Tuesday, December 27, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (06-01-2023)

 

சனவரி 6



முதல் வாசகம்

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13

அன்பார்ந்தவர்களே,

இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.

மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.

கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.

இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12a)

பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

அல்லது: அல்லேலூயா.

12
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி

14
அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. - பல்லவி

19
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 9: 7

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது, தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.” அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீயே என் அன்பார்ந்த மகன், உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

அக்காலத்தில்

யோவான், “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறை சாற்றினார்.

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 கடவுள் எனக்கு சான்று பகர்வாரா!


நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த அனுபவம் இது. தேர்வுகள் முடிவடைந்தது. மதிப்பெண்கள் கொடுத்தாயிற்று. அந்த முறை ரேங்க அட்டையில் கையெழுத்திட பெற்றோர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனக் கூறப்பட்டது. அத்தோடு பெற்றோர்கள் ஆசிரியரைத் தனியாக சந்தித்துப் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. எனது தந்தை பள்ளிக்கு வந்திருந்தார். அத்தேர்வில் நான் வகுப்பில் இரண்டாவது ரேங்க் எடுத்திருந்தேன். என் தந்தை ஆசிரியரை அணுகி என்னுடைய தந்தை என்று சொன்ன உடனேயே ஆசிரியர் மிகுந்த முக மலர்ச்சியுடன் என்னைப் பாராட்டிப் பேசினார். என்னுடைய படிப்பும் நடத்தையும் மிக நன்றாக இருப்பதாக எனக்கு நற்சான்று அளித்தார். என்னையும் அழைத்து என் தந்தைமுன் வாழ்த்தினார். எனக்கும் மகிழ்ச்சி .என் தந்தைக்கும் மகிழ்ச்சி.


பொதுவாக நம்மைப் பற்றி யாரேனும் நற்சான்று தரும் போது நாம் அனைவருமே மகிழ்வோம். வேலைத்தேடி செல்லும் போது நம்மால் முடிந்த அளவுக்கு சான்றிதழ்களைச் சேர்த்து வைத்துக்கொள்வோம். அந்தச் சான்றிதழ்கள் நம்மைப் பற்றி பேசும் அல்லவா. ஆக பிறரிடம் நற்சான்றும் பாராட்டும் பெறுவது அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான். 


இன்றைய வாசகங்கள் கடவுள் நம்மைக் குறித்து என்ன சான்று தரப்போகிறார் என நம்மை ஆன்ம சோதனை செய்ய அழைக்கின்றன. முதல் வாசகத்தில் தூய ஆவியாரும் நீரும் இரத்தமும் இயேசுவுக்கு சான்று பகர்கின்றன என்று புனித யோவான் கூறுவதை வாசிக்கிறோம். அவை தரும் நன்சான்று என்ன? இயேசு கடவுளிடமிருந்து வந்தவர் என்பதும் அவரிடமே கடவுள் அருளும் நிலைவாழ்வு உள்ளது என்பதுமே.

நற்செய்தி வாசகத்தில் இயேசு திருமுழுக்கு பெற்றபிறகு என் அன்பார்ந்த மகன் இவரே என கடவுளே நேரடியாக சான்றளிக்கிறார் என்பதை வாசிக்கிறோம். 


நாமும் திருமுழுக்கினால் இறைவனின் பிள்ளைகள் என்ற உரிமையைப் பெற்றுள்ளோம்.இன்று நம்மைக் குறித்து நம் விண்ணகத் தந்தையின் சான்று என்ன? இயேசுவைப் போல தந்தையின் திருஉளம் ஏற்று அன்பான தந்தையாம் அவரைப் பிரதிலித்து நேர்மையோடும் துணிச்சலோடும் வாழ்ந்தால் நமக்கும் நன்சான்று கிடைக்கும். கடவுளே நேரடியாக சான்றளிப்பதில்லை. மாறாக நம்முடைய பணிவாழ்வும் அதனால் பிறர் பெறும் நன்மைகளும் சவால்களை சமாளித்து முன்னேறுவதும் நமக்கு சான்றாக அமையும். இறுதியில் நாம் பெறும் நிலைவாழ்வு நற்சான்றின் உச்சகட்டமாய் அமையும்.கடவுளிடமிருந்து

நன்சான்று பெறப்போகிறோமா? சிந்தித்து வாழ்வோம்.


