகிறோம்.பிறரும் நம்மிடம் "எனக்காக ஜெபியுங்கள்" என கேட்கிறார்கள். இவ்வாறு செய்வதால் கடவுளிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் நாமும் வளர்வதோடு பிறரும் வளரத் துணை செய்கிறோம். இதுதான் ஆழமான நம்பிக்கையின் அடையாளம்.


இன்றைய முதல் வாசகம் மெசியாவின் வருகையின் போது சோர்ந்த உள்ளங்களெல்லாம் தேற்றப்படும், நோய்பிணிகளெல்லாம் நலமாகும் என்ற கருத்தினைக் கூறுகிறது. மெசியா வந்து தீமைகளைப் பழிதீர்ப்பார். நன்மைகளால் தம் மக்களை நிரப்புவார் என்ற ஆழமான நம்பிக்கையுடன் அவருக்காக இஸ்ரயேல் மக்கள் காத்திருந்தனர். வரவிருக்கும் மெசியா தங்கள் மனமாற்றத்தை ஏற்றுக்கொண்டு பாவங்களை மன்னித்து மீட்பளிப்பார் என எதிர்நோக்கியிருந்தனர்.

திருவருகைக் காலத்தில் ஆண்டவர் இயேசுவின் பிறப்புக்காகவும் அவரின் இரண்டாம் வருகைக்காகவும் நம்மையே தயார் செய்யும் நாமும் இஸ்ரயேல் மக்களிடமிருந்த அதே நம்பிக்கையைக் கொண்டவர்களாய் நம்பிக்கையில் நாளும் வளர்வோம்.ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டுவோம். நம் நம்பிக்கையை ஆழப்படுத்துவோம்.

 இறைவேண்டல் 

நம்பிக்கையால் எமக்கு நலமளிக்கும் இறைவா! எம் நம்பிக்கையின்மையைப் போக்கும். நாங்கள் உம்மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும், மற்றவரையும் உம்மீது  நம்பிக்கை கொள்ளத் தூண்டவும் இதனால் உம்மக்கள் நாங்கள் ஒருசேர நம்பிக்கையோடு உம்மை வரவேற்கவும் அருள் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Saturday, December 3, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (04-12-2022)

 

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்

நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10

ஆண்டவருக்குரிய நாளில்

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.

கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை.

அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 7-8. 12-13. 17 (பல்லவி: 7a)

பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! - பல்லவி

7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

12
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13
வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். - பல்லவி

17
அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! - பல்லவி

இரண்டாம் வாசகம்

மக்கள் அனைவரையும் கிறிஸ்து மீட்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 4-9

சகோதரர் சகோதரிகளே,

முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கு ஏற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.

ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்துகொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, “பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்” என இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 4, 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-12

அக்காலத்தில்

திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்துக்கு வந்து, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.

இவரைக் குறித்தே, “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.

பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். ‘ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை’ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன், எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதி இல்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மனமாற்றத்தோடு வாழ்வின் பாதையை செம்மையாக்குவோம்! 


திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் நாம் அடி எடுத்து வைக்கிறோம். இந்த நாளின் வாசகங்கள் அனைத்தும் நாம் மனமாற்றம் பெற்ற மக்களாய் வாழ வேண்டுமென அழைப்பு விடுக்கின்றன. நம்மில் பலர்  திருவருகைக்காலம் மகிழ்வோடும் பரபரப்பாகவும் இருக்க வேண்டிய காலம் எனவும் தவக்காலம் துயரத்தோடும் ஒறுத்தல்களோடும் மாற்றங்களை உண்டாக்கும் காலமாகவும் இருக்கவேண்டும் எனவும் எண்ணுகிறோம்.

ஆனால் அது அப்படியல்ல. திருவருகைக் காலமும் மனமாற்றத்திற்கு நம்மை அழைக்கும் காலம். ஆண்டவருடைய வருகைக்காக நாம் மகிழ்வோடும் பரபரப்போடும் காத்திருந்தால் மட்டும் போதாது. அவரை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்க நமது மனங்கள் கரடு முரடாய் இருப்பது சரியானது அல்ல.

 மனமாற்றம் என்பது குறிப்பிட்ட தருணத்திலோ அல்லது நாட்களிலோ நிறைவுறுவதல்ல. மாறாக மனிதனின் வாழ்நாளின் இறுதி வரையிலும் நிகழக் கூடியது.  நிகழ வேண்டியது. மனமாற்றம் என்பது நமது அடிப்படை எண்ணத்தில் ஏற்படக் கூடிய மாற்றம்.இம்மனமாற்றம் நேர்மறையாக நல்லவையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.  மாறாக எதிர்மறையாகவும் தீயவையாகவும் இருந்தால் வாழ்வே வீணாகிவிடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் மூலம் மனமாற்றத்திற்கான அழைப்பு அன்றைய யூதர்களுக்கு வழங்கப்பட்டதை நாம் வாசிக்கிறோம். பல்வேறு வகையில் தங்கள் சொந்த நாட்டிலேயே அடிமைப்படுத்த இவர்கள் தங்களை மீட்க மெசியா வருவார் என ஆண்டாண்டு காலமாய் காத்திருந்தார்கள். ஆனால் அந்த காத்திருப்பு அர்த்தமுள்ளதாய் இல்லை. தங்களிடையே பல பிளவுகளும் அடக்குமுறைகளும் கொண்டு அவர்கள் வாழ்ந்தனர். சட்டங்களின் பேரில் ஏழைகள் அடிமைப்படுத்தப்பட்டனர். கடவுளிடம் உண்மையான அன்பும் பக்தியும் இல்லாமல் வெளிவேடக்காரர்களாய் வாழ்ந்தனர். இந்நிலை சில தலைமுறைகளாகத் தொடர்ந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக தயார் செய்ய இறைவாக்கினர்களுள் இறுதியானவராக இயேசுவின் முன்னோடியாக திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்கான அறைகூவல் விடுக்கிறார். அவருடைய வார்த்தைகள் கடினமானவையாகத்தோன்றினாலும் மக்களின் மனதில் நல்மாற்றத்தை விதைக்கக்கூடியதாக அமைந்தது. 


அன்று யூதர்களுக்கு வழங்கப்பட்ட மனமாற்றத்திற்கான அழைப்பு இன்று நமக்கும் விடுக்கப்படுகிறது. கிறிஸ்துவின் பிறப்பு விழாவிற்காக நம்மையே நாம் தயாரிக்கும் இவ்வேளையில் நமது  வாழ்வென்னும் பாதை எவ்வாறு இருக்கிறது என நாம் சிந்தித்து மனம்மாற வேண்டும். பிளவுகளும், உலகின் மாயைகளுக்கு அடிமையாகும் நிலையும், உண்மையற்ற அன்பும், பக்தி என்னும் பெயரில் வெளிவேடத்தன்மையும் நிறைந்து நமது மனங்கள் கரடுமுரடாய் இருந்தால் ஆண்டவரை நம்மால் வரவேற்க இயலுமா? எனவே மனமாறுவோம்.நம் வாழ்வை செம்மைப்படுத்துவோம். கோடரியால் வெட்டப்படும் மரங்களாய் இல்லாமல் கனிகொடுக்கும் மரங்களாவோம்.


 இறைவேண்டல் 

அன்பு ஆண்டவரே!  உண்மையான மனமாற்றம் பெற்றவர்களாய் உம்மை வரவேற்க எங்களைத் தகுதிப்படுத்தும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Friday, December 2, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (03-12-2022)

 

புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர்

இந்தியாவில் பெருவிழா


முதல் வாசகம்

ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் ‘புகழ்’ என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ‘நேர்மையின் தேவதாருகள்’ என்றும் ‘தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை’ என்றும் அவர்கள் பெயர் பெறுவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.

1
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி

2
ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி

இரண்டாம் வாசகம்

நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

சகோதரர் சகோதரிகளே,

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 28: 19a, 20b

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

அக்காலத்தில்

இயேசு பதினொருவருக்கும் தோன்றி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


"நற்செய்தி அறிவிப்பில் நிறைவா!" 


கிறிஸ்தவ வாழ்வின் இயல்பே நற்செய்தி அறிவிப்பதாகும். ஆண்டவர் இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்து வந்தார். அதே போலவே தன் சீடர்களையும் நற்செய்தி அறிவிக்குமாறு அனுப்பிவைத்தார். இயேசுவைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலத்தை நாடாமல் பிறர் நலத்தோடு அனைத்தையும் தியாகம் செய்யும் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற வாழ்வியல் பாடத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கிறிஸ்தவம் என்றாலே நற்செய்தியை அறிவித்து அதை வாழ்வாக்கும் ஒப்பற்ற வாழ்வியலாகும். இன்றைய நாளில் நம் தாய்த் திருஅவையோடு இணைந்து நம் தாய்த்திரு நாட்டிற்கு மறைபரப்பு பணி செய்ய வந்த புனித பிரான்சிஸ் சவேரியாரின் பெரு விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். நற்செய்தியை அறிவிப்பதில் தான் நம் வாழ்வு முழுமை பெறும். அதன் வழியாக மட்டும்தான் நம் ஆன்மாவைக் காத்துக்கொள்ள முடியும் என்ற சிந்தனையை நமக்கு வழங்கியுள்ளார்.