 இறைவேண்டல்

அன்பு இறைவா! இயேசுவுக்கு நீர் நற்சான்று அளித்ததுபோல உமது பிள்ளைகளாகிய எங்களுக்கும் நீர் நற்சான்று அளிக்கும் வண்ணம் நாங்கள் வாழ்வோமாக! ஆமென்

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-12-2022)

 

புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர்

விழா


முதல் வாசகம்

இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5- 2: 2

சகோதரர் சகோதரிகளே,

நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும், அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.

என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7b-8 (பல்லவி: 7a)

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2
ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3
அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். - பல்லவி

4
அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5
கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். - பல்லவி

7b
கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8
ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார்.

யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங்கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

அப்பொழுது “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை” என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மாசில்லா மனதுடையவராய் மறைசாட்சியாகத் தயாரா? 


நான் பள்ளியிலே படித்துக்கொண்டிருக்கும் போது ஒருமுறை நான் பேசாமலேயே வகுப்புத் தலைவர் கரும்பலகையிலே நான் பேசியதாக என் பெயரை எழுதிவிட்டார். நான் பேசவில்லை என எவ்வளவு கூறியும் பெயரை அழிக்கவில்லை. ஆசிரியர் வகுப்பிற்கு வந்த உடன் பேசியவர்கள் பெயரை கரும்பலகையில் பார்த்துவிட்டு அனைவரையும் அழைத்து தன் கையால் கன்னத்திலே பலமாக அடித்தார். நானும் அடிவாங்கினேன். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆசிரியரும் எதுவும் விசாரிக்காமல் அடித்துவிட்டார். இச்செயல் என் மனதைப் பெரிதும் பாதித்தது. வீட்டிலே அனைவரிடமும் சொல்லி அழுதேன். என்னை சமாதானம் செய்ய மூன்று நாட்கள் எடுத்தது.


தவறு செய்யாமல்  தண்டனை அனுபவிக்கும் போது நாம் மிகப் பெரிய வலியை உணர்கிறோம்.

அத்தண்டனையை ஏற்றுக்கொள்ள நம் மனம் மறுக்கிறது. அது நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பெரிய அதிர்ச்சியையும் துன்பத்தையும் தருவதாக இருக்கிறது என்பதே உண்மை.ஆனால் அத்தண்டனையை பிறர் நலனுக்காக நாம் ஏற்றுக்கொள்ளும் போது துன்பமாகவே இருந்தாலும் பிற்காலத்தில் நாம் உயர்த்தப்படுகிறோம்.


இன்று நாம் கொண்டாடும் மாசற்ற குழந்தைகளுடைய பெருவிழா இச்செய்தியை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

ஞானிகள் குழந்தையைப் பற்றி தெரிவிக்காததால் கோபமடைந்த ஏரோது அரசன் அப்பகுதியிலுள்ள எல்லா இரண்டு வயதுக்குட்டபட்ட ஆண் மழலைகளைக் கொன்றான். ஒன்றும் அறியாத பச்சிழங்குழந்தைகள் ஏரோதின் சுயநலத்திற்கு பலியாகின்றனர். அவர்களுடைய பெற்றோர்களும் கடுமையான வலியை தாங்க வேண்டியதாயிற்று.

தவறின்றி தண்டனை பெற்ற அந்தக்குழந்தைகள் உலகை மீட்கும் மீட்பரைக் காப்பாற்ற மறைசாட்சியராகின்றனர்.


இந்த விழாவைக் கொண்டாடும் நமக்கு மாசற்ற குழந்தைகள் கூறும் செய்தி இதுவே. நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யாத தவறுக்காக குற்றம் சுமத்தப்பட்டு, துன்பத்துக்கு ஆளாக நேரும்போது அதனால் பிறருக்கு நன்மை உண்டாகும் என நாம் உணர்ந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ளும் போது நாமும் மறைசாட்சியராகிறோம். இயேசு குழந்தையாய் இருந்த போது காப்பாற்றப்பட்டார். ஆனால் தன்னுடைய முப்பத்து மூன்றாம் வயதில் தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்தார்.

ஆயினும் உலக மீட்பிற்காக அவர் மனமுவந்து அத்தண்டனையை ஏற்றுக்கொண்டார் அல்லவா! அவருடைய சீடர்களான நாமும் அதே மனநிலையைக் கொண்டவர்களாக வாழ முயல வேண்டும். பிறர் நலனுக்காகவும் ஆண்டவருடைய மகிமைக்காகவும் ஒருவேளை நாம் தவறாக தண்டிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முயலுவோம். இறைவன் நிச்சயம் உண்மையை வெளிப்படுத்தி நம்மை உயர்த்துவார். காரணமில்லாமல் நம்மை நோக்கிப் பாயும் வசைமொழிகள், தண்டனைகள், எதிர்ப்புகள் அனைத்தையும் இயேசுவைப் போல, மாசற்ற குழந்தைகளைப் போல ஏற்றுக்கொண்டு மறைசாட்சியாக வாழ இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல் 

மாசற்ற இறைவனே!  உமது பிள்ளைகளான நாங்களும் மாசில்லா குழந்தைகளைப்போல மறைசாட்சியராய் வாழ்ந்து பிறர் நலனுக்காகவும் உமது மாட்சிக்காகவும் உழைத்திட வரமருளும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Monday, December 26, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (03-01-2023)

 

சனவரி 3



முதல் வாசகம்

கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 29- 3: 6

அன்பிற்குரியவர்களே,

இறைவன் நேர்மையாளர் என நீங்கள் அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும். பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம்.

பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 3b-4. 5-6 (பல்லவி: 3b)

பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

3b
உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

5
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6
ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 14, 12b

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ! கடவுளின் செம்மறி.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34

அக்காலத்தில்

இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று என்குத் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


 என் வாழ்வால் கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறேனா நான்?


பலமுறை நாம் இதைச் சிந்தித்திருக்கிறோம். "கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள் "என்ற சொற்களைப் பிரித்து எழுதினால் கிறிஸ்து + அவன், கிறிஸ்து +அவள், எனக்கிடைக்கும்.இவை வெறும் வார்த்தைகள் அல்ல. இங்கே அவன் அல்லது அவள் என்ற மனிதத்தன்மை மேலோங்கி நிற்பதில்லை. மாறாக கிறிஸ்து என்ற தெய்வீகத்தன்மையே மேலோங்கி நிற்கிறது.


ஆம் அன்புக்குரியவர்களே திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களாகிய அதாவது "கிறிஸ்து +அவர்கள் "ஆகிய நாம் எல்லோருமே அவரையே பிரதிபலிக்கக்கூடியவர்களாக, அவரையே பிறருக்கு சுட்டிக்காட்டக் கூடியவர்களாக வாழவேண்டும். அதுதான் நம் வாழ்நாளில் நாம் அடைய வேண்டிய முழுமையான உயர்வான இலக்கு. ஆனால் இன்று நம் வாழ்வு கிறிஸ்துவை பிறருக்குக் காட்டக் கூடியதாய் உள்ளதா? சிந்திக்க வேண்டும் நாம்.


யோவானை யார் என்ற விசாரிக்க வந்தவர்களிடம் தான் மெசியா அல்ல எனவும் மெசியாவின் வருகைக்காக ஆயத்தம் செய்பவன் எனவும் யோவான் அறிவித்த நிகழ்வுக்கு பின் இயேசுவை யோவான் சந்திக்கிறார். அவரைப் பார்த்த உடனே தூயஆவியாரால் வெளிப்படுத்தப் பட்டவராய் "இவரே கடவுளின் செம்மறி "என துணிச்சலாக அனைவரிடமும் சுட்டிக்காட்டுகிறார் அவர். தனக்கு மெசியாவைப் பற்றி தெரியாதிருந்தது எனவும் தூய ஆவி தனக்கு உணர்த்தியதாகவும் கூறி, யோவான் இயேசுவை பகிரங்கமாக துணிச்சலாக தயக்கமின்றி சுட்டிக்காட்டுகிறார்.