இயேசுவினுடைய மதிப்பீடுகளை முழுமையாக அறிவதற்கு முன்பாக புனித பிரான்சிஸ் சவேரியார் இவ்வுலகம் சார்ந்த பட்டம், பதவி, மற்றும்  பெருமை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் தனது நண்பரான புனித லொயோலா இஞ்ஞாசியாரை சந்தித்தப் பிறகுதான் மனித வாழ்வில்  எது தனது ஆன்மாவை மீட்கும் என்பதை ஆழமாக புரிந்து கொண்டார். இதற்கு புனித இஞ்ஞாசியார் "ஒருவன் இந்த உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரக்கூடிய பயன் என்ன?”  என்று புனித பிரான்சிஸ் சவேரியாரிடம்  கூறியபோது இவ்வுலகம் சார்ந்த பணம், பட்டம், பதவி, பெருமை போன்றவை அனைத்தும் வீணானதே என்பதைப் புரிந்து கொண்டார். நற்செய்தி அறிவித்து இயேசுவினுடைய மதிப்பீடுகளின்படி வாழ்வதுதான் தனது ஆன்மாவை மீட்கும் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டு நற்செய்திப் பணிக்குத் தன்னையே முழுமையாகக் கையளித்தார்.


"மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்கிற இயேசுவின் வார்த்தைகளைத் தனது உள்ளத்தில் ஏற்று, அதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்து,  ஆண்டவர் இயேசுவை அறியாத எண்ணற்ற மக்களைத் தேடி, புனித பவுலடியாரைப் போல உலகின் கடையெல்லை வரைப் பயணம் செய்ய முடிவெடுத்தார். அதன்பிறகே கிறிஸ்துவை அறியாத நம்முடைய இந்திய நாட்டின் முன்னோர்களுக்கு நற்செய்தியை அறிவித்து,அதன்  வழியாக அம்மக்களை இயேசுவின் பக்கம் திருப்பினார். அவர் செய்த இந்த மறைபரப்பு பணியின் வழியாகத்தான் நாம் அனைவரும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்களாக  வாழ்ந்து ,சான்று பகர்ந்து  வருகிறோம்.


இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு, தான் விண்ணகம் செல்வதற்கு முன்பாக சீடர்களிடம் நற்செய்தி அறிவிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.  இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் 

நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்றார் (மாற்கு 16:15)இவ்வசனம் திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவரும், இயேசுவின் சீடர்கள் என்ற மனநிலையோடு நற்செய்தி அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.  புனித பிரான்சிஸ் சவேரியார் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை இயேசுவை அறியாத மக்களிடம் அறிவித்து மிகச்சிறந்த பணியைச் செய்தார். அப்படிப்பட்ட புனிதர் நாம் நாட்டிற்கு வந்து பணி செய்தது நம் ஒவ்வொருவருக்கும் பெருமையாகவும், உந்துசக்தியாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கின்றது. 