அவருடைய வாழ்வும் போதனைகளும் செயல்களும் இதற்கு சான்றாய் அமைந்தது எனலாம்.


ஆக இயேசுவை சுட்டிக்காட்ட நாம் தூய ஆவியால் நிறையப்பெற்றவர்களாய் இருப்பது அவசியம். அத்தூய ஆவி நம்மை கிறிஸ்துவை உலகிற்கு எடுத்துக்காட்டுபவர்களாக மாற்றுவார் என்பதில் ஐயமில்லை.


தொடக்க காலங்களில் கிறிஸ்தவர்கள் செய்கின்ற நற்செயல்களையும், அவர்களின் அன்பான நடத்தையையும், பகிர்தல், மன்னித்தல் போன்ற பண்புகளையும் கொண்டே அவர்களை கிறிஸ்தவர்கள் என அடையாளப்படுத்தி கிறிஸ்துவைக் கண்டுகொண்டது இவ்வுலகம். ஆனால் இன்றோ இந்நிலை மாறிவிட்டது. நமது தேசத் தந்தை காந்தியடிகள் தான் கிறிஸ்துவை அன்பு செய்வதாகவும் கிறிஸ்தவர்களை வெறுப்பதாகவும் கூறியிருக்கிறார்.இது வேதனைக்குரிய நிலை அல்லவா! இதைப்போன்று இன்னும் எத்தனைபேர் நினைத்திருக்கக்கூடும்! 

 என வே நாம் ஒவ்வொருவருமே மிகக் கவனமாக நம் வாழ்க்கையை ஆவியின் துணையோடு வாழ்ந்து கிறிஸ்துவை சுட்டிக்காட்ட முழுமூச்சாக முயல வேண்டும். கிறிஸ்துவாகவே நாம் மாற வேண்டும். அதற்கான அருளை இறைவனிடம் கேட்போம்.


 இறைவேண்டல்

அன்பே உருவான இறைவா! திருமுழுக்கு யோவானைப்போல நாங்களும் கிறிஸ்துவை உலகிற்கு சுட்டிக்காட்டுபவர்களாக வாழ வரமருளும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-12-2022)

 

புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர்

விழா

முதல் வாசகம்

நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-4

சகோதரர் சகோதரிகளே,

தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டு உணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ‘நிலைவாழ்வு’ பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 97: 1-2. 5-6. 11-12 (பல்லவி: 12a)

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

1
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
2
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி

5
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
6
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. - பல்லவி

11
நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
12
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மற்ற சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8

வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்.

இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு


இயேசு எனும் அன்பின் நற்செய்தியை உலகெங்கும் பரப்புவோம்! 


கிறிஸ்து பிறப்பின் காலத்தில் இருக்கும் நாம் இன்று திருத்தூதரான யோவானின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவர் செபதேயுவின் மகன். இயேசுவின் சீடரான பெரிய யாக்கோபுவின் சகோதரர் . இவர்கள் இருவரையும்  "இடியின் மக்கள் " என விவிலியம் கூறுகிறது. இவர் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராய் இருந்தவர். அவருடைய வழிகாட்டுதலின் படி இயேசுவின் சீடராக மாறி அவரைப் பின்தொடர்ந்தார். திருத்தூதர்கள் அனைவரிலும் இவரே இளையவர். இயேசுவின் வாழ்வில் நடந்த தோற்றமாற்றம் போன்ற சில முக்கிய நிகழ்வுகளை நேரிடையாகக் கண்டவர். இயேசுவால் மிகவும் அன்பு செய்யப்பட்டவர் என விவிலியம் கூறுகிறது. இறுதி இரவு உணவு வேளையில் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த சீடர் இவர். கல்வாரி பயணத்தின் இறுதி வரை இயேசுவைப் பின்தொடர்ந்தவர். இயேசுவின் தாய் மரியைவை தன் தாயாக ஏற்று கவனித்து வந்தவர். 


இவர் இயேசுவின் வாழ்வை நற்செய்தியாக நமக்கெல்லாம் கொடுத்துள்ளார் என திருஅவையின் பாரம்பரியம் கற்பிக்கிறது. மேலும் இவர் தூய ஆவியால் தூண்டப்பட்டு மிகவும் ஆழமான இறையியல் கருத்துக்களை நற்செய்தி, திருமுகம் மற்றும் திருவெளிப்பாடு நூல்கள் வழி  நமக்குத் தந்துள்ளார் எனக் கூறினால் அது மிகையாகாது. இயேசு என்ற அன்பின் நற்செய்தியை அகிலமெங்கும் பரப்புவதில் இவருடைய பங்கு அளப்பெரியது.


இன்றைய முதல் வாசகத்தில் "நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்" என்ற புனித யோவானின் வார்த்தைகள் மூலம் அவர் தன் வாழ்வில் கண்டுணர்ந்த, கேள்வியுற்ற,  அனுபவித்து மகிழ்ந்த நற்செய்தியாம் இயேசுவை, அவருடைய ஆழமான அன்பை பிறரோடு பகிர்ந்து கொள்வதில் எவ்வளவு ஈடுபாட்டோடும், ஆர்வத்தோடும் இருந்துள்ளார் என்பதை நம்மால் உணரமுடிகிறது.


 ஆம் இன்று நாம் கொண்டாடும் புனித யோவானின் விழா கிறிஸ்துவை ஆழமாக அறிந்து அவரைப் பிறருக்கு பறைசாற்றவே நம்மை அழைக்கின்றது. ஏனெனில்  ஆழமாக அனுபவித்த ஒன்றை பற்றி பேசாமல் நம்மால் இருக்க முடியாது. அவ்வாழ்ந்த அனுபவம் கிறிஸ்துவின் அன்பால் கிடைத்ததென்றால் நிச்சயமாக நம்மால் அமைதியாக இருக்கவே முடியாது. இன்றைய காலங்களில் எத்தனையோ செபக் கூட்டங்கள் மற்றும் வழிபாடுகளில் பலர் இயேசுவால் அடைந்த நன்மைகளையும் குணம் அடைந்த அனுபவங்களையும் சாட்சியாக துணிச்சலோடு எடுத்துரைக்கிறார்கள். பலர் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி நற்செய்தி அறிவிக்கிறார்கள். நம்மில் எத்தனை பேருக்கு இத்துணிச்சலும் ஆர்வமும் இருக்கிறது என சிந்திப்போம். கண்டதையெல்லாம் பேசுவதை விடுத்து இயேசுவிடம் நாம் கண்டுணர்ந்த தெய்வீக அனுபவங்களை அறிவிக்க தயாராவோம்.


 இறைவேண்டல்

அன்பான இறைவா! திருத்தூதரான நற்செய்தியாளர் புனித யோவான் திருவிழாவில்  நற்செய்தி அறிவிக்க நம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் நல்ல மனநிலையை தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, December 25, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-12-2022)

புனித ஸ்தேவான் - முதல் மறைச்சாட்சி
விழா



முதல் வாசகம்

இதோ, வானம் திறந்திருப்பதைக் காண்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-10; 7: 54-60

அந்நாள்களில்

ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள்.

அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, “இதோ, வானம் திறந்து இருப்பதையும், மானிடமகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார்.

ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல் எறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்.

அவர்கள் ஸ்தேவான் மீது கல் எறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 31: 2cd-3. 5,7ab. 15b-16 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.

2cd
எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3
ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். - பல்லவி

5
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர்.
7ab
உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர். - பல்லவி

15b
என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.
16
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 26a, 27a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.

இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும், தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


இயேசுவின் சாட்சிகளாய்! 


கிறிஸ்து பிறப்பு காலத்தில் இருக்கும் நாம் இன்று புனித ஸ்தேவான் நினைவைக் கொண்டாடுகிறோம்.