எனவே இன்றைய நாளிலே புனித பிரான்சிஸ் சவேரியாரைப் போல நாம் நற்செய்திப் பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். அதற்கு புனித சவேரியார் கொண்டிருந்த ஒரு சில வாழ்வியல் பாடங்களை நாம் கற்றுக் கொள்வது மிகவும் அவசியமாகும். முதலாவதாக, சவேரியார் இறைநம்பிக்கை மிகுந்தவராக இருந்தார். இறைநம்பிக்கை என்பது கிறிஸ்தவ வாழ்விற்கு அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. நம்பிக்கை   இல்லையென்றால், கிறிஸ்தவம் என்ற ஒன்று இல்லை. எனவே நம்பிக்கையில்தான் இறைவனுடைய அருளையும் மாபெரும் செயல்களையும் அனுபவிக்க முடியும். புனித  பிரான்சிஸ் சவேரியார் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டதால்தான் பல இன்னல்களுக்கு மத்தியில் கடல் பயணம்செய்து இந்திய நாட்டிற்கு வர முடிந்தது. இக்காலத்தில் இருப்பது போல அக்காலத்தில் கடல் பயணம் என்பது ஒரு எளிமையான ஒன்றல்ல ;மாறாக,  பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாக நேரிடும். இருந்த பொழுதிலும் தன்னை அழைத்த கடவுள் தன்னைக் காப்பார் என்ற நம்பிக்கையோடு புனித பிரான்சிஸ் சவேரியார் கடற்பயணம் மேற்கொண்டு நம் நாட்டிற்கு வந்தார். தான்பெற்ற நம்பிக்கையை எல்லோரும் பெற்றுக் கொள்ளும் வகையில் நற்செய்தியை நம்பிக்கையோடு அறிவித்தார். இயேசுவின் பெயரால் நம்பிக்கையோடு வல்ல செயல்களைச் செய்தார். இதன் வழியாக இயேசுவை அறியாத  எண்ணற்ற மக்கள் இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்று இறைநம்பிக்கையில் இணைந்தனர். புனித பிரான்சிஸ் சவேரியாரின் வழித்தோன்றல்களாக இருக்கின்ற நாமும் இறைநம்பிக்கை மிகுந்தவர்களாக வாழ்ந்து நம்மோடு வாழக்கூடிய பிறரும் இறைநம்பிக்கையைப் பெறும் பொருட்டு நம் வாழ்வை அமைத்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். 


இரண்டாவதாக எதையும் கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வம் புனித பிரான்சிஸ் சவேரியாரிடம்    இருந்தது.  புனித பிரான்சிஸ்  சவேரியார் நம்முடைய நாட்டிற்கு வந்த போது நம் நாட்டின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், மொழி போன்ற எதுவும் தெரியாது. ஆனால் அவர் மிகுந்த ஆர்வத்தோடு அனைத்தையும் கற்று மிகச்சிறந்த ஒரு பணியைச் செய்தார். திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நற்செய்திப் பணி செய்யவும்,   அதற்குத் தேவையான குணநலன்களையும், மதிப்பீடுகளையும், படிப்பினைகளையும் ஆர்வத்தோடு கற்றுக் கொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு கற்றுக் கொள்ளும் பொழுது தான் நாம் மிகச் சிறந்த ஒரு நற்செய்தி பணியைச் செய்ய முடியும்.


மூன்றாவதாக புனித பிரான்சிஸ் சவேரியாரிடம்    முழு ஈடுபாடு அதிகமாக இருந்தது. அவர் மக்களிடம் சென்று மறை பணிச் செய்யும் பொழுது,முழு மனதோடும், ஈடுபாட்டோடு தன்னுடைய பணியைச் செய்தார். பெரும்பாலான கடற்கரைக் கிராமங்களில் இயேசுவின் போதனைகளை நற்செய்தியாக அவர்களுக்கு வழங்கி தன்னால் மனமாற்றம் பெற்ற மக்களுக்குத் திருமுழுக்கும் கொடுத்தார். இவர் திருமுழுக்குக் கொடுத்து கை விரல் கூட தேய்ந்ததாகவும் கூறுவர். அந்த அளவுக்கு முழு ஈடுபாட்டோடு தன்னுடைய பணியைச் செய்தார்.


நான்காவதாக புனித பிரான்சிஸ் சவேரியார் தூய்மை வாழ்வுக்கு சொந்தக்காரராக இருந்தார். "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

" (மத்: 5:8) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ்ந்தார். தான் செய்த ஒவ்வொரு செயலிலும் தூய்மை இருந்தது. எனவே தான் கடவுள் இவரது உடலை இன்றளவும் அழியாமல் பாதுகாத்து வருகிறார்.   இப்படிப்பட்ட புனிதரின் பாதம்பட்ட மண்ணில் வாழும் நாமும் புனித வாழ்வு வாழ்ந்துகடவுளின் அன்பையும் அருளையும் அனுபவிக்க முயற்சி செய்வோம்.   நான் புனித வாழ்வு வாழ்ந்தால் மட்டுமே கடவுளுடைய உடனிருப்பை  உணர முடியும். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் இந்த உலகம் சார்ந்த மாயை, கவர்ச்சி, நிலையற்ற அற்ப  ஆசைகள் இவைகளை விடுத்துக் கடவுளுக்கு உகந்த வகையில் தூய்மையாக வாழ முயற்சி செய்வோம்.


இவ்வாறாக புனித பிரான்சிஸ் சவேரியார் தனது ஆன்மாவை காத்துக்கொள்ள தன்னையே முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்து மிகச்சிறந்த நற்செய்திப் பணியைச் செய்தார். எனவே அவரைப்போல நாமும் அன்றாட வாழ்வில் மிகச் சிறந்த ஒரு நற்செய்திப் பணி செய்திடத் தேவையான பண்பு நலன்களை புனித பிரான்சிஸ் சவேரியாரிடமிருந்து கற்றுக்கொள்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல் : 

வல்லமையுள்ள இறைவா! இந்த நாளுக்காய் உமக்கு  நன்றி செலுத்துகிறோம்.  புனித பிரான்சிஸ் சவேரியாரை எங்கள் இந்திய நாட்டின் பாதுகாவலராகக் கொடுத்ததற்காக நன்றி செலுத்துகின்றோம். அவர் வழியாக எம் நாட்டில் உம்முடைய வல்லமையுள்ள வார்த்தைகளை அறிவிக்க நீர் திருவுளம் கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம். தொடர்ந்து எங்களை ஆசீர்வதித்து அவரின் பண்பு நலன்களை நாங்கள் வாழ்வாக்கி இறை நம்பிக்கையோடும், கற்றுக்கொள்ளும் மனப்பான்மையோடும், முழு ஈடுபாட்டோடும், தூய்மையான உள்ளத்தோடும், வாழ்ந்து உமது நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகிர்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, December 1, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (02-12-2022)

 

திருவருகைக்காலம் முதல் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்

ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.

ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31

அக்காலத்தில்

இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


ஆண்டவரே நம் ஒளி! அவரால் நம் கண்கள் ஒளி பெறட்டும்! 

திருவருகைக் காலத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் நாம். இந்த நாட்களில் நமக்குத் தரப்படும் வாசகங்கள் நம்மை உண்மையான மனமாற்றத்திலும் ஆழமான நம்பிக்கையிலும்  இறைவார்த்தையில் வேரூன்றிய வாழ்விலும் வளர நமக்கு அழைப்பு விடுக்கின்றன. இவ்வழைப்புகளுக்கு செவிமடுத்து நாம் வாழ முயலும் போதுதான் இத்திருவருகைக் காலம் அர்த்தமுள்ளதாய் அமையும். 

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா மூலம் இஸ்ரயேல் மக்கள் ஏற்ற காலத்தில் கடவுளால் அடையப்போகும் நன்மைகளைப் பட்டியலிடுகிறார். பார்வையற்றோர் பார்வை பெறுவர், கேட்க இயலாதோர் கேட்பர் ; வறண்ட நிலம் கனி தரும்; ஒடுக்கப்பட்டோர் ஆண்டவரில் மகிழ்வர்; தீய நாட்டம் கொண்டோர் அழிவர் ; ..என்று அவ்வார்த்தைகள் கூறுகின்றன. ஆண்டவரின் வருகை இருளான இவ்வுலகத்தை ஒளிபெறச்செய்கின்றது என்ற கருத்து இங்கே ஆழமாகக் கூறப்படுகிறது. 

இன்றைய பதிலுரைப் பாடலும் ஆண்டவரே நமக்கு ஒளியும் மீட்புமாய் இருக்கிறார். நமக்கு செவிசாய்ப்பவராக இருக்கிறார் என்பதையும் விளக்குகிறது.

இதனடிப்படையில் நற்செய்தி வாசகத்திலும் பார்வையற்ற இருவர் இயேசுவை நாடிச் சென்று அவருடைய இரக்கத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய இருளான வாழ்க்கையானது இயேசுவின் வருகையால் ஒளிபெற்றது. நம்பிக்கை அவர்களின் புறக்கண்களுக்கு மட்டுமல்லாது அகக் கண்களுக்கும் ஒளிதந்தது. அந்த ஒளியைப் பெற்றவர்களாய் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் நாடெங்கும் பரப்பினர். ஆம் ஆண்டவரால் நாம் ஒளிபெறும் போது மீட்பை அறிவிப்பவர்களாக மாறுகிறோம்.

நமது வாழ்வை நாம் சிந்திப்போம். இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறும் வண்ணம் நம் வாழ்வு அமைகிறதா?  ஆண்டவரால் நம் கண்கள் ஒளிபெற்றுள்ளதா?


 இறைவேண்டல்

 வல்லமையான இறைவா!  நீரே எங்கள் அன்றாட வாழ்வில் ஒளியாகவும் வழியாகவும் இருந்து வழிநடத்தும்படியாக வேண்டுகிறோம். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...