புனித ஸ்தேவானைப் பற்றி நாம் திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம். இயேசுவைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை பெருகி வந்த போது கிரேக்கக் கைம்பெண்களைப் பந்தியில் முறையாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது எனவே திருத்தூதர்கள் தங்களுடைய இறைவார்த்தைப்பணி பாதிக்கப்படாமல் இருக்கவும் அதே நேரத்தில் குற்றச்சாட்டுகள் எழாத வண்ணம் அனைத்துப் பணிகளும் சரியாக நிறைவேற்றப்படவும்  மற்றவரிடம் நன்மதிப்புப் பெற்ற மற்றும் தூய ஆவியால் நிரப்பப்பட்ட ஏழுபேரைத் திருத்தொண்டர்களாக நியமிக்க முடிசெய்யப்பட்டது. இவ்வேழு பேரிலும் ஸ்தேவான் மிக முக்கியமானவராகவும் ஆவியால் நிறைந்து மிகுந்தவராகவும் கருதப்பட்டார்.


தூய ஆவியார் அவருக்கு அருளிய ஞானமும் ,அருளும்  அவரை  அருஞ்செயல் செய்பவராகவும் ,கைது செய்தவர்கள்முன் துணிச்சலுடன் வார்த்தையைப் பேசுபவராகவும் மாற்றியது. இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் "நீங்கள் பகைவர் முன் ஒப்புவிக்கப்படும் போது என்ன பேசுவது எப்படிப் பேசுவது என கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுவது நீங்கள் அல்ல. உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்" என்ற வார்த்தைகள் புனித ஸ்தேவானின் வாழ்வில் நிறைவேறுவதை நாம் உணர்கிறோம். 


புனித ஸ்தேவான் இயேசுவை மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்தவர். இயேசு சிலுவையில் உயிர்துறக்கும் தருவாயிலும் "தந்தையே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்" என்று கூறியதைப் போல ஸ்தேவானும் "ஆண்டவரே இப்பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என வேண்டினார்.இவ்வாறு இயேசுவைப் போல் மன்னித்தார். "தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு மொழிந்ததைப் போல " ஆண்டவராகிய இயேசுவே எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும் " என்று வேண்டிக்கொண்ட ஸ்தேவான் இயேசுவின் சாட்சியாய் உயிர் துறந்தார். 


ஸ்தேவானின் இச்சாட்சிய வாழ்வு நம்மையும் சாட்சியாய் வாழத் தூண்டுகிறது. அதற்கு முதலில் நாம்  இறைவனிடம் தூய ஆவியானவரால் நிரப்பப்பட ஜெபிக்க வேண்டும். தூய ஆவியானவர் நம்மில் அசைவாடுவதை நாம் உணர்பவர்களாய் இருக்க வேண்டும். அவர் தரும் ஞானத்தை நம்  செயல்களில் வெளிப்படுத்த வேண்டும். யார் முன்னிலையிலும் இயேசு ஆண்டவர் என அறிக்கையிடத் துணிய வேண்டும்.


இரண்டாவதாக "கிறிஸ்துவின் மனநிலை உங்களில் இருக்க வேண்டும்"என புனித பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய தன் மடலில் கூறுவதைப்போல கிறிஸ்துவின் மனநிலையை நாம் உள்வாங்கி வாழ வேண்டும்.  இயேசுவைப் போல இறைவேண்டலிலும், அனைவரையும் அன்பு செய்வதிலும் , மன்னிப்பதிலும் ,நற்செயல் புரிவதிலும் நாம் நிலைத்திலிருந்து கிறிஸ்துவை நாம் பிரதிபலிக்க வேண்டும்.அதையே புனித ஸ்தேவான் செய்து காட்டினார்.எனவே புனித ஸ்தாவானை நம் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இயேசுவின் சாட்சிகளாக வாழ முயற்சி செய்வோம். இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா புனித ஸ்தாவானை இயேசுவுக்கு சாட்சியாக வாழ அழைத்து உமது ஆவியாரால் திடப்படுத்தியதைப் போல எங்களையும் உமது ஆவியால் நிரப்பி திடப்படுத்தும். இயேசுவின் மனநிலையைப் பெற்றுக் கொண்டவர்களாய் நாங்கள் வாழ வழிகாட்டும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